அமிஷ் நாவல்கள்

Meluha

அன்புள்ள ஆசிரியருக்கு,

அண்மையில் அண்ணன் அமீஷ் புத்தகங்களின் வரிசையை வாங்கி வந்திருந்தான். அதில் ஒருபுத்தகத்தையும் முழுதாக வாசிக்க முடியவில்லை.எடுத்து எடுத்து வைத்துக் காெண்டிருக்கிறேன். அண்ணன் என்ன பெரிசா வாசிக்கற நீ? காேடி புத்தகங்கள் மேல விற்பனையாகி இருக்கு என்கிறான். அவ்வளவு ஆட்கள் வாசித்ததை ஏன் என்னால் வாசிக்க முடியவில்லை. அந்தப் புத்தகங்கள் அவ்வளவு வாசிக்கப்பட,விற்பனையாக என்ன காரணம்? நான் ஒரு புத்தகப்ப்ரியை என்ற காரணத்தால் இதை கேட்கத் தாேன்றுகிறது. வியப்பாக இருக்கிறது இவ்வளவு வாசகர்களா!

அன்புடன்,
கமலதேவி

***

அன்புள்ள கமலதேவி

அமிஷ் வரிசை நூல்களில் ஒன்றை ஒரு விமானப்பயணத்தில் ஐம்பது பக்கம் அளவுக்கு படித்திருக்கிறேன். என்னால் அவற்றை எவ்வகையிலும் ரசிக்கமுடியவில்லை

சமீபத்தில் இந்திய ஆங்கில எழுத்துக்களில் சில ‘பெஸ்ட்செல்லர்’ நாவல்களை சினிமாக்காரர்கள் அளித்து அவற்றின் சினிமா வடிவத்துக்கான வாய்ப்புகளைப்பற்றிப் பேசினார்கள். சில நாட்களுக்கு முன் அதற்காக வாசித்த நாவல் ரவீந்தர் சிங்கின் I Too Had a Love Story. அந்நாவலை வாசிக்க பெருந்தொகை ஊதியம் பெற்றேன், ஆகவே வாசித்து முடித்தேன். எழுபதுகளில் இங்கே புஷ்பா தங்கத்துரை போன்றவர்கள் எழுதிய நாவல்களைபோன்றது – அந்த அளவுக்குக்கூட நுட்பங்கள் அற்றது.

முன்பு ஷோபா டே எழுதிய Socialite Evenings என்னும் நாவலை வாசித்திருக்கிறேன், நூறுபக்கம் வரை. அத்தகைய நாவல்களின் வாசகர்கள் இந்தியாவின் உயர்குடி மக்கள். அவர்களுக்கு ஆழமான அனுபவ உலகம் இல்லை. வரலாறு, தத்துவம், மெய்யியல் எதிலும் அறிமுகம் இல்லை. அவர்களின் மொழி ஆங்கிலம். அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல்களை அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள். அதற்கென்றே இங்கே நூல்கள் எழுதப்பட்டன

தொண்ணூறுகளுக்குப்பின் நிலைமை மாறியுள்ளது. சென்ற இருபதாண்டுகளாக இந்தியாவின் மையமான கல்விமொழி ஆங்கிலம். இந்தியா முழுக்கவே தாய்மொழியில் சரளமாக எழுதப்படிக்கத் தெரியாத தலைமுறை உருவாகியிருக்கிறது. ஆனால் ஆங்கிலமும் அவர்களுக்கு நன்றாகத்தெரியாது. ஏனென்றால் அவர்களின் கல்விப்புலம் மொழிக்கு அதிக இடமில்லாத தொழில்நுட்பத்தளம்.

அவர்களின் வாசிப்புத்தேவைக்கான நூல்களுக்கான சந்தை இங்கே உருவாக்கப்பட்டது. மிக எளிமையான ஆங்கிலத்தில், மிக எளிமையான கதையோட்டத்தில் எழுதப்படும் நாவல்கள். ரவீந்தர் சிங்கின் நாவல் அத்தகையது. சாதாரணமாக எவரும் அதை தங்களுடன் அடையாளம் காணமுடியும். சில்லறைக்காதல், சில்லறைக் காமம், சில்லறை மெல்லுணர்ச்சிகள்.

