‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6

bowவீரசேனர் விழுந்ததை துஷாரர்களின் கொம்போசையிலிருந்து உத்தர கலிங்க மன்னர் சித்ராங்கதர் அறிந்தார். வீரசேனரின் பாகன் தேர்த்தட்டில் எழுந்து நின்று விழிநீருடன் தன் சங்கை வெறிகொண்டவன்போல் திரும்பத் திரும்ப ஊதினான். சூழ்ந்திருந்த துஷாரப் படையினர் “விண்ணெழுந்த வீரர் வெல்க! துஷார வீரசேனர் நிறைவுறுக! துஷாரச் செங்கோல் நீடுவாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். துஷாரர்களின் படைத்தலைவர்கள் பறைகளையும் கொம்புகளையும் முழக்கி கொடிகளை அசைத்து சிதறி சிறுகுழுக்களாக எஞ்சிய படைகளை ஒருங்கு திரட்டி மேலும் மேலும் பின்னுக்கிழுத்தபடி மையப்படைக்குள் சென்று அமைந்தனர்.

சித்ராங்கதர் தன் உடல் ஒரு பக்கம் எடை மிகுந்து நிலை சரிந்ததுபோல் உணர்ந்தார். இடக்கால் துடித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமுமென வீரசேனரின் இறப்பை தான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. முதலில் மல்ல நாட்டு ஆகுகர் விழுந்தபோது அவருள் ஒரு திடுக்கிடலாக எழுந்தது அது. கடுங்குளிர்போல உடலுக்குள் நிறைந்து விரல்நுனிகள் அனைத்தையும் விறைப்படையச் செய்தது. பின்னர் உசிநாரர் விழுந்தபோது பற்கள் இரும்பைக் கடித்ததுபோல் கூசின. விழிகள் நீர்கோத்தன. இனி ஒருவர், இனி ஒருவர் என்று அவர் உள்ளம் சொல்கொண்டது. வீரசேனர் விழுந்தபோது ஒரு வட்டம் முழுமையடையும் நிறைவை அடைந்தார். இழுத்துக்கட்டியிருந்த சரடுகள் அனைத்தும் அறுபட உடல் நிலம் நோக்கி விழ விரும்பியது.

அவருடைய படைத்தலைவன் திரிசக்ரன் முன்னால் தேர்மேல் எழுந்து கலிங்கப் படைகளை நோக்கி “முன்னேறுக! முன்னேறுக!” என்று கூவிக்கொண்டிருந்தான். அவருடைய மைந்தர்கள் சித்ரரதனும் சித்ரபாகுவும் இருபுறமும் தேர்களில் போரிட்டபடி முன்னால் சென்றுகொண்டிருந்தனர். பின்னாலிருந்து முரசொலியாக சகுனியின் ஆணை வந்தது. “கலிங்கப் படை அணிபிரிய வேண்டியதில்லை. மூன்று கலிங்கங்களும் இணைந்து வடிவை நிலை நிறுத்துக! பருந்து பறந்து முன்னேறட்டும். நாரையின் சிறகுகளை சிறகால், உடலை உகிரால் எதிர்கொள்க! செல்க! செல்க!” அவருக்கு வலப்பக்கமிருந்து சித்ரரதன் “இளைய பாண்டவர் நம் படைகளில் ஒரு பகுதியை முற்றழித்துவிட்டார். பருந்தின் கழுத்துக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறார்” என்றான். இடப்பக்கம் இருந்த சித்ரபாகு “அவரால் உள்ளே வர முடியாது. இன்னும் சற்று நேரத்தில் முற்றிலும் சூழ்ந்துகொள்ளப்படுவார். ஒருவேளை இன்றே களம்படுவார்” என்றான். சித்ரரதன் உரக்க நகைத்து “அணைவதற்கு முந்தைய தழலெழுகை!” என்றான்.

எச்சொற்களும் அவர் உள்ளத்தில் பதியவில்லை. தேர்ந்த பயிற்சியால் தன் முன்வந்த அம்புகளுக்கு உடலொழிந்தும், வில்லெடுத்து இலக்கு கூர்ந்து கவசங்களின் இடைவெளி நோக்கி வீரர்களை வீழ்த்தியும் முன் சென்றுகொண்டிருக்கையில் அவர் உள்ளிருந்து இரு விழிகளும் சிறுபறவையென்றாகி பறந்து மேலெழுந்து கீழே படைக்கலங்களும் உடல்களும் கொந்தளிக்கும் போர்ப்பரப்பை பார்த்து திகைத்து தத்தளித்துக்கொண்டிருந்தன. பின்னால் தன் மையப் படைகள் அகன்று விலகிக்கொண்டே இருக்க அதை சற்றும் பொருட்படுத்தாமல் பீமன் மேலும் மேலுமென பருந்தின் கழுத்தை வெட்டி உள்ளே வந்துகொண்டிருந்தான். அவனுடைய சூழ்படை அவனிலிருந்தே வெறியை பெற்றிருந்தது. அவனைப் போலவே உடலசைவுகள். அவனுடைய அதே போர்க்கூச்சல். பீமனே நூறென ஆயிரமென பெருகியது போலிருந்தது. குருதி வழியும் கவசங்களுடன் வில்லாலும் கதையாலும் வேலாலும் கொன்று கொன்று பெருகி எழுந்து அணுகும் அப்படையில் எவர் பீமன் என்பதை ஒருகணம் விழிமயங்கித் தெளிந்த பின்னரே உணரமுடிந்தது.

