‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4

 பகுதி இரண்டு: தாள்வோன்

bowஇருள் விலகத் தொடங்கிய முன்புலரியில் படைகளை எழுப்பியபடி கொம்புகளும் முழவுகளும் ஒலித்துக்கொண்டிருந்தன. முதல் ஆணைக்கு அவர்களனைவரும் துயிலெழுந்தனர். அடுத்த ஆணைக்குள் காலைக்கடன்களை முடித்தனர். தொடர்ந்த ஆணைகளுக்கு உணவருந்தி கவசங்கள் அணிந்தனர். அரையிருளுக்குள் நிழல்கள் என அசைவுகள் கொப்பளித்த படையின் நடுவே பீமன் புரவியில் சென்றான். அவனைக் கண்டு தலைவணங்கிய சுருதகீர்த்தி “அவை கூடிவிட்டது, தந்தையே” என்றான். தலையசைத்தபின் அவன் யுதிஷ்டிரரின் மாளிகை முன் இறங்கி புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு உள்ளே சென்றான்.

யுதிஷ்டிரரின் சொல்சூழவை முழுமைகொண்டிருந்தது. அவனுக்காக அவர்கள் காத்திருந்தது அவையில் எழுந்த மெல்லிய உடலசைவுகளில் தெரிந்தது. பீமன் சொல்லின்றி அரசரையும் இளைய யாதவரையும் வணங்கிவிட்டு தன் பீடத்தருகே சென்றான். அமர்வதற்கு உடல் தாழ்த்தி, பின் அமர விடாத உளவிசையால் தவிர்த்து, பீடத்தின் பின்னால் சென்று கைகளால் அதன் சாய்வுப்பகுதியை பற்றியபடி நின்றான். அவை அவனை நோக்கிக்கொண்டிருந்தது. வெளியே படைகள் கிளம்புவதன் ஓசை எழுந்து சாளரங்களினூடாக அறைக்கூடத்தை நிரப்பியது. இளங்காற்றில் குருதியும் சீழும் கந்தகமும் கலந்த மணம் வந்தது. அங்கிருந்து அருகேதான் மருத்துவநிலை இருந்தது.

யுதிஷ்டிரர் “இளையோனே, இன்றைய படைசூழ்கையை நாம் முடிவு செய்ய வேண்டும். மேலும் விசையுடன் சற்றும் பிழைக்காத வழிமுறைகளை கண்டடையவேண்டும். அதன் பொருட்டே பாஞ்சால இளவரசர் இங்கு வந்துள்ளார். அவருடைய திட்டங்கள் முன்னரே அவைமுன் வைக்கப்பட்டுவிட்டன. உன் சொற்களைக் கேட்டு முடிவு செய்வதற்காக காத்திருந்தோம்” என்றார். பீமன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு “நேற்றைய செய்திகள் அவைக்கு முழுமையாக வந்துவிட்டனவா?” என்றான். யுதிஷ்டிரர் அதிலிருந்த உட்குறிப்பை உணர்ந்து ஒருகணம் சொல்லிழந்து விழிதாழ்த்தினார்.

சகதேவன் “ஆம் மூத்தவரே, பின்னிரவிலேயே அனைத்துக் கணக்கெடுப்பும் முடிந்து எல்லாச் செய்திகளும் வந்து சேர்ந்துவிட்டன. அவை அனைத்தையும் படித்து சுருக்கி மூத்தவரிடம் நான் கூறிவிட்டேன்” என்றான். “அவைக்கும் கூறலாமே” என்று பீமன் சொன்னான். சகதேவன் யுதிஷ்டிரரை ஒருகணம் நோக்கிவிட்டு “அனைவரும் அறிந்த செய்திகள்தான். நேற்று நமது படைகள் நாம் எண்ணியிராத பேரழிவை சந்தித்திருக்கின்றன. ஆகவே படைவீரர் அனைவரிடமும் பெருஞ்சோர்வு நிறைந்துள்ளது. வெல்வோமெனும் நம்பிக்கை எவரிடமும் இல்லை. ஒழுங்கின்மை பரவிக்கொண்டிருக்கிறது” என்றான். “நேற்று நள்ளிரவில் குலாடர்களின் ஏழு நூற்றுவர் தலைமையில் ஒரு சாரார் படையிலிருந்து தப்பிச்செல்ல முயன்று பிடிபட்டனர்.”