இந்திய ஆங்கில வணிக எழுத்து விரிந்த சந்தை அல்ல. அது இந்திய அளவில், முப்பது கோடி மக்களை, சந்தையாகக் கொண்டிருப்பதனால்தான் விற்பனை இந்திய மொழிகளுடன் ஒப்பிட பெரிதாகத் தெரிகிறது. உச்சகட்டமாக இரண்டு லட்சம் பிரதிகள் வரை ஒரு விற்பனைவெற்றி நாவல் சென்றடையக்கூடும். இந்தியாவில் அதுவே மிகப்பெரிய விஷயம்.

இந்தப் பரவலான சந்தையே அதன் பெரிய பலவீனம். ஏனென்றால் இந்த இந்திய ’பல்ப்’ நாவல்உலகுக்கு மிகப்பெரிய கலாச்சாரத் தடை ஒன்றுண்டு. அது இந்தியா முழுக்க இருக்கும் பண்பாட்டு வேறுபாடுதான். கர்நாடகப்பின்புலம் கொண்ட நாவல் தமிழக வாசகனுக்கு உவப்பதில்லை. வட இந்தியாவின் வாழ்க்கை என்னவென்று தென்னகத்து பொதுவாசகனுக்குத் தெரியாது. இலக்கியவாசகன் அக்கறை எடுத்து வாசிப்பான். பொழுதுபோக்கு வாசகன் ‘ஒட்டமுடியவில்லை’ என்று தூக்கிப்போட்டுவிடுவான்.

ஆகவே இங்கே இரண்டுவகையான பின்புலங்கள் கையாளப்படுகின்றன. ஒன்று, இந்திய உயர்குடியின் வாழ்க்கைப்பின்புலம். இது கலாச்சார அடையாளம் அற்றது. அத்தனை நடுத்தர இந்தியர்களும் ஆவலுடன் கவனிப்பது. இந்திய உயர்கல்வித்துறை மற்றும் தொழில்துறையின் பின்புலம். இதுவும் இந்தியா முழுக்க ஏறத்தாழ ஒன்றே. சேதன் பகத் போன்றவர்களின் புலம் இது.

இச்சூழலில் புதிதாகக் கண்டடையப்பட்டதுதான் இந்தியப்புராணங்களின் உலகம். அதுவும் இந்தியா முழுக்க ஒன்று. இதன் வாசகர்களான இளைய தலைமுறை தொலைக்காட்சி வழியாக புராணங்களை மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்கிறது. கூடவே மேலைநாட்டு லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போன்ற நவபுராணங்களை இளமையிலேயே பார்த்துப் பழகியிருக்கிறது

அமிஷ் நாவல்கள் இந்த இரண்டு பொது அம்சங்களின் கலவை. இந்திய வாசகர்களுக்குரிய உயர்நிலைப்பள்ளித் தரத்திலான ஆங்கிலம். ஆழமற்ற, வேகமான கதை. ஆகவே வாசகர்களுக்கு அவை உவப்பானவையாக உள்ளன. அந்தச் சந்தை இன்று மிகப்பெரியது. ஆனந்த் நீலகண்டன் அவருடைய அசுரா, கௌரவா போன்ற நூல்வரிசைகளை எனக்கு அளித்தார். மேலோட்டமாக வாசித்தேன். கதை ஒழுக்கை தக்கவைக்கும் திறன்கொண்ட எழுத்து. அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள், குணச்சித்திரத் திருப்புதல்கள். அவரைப்போல பல எழுத்தாளர்கள் வெற்றிகரமாகச் செயல்படுகிறார்கள்.

இந்த வாசகர்கள் அந்த வாசிப்பிலிருந்து இலக்கியவாசிப்புக்கு பெரும்பாலும் வருவதில்லை. ஏனென்றால் அந்த மேலோட்டமான வாசிப்புக்குப் பழகிவிடுகிறார்கள். அது மேலான வாசிப்பு என்னும் மனநிலையிலும் இருக்கிறார்கள். அதைக்கடந்துசெல்ல அவர்களுக்கு மிகப்பெரிய உடைப்பு ஒன்று தேவை. அது நிகழ்வதில்லை. கல்வித்துறையிலோ, சமூக வலைத்தளத்திலோ அதற்கான இயல்பான வாய்ப்புகள் இல்லை.

