திரிச்சூர் நாடகவிழா- 3

திரிச்சூர் நாடகவிழாவில் டிசம்பர் இருபத்தெட்டாம் தேதி சிங்கள நாடகம். சிங்களநாடகமும் திரைப்படமும் பொதுவாகச் சிறப்பாகவே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்க்க நேரிட்டதில்லை. சரத்சந்திரா ரிசர்ச் அண்ட் ஆக்டிவேஷன் ·பௌண்டேஷனின்ச் ஆர்பில் லலிதா சரத்சந்திரா இயக்கிய சிம்ஹபாஹ¤” என்ற நாடகம் எதிர்பார்த்தது போலவே மிக முக்கியமான ஓர் அரங்க அனுபவமாக அமைந்தது.

சிங்கள வம்சவரலாற்றைச் சொல்லும் புராணநூலான மகாவம்சத்தி’ல் இருந்து எடுக்கப்பட ஒரு கதை இந்நாடகத்தின் கருப்பொருள். அதை புகழ்பெற்ற சிங்கள நாடக ஆசிரியரான எதிரிவீர சரத்சந்திரா நாற்பதுவருடம் முன்பு ஓர் இசைநாடகமாக உருவாக்கினார்.ளன்றுமுதல் இன்றுவரை ஒருநாள் கூட இடைவெளியில்லாமல் அனேகமாக தினமும் இந்நாடகம் அங்கே நடைபெற்று வருகிறது. கேரளத்தில் குரு கோபிநாத் போன்றவர்களால் முன்பு உருவாக்கபப்ட்டு மெல்ல வழக்கொழிந்த இசை-நடன நாடகத்தின் வடிவில் இது இருந்தது.

மேடையில் முதலில் வரும் சூத்ரதாரன், அல்லது கவிஞன் மகாவம்சத்தை விரித்து கதையை வாசித்துச் சொல்ல ஆரம்பிக்கிறான். இருபக்கத்திரில் இருந்தும் மேடைக்கு வரும் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் அவருடன் இணைந்துகொள்கிறார்கள். மேடையிலேயே ஓரமாக அமர்ந்துகொள்ளும் அவர்கள் பின்னணிப்பாடகர்களாக ஆகிறார்கள்.

மேடைக்கு முதலில் சிங்கம் தோற்றமளிக்கிறது. உக்கிரமான நடனத்தால் அதன் வீரமும் கம்பீரமும் வெளிப்படுத்தப்படுகிறது. பின்னர் அந்தச்சிங்கத்தை காதலித்து இரு குழந்தைகளுக்குத் தாய் ஆக ஆன வங்க இளவரசி ஸ¤ப்பாதேவி அறிமுகமாகிறாள். சிங்கத்தில் இருந்து அவள் பெற்ற மகன் சிங்கபாஹ¤வும் மகளும் மேடைக்கு வருகிறார்கள். கதாபாத்திரங்கள் தங்கள் உணர்வுகளை நேரடியாகவே பாடி ஆடி நடித்தார்கள்.

மகனையும் மகளையும் ஒரு குகைக்குள் வைத்து வளர்க்கிறது சிங்கம். சிறைப்பட்ட சிங்கபாகு வெளியுலகுக்கு ஆசைப்படுகிறான். தந்தையைக்கொன்றுவிட்டு சுதந்திரம் பெற விழைகிறான். இது அவனுக்கும் தாய்க்கும் நடுவே தீவிரமான மனப்போராட்டங்களை உருவாக்குகிறது. கடைசியில் ஆயுதமேந்தி தந்தைமுன் வந்து நிற்கிறான் சிங்கபாகு. எதிரியாக வந்தது தன் மகன் என்று கேட்டபோதே சிங்கத்தின் மனம் கரைகிறது. பாசத்தால் உருகிப்போன அது போரிட மறுக்கிறது.