மூன்று கலிங்க நாடுகளும் ஒன்றென கலந்துருவானது கலிங்கப்படை எனினும் ஆயிரத்தவரும் நூற்றுவரும் தங்கள் பழைய அடையாளங்களுடன்தான் படைகளுக்குள் திரண்டிருந்தனர். மையக்கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் தன் நான்கு மைந்தர்களுடன் முகப்பிலிருந்தார். அதன் இடது எல்லையில் தட்சிண கலிங்கநாட்டு மன்னர் சூரியதேவர் தன் இளையோன் கேதுமானுடனும் ஏழு மைந்தர்களுடன் படை நடத்தினார். அவர்களிருவரையும் திருஷ்டத்யும்னனின் படைகள் எதிர்கொண்டன. நாரையின் கழுத்து நன்றாக வளைந்து மூன்று முனைகள் கொண்ட அலை போலாகி பருந்தை வளைக்க முயன்றுகொண்டிருந்தது. பீமன் மட்டும் அந்தப் படைசூழ்கையின் வடிவ ஒழுங்கையும் மீறி மேலும் மேலுமென நீண்டு உள்ளே வந்திருந்தான். திருஷ்டத்யும்னனை தடுத்து நிறுத்தவும் மேலும் மேலுமென பின்னால் தள்ளிக்கொண்டு செல்லவும் கலிங்கப் படைகளால் இயன்றது.

அவர் விழியோட்டித் திரும்பிய கணத்தில் பீமனின் தேரை நெடுந்தொலைவில் கண்டார். மறுகணம் மிக அருகிலென உணர்ந்தார். உள்ளம் திடுக்கிட்டு வில் கைநழுவியபோது பாய்ந்து பிடித்து அந்த நிலைகுலைவால் இரு அம்புகள் தோளிலும் தொடையிலும் தைக்க முட்டுகள் மடித்து தேரில் அமர்ந்து தலையை நன்கு குனித்து தேர்த்தட்டின்மேல் பதித்துக்கொண்டார். மூடிய விழிக்குள் பீமனின் தேர்முகப்பிலாடிய வீரசேனரின் வெட்டுண்ட தலை அவருக்கெனவே வெட்டி வைக்கப்பட்டதுபோல் தெரிந்தது. திறந்த உதடுகளுக்குள் இரண்டு பற்கள் சற்று எழுந்தன. கண்கள் களைப்பும் சலிப்பும் கொண்டவைபோல் நிலைத்திருந்தன. அவர் குமட்டல் கொண்டு வயிற்றை எக்கி வாயுமிழ்ந்தார். அதுவரை அவர் வீரசேனரின் முகத்தை பலமுறை நோக்கியிருந்தார், அது போரில் ததும்பும் முகங்களில் ஒன்றாக இருந்தது. இறந்த முகம். இங்கே அனைத்து முகங்களும் இறந்தவர்களுடையவைதானா?

அவர் புண்பட்டு விழுந்துவிட்டாரென்றெண்ணி பாகன் தேரை பக்கவாட்டில் திருப்பி படைப்பெருக்குக்குள் அமிழ வைக்க முயல தன் உடலிலிருந்த அம்புகளை பிடுங்கி வீசியபின் எழுந்து “செல்க! செல்க!” என்றார் சித்ராங்கதர். “தந்தையே!” என்று சித்ரரதன் கூவினான். “ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! படை முன்செல்லட்டும்!” என்று சித்ராங்கதர் கூறினார். சற்று தொய்வடைந்த அவர் படை மீண்டும் ஒருங்கிணைந்து எதிரில் வந்துகொண்டிருந்த சாத்யகியின் படைகளை தடுத்தது. இரு படைகளும் சந்தித்துக்கொண்ட முனையில் முப்புரிகளாக வடம் ஒன்று முறுகி, பின் பிரிந்து, மீண்டும் முறுகுவதுபோல உச்சப் போர் நிகழ்ந்தது. வலையினூடாக நீர் என முன்னின்று பொருதிய தேர்வில்லவர்களின் இடைவெளியினூடாக பரிவில்லவர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் போரிட்டு விரிய அவ்விடைவெளியினூடாக வேலேந்திய காலாள்படையினர் வந்தனர்.

அவர்களை கலிங்கத்து தேர்வில்லவர் சூழ்ந்துகொண்டு அம்புகளால் தாக்கினர். தேர்கள் தாக்கி அழுத்திப் பிரித்த தேர்களை புரவிப்படைகள் சூழ்ந்துகொண்டன. கலிங்கப் படைத்தலைவன் யுதாமன்யூவை சாத்யகியின் அம்பு தலைகொய்து சென்றது. துணைப்படைத்தலைவன் சித்ரரூபன் தேர்த்தட்டில் அலறி வீழ்ந்தான். அவர்களின் துணைப்படையினர் நிலைகுலைந்தபோது சாத்யகியின் படைவீரர்கள் தேர்களிலிருந்து நீள்வேல்களை ஊன்றி தாவி வந்து தேர்களிலேயே தொற்றிக்கொண்டு வாளால் வெட்டி வீழ்த்தினர். சினத்துடன் “முன் செல்க! அந்த யாதவனை எதிர்கொள்க! குருதிகொள்க!” என்று சித்ராங்கதர் ஆணையிட்டார். அவருடைய தேர் கீழே விழுந்து கிடந்த உடைந்த சகடங்களின் மீதும் புண்பட்டோர் உடல்கள் மீதும் ஏறிச் சரிந்து எழுந்து அலைகொண்டு சென்று சாத்யகிக்கு நேர் முன்னால் வந்தது.