பீமன் “அசுரர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் எவரும் செல்லவில்லையா?” என்றான். யுதிஷ்டிரர் “அவர்களின் போர் அல்ல இது. அவர்கள் செல்ல விழைந்தால் தடுக்கவேண்டாம் என்று நான் சொன்னேன்” என்றார். “அறிவின்மை… படை என்பது உடைப்பெடுத்த கரையை மேலும் உடைக்கும் ஏரி” என்றான் பீமன். “ஆம், ஆனால் நேற்று இங்கே நடந்தது இரக்கமில்லா படுகொலை. அதற்கு அவர்களை இழுத்துக்கொண்டு சென்று படைக்க நான் விரும்பவில்லை” என்றார் யுதிஷ்டிரர். பீமன் சினத்துடன் மேலும் சொல்லெடுக்க முயல “அதைப்பற்றி பேசவேண்டியதில்லை, இளையோனே” என்று யுதிஷ்டிரர் கைநீட்டி தடுத்தார். கசப்புடன் தலையசைத்தபடி பீமன் திரும்பிக்கொண்டான்.

சகதேவன் “நமது துணையரசர்களில் பன்னிருவர் களம்பட்டனர். களம்பட்ட இளவரசரின் எண்ணிக்கை எட்டு மடங்கு. குலாடர் குலத்து இளவரசர்கள் ஸ்வேதனும் சங்கனும் மறைந்தது நம் படைக்கு பேரிழப்பு. அவர்கள் மாவீரர்களாக தங்களை நிறுவி விண்புகுந்தனர். விராட குலத்து இளவரசர் உத்தரரின் களப்பலி நமக்கு நேரிழப்பு. அவர் இன்று நம் குடியில் ஒருவர். நம் படைகளுக்கு மிகப் பெரும் எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது பிதாமகர் பீஷ்மரால்” என்றான். பீமன் “அச்சுறுத்தல் என்று சொல்” என்றான். சகதேவன் கண்களில் பொறுமை இழப்பின் சிறு சுருங்கல் வந்து மறைய “ஆம்” என்றான்.

அவை சகதேவனின் சொற்களுக்காக காத்திருந்தது. “நேற்று ஒருநாளில் நமது படைகளில் பத்தில் ஒன்று முற்றழிந்தது என்கின்றன கணக்குகள். எரிக்கப்பட்ட, புதைக்கப்பட்ட உடல்களின் கணக்குகளை மூத்த பாஞ்சாலர் சிகண்டி தனியாகவே எழுதியளித்திருக்கிறார். புண்பட்டோர் அவர்களைவிட இருமடங்கு. அக்கணக்குகளும் வந்துசேர்ந்துள்ளன.” சகதேவன் கைகாட்ட இரு ஏவலர் ஓலைகளைக் கொண்டுவந்து பீமனிடம் நீட்டினர். அவன் அதை கையால் வாங்கி பீடத்தின்மேல் இட்டுவிட்டு “அவர்கள்… அவர்களின் இழப்பு என்ன?” என்று கேட்டான். “நமது அழிவில் மூன்றில் ஒன்று, அல்லது அதைவிடக் குறைவு” என்றான் சகதேவன்.

பீமன் கைகள் பீடத்தின் மேல் இறுகின. பற்கள் கடிபட தாடை முறுகியது. மூச்சொலியுடன் “நாம் என்னதான் செய்தோம் களத்தில்? நாணிழந்தனவா நமது விற்கள்? நமது அம்புகள் அனைத்துமே குறி தவறினவா?” என்றான். சகதேவன் “இல்லை மூத்தவரே, நம் படைகள் முழுவீச்சுடன் போரிட்டன என்பதே உண்மை. மூத்தவர் அர்ஜுனனும் தாங்களும் பாஞ்சாலர் திருஷ்டத்யும்னனும் நேற்று வில்திறனின் உச்சத்தில் இருந்தீர்கள். நம் மைந்தர்களும் களத்தில் ஒருகணம் சளைக்கவில்லை. உங்கள் அனைவரை விடவும் பெருந்திறல் கொண்டவனாக திகழ்ந்தான் நமது மைந்தன் அபிமன்யூ. நாம் அவர்களுக்கு அளித்த அழிவும் சிறிதல்ல. ஆனால் பீஷ்மபிதாமகர் நேற்று முப்புரம் எரிக்கவந்த சிவன்போலிருந்தார்…” என்றான்.

“அவர் விட்ட அம்புகளில் குறி தவறியவை மிகச் சிலவே. அவர் முன்னிருந்து நம்மவர் உயிர் தப்பியவர் அதனினