ஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி

ves1

சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட நாகர்கோயில் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஒரு நுண்செய்தியை அறிந்திருப்பார்கள், லண்டன்மிஷன் ஃபாதர்களிடம் நாம் ஹிந்து என்றுகூட சொல்லலாம், கத்தோலிக்கர் என்று சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்கு ஹிந்துக்கள் மீட்புக்கு வாய்ப்புள்ள அஞ்ஞானிகள். கத்தோலிக்கர்கள் அவ்வாய்ப்பே இல்லாத திரிபுவாதிகள். சாத்தானுக்கு தங்களை அளித்துக்கொண்டவர்கள். அன்றெல்லாம் எங்களுக்கு கிறித்தவ சபைகளுக்குள் உள்ள போராட்டங்களெல்லாம் தெரியாது, லண்டன்மிஷன் சாமியார்களை கத்தோலிக்க சாமியார்கள் ஏதோ செய்துவிட்டார்கள் என்று புரிந்துகொண்டோம்.

உலக வரைபடத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வுகளில் ஒன்று என சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் [Protestantism]பிறப்பைச் சொல்லமுடியும். உலக கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காடு சீர்திருத்தக் கிறித்தவர்கள்தான். வெவ்வேறு சபைகளாக உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். தமிழகத்தில் சி.எஸ்.ஐ [Church of south india ] சபை முக்கியமான சீர்திருத்தக் கிறித்தவ சபை. லுத்தரன் மிஷன், இரட்சணிய சேனை போன்றவை குறிப்பிடத்தக்க சபைகள். இப்போது ஒன்றிலிருந்து ஒன்றென பிரிந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மிஷனும் ஒரு தனி திருச்சபையாக மாறிக்கொண்டிருக்கிறது. தனியார் போதகர்கள் தங்களுக்கென்று சபைகளை அமைத்துக்கொள்கிறார்கள்

download (1)
வெஸ்ட்மினிஸ்டர் அபே உட்பக்கம்

ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் 1517 ல் அன்றைய கத்தோலிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக தன்னுடைய புகழ்பெற்ற அறிக்கையை [The Ninety-five Theses ] வெளியிட்டபோது சீர்திருத்தக் கத்தோலிக்க மதத்தின் கருத்தியல் தொடக்கம் உருவானது எனப்படுகிறது. அதற்கு முன்னரே பீட்டர் வால்டோ [ Peter Waldo] ஜான் வைகிளிஃப் [, John Wycliffe] ஜான் ஹுஸ்[ Jan Hus] போன்றவர்கள் கத்தோலிக்க மேலாதிக்கத்தை எதிர்த்திருந்தாலும் அரச ஆதரவும் மக்களாதரவும் கொண்டு கத்தோலிக்க திருச்சபையின் மாபெரும் அதிகாரத்தை எதிர்த்து நின்றவர் மார்ட்டின் லூதர் மட்டுமே. குமரிமாவட்டச் சூழலில் இந்தச் சபைகளில் தெளிவான சாதியடையாளம் இன்று உண்டு, எந்தச் சபை என்று கேட்பது கிட்டத்தட்ட சாதிகேட்பதேதான்.

கிபி பதினைந்தாம் நூற்றாண்டுவரை பிரிட்டனின் அதிகாரபூர்வ மதம் கத்தோலிக்கக் கிறித்தவம்தான். வேல்ஸ், அயர்லாந்து பகுதிகளும் கத்தோலிக்க நம்பிக்கை கொண்டிருந்தன. ஸ்காட்லாந்தில் மட்டும் கெல்ட் [Celt] இனக்குழுவினரின் பாகன் மதநம்பிக்கைகள் இருந்தன. கான்ஸ்டண்டீன் கிறித்தவ மதத்தைத் தழுவியபோதே பிரிட்டனில் ரோமாபுரியின் படைநிலைகள் இருந்தன. ஆனாலும் ஐந்தாம் நூற்றாண்டில் புனித அகஸ்டின், புனித பாட்ரிக் ஆகியோர் வழியாகவே பிரிட்டனில் கத்தோலிக்க மதம் வேரூன்றியது.

download

நான் முப்பதாண்டுகளுக்கு முன் cruzified என்னும் நாவலை வாசித்தேன். பிரிட்டனில் கத்தோலிக்க மதம் நுழைந்ததைப் பற்றிய நாவல் அது. ஆசிரியர் பெயர் ஓப்ரியன் என முடியும். அந்நாவலை தொண்ணூறுகளில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களுக்கு அன்பளிப்பாக தபாலில் அனுப்பினேன், அவர் ஒரு நாவல் எழுதும் பெருமுனைப்புடன் இருந்தார் அப்போது. அன்று அவருக்குப் பார்வை குறைந்துகொண்டிருந்தது. இப்போது பார்வை மீண்டுவிட்டது, ஆனால் இலக்கிய ஆர்வம் மறைந்துவிட்டது என சொன்னார்கள்

ஆச்சரியம்தான், பொதுவாக நூல்கள் எனக்கு மறப்பதில்லை. இந்நூலை எத்தனை தேடியும் இணையத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாவலை என்னால் நினைவிலிருந்தும் மீட்கமுடியவில்லை, ஒருகாட்சியைத் தவிர. புனித அகஸ்டின் [St.Augustine] அயர்லாந்துக்கு கிறித்தவத்தைக் கொண்டுவருகிறார். அங்கே அப்போது பேகன் மதம் பெரும் செல்வாக்குடன் இருக்கிறது. கல்லால் ஆன பெரிய ஆலயங்கள் இருந்தன. அகஸ்டின் அவற்றில் சாத்தான் குடியிருப்பதாக அம்மக்களிடம் சொல்கிறார். அதற்குள் விறகுகளைக் குவித்துத் தீயிடுகிறார். அதன்பின் குளிர்ந்த நீரை அதன்மேல் அள்ளி ஊற்றச்சொல்கிறார்கள். பேரிரைச்சலுடன் ஆவிகள் வெளியேறுகின்றன. கல்தூண்கள் வெடிக்க ஆலயம் இடிந்து சரிகிறது.vest2

இன்றும்கூட பாகன் மதத்தின் அழிவைப்பற்றி [மதச்சார்பற்ற] பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் மொழி  இப்படித்தான் இருக்கிறது .  பிரிட்டனில் கிறித்தவம் என்னும் கட்டுரையில் பிபிசி நிறுவனம் இவ்வாறு குறிப்பிடுகிறது In the 1st Century AD, Britain had its own set of religious icons: Pagan gods of the earth and Roman gods of the sky. Into this superstitious and violent world came a modern, fashionable cult from the east: Christianity.  அதாவது ஏழுநாட்களில் இறைவன் உலகைப்படைத்தான் என்பதோ, ஏவாளை சாத்தான் ஆப்பிள் தின்னவைத்ததோ, இறந்தவர் மூன்றாம் உயிர்த்தெழுந்ததோ ‘மூடநம்பிக்கை’ அல்ல. அது மதம். அதற்குமுன்பிருந்த வழிபாடுகள் குரூரமான மூடநம்பிக்கைகள். ஐரோப்பியர்களின் மொழியில் பெரும்பாலும் கிறித்தவ மதத்தின் அனைத்து முன்முடிவுகளும் ஒளிந்திருக்கும். அதன் செல்வாக்கு அத்தகையது.  இந்தியாவுக்கு மதப்பிரச்சாரத்திற்காக வந்த முன்னோடிகள் முதல் இன்றுள்ள பிரச்சாரகர்கள் வரை இந்துமதம் பற்றி இதே வரிகளைத்தான் சொல்கிறார்கள் என்பதைக் காணலாம்.

பதின்நான்காம் நூற்றாண்டில் ஜான் வைக்கிளிஃப்  [John Wycliffe] பைபிளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தபோது பிரிட்டனில் சீர்திருத்தக் கிறித்தவம் விதையிடப்பட்டது. மதநூல் ஆய்வு மரபினரும் போதகரும் ஆக்ஸ்போர்ட் இறையியல் கல்லூரி ஆசிரியருமான வைக்கிளிஃப் ஒரு புதிய அலையைத் தொடங்கிவைத்தார்.கத்தோலிக்க மதத்தின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம், மதகுருக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அவர்களின் ஊழல்கள் அனைத்துக்கும் மேலாக அதிலிருந்த இத்தாலிய ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக பிரிட்டனில் மதசிந்தனையாளர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றபடியே வந்தது.