சாத்யகி சிரித்தபடி “வருக! இன்று கலிங்கன் குருதிகொள்ள வேண்டுமென்பது என் நூலெழுத்து போலும்!” என்றான். “இன்று களத்தில் சிறப்புறுவேன் என்று நிமித்திகர் உரைத்த பின்னரே கிளம்பியிருக்கிறேன், கீழ்மகனே. அது இழிகுலத்தோனாகிய யாதவனுடன் போர் புரிந்தல்ல, உன்னை இங்கு ஏவிய ஷத்ரியர்களுடன் வில்கோர்ப்பதனூடாக!” என்றார் சித்ராங்கதர். அவர்கள் இருவரின் அம்புகளும் வானில் சந்தித்தன. நாணிழுத்து தான் விடும் ஒவ்வொரு அம்பையும் அவன் எளிதாக தவிர்ப்பதை, அவன் அம்புகள் தன் தேரிலும் கவசங்களிலும் அனற்பொறி கிளம்ப வந்து அறைவதை சித்ராங்கதர் உணர்ந்தார். மைந்தர்களை துணைக்கு அழைக்கவேண்டுமா என்று அவர் எண்ணுவதற்குள்ளாகவே இரு மைந்தர்களும் அவருக்கு இருபுறமும் வந்தனர். “கொல்க! கொல்க!” என்று கூவியபடி அவர் சாத்யகியை நோக்கி அவர்களை ஏவினார்.

சாத்யகியின் கவசங்கள் மேல் பட்டு முனை மழுங்கி உதிர்ந்தன அவர்களின் அம்புகள். அவன் நாணிழுத்து அம்பெடுக்க வலக்கையை சற்றே தூக்கிய இடைவெளியில் முதல் முறையாக அவர் அம்பு சென்று அவன் உடலை தைத்தது. சீற்றத்துடன் பிறைஅம்பு ஒன்றை எடுத்து இழுத்து வலப்பக்கமாக விட்டு அவன் சித்ரரதனின் நெஞ்சை பிளந்தான். அவன் ஊதி அணைக்கப்படும் சுடர் என ஓசையிலாது தேர்த்தட்டில் விழுந்தான். “மைந்தா!” என்று அலறி அவர் திரும்புவதற்குள் அவருடைய தோளில் சாத்யகியின் அம்பு பாய்ந்தது. “தந்தையே, பின்னடைக! பின்னடைக!” என்று சித்ரபாகு கூவுவதற்குள் அவன் கழுத்தை பிறையம்பால் வெட்டி தேரில் வீழ்த்தினான் சாத்யகி. சித்ராங்கதர் “மைந்தர்களே!” என்று அலறியபடி வில்லை நழுவவிட்டு இரு கைகளையும் தூக்கினார். அவர் நெஞ்சில் ஓசையுடன் வந்தறைந்த பேரம்பினால் கவசம் இரண்டாகப் பிளந்து கீழே விழுந்தது. அடுத்த அம்பு நெஞ்சைப் பிளப்பதற்குள் பாகன் புரவிகளை முழு ஆயம் கூட்டி இழுத்து தேரை ஒடித்து திருப்பினான். நெஞ்சுக்கென வந்த அம்பு பட்டு தூண் உடைந்து தேரின் குவைமுகடு அவர் மேலேயே விழுந்தது. சாத்யகியின் அடுத்த அம்புகளால் அக்குவடு முகடும் உடைந்தது. பாகன் தேரைத் திருப்பி பின்னகரச் செய்து படைகளுக்குள் அமிழ்த்தி கொண்டு சென்றான்.

தன் மேல் விழுந்த தேர்க்குவடுக்குள் உடல் வளைத்து முழங்காலில் அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தார் சித்ராங்கதர். அவர் நெஞ்சு உறைந்தது போலிருந்தது. இத்தனை எளிதா? இத்தனை பொருளற்றதா? அவர் உள்ளம் சொல்கொண்டபோது “இவ்வளவா? இவ்வளவேதானா?” என வீறிட்டது. இருபுறத்திலிருந்தும் அவர் தேருக்குள் பாய்ந்தேறிய காவல்வீரர்கள் அவரைப்பற்றி பின்புறத்தினூடாக இழுத்து கீழே இறக்கினார்கள். மரவுரி விரிப்பில் அவரை இட்டு இருபுறமும் பற்றி மேலும் மேலும் படைகளுக்குப் பின்னால் கொண்டு சென்றனர். பின்னிலிருந்து “என்னாயிற்று? என்னாயிற்று?” என்று துரியோதனனின் வினா எழுந்தது. “புண்பட்டிருக்கிறார்! புண்பட்டிருக்கிறார்!” என்று கலிங்கத்தின் முரசுகள் மறுமொழி சொல்லின.