ஏனென்றால் இவர்கள் கல்வி, வேலை போன்ற நிலைகளில் நிலைபெற்றவர்கள் என்பதனால் தாங்கள் வெற்றிகரமானவர்கள், ஆகவே உயர் அறிவுத்திறன் கொண்டவர்கள் என நம்புகிறார்கள். ஆகவே அவர்களை விடமேலான அறிவுத்தளம் ஒன்று அவர்களை உடைக்க முடியாது. தங்கள் ஆணவத்தால் மிகமிகத்தீவிரமாக அதை எதிர்ப்பார்கள். தங்களுக்கு மேல்நிலையிலிருந்து ஒன்று சொல்லப்படுகையில் எள்ளல் நக்கல் வழியாக அதை எதிர்கொள்வார்கள். எள்ளலைப்போல ஒருவனை ஆணவத்தின் சிறையில் அடைத்துப்போடும் ஆற்றல்கொண்டது வேறில்லை.

இவற்றை எவரும் இலக்கியமல்ல என்று இன்று சொல்லி நிறுவ முடியாது. சமூகவலைத்தளச் சூழலில் ஒன்றும் ஒன்று இரண்டு என்றாலும் அதை ஆவேசமாக எதிர்த்து வாதிட முடியும். ஆகவே எந்த வகையான வழிகாட்டுதலும் பொதுச்சூழலில் இருந்து கிடைப்பதில்லை. ஆகவே இவர்கள் ஒருபோதும் தங்களை மீறிச்செல்லமாட்டார்கள். இவர்களின் வலைப்பதிவுகளில் இருக்கும் அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கையைக் காண்கையில் இரும்புக்கூட்டுக்குள் இருக்கும் விலங்குகள்தான் நினைவுக்கு வரும்.

இலக்கியம் என்பது பண்பாட்டின் அகத்தால் எழுதப்படுவது. அதற்கு புறவயத்தன்மை மிகக்குறைவு. சொல்லப்போனால் அந்த புறவயத்தன்மை ஒரு புனைவுப்பாவனை மட்டுமே. அது அகவயத்தன்மையால் ஆனது. ஒரு பண்பாட்டின் உள்ளூர ஆழ்ந்திறங்கும்போதே இலக்கியம் மதிப்பு கொண்டதாகிறது. ஆகவே மிகமிக வட்டாரத்தன்மை [regionality] கொண்டதே மிகமிக உலகப்பொதுத்தன்மை [universality] கொண்டதாகிறது இலக்கியத்தில்.

இக்காரணத்தால்தான் மிக அதிகமாக விற்கப்படுவது இலக்கியமாவதில்லை. ஏனென்றால் அது மிக அதிகமாக விற்கப்படும்பொருட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. நுகர்வோர் பரந்து விரிந்திருக்கையில் அவர்களின் பொதுக்கூறுகளை மட்டுமே கருத்தில்கொண்டு சமைக்கப்படுகிறது. வாசிப்பை ஒரு மோஸ்தராக, சமூக அடையாளமாகக் கொள்பவர்கள் இலக்கியவாசிப்பாளர்கள் ஆவதில்லை. வாசிப்பை மிக அந்தரங்கமாக, தன் தனித்தேடலுக்குரிய பாதையாக, கொள்பவர்களுக்குரியது இலக்கியம்

அமிஷ் நாவல்கள் இந்தியாவில் 90 களில் உருவான நான்குவழிப்பாதை போன்றவை. அவற்றில் வேகமாகச் செல்லமுடியும். பெருவாரியானவர்களுக்குரியவை. ஆனால் அவை எவ்வகையிலும் இந்தியாவை நமக்குக் காட்டித்தருவன அல்ல. இலக்கியம் கிராமச்சாலை, ஒற்றையடிப்பாதை.

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியத்துள் நுழைதல்…
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள்- விமர்சனம்