சிங்கபாகு தந்தையை நோக்கி அனுப்பும் அம்புகள் அவர்மீது மலர்மாலைகளாகவே விழுகின்றன. ஆனால் மேலும் மேலும் கோபம் கொண்டு கொந்தளிக்கும் சிங்கபகு தளராமல் அம்புகளை அனுப்ப ஒருகடத்தில் சிங்கம் கொலைவெறிகொள்கிறது. அந்த வெறுப்பு மூலம் அதுவரை அதை காத்துவந்த பாசத்தின் கவசம் இல்லாமலாகிறது. அம்புகள்தைத்து சிங்கம் இறக்கிறது. தந்தையைக் கொன்ற மகனை நினைத்து கண்ணீர் உகுக்கும் ஸ¤ப்பா தேவியின் சித்திரத்துடன் நாடகம் முடிகிறது.

இந்நாடகத்தின் முக்கியமான அம்சம் நம் காதுகளுக்கு மிகவும் பழக்கமான இசைதான். பாடகர்களில் சிங்கபாகுவாக நடித்தவர் மட்டுமே சிறப்பாகப் பாடவில்லை என்று சொல்ல வேண்டும். ஸ¤ப்பாதேவியாக நடித்தவர் மிகச்சிறப்பாக பாடினார். தேர்ச்சிபெற்ற நடன அசைவுகள் நாடகத்தை ஒவ்வொரு கணமும் பார்வைக்கு இனிதாக்கின.

இம்மாதிரியான புராணநாடகங்களுக்கு உள்ள சிக்கல்களில் முக்கியமானது இவற்றின் உணர்ச்சிகள் மிகையாகவும் சந்தர்ப்பங்கள்  அசாதாரணமானவையாகவும் இருக்கும் என்பதுதான். அவற்றை யதார்த்த தளத்தில் பொருத்துவதும் இயல்பான நடிப்பு மற்றும் வசனங்களுடன் காட்டுவதும் கஷ்டம். இசைநாடகம் என்ற அவ்டிவம் அந்த சிக்கல்களை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது. சிங்கத்தின் ஆவேசமான அசைவுகளும் சரி ஸ¤ப்பாதேவியின் நளினமான அசைவுகளும் சரி சிற்பத்தன்மை கொண்டு அவற்றின் இயல்பின்மையை கடந்துசெல்கின்றன

உச்சகட்ட உணர்ச்சிகளை பாடலில் வெளிப்படுத்துவது மிக எளிதாக உள்ளது. பாடல் சொற்களின் அர்த்தங்களுக்கு அப்பால் இசைமூலம் சென்று அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. இசையரங்கு பற்றிய ஒரு கட்டுரையில் டி.எஸ்.எலியட் மனிதனின் கலைகளில் இசைநாடகமே உச்சமானது என்கிறார். வாழ்க்கைச்சந்தர்ப்பங்கள், நடிப்பு, நடனம், இசை, கவிதை, ஓவியம் என அத்தனை கலைகளையும் அங்கே ஒருங்கிணைத்துவிட முடியும் என்கிறார். சரத்சந்திராவின் அதற்கு சிறந்த உதாரணம்.

இந்நாடகத்தில் ஸ¤ப்பாதேவியாக நடித்தவரை எடுத்துச் சொல்லியாகவேண்டும். அவரது அனைத்து அசைவுகளும் நளினமாக இருந்தன. குரல் மிக இனிமை. நடிப்பில்கதி நுட்பமான பாவனைகள். கண்முன் ஒரு சிற்பம் நிகழ்ந்துகொண்டே இருப்பது போல் இருந்தது. நாடக உச்சமும் அவரில்தான் நிகழ்ந்தது. அரங்கில் இறுதியில் அவர் தோற்றமளித்தபோது கைத்தட்டலால் கூரை அதிர்ந்தது.

இலங்கையின் தமிழ் நாடகங்களும் சிறப்பானவை என்று சொல்கிறார்கள். இந்நாடகத்தின் பாதியளவு தரத்தை அவர்கள் எட்டினால்கூட தமிழ் மொழியின் நாடகங்களில் அவர்கள் முதலிடம் வகிப்பார்கள் என்று தோன்றுகிறது.