படைகள் நடுவே வந்துகொண்டிருந்த மருத்துவ வண்டிக்குள் அவரை கொண்டுசென்று படுக்க வைத்தனர். அங்கே முன்னரே கிடந்த இளவரசர்களில் ஒருவன் இறந்துவிட்டிருந்தான். அவன் மூக்கில் கைவைத்த பின் மருத்துவர் தலையசைக்க அவனை மறுபக்கத்தினூடாக கொண்டு சென்றனர். பிறிதொருவன் மெல்ல முனகியபடி தலையை அசைத்துக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து மூச்சு வெம்மையான குருதிக்கொப்புளங்களாக வெடித்தது. அவன் உடலில் எழுந்த வலிப்பில் திடுக்கிட்டு எழப்போகிறவன் என தோன்றினான். வழிந்த குருதி வண்டியின் விளிம்பில் மழைநீர் என சொட்டியது. சித்ராங்கதர் அக்குருதி மேலேயே படுக்க வைக்கப்பட்டார். வெங்குருதி உடலில் பட்டதும் விழிப்பு கொண்டு “மைந்தா! மைந்தா!” என்று கூவினார். “இது களம், அரசே. சற்று உளம்கூருங்கள்” என்று ஏவலன் சொன்னான்.

மருத்துவர் அவர் தலையைப்பற்றி சற்றே தூக்கி இளஞ்சூடான மதுவை அவர் வாயில் விட்டார். பாலையில் கைவிடப்பட்டவன் நீரை என வாய்நீட்டி அதை அள்ளி இழுத்து அவர் அருந்தினார். ஒவ்வொரு துளியும் உடல் முழுக்கச் சென்று தசைகளை உயிர்கொள்ளச் செய்தது. வயிற்றுக்குள் உலை ஒன்று பற்றிக்கொள்வதுபோல. குருதியிலோடும் அமிலத்தை உணர்ந்தபடி கண்களை மூடி உள்ளே சுழன்ற ஒளிப்புள்ளிகளை பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். மருத்துவர் அவர் உடலிலிருந்து அம்புகளை பிடுங்கினர். அவை அசைந்தபோது நரம்புகள் வலிகொண்டு சுருண்டு அதிர்ந்தன. அகன்றபோது புண்வாய் அனல் என எரிந்தது. அவற்றின் மேல் மருந்தும் மெழுகும் வைத்து மரவுரியால் இறுக்கிக்கட்டினர். இரு இடங்களில் அம்பு கிழித்த தசையை குதிரைவால் மயிரால் இழுத்துக்கட்டி அவற்றுக்கு மேல் மரவுரிச் சுற்று அமைத்தனர். அவர் மூக்கில் புகைக்குடுவையை வைத்து “அகிபீனா…” என்றார் மருத்துவர். ஆழ இழுத்து தன் நெஞ்சை நிரப்பிக்கொண்டார். புகை எரிந்துகொண்டிருந்த உள்ளுடலுக்குள் குளிர்ந்த மழைமுகில்போல கடந்து சென்றது.

bowசித்ராங்கதர் மெல்ல வெம்மையான நீரில் அமிழ்ந்துகொண்டிருப்பதைப்போல் உணர்ந்தார். இருபுறத்திலிருந்தும் நீர் அவருடலை வருடியபடி மேலெழுந்தது. நீர் விளிம்பு ஆடை தைக்க வந்த பீதனின் மென்பட்டு நூல்போல் அவருடைய தோலைத் தொட்டு அளந்து மேலெழுந்தது. இன்னும் சற்று எஞ்சியுள்ளது. தொடைகளில், வயிற்றில், முகத்தில்… மூக்கு முழுகுகையில் இந்த இனிய பெருக்கில் அமிழ்வேன். இதில் கரைந்து மறைவேன். மிக அருகே துரியோதனனின் குரல் எழுந்தது. “தங்கள் வருகையை நான் எதிர்பார்க்கவில்லை, கலிங்கரே!” அவனுடைய அவையில் அவர் அமர்ந்திருந்தார். துரியோதனன் அரசர்களுக்குரிய பீடத்தில் அமர்ந்திருக்க அவனுக்குப் பின்னால் துச்சாதனன் நின்றான். அறையின் மறு எல்லையில் துர்மதனும் துர்முகனும் நின்றிருந்தார்கள். சாளரத்தோரமாக பானுமதி நின்றாள். அவருக்குப் பின்னால் மைந்தர்கள் இருவரும் சுவர் ஓரமாக நின்றனர்.