எட்டாம் ஹென்றி
எட்டாம் ஹென்றி

இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி [ Henry VIII  1491 – 1547] தன் மனைவி கேதரைன் [Catherine Aragon  1485 –1536] விவாகரத்து செய்ய விரும்பி போப்பாண்டவரின் அனுமதியைக் கோரினார். கேதரைன் ஹென்றியின் சகோதரர் ஆர்தரின் மனைவியாக இருந்தவர். ஸ்பெயினின் அரசி இசபெல்லாவின் மகள். விவாகரத்துக்கு போப் ஏழாம் கிளெமெண்ட் அனுமதி மறுக்கவே எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் துறந்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றார். 1529ல் சீர்திருத்த கிறித்தவம் இங்கிலாந்தின் அதிகாரபூர்வ மதமாக அறிவிக்கப்பட்டது. சர்ச் ஆஃப் இங்கிலாந்து தோற்றுவிக்கப்பட்டது.

சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் மதத்தலைமை ஆர்ச் பிஷப் ஆஃப் காண்டர்பரியிடமும் நிர்வாகப் பொறுப்பு பிரிட்டிஷ் அரசரிடமும் இருந்தது. உலகமெங்கும் உள்ள ஆங்கிலிகன் சர்ச்களின் மைய நிர்வாக அமைப்பு இதுவே. இந்தியாவுக்கு வந்த லண்டன்மிஷனின் மூல அமைப்பு இது. இதன் சடங்குகளும் நிர்வாக முறைகளுமெல்லாம் ஆரம்பத்தில் கத்தோலிக்க மதத்தின் அதே பாணியில்தான் இருந்திருக்கின்றன. பின்னர் மெல்லமெல்ல மாற்றமடைந்தன. இன்றுகூட கிறித்தவர்கள் அல்லாதவர்கள் பெரிய வேறுபாட்டைக் கண்டுபிடிக்கமுடியாது

vest 3

பதினாறாம் நூற்றாண்டுவரை இங்கிலாந்தில் மதப்பூசல் உச்சத்தில் இருந்தது. எட்டாம் ஹென்றியின் காலம் வரை சீர்திருத்தக் கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மதம் வேட்டையாடியது. தொடர்ச்சியாக மதவிசாரணைகளும் கொலைத்தண்டனைகளும் அளிக்கப்பட்டன. எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் தடைசெய்தார். பாதிரியார்களைச் சிறையிலடைத்தார். தவச்சாலைகளும் துறவியர் மடங்களும் மூடப்பட்டன. கத்தோலிக்கர்கள் மதவிசாரணைக்குள்ளாகி கொல்லப்பட்டனர். ஆனால் பின்னர் ஆட்சிக்கு வந்த முதலாம் மேரி கத்தோலிக்க நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே கத்தோலிக்க மதம் திரும்ப வந்தது. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.அவர்களில் முக்கியமான மத அறிஞர்களும் போதகர்களும் இருந்தார்கள்

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் எலிசபெத் சீர்திருத்தக் கிறித்தவ நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே மீண்டும் கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டு நம்பிக்கையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். தேவாலயங்கள் சிதைக்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான் சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள் தங்கள் வழிபாட்டுமுறைகளை கத்தோலிக்க முறைகளிலிருந்து வேறுபடுத்திக்கொண்டன. முதலாம் ஜேம்ஸின் காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் உறுதியாக வேரூன்றியது. பைபிளின் புதிய ஏற்பாட்டை முறைப்படுத்தியவர் அவரே. அவரால் அங்கீகரிக்கப்பட்ட பைபிள்தான் கிங் ஜேம்ஸ் பைபிள் என்றபேரில் உலகமெங்கும் புகழ்பெற்றுள்ளது. பெரும்பாலான தங்கும் விடுதிகளில் இது வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

Tombeau_@

லண்டனின் பெரும் தேவாலயங்கள் கத்தோலிக்கர் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டவை. அவை சீர்திருத்தக் கிறித்தவத்தின் எழுச்சியின்போது கைப்பற்றப்பட்டன. ஏராளமான தேவாலயங்களில் புனிதர்களின் உருவங்கள் சிதைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் பலமுறை அவை பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. என் லண்டன் பயணத்தில் இரண்டு தேவாலயங்களைத்தான் குறிப்பாகப் பார்க்கமுடிந்தது. செயிண்ட் பால் கதீட்ரல் குவைக்கோபுர முகடு கொண்டது. கிபி 604 ல் கட்டப்பட்டது. பலமுறை திருப்பிக் கட்டப்பட்டிருக்கும் போலும், புதியதாகவே தோன்றியது.