அடுத்தநாள் ஈரானிய நாடகம் ஜொகாஸ்டா. சோ·பாக்ளீஸின் ஈடிப்பஸ் மன்னன் என்ற நாடகத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட இந்நாடகம் முற்றிலும் புதுமையானது. இதன் இயக்குநர் அகே பத்தி. .லிவ் II தியேட்டர் தயாரிப்பு. மேடையில் மூன்றே கதாபாத்திரங்கள். ஈடிபஸ், அவன் அம்மா. அவன் அம்மாவை நினைவுறுத்தும் ஒரு மாய உருவம்.

இருண்ட மேடையில் அங்கிங்காகத்தோன்றும் மெல்லிய ஒளியில் முகங்கள் மின்னி மின்னிச்செல்ல , காட்சிகள் இருளில் திரைப்படத்துணுக்குகள் போல தெரிந்து அணையும் உத்தி கொண்ட இந்நாடகம் ஒரு கொடுங்கனவின் தன்மை உடையது. பின்னணியில் மூச்சிரைப்புகள் உறுமல்கள் இசையின் மெல்லிய அதிர்வுகள் அந்த கொடுங்கனவுத்தன்மையை மேலும் செறிவூட்டின.

ஜொகாஸ்டாவின் கனவா அது என்ற ஐயத்தை உருவாக்கும் சித்தரிப்பு கொண்டது இந்நாடகம். தாயின் மார்பில் ஒட்டி வளரும் ஜொகாஸ்டாமெல்லமெல்ல தாயின்பால் காம ஈர்ப்புக்கு உள்ளாகிறான். அவளால் தன் நிறைவில்லாத காமத்தை நிறைக்குமுகமாக உருவாக்கப்பட ஆளுமை அவன். அந்தக் காமநாட்டத்தின் உச்சமென்பது அவன் கைகளாலேயே தன் கணவனைக் கொல்லச்செய்வதுதான். ஆகவே அவனை தூண்டிவிடுகிறாள். அக்கொலையை அதிகாரத்தின் ஆட்டத்தைக்கொண்டு நியாயப்படுத்துகிறாள்

தந்தையைக் கொன்று மீளும் ஜொகாஸ்டாவை அவள் பாவத்தின் மணிமுடியை அணியச்செய்கிறாள். ஆனால் அவன் கைகளில் உள்ள உதிரக்கறையை அகற்ற முடியவில்லை. அது அவர்களை பின் தொடர்கிறது. ரத்தம் என்பது ஒரு பெரிய வலை என உணர்கிறார்கள். ஜொகாச்டாவை வேட்டையாடும் அந்த நிழலுருவம் மேலும் மேலும் வல்லமை கொள்கிறது. அது முதலில் அவன் தாயின் வடிவம் கொண்ட ஒரு ஈர்ப்பாக இருந்தது. பிறகு அது  அச்ச்சுறுத்தும் பேயாகி அவனை வதைத்தது. இப்போது அது பாவத்தின் மூர்த்த ரூபமாக மாறி அவனை குருடாக்கி கைப்பிடித்து முடிவிலி நோக்கிக் கொண்டு செல்கிறது.

இந்நாடகம் கதையோட்டம் கொண்டது அல்ல. ஈடிபஸின் மூலக்கதையில் இருந்து நிறைய வேறுபாடுகள். நேரடியாக– பச்சையான– வசனங்கள். அவை வசனகவிதை போல நீள்கின்றன. ஈரானிய வசனங்களுக்கு பக்கவாட்டில் ஆங்கில மொழியக்கத்தை திரையிட்டுக்காட்டினார்கள். மேடையில் உதிரி உதிரியாக காட்சி பிம்பங்கள் தோன்றி அணைந்தன. உக்கிரமான உணர்ச்சிவெளிப்பாடுகள் சில ஓவியங்கள் போல தோன்றிச்சென்றன.ஜொகாஸ்டாவுக்கும் தாய்க்குமான உறவை ஒரு கரிய திரைக்குக் கீழே தெரியும் முழங்கால்களின் மூலமே காட்டியிருந்தார்கள். கரிய திரைகள் மிக மெல்லிய லேசர் விளக்குச் சுடர்கள் என்று மேடைப்பொருட்கள் தேர்ச்சியுடன் பயன்படுத்தப்பட்டன.

ஒளியமைப்பின் தேர்ச்சிக்கு சிறந்த உதாரணம் இந்நாடகம். பொது விளக்கில் தோன்றும் காட்சியே அனேகமாக கிடையாது. சிலசம்யங்களில் கையில் வைத்திருக்கும் இரு சிறு விளக்குகளால் மேடைவிளிம்பில் அமர்ந்திருக்கும் ஒளியமைப்பாளர் கதாபாத்திரங்களின் முகங்களில் மட்டும் மாறி மாறி ஒளிவிழச்செய்து வேகமாக காட்சிகளைக் கொண்டுசென்றார். கிட்டத்தட்ட திரைப்படத்தின் அண்மைக்காட்சிகளைப்போல. நாடகம் முடிந்தபின் ஆழமான அசௌகரிய உணர்வும் சிக்கலான மனப்பிம்பங்களும் சிந்தனைகளும் கலந்து அதுவரை எந்த நாடகமும் உருவாக்காத கொந்தளிப்பு ஏற்பட்டது. இருத்தலியல் நாடகங்களுக்கே உரிய இயல்பு அது என்றார் முரளி.

நாடகம் முடிந்து வெளியே நடக்கும்போது பெருந்திரளாகக் கூடியிருந்தவர்கள் அனைவருக்குமே அந்நாடகம் ஆழமான ஒரு மனநகர்வை உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது. மெல்லிய குரலில் உதிரி உதிரி உரையாடல்கள். ஒருவர் ”என்ன ஒரு நாடகம்…இல்லையா?” என்றார். மத அடிபப்டைவாத நாடான ஈரான் எப்படி இப்படி ஒருநாடகத்தை அனுமதிக்கிறது என்றார் இன்னொருவர். ஈரான் நாடகக் குழுவைச்சேர்ந்தவர் இவை அங்கே சிறிய உள்ளரங்குகளில் நிகழ்த்தப்படுகின்றன என்றார். கடுமையான தணிக்கையும் ஒடுக்குமுறையும் இந்த நாடகங்களை உருவாக்குபவர்களுக்கு உள்ளது.   

சிங்கள நாடகத்தையுக் இந்த நாடகத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது என்றார் லோகித தாஸ். இந்த ஆழமான சிக்கலான கரு தொல்பழங்காலம் முதலே இருந்துகொண்டிருக்கிறது. ”இம்மாதிரியான கதைக்கருக்களுக்கு கனவுச்சாயலை அளிப்பது மிகச்சிறந்த உத்தி. இதெல்லாம் நாம் கனவில் மட்டுமே அறியும் யதார்த்தங்கள்” என்றார்

நாடகம் சினிமா பற்றி பேச்சு வந்தது. சினிமாவின் பிரம்மாண்டமும் தொழில்நுட்பமும்தான் அதன் சிக்கல். அவ்ளவுபெரிய தூண் என்று கையைக்காட்டி நடிப்பின்மூலம் ஒரு மாபெரும் தூணைக் காட்டிவிட முடியும். சினிமாவில் தொழில்நுட்பம் மூலம் அந்தத்தூணைக் காட்டியாகவேண்டும். அந்தத்தொழில்நுட்பம் வளர்ந்து உருமாறியபடியே இருக்கும். நாடகத்தில் அது கற்பனையில் நிகழ்வதனால் அதற்கு எல்லையே இல்லை. பென்ஹர் நாடகத்தை இன்று எந்த மேடையும் இல்லாமல் நடத்தி பிரம்மாண்ட உணர்வை உருவாக்கிவிடலாம். ஆனால் பிரம்மாண்டமான பென்ஹர் திரைப்படம் இன்று பிள்ளைவிளையாட்டு போல ஆகிவிட்டிருக்கிறது என்றார் லோகி.

சங்கீத நாடக அக்காதமி அரங்கில் புத்தகக் கண்காட்சி கலைப்பொருள் கண்காட்சி ஆகியவை இருந்தன. வயநாட்டு நாட்டுப்புற உணவுகளுக்கான ஒரு கடை இருந்தது. கலத்தப்பம், கிண்ணத்தப்பம், உறுக்கா போன்ற பல நாடுப்புற உணவுகள். வெளிநாட்டினர் ஸ்பூனால் மரவள்ளி கிழங்கு மயக்கியதைச் சாப்பிடுவதைக் காண வேடிக்கையாக இருந்தது.

வெளிநாட்டு நாடக ஆசிரியர்களுடன் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது சிங்கள நாடகக்குழுவுடன் வந்த ஒருவரைச் சந்தித்தேன். தமிழ் எழுத்தாளர் என்று என்னை முரளி அறிமுகம் செய்து வைத்தார். அவர் முகம் இறுகியது. என்னை கேள்விப்பட்டதில்லை என்றார். எந்தத் தமிழ் எழுத்தாளரையும் கேள்விப்பட்டதில்லையாம். ஆச்சரியமில்லை. ஈழ இலக்கியத்தை தொடர்ந்து வாசிக்கும் நான் எந்த சிங்கள இலக்கியவாதியையும் கேள்விப்பட்டதில்லை. அவர் அங்கே நாட்க-கலைத்துறை இயக்குநர் என்றார்.

அவரால் என்னிடம் பேச முடியவில்லை. அசௌகரியமான முகபாவனையுடன் எழுந்துசென்றார். மனிதர்கள் நடுவே எத்தனை பேதம்! ஆனால் வங்கதேச, பாகிஸ்தானி இயக்குநர்களுடன் சகஜமாக பேச முடிந்தது. சிரிக்க முடிந்தது. தழுவிக்கொள்ள முடிந்தது. பாகிஸ்தானி குழுவில் நடித்த ஒருவரும் சிங்களநாடகத்தில் சிங்கமும் வந்ததுமே கடுமையாக நோயுற்றுவிட்டார்கள் என அறிந்தேன். இருந்தும் மேடையில் அந்த நோயில் சாயலே இல்லாமல் நடித்தார்கள். ஆச்சரியம்தான்.

முப்பது, முப்பத்தொன்றாம் தேதிகளில் இரு நாடகங்கள் இருந்தன. துஸ்ஸமய் என்ற வங்காள நாடகம். நேபாளிந் ஆடகமான ·பயர் இன் த மொனாஸ்டிரி இறுதி நாடகம். இதில் வங்கநாடகம் சுமாரான நாடகம் என்றார்கள். நேப்பாளி நாடகத்தின் ஒளிநாடாவைப்பார்த்ததாகவும் அது ஒரு பெரிய அனுபவம் என்றும் நண்பர் சொன்னார். என்னால் பார்க்க முஇயாது. நான் அவசரமாகச் சென்னைசெல்ல வேண்டியிருந்தது. பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தின் இசைவெளியீடு நிகழ்ச்சிக்காக. ஆகவே கிளம்பிவிட்டேன்.

நாடகவிழாவுக்கு அனேகமாக தினமும் இரண்டாயிரத்துக்குக் குறைவில்லாமல் ரசிகர்கள் வந்திருந்தார்கள். நாடகங்களை நுட்பமாக ரசித்தார்கள். சினிமா ,நாடகத்துறைப் பிரபலங்கள் பலர் வந்திருந்தார்கள். ஆனால் ஞாயிறன்று சிங்கள நாடகம் நடைபெற்ற போது அரங்குக்கு வெளியே மிக அருகே ஒரு விளையாட்டரங்கில் பல்லாயிரம்பேர் கூடி உச்சகட்ட ஒலியில் தமிழ் சினிமாபாட்டுகளை பாடவைத்து அதற்கு வெறிநடனம் ஆடினார்கள். அந்த ஒலி சற்றே தொந்தரவை அளித்தது. ஒன்று மெல்லமெல்ல பின்னகர்ந்துகொனிருக்கும் கேரளம். இன்னொன்று தீவிரமாக உருவாகிவரும் புதிய கேரளம்.

முந்தைய கட்டுரைதிரிச்சூர் நாடகவிழா 2
அடுத்த கட்டுரைநூல்கள்,கடிதங்கள்