அவ்வினாவுக்கான விடையை கலிங்கத்திலிருந்து தன் படையுடன் கிளம்புவதற்கு முன்னரே அவர் நூறுமுறை எண்ணியிருந்தார். பயணம் முழுக்க அத்தருணத்தை பலநூறுமுறை நடித்திருந்தார். ஆகவே இயல்பாக “இது என் கடமை. அரசர்கள் கடமைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று கூறினார். அத்தருணத்திற்குரியது அச்சொல் ஆயினும் அது ஒலித்ததுமே எத்தனை பொய்யானது என்று தோன்றியது. துரியோதனன் அந்த முறைமைச்சொற்களால் சற்றே எரிச்சலுற்றவன்போல முகக்குறி காட்டி உடனே புன்னகைத்து “ஆம், நாம் பிறப்பதற்கு முன்னரே ஆற்றவேண்டியவையும் அடிபணியவேண்டியவையும் எதிர்க்கவேண்டியவையும் வகுக்கப்பட்டுவிட்டன. பிறப்பு முதல் இறப்பு வரை எழுதப்பட்ட பிறகே அரசன் பிறக்கிறான் என்று நிமித்திகர்கள் கூறுவதுண்டு” என்றான். அவன் சொல்வதும் அணிச்சொல் என்று உணர்ந்தாலும் அவர் உடல் மெல்ல தளர்ந்தது.

கைகளை பீடத்தின் கைப்பிடி மேல் வைத்து சற்றே சாய்ந்து “மெய். ஆயினும் அந்தந்த தருணங்களில் பெரும் மனக்கொதிப்பை அடைகிறோம். நான் பொய்யுரைக்க விரும்பவில்லை. என் அரண்மனைக்குள் புகுந்து மணத்தன்னேற்பு அன்றே என் மகளிரை நீங்கள் சிறைபிடித்துச் சென்றதை பல ஆண்டுகள் என்னால் மறக்க இயலவில்லை. ராஜபுரம் அந்த அடியிலிருந்து மீளவேயில்லை. நாங்கள் ஆற்றலற்றவர்கள் என்பது நிறுவப்பட்டது. ஆகவே எங்கும் மதிப்பில்லாதவர்கள் ஆனோம். ஆனால் அஸ்தினபுரி படைத்துணை செய்யக்கூடும் என்பதனால் மட்டுமே தாக்கப்படாமல் இதுவரை கடந்துவந்தோம்” என்றார் சித்ராங்கதர். “அஸ்தினபுரியுடன் போர்கொண்டெழுவதற்கு எவ்வகையிலும் ஆற்றல் உடையதல்ல ராஜபுரம் என்பதனால் மட்டுமே அங்கு ஒடுங்கியிருந்தேன். இயலாதவனின் நெஞ்சிலெழும் வஞ்சம் எத்தனை கொடிதென்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன். முற்றிய நஞ்சு நாகத்தையே எரிக்கும் என்பார்கள்.”

துரியோதனன் “கலிங்கரே, நான் பிறப்பதற்கு முன்னரே இந்த ஆடற்களம் முடிவாகிவிட்டது. இன்று அணுகியிருக்கும் இப்போர் என் மூதன்னை சத்யவதியின் ஆட்சிக்காலத்திலேயே முனை கொள்ளத்தொடங்கியது என அறிக! சென்ற மூன்று தலைமுறைகளாக பாரதவர்ஷத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் இப்போருக்கு அணிதிரட்டுவது மட்டுமே. நான் இயற்றியதும் அவ்வணி திரட்டலில் ஒரு நிகழ்வுதான்” என்றான். எங்கிருந்தென்று அறியாமல் உளக்கொதிப்பொன்று எழுந்து அவர் முகத்தை இறுக வைத்தது. பற்கள் கிட்டிக்க சில கணங்களில் முறுகிய கைகளை ஒவ்வொன்றாக விடுவித்து உடலை தளரவைத்து அதனூடாக உள்ளத்தை இயல்பாக்கி செயற்கையாக உதடுகளை புன்னகைக்கென விரித்தார். முகத்தசைகள் புன்னகைபோல் ஆனால் எவ்வண்ணமோ உள்ளத்திலும் சொற்களிலும் அப்புன்னகை குடியேறுவதை அவர் பயின்றிருந்தார்.

“ஆம், பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவருமே மாபெரும் நாற்களப் படைக்களத்தின் கருக்களாகவே நின்றுள்ளனர். தாங்கள் என் மகளை கவர்ந்து வந்தது இயல்பென்றே எனக்கு தோன்றுகிறது. ஆனால்…” என்றதுமே துரியோதனனின் கண்களில் வந்த மாற்றத்தை அவர் கண்டார். அத்தருணத்தில் அது அவருக்கு உவகையளித்தது. அவனுடைய உள்ளத்தின் மிக நுண்ணிய பகுதியொன்றை கண்டடைந்துவிட்டவர்போல் அங்கே தன் சொற்களை ஆழக் குத்தினார். “சிறுகுடியினனாகிய சூதனொருவனுக்கு என் மகள் துணைவியானதை மட்டும்தான் இத்தருணத்தில் என்னால் ஏற்க இயலவில்லை” என்றார்.

ஆனால் அவர் எண்ணியதுபோல துரியோதனன் சினந்தெழவில்லை. துச்சாதனன் உடலில் மட்டும் எதையோ சொல்ல வருபவன்போல் ஓர் அசைவு வெளிப்பட்டது. துரியோதனன் “ஆம், உங்களை புரிந்துகொள்கிறேன். ஆயினும் அங்க நாட்டின் கலிங்க அரசி பெற்ற இளமைந்தர் இன்று பெருவீரர்களாக வளர்ந்து நின்றிருக்கிறார்கள். வருங்காலங்களில் அவர்கள் பாரதவர்ஷத்தின் பெருநிலங்களை ஆள்வார்கள் என்று நிமித்திகர்கள் கூறியிருக்கிறார்கள்” என்றான். சித்ராங்கதர் எண்ணிச் சொல்லெடுத்து “அவர்களைப்பற்றிய செய்திகளை நான் கேட்பதுண்டு. சின்னாட்களுக்கு முன் ஒருமுறை அவர்களுடைய ஓவியங்களை கொண்டுவந்து காட்டினார்கள். அழகர்கள். என் அரசி அவற்றை நோக்கி விழிநீர் உகுத்தாள்” என்றார்.

துரியோதனன் “இன்னும் தருணம் உள்ளது. தாங்கள் இங்கு தேடி வந்தது ஒரு தொடக்கம் என்று அமையட்டும். உங்கள் தோள்கள் பெயர்மைந்தரை அணைத்துக்கொள்ளும் தருணத்தை காத்திருக்கிறேன்” என்றான். சித்ரரதன் சினத்துடன் “அவர்கள் மாவீரர்களாக இருக்கலாம். நிமித்திகர் சொற்படி நாளை இப்பாரதவர்ஷத்தின் மீது அவர்களின் கொடியும் பறக்கலாம். சூதனின் குருதி என்பது மட்டும் மாறாது. கலிங்கம் ஒருபோதும் அவர்களை ஏற்காது” என்றான். சித்ராங்கதர் அவனை திரும்பிப்பார்த்துவிட்டு “ஆம், கலிங்கம் தன் குலப் பெருமையை ஒருபோதும் விட்டுத்தர இயலாது” என்றார்.

பானுமதி புன்னகையுடன் “அதை புரிந்துகொள்ள இயல்கிறது, கலிங்கரே. தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த கலிங்கக் கொடிவழியினருக்கு என்றுமே தொல்குடி ஷத்ரியர்களின் மதிப்பும் அவைப்பீடமும் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்கள் செய்த அஸ்வமேதமும் ராஜசூயமுமே ஷத்ரியத் தகுதியை ஈட்டியளித்திருக்கின்றன. அதை விட்டுவிடுவதென்பது அருஞ்செல்வத்தை கையளிப்பது போன்றது” என்றாள். “ஆனால் அங்கர் எண்ணினால் மும்முறை அஸ்வமேதமும் ராஜசூயமும் செய்ய இயலும். அவர் மைந்தருக்கு அது இன்னும் எளிது. மிக விரைவிலேயே நீங்கள் சென்று அமரும் அவைகளில் மிகச் சிறந்ததாக அங்கம் அமையும். அன்று அவர்களின் பொருட்டு உங்களுக்கு நீங்கள் விழையும் அவைப்பீடமும் கிடைக்கக்கூடும். அதுவரை பொறுத்திருக்கலாம் ”என்றாள்.

அவள் சொன்னதன் உட்குறிப்புகள் அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு முன்னரே சித்ரரதன் “அப்போது பார்ப்போம். அவைப்பீடம் ஈட்டுவது வரை எவரும் புறத்தோரே” என்றான். சலிப்புடன் தலையசைத்த சித்ராங்கதர் “இவ்வண்ணம் சொற்போரிடும்பொருட்டு நான் இங்கு வரவில்லை. என்ன செய்யலாம் என்று எங்கள் அவைகூடி எண்ணினோம். என் பேரமைச்சர் சொன்னது இதுதான். கலிங்கர்களுக்கு இரு வாய்ப்புகளே உள்ளன. பாண்டவர் தரப்பில் நான் செல்வேனென்றால் எனது ஷத்ரியக் குலப்பெருமையை இழந்தவனாவேன். மண்வென்று முடிகொண்ட குடியனைத்துக்கும் ஷத்ரிய நிலை வேண்டுமென்று நின்றிருக்கிறார் இளைய யாதவர். அதை ஏற்று கிராதருடனும் நிஷாதருடனும் இணை அமர என்னால் இயலாது” என்றார்.

அவருக்கு தான் சொல்வது சரியான சொற்கள்தானா என்னும் ஐயம் எழுந்தது. ஆயினும் நிறுத்தமுடியவில்லை. “தென்கலிங்கமும் மையக் கலிங்கமும் இங்கு வந்து சேர்ந்திருக்கையில் நான் என் படைகளுடன் அவர்களுக்கெதிராக நின்றிருக்க வேண்டியிருக்கும். மையக்கலிங்க அரசர் என் தந்தை.  தென்கலிங்கத்து சூரியதேவர் என் தமையன். மூன்று கலிங்கங்களும் முன்பு பிரிந்தது வணிகப்போட்டியால். நாங்கள் ஒரே குருதி, ஒரே கொடிவழி. ராஜபுரத்தின் பெரும் செல்வத்தை கலிங்கம் கொண்டுசெல்கிறது என்பதே தனிநாடாக மாறவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியது. அவ்வண்ணமே தண்டபுரமும் எண்ணியிருக்ககூடும். ஆனால் இன்று தோன்றுகிறது, அதைவிட முதன்மையானது எங்கள் உள்ளத்தில் மகதம் விளைவித்த திரிபு என்று. முன்பு பிருஹத்ரதரும் பின்னர் ஜராசந்தரும் தங்கள் சூழ்ச்சிகளினூடாக தந்தைக்கு மைந்தரை எதிரியாக்கினர். எங்கள் நாட்டை மூன்றெனப் பகுத்தனர். மூன்றுடனும் நல்லுறவிலும் இருந்தனர். ஆனால் எத்தருணத்திலும் மகதத்தின் படைவல்லமையை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக கலிங்கம் இருந்ததில்லை. தாம்ரலிப்தி இல்லாமல் மகதத்தின் வணிகம் இல்லை. ஆனால் தாம்ரலிப்தியில் கலிங்கம் கொள்ளும் சுங்கத்தைவிட பன்னிரு மடங்கு சுங்கத்தை ராஜகிருஹத்திலும் பாடலிபுரத்திலும் மகதம் ஈட்டிக்கொண்டிருந்தது. ராஜபுரம் இல்லையேல் விதர்ப்பமும் விராடமும் வாழ இயலாது. ஆனால் அவர்கள் உவந்தளிக்கும் கொடையினால் வாழ்பவர்களாகவே இத்தனை காலமும் வாழ்ந்தோம். இனியாகிலும் நாங்கள் மூவரும் ஒருங்கிணைந்தாக வேண்டும்.”

“கலிங்கம் ஒன்றுபட்டு எழவேண்டுமெனில் இப்போருக்குப் பின்னரே அது இயலும். ஆகவே இங்கு வரலாம் என்று முடிவெடுத்தேன். தந்தையை நேரில் சந்திப்பது கடினம் என்றாலும் எனக்கு வேறுவழி இருக்கவில்லை.” அதுவரை இருந்த அனைத்து சொற்கட்டுப்பாடுகளையும் இழந்து சித்ராங்கதர் சொன்னார் “மெய், எனக்கு இம்முடிவு எளிதானதாக இருக்கவில்லை. என் உடல் ஆயிரம் முட்களில் சிக்கியிருப்பதாகவே உணர்ந்தேன். ஒவ்வொன்றையாக குருதி வழிய கிழித்து முன்னகர வேண்டியிருந்தது.” அவர் குரல் மாறுபட்டது. அறியாமல் கை நெஞ்சில் பதிந்தது. “என் இரு மகள்களின் வாழ்வும் அழிந்தது. ஒருத்தி இங்கே சித்தம் பிறழ்ந்து சிறையிருக்கிறாள். பிறிதொருத்தி பிச்சியென எங்கோ அலைந்துகொண்டிருக்கிறாள். இருவரையும் குழவிகளாகக் கண்ட அந்நாட்களை நான் இன்னும் மறக்கவில்லை. தந்தையென்று உங்கள் இரு அரசுகளுக்கும் மேல் நான் கொண்ட வஞ்சம் என் உள்ளத்திலிருந்து இன்னும் அழியவில்லை. ஆயினும் எனக்கு வேறு வழியில்லை. என் மைந்தர்கள் மூன்று கலிங்கமும் ஒன்றாக வேண்டுமென்று கூறினார்கள். என் அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். அதன் பொருட்டே கிளம்பினேன்” என்றார்.

அவர் உதடுகள் துடிக்க கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. வெறும் முதியவராக மாறி கைநீட்டி “என் மகள்! இங்கு அவள் எதை அடையவில்லை? எதனால் அப்படி உடைந்தாள்?” என்றார். துரியோதனன் விழிதாழ்த்தி மெல்ல உடலை அசைத்து “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, கலிங்கரே. அதுவும் என் ஊழின் ஒரு பகுதி என்று உணர்கிறேன். எந்தை தன் துணைவியரின் பெண் பழி கொண்டவர். அவர் கொள்ளும் துயரமும் கொள்ளவிருப்பதும் அதற்கான விலை. நானும் அவ்வாறே. இப்புவியிலோ விண்ணிலோ அதன் பொருட்டு நான் பிழையீடு செய்கிறேன்” என்றான். சித்ராங்கதர் விம்மலோசை எழுப்பி அழுதார். சித்ரரதன் சீற்றத்துடன் அவர் தோளைத் தொட்டு குரலைத் தாழ்த்தி “தந்தையே” என்றான்.

துரியோதனன் “அரசே, இப்போது நான் அதன் பொருட்டு தங்களிடம் என்ன சொல்ல வேண்டும்? தங்கள் அடிமேல் என் தலையை வைத்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமெனில் அவ்வாறே செய்கிறேன்” என்றான். சித்ரபாகு எழுந்து “வேண்டாம், அரசே. தங்கள் கீழ் படைநிரத்தவே வந்துள்ளோம். எளிய தந்தையென உணர்வுகளை காட்டலாகாது என்று சொல்லியே அழைத்து வந்தோம். அவருக்கு தன் சொற்கள் மேல் முழுதாள்கை இல்லை” என்றான். அவன் கையைத் தட்டியபடி முன்சாய்ந்து சித்ராங்கதர் கூவினார் “ஆம், நான் அரசனல்ல. வெறும் தந்தை. என்ன ஆயிற்று என் மகளுக்கு? அங்கனின் துணைவி எதை இழந்தாளென்று நான் உணர்கிறேன். அவள் உளத்தமர்ந்தவன் அனைத்து அவைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் பேரரசன். அவள் அடைந்ததோ இழிவன்றி பிறிதொன்றை அறியாத சூதன். அஸ்தினபுரியின் பேரரசனுக்குத் துணைவியாக வந்தவளுக்கென்ன?”

பானுமதி “ஏனெனில் அவள் இரண்டாமவள்” என்றாள். அவள் குரல் அடைத்திருந்தமையால் எவரோ பேசுவதுபோல் ஒலித்தது. சித்ராங்கதர் திறந்த வாயுடன் ஒருகணம் திகைத்து அவளை பார்த்தார். அவர் கன்னங்களில் விழிநீர் பரவி தாடி மீது நீர்த்துளிகள் நின்றன. தலை ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் மூச்சு சீறி, தொண்டையைக் கனைத்து “ஆனால் அது அரசகுடியினருக்கு இயல்பானதே” என்றார். பானுமதி “அவ்வரசர்கள் புரிந்துகொள்ள எளியவர்கள்” என்றாள். சித்ராங்கதர் புருவம் சுருங்க பானுமதியை நோக்கினார். பானுமதி “தெய்வம் அமர உறுதியான கருங்கல்லால்தான் பீடம் அமைப்பார்கள், கலிங்கரே” என்றாள். ஒருகணத்தில் அனைத்தும் புரிந்துவிட சித்ராங்கதர் தளர்ந்து பீடத்தில் மீண்டும் சாய்ந்தார். சிலகணங்களுக்குப் பின் நீண்ட பெருமூச்சுடன் மீண்டு வந்து “ஆம், அதற்கொன்றும் செய்வதற்கில்லை. அதற்கு மானுடர் எவரும் எதுவும் செய்வதற்கில்லை” என்றார்.

“பொறுத்தருளும்படி கோருகிறேன். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றான் துரியோதனன். சித்ரரதன் “இதை இனிமேல் பேச வேண்டியதில்லை, அரசே. இன்று அவையில் மூன்று கலிங்க அரசர்களும் ஒன்றென அமர்ந்திருக்கவேண்டும். நாங்கள் இப்படைப்பெருக்கில் ஒற்றைக்கொடியுடன் நின்று பொருத வேண்டும்” என்றான். “இளவரசே, உண்மையில் மையக்கலிங்க அரசர் ஸ்ருதாயுஷ் அதை முன்னரே கூறியிருந்தார். தன் மைந்தருடன் ஒன்றாகவேண்டும் என்று அவர் விரும்பினார். தென்கலிஙகத்தின் சூரியதேவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அவர்களிடையே பெரும் பிளவென ஏதுமில்லை.அவர்களிருவரும் படைகளை இணைப்பதைப்பற்றி சில நாட்களாகவே பேச்சு நடந்துவந்துள்ளது. உத்தர கலிங்கத்திலிருந்து தாங்கள் இங்கு வருவீர்கள் என்பது மட்டுமே எங்களால் எதிர்பாராததாக இருந்தது” என்று துரியோதனன் சொன்னான்.

மூச்சுத் திணறுவதுபோல் உணர அவர் திரும்பி அருகிலிருந்த சித்ரரதனிடம் மூச்சு திணறுகிறது என்றார். ஆனால் அவன் இறந்த உடலுடன் அமர்ந்திருந்தான். நோக்கு நிலைத்திருந்தது. “என்ன ஆயிற்று உனக்கு?” என்று சித்ராங்கதர் கேட்டார். அவன் உடல் பீடத்தில் பக்கவாட்டில் சரிந்தது. பீடத்தின் கீழே குருதி பெருகி வழிந்து அறையிலிருந்து வழிந்தோடுவதை அவர் கண்டார். “மைந்தா” என்று அலறியபடி எழுந்து அவன் தோளை பற்றிக்கொண்டதும் விழித்துக்கொண்டார். குருதிப் பெருக்கொன்றில் அவர் மூழ்கிக்கொண்டிருந்தார். மூக்கும் கண்களும் மூழ்கின. தொண்டையில் குருதியின் உப்பு. இரு கைகளாலும் அந்த வெம்மை கொண்ட நீர்ப்பரப்பை அளைந்து நீந்தி முகத்தை மேலே தூக்கினார். கைகளால் உந்தி எழுந்து அமர்ந்தார். அவர் அருகே அந்த இளவரசன் இறந்து மூக்கில் எஞ்சிய குருதிக்குமிழி அசைவிலாது நிற்க விழிமலைத்துக் கிடந்தான். மருத்துவர் “ஓய்வுகொள்ளுங்கள், அரசே. உங்களை பாடிவீட்டுக்கு கொண்டு செல்ல தேர் வந்திருக்கிறது” என்றார். “இல்லை, என் தேர் ஒருங்கட்டும். என்னால் போர்புரிய முடியும். நான் களம் மீள்கிறேன்” என்று சித்ராங்கதர் சொன்னார்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஅது நானில்லை
அடுத்த கட்டுரைஈர்ப்பு இரு எதிர்வினைகள்