ஆர்வமூட்டிய தேவாலயம் வெஸ்ட்மினிஸ்டர் அபே. புனித பீட்டருக்கான கத்தோலிக்க தேவாலயம் இது. இன்று சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆல்ட்ரிச் என்னும் மீனவன் இந்த இடத்தில் புனித பீட்டரின் தோற்றத்தைக் கண்டதாகவும் ஆகவே இங்கே வழிபாட்டிடம் ஒன்று உருவாகியதாகவும் கதைகள் சொல்கின்றன.  கிபி 1080ல் இந்த தேவாலயம் இங்கே முதலில் கட்டப்பட்டது. இப்போதிருக்கும் தேவாலயம் கிபி 1245ல் மூன்றாம் ஹென்றியின் ஆணைப்படிக் கட்டப்பட்டது. இது பிரிட்டிஷ் அரசர்களின் அதிகாரபூர்வ சடங்குமையம். இங்கே 16 அரச திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. ஏராளமான அரசர்கள் இங்கே மாபெரும் கல்சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Opactwo_Westminster_w_Londynie

குமரிமாவட்டத்தில் பிறந்தவனாதலால் நான் தொடர்ச்சியாக கிறித்தவ தேவாலயங்களை பார்த்துவருபவன். கன்யாகுமரி முதல் டாமன் வரை அமைந்திருக்கும் தேவாலயங்களில் முக்கியமான அனைத்தையும் பார்த்துவிடும்பொருட்டு ஒரு பயணத்தையும் முன்பு நண்பர்களுடன் மேற்கொண்டதுண்டு. பொதுவாகச் சுற்றுலாவிலும் கலைமரபிலும் ஆர்வமுடைய நண்பர்கள் இந்தியாவின் மாபெரும் தேவாலயங்களை தவறவிட்டுவிடுவதுண்டு. கோவாவின்  பாம் ஜீஸஸ் தேவாலயம் அதன் தொன்மையான வடிவுக்காக முக்கியமானது. டாமனில் சிறியதேவாலயங்களில் கூட அற்புதமான ஆல்தாரைகள் உண்டு.மங்களூரில் புனித அலாய்ஸியஸ் தேவாலயத்தில் பதினேழாம்நூற்றாண்டு இத்தாலியச் சுவரோவியங்கள் உள்ளன. கேரளத்தில் ஏழரைப்பள்ளி என்று சொல்லப்படும் எட்டு தொன்மையான கிறித்தவதேவாலயங்கள் குறிப்பிடத்தக்கவை

தேவாலயங்களில் பழக்கமுள்ளமையால் என் உணர்வுகளைக் குழப்பியது வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம். அது ஒரு தொன்மையான கத்தோலிக்க தேவாலயம் என்று விழிக்கும் உள்ளத்திற்கும் தோன்றியது. ஆனால் சீர்திருத்த கிறித்தவத்திற்குரிய உட்சபை அமைப்பு. மத்திய காலகட்டத்துத் தேவாலயங்களின் அமைப்பு அலையை கீழிருந்து நோக்குவதுபோன்ற கூரைவளையங்களால் ஆனதாக இருக்கும். இரு பெரும்தூண் நிரைகள் சுவர்கள் போல நீண்டு நிற்க அவற்றுக்கு நடுவே மையநீள்சதுர அவை அமைந்திருக்கும். அத்தூண்நிரைகள் இருபக்கமும் வளைந்த கூரைகள் கொண்ட கட்டிட அமைப்பால் தாங்கப்பட்டிருக்கும். நடுவே உள்ள பகுதி மிக உயரத்தில் வளைகூரை கொண்டிருக்கும். நேர் எதிரில் ஆல்தாரை. பெருந்தூண்களில் சிறு உப்பரிகைகள்.  பின்பக்கம் மிகப்பெரிய ஆர்கன். இதுதான் கத்தோலிக்க தேவாலயத்தின் மாறா வடிவம்.

Replica_of_the_Stone_of_Scone,_Scone_Palace,_Scotland_(8924541883)
Replica_of_the_Stone_of_Scone,_Scone_Palace,_Scotland_(8924541883)

நடுக்காலத்தைய கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்துமே பொன்மின்னும் அலங்காரங்களுடன் பரோக் பாணியில் அமைந்தவை. கண்கூசச்செய்யும் பொன்னலங்காரம் கொண்டது மையச்சபைமேடை. அங்கே அரசச்சடங்குகள் செய்யப்படும்போது அரசர் அமரும் அரியணை மேற்குவாயில் அருகே இருந்தது.  இதிலுள்ள நல்லூழின்கல் [  Stone of Scone] தொன்மையான ஒன்று. இதுதான் உண்மையான அரியணை. தொல்குடிகளின் தலைவர்கள் அமரும் கல்லரியணையேதான். அந்தக்கல் மரத்தாலான நாற்காலிமேல் போடப்பட்டு பிரிட்டிஷ் அரசர்களின் அரியணையாகிறது. அரசதிகாரம் தொல்குடி அதிகாரத்தின் நீட்சி என்பதற்கான சான்று அக்கல். ஸ்காட்லாந்தில் ஸ்கோன் என்னும் ஊரிலிருந்து அந்தக்கல் கொண்டுவரப்பட்டதனால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஆலயத்தில் வந்தமர்ந்து வழிபட்டவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள், கத்தோலிக்க வழக்கப்படி வழிபடுகிறார்கள் என்று தோன்றியது. அப்போது ஒன்று தோன்றியது, சீர்திருத்தக் கிறித்தவம் தன்னை பெருமளவுக்கு மாற்றிக்கொண்டு உருவவழிபாடு, மரபான ஆராதனைமுறைகள் அனைத்தையும் துறந்துவிட்டிருந்தாலும் கூட அதற்குள் கத்தோலிக்கம் ஏதோ ஒருவடிவில் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று. குமரிமாவட்டத்தில் சி.எஸ்.ஐ சபைகளுக்குள் இருந்துதான் புதிய சபைகள் உருவாகின்றன. அவையனைத்துமே கத்தோலிக்க மதத்தின் ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்து வளர்த்துக்கொண்டவையாகவும் தெரிகின்றன. பிரிட்டிஷ் அரியணைக்குள் தொன்மையான பழங்குடிப் பீடம் அமைந்திருப்பதைப்போல.

SanktEdvardsstol_westminster
அரியணை

லண்டனின் நடுப்பகுதியில், பாராளுமன்றத்திற்கு அருகில், பல்லாயிரம் பயணிகள் ஒவ்வொருநாளும் வந்துசெல்வதாக இருந்தாலும்கூட வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் சற்றே பாழடைந்த தன்மையை காட்டியது. பல இடங்களில் புழுதி படிந்திருக்கக் கண்டேன். 1760 வரை பெரும்பாலான அரசகுடியினர் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டனர்.  மன்னர்களின் கல்லறைகள் ஒவ்வொன்றும் சிறிய கல்வீடுகள் என்றே தோன்றின. அவற்றுக்குள் அவர்களின் சடலம் வைக்கப்பட்டு வெளியே அவர்களின் உடல்தோற்றம் சிலையாகப் பொறிக்கப்பட்டிருந்தது. லண்டன் மியூசியத்தில் கண்ட எகிப்திய மம்மிகளின் கல்சவப்பெட்டிகள் நினைவுக்கு வந்தன.

சவப்பெட்டிக்குமேல் சிலையாக அரசத் தோற்றத்துடன் படுத்திருப்பது விந்தையானதாகத் தோன்றியது.  மூன்றாம் ஹென்றியின் முகத்தைப் பார்த்தபோது சாவை அவர் இன்னமும் கூடபுரிந்துகொள்ளவில்லை என்றும் அத்திகைப்பு நிரந்தரமாக அவர் முகத்தில் இருப்பதாகவும் ஒரு உளமயக்கு. ஆறாம் ஹென்றி, நாலாம் எட்வர்ட்  என அந்தப்பெட்டிகளைப் பார்த்துக்கொண்டே  சென்றோம். அத்தகவல்களால் மூளை எங்கும் சொடுக்கப்படவில்லை. ஆனால் மீளமீள பேரரசர்கள் அஞ்சும் கொடிய எதிரி காலம்தானோ என்று தோன்றியது.  என்ஐ  முன் நில்லன்மின் தெவ்விர்பலர்,என்ஐ முன் நின்று கல் நின்றவர். முன்னின்றவர்களை எல்லாம் கல்நின்றவராக்கும் அந்த மாபெரும் எதிரியை அஞ்சித்தான் எவரென்றே அறியாத தொல்குடி அரசன் தனக்கென பெருங்கற்களை நாட்டிக்கொண்டான். எத்தனை நடுகற்கள், பள்ளிப்படைகள், தூபிகள், ஆலயங்கள். பிடிவாதமாக வந்து புழுதியாக மேலே படிந்துகொண்டிருக்கிறது காலம்.

சாஸர்
சாஸர்

இந்தியாவில் இப்போது இறந்தவர்களை தேவாலயத்திற்குள் புதைப்பதில்லை. ஆனால் கோவாவின் தொன்மையான தேவாலயங்களில் ஏராளமான திருத்தந்தையர் ஆலயங்களுக்குள் அடக்கம்செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். அவர்களின் பெயர்கள் செதுக்கப்பட்ட கற்களாலானது தரை. அதன்மேல் நடந்துதான் நாம் தேவாலயத்திற்குள் செல்லவே முடியும். பழைய அரசர்கள் ஆலயத்திருப்பணிக்குப் பின் குப்புற விழுந்து வணங்கும் வடிவில் தங்ககள் சிலைகளை ஆலயமுகப்பு வாயிலின் தரையில் செதுக்குவதுண்டு. தங்களை பிறர் மிதித்து இறைவழிபாட்டுக்குச் செல்லும்போது பாவங்கள் கழுவப்படும் என்பது தொல்நம்பிக்கை.

மத்தியகாலகட்டத்தில் முக்கியமானவர்களை தேவாலயங்களுக்குள் அடக்கம் செய்வது பிரபலமாக இருந்திருக்கிறது. வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அரசர்களல்லாத பிரபலங்களில் ஒருவர் சாஸர் [Geoffrey Chaucer 1343 –1400] அவருடைய சமாதி இருக்குமிடம் கவிஞனின் மூலை [Poets’ Corner] என்று சொல்லப்படுகிறது. காண்டர்பரி கதைகள் என்னும்  அவருடைய நூல் ஆங்கில இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்பு. ஆங்கிலம் லத்தீன், கிரேக்க மொழிகளின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு தனக்கென இலக்கிய மரபொன்றை உருவாக்கிக்கொண்ட தொடக்கம் சாஸர் வழியாகவே என்று சொல்லப்படுவதுண்டு. அன்று ஆங்கிலம் எளியமக்களின் பேச்சுமொழி. அதில் சாஸர் தன் கதைகளை எழுதினார். காண்டர்பரி தேவாலயத்திற்கு புனிதபயணம் செல்பவர்கள் பேசிக்கொண்ட கதைகள் என்னும் வடிவில் உள்ளது இந்நூல்.

alte
உருவங்கள் அகற்றப்பட்ட ஆல்தாரை

ஆங்கில இலக்கியத்தைக் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இந்நூல் பாடமாக  அமைவது ஒரு கொடுமை. ஆங்கில இலக்கியத்தின் தோற்றத்திற்கு வழிகோலிய ஆக்கம் என்பதும், கத்தோலிக்க மதத்திற்குள் எளியமக்களின் வினாக்களும் ஐயங்களும் எழுவதை சாட்சியப்படுத்தும் நூல் என்பதும் எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு இது ஒரு தட்டையான எளிமையான கதைத்தொகுதி என்பதும் உண்மை. இலக்கியவாசகர்களுக்கு இன்று இதில் வாசிக்க ஏதுமில்லை. நான்காண்டுகளுக்கு முன் சைதன்யா சாஸரை ஏன் வாசிக்கவேண்டும் என்று சீற்றத்துடன் கேட்க அவருடைய வரலாற்று இடத்தை நான் விளக்கியதை நினைவுறுகிறேன். எனக்கு அதே விளக்கத்தை என் ஆசிரியர் அளித்தார்.

 

கவிஞனின் மூலை ஒரு சிறிய சிற்பமேடை. சற்றே பழுப்பேறிய பளிங்காலான சாஸரின் சிற்பம் நின்றிருக்கிறது. காவியதேவதை அவருக்காக இரங்கி அமர்ந்திருக்கும் சிற்பத்தை அங்கே கண்டேன். கவிஞர்களுக்கென்று ஓர் இடம் இருப்பது மகிழ்ச்சியூட்டியது. 1556ல் சாஸர் மறைந்து பதினாறாண்டுகளுக்குப்பின் வழக்கறிஞரான நிகோலஸ் பிரிகாம் [Nicholas Brigham] என்பவரால் இந்த மேடை கட்டப்பட்டது. சாஸரின் எலும்புகள் இதற்குள் வைக்கப்பட்டன. 1699ல் எட்வர்ட் ஸ்பென்ஸரின் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அங்கே அடக்கம் செய்யப்படுவதோ அவர்களின் நினைவுநிகழ்வுகள் அங்கே கூடுவதோ வழக்கமாக ஆகியிருக்கிறது.

(c) Newstead Abbey; Supplied by The Public Catalogue Foundation

ஆனால் இங்கே இடம் மறுக்கப்படுவது ஒரு சமூக ஒறுப்பாகவும் செயல்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற கவிஞராக இருந்தாலும் 1824 ல் மறைந்த லார்ட் பைரன் அவருடைய சர்ச்சைக்குள்ளான வாழ்வொழுக்கம் காரணமாக இங்கே இடம் மறுக்கப்பட்டு 1969 ல்தான் இங்கே நினைவகம் அமைக்கப்பட்டார். 1616,ல் மறைந்த ஷேக்ஸ்பியருக்கும் இடமளிக்கப்படவில்லை. வில்லியம் கெண்ட் என்னும் சிற்பி அமைத்த நினைவுச்சின்னம் அவருக்கு இங்கே   1740ல் தான் அமைக்கப்பட்டது. சார்ல்ஸ் டார்வின், ஐசக் நியூட்டன் ஆகியோரும் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்குள்தான் புதைக்கப்பட்டனர். கடைசியாக ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்.

நான் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்குள் முக்கியமாகப் பார்த்தது கவிஞர்களின் நினைவுச்சின்னங்களைத்தான்.இப்பகுதி இன்று ஒரு மாபெரும் இடுகாடு. சார்ல்ஸ் டிக்கன்ஸ், ராபர்ட் பிரௌனிங், ருட்யார்ட் கிப்ளிங், ஜான் டிரைடன், பென் ஜான்சன், தாமஸ் ஹார்டி, என எழுத்தாளர்கள் கவிஞர்களின் பெயர்களை தரைமுழுக்க வாசிக்கலாம்.

பைரன் எனக்கு பிடித்தமான கவிஞர். என் படைப்புகளில் பெயர் சொல்லப்பட்டும், உருமாற்றப்பட்ட வடிவில் பெயரில்லாமலும் அவருடைய கவிதைவரிகள் வருவதுண்டு. அவருடைய நினைவுச்சின்னத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது பெரும் மன எழுச்சியை உணர்ந்தேன். பைரன் பிரபு [George Gordon Byron, 6th Baron Byron  1788 –1824] பிரிட்டிஷ் கற்பனாவாத கவிஞர்களில் முதன்மையானவர் [வேர்ட்ஸ்வெர்த் முதன்மையானவர் என்று சொல்லும் ஒரு மரபுண்டு. பைரன் கவிதைகளிலுள்ள தரிசனமுழுமையை வேர்ட்ஸ்வெர்த் அடையவில்லை என்று தோன்றுகிறது] பைரனின் தந்தை காப்டன் ஜான் பைரன் கிறுக்கு ஜாக் என்று பெயர் பெற்றவர். கவிஞர் பைரன்  அவர் காலகட்டத்தவராலும் மனைவியாலும் முழுக்கிறுக்கு என்றே கருதப்படார்

கவிஞர் மூலை
கவிஞர் மூலை

பைரன் அக்கால பிரபுக்களுக்குரிய வாழ்க்கையையும் மிஞ்சிய ஆர்ப்பாட்டமான வாழ்க்கைமுறை கொண்டவர்.   ஆணவம், காமம், கட்டற்றசினம் ஆகியவற்றாலான ஆளுமை அவர். சூதாட்டத்தில் பெரும்பணத்தை இழந்து கடனாளியானார். பல பெண்களை வென்று துய்த்து துறந்தார். தன் சகோதரி முறையுடைய ஒரு பெண்ணிடமே அவருக்குத் தொடர்பிருந்ததாகச் சொல்லப்பட்டது. மனைவியை உச்சகட்ட கொடுமைக்குள்ளாக்கி அவரால் துறக்கப்பட்டார். கடைசிக்காலத்தில் துருக்கியரால் கைப்பற்றப்பட்டிருந்த கிரீஸை வெல்லும்பொருட்டு படைகொண்டு சென்று அங்கே நோயுற்று இறந்தார்.

ஆங்கில வகுப்புகளில் பைரனைப்பற்றி பேசத்தொடங்குகையில் இக்கதைகளைத்தான் ஆசிரியர்கள் ஆர்வமாகச் சொல்வார்கள். வகுப்பில் ஒரு பெரிய கவனத்தை இது உருவாக்கும். அதன்பின்னரே அவர்கள் கவிதைகளுக்குள் செல்வார்கள். பைரனின் She Walks in Beauty என்ற அழகிய கவிதை ஒருகாலத்தில் பெரும்பாலான பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும். அக்கவிதையினூடாக பைரனின் உணர்ச்சிகரமான உலகுக்குள் நுழைய முடியும். பைரன் ஒரு மானுடவெறுப்பாளர் என்று சொல்லமுடியும், மானுடனை கடந்த சிலவற்றின்பொருட்டு மானுடனை வெறுத்தவர் என்று மேலும் குறிப்பாக.

பைரன், ஷேக்ஸ்பியர் நினைவிடங்களில் நின்றிருந்தது என் வாழ்க்கையின் ஆழ்ந்த அனுபவங்களில் ஒன்று. நினைவுகள் தொட்டுத்தொட்டுச் சென்றன. இதேபோல இங்கே கவிஞர்களுக்கு நினைவகங்கள் உண்டா? நம்மாழ்வாரையும் ஆண்டாளையும் கவிஞர்கள் என்று சொல்லலாம், அவர்களுக்கு ஆலயங்கள் உண்டு. ஆழ்வார்களும் சைவக்குரவர்களும் மதத்தின் ஒருபகுதியாக படிமங்களாகியிருக்கின்றனர். கம்பனுக்கு சேக்கிழாருக்கோ அருணகிரிநாதருக்கோ இங்கே பழைய நினைவிடங்கள் இல்லை. இருப்பவை நவீன ஜனநாயக யுகத்தில் உருவாக்கப்பட்டவை. கவிஞனை கவிஞனாகவே ஏற்பதில் மரபுக்கு பெருந்தயக்கம் உள்ளது.

இஸ்லாமிய பெருங்கவிஞர் உமறுப்புலவரை எண்ணிக்கொண்டேன். தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்த உமறுப்புலவர் மார்க்க அறிஞர் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் இஸ்லாமியக் கல்வியும் எட்டயபுரம் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழும் கற்றார். நபிகளின் வாழ்க்கையை சீறாப்புராணம் என்னும் காவியமாக இயற்றினார். 1703 ல் எட்டையபுரத்திலேயே மறைந்த அவருக்கு பிச்சையாக் கோனார் என்ற தமிழ் ஆர்வலர் 1912ல்தான்  எட்டையபுரம் இஸ்லாமிய இடுகாட்டில் ஒரு சமாதியை உருவாக்கினார். அது காலப்போக்கில் ஒரு தர்காவாக ஆகியது. 2006ல் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இன்று மக்கள் அங்கே சென்று வழிபட்டு மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்கிறார்கள். கவிஞன் உருகி உருமாறி மதத்திற்குள் நுழையாமல் இடம் கிடைப்பதில்லை.  காவிய ஆசிரியனின் தாயத்து!

வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம்தான் நான் நுழைந்த தொன்மையான ஐரோப்பிய தேவாலயங்களில் முதலாவது. அதன்பின் மீண்டும் மீண்டும் பேராலயங்களைப் பார்த்துக்கொண்டே சென்றிருக்கிறேன். எல்லா ஆலயங்களின் காட்சிகளும் என் அகத்தில் உருகியிணைந்து ஒன்றென்று ஆகிவிட்டிருக்கின்றன. வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தை எண்ணிப் பார்க்கையில் கத்தோலிக்க மதத்தில் இருந்து சீர்திருத்தக் கிறிஸ்தவம் நோக்கி ஐரோப்பா திரும்பியதன் கீல் அது என்று தோன்றியது. உரசல்களும் துருவும் கொண்ட பழைமையான கதவொன்றின் கீல்.

முந்தைய கட்டுரைநடையின் எளிமை- கடிதம்
அடுத்த கட்டுரைகுருதிச்சாரல் செம்பதிப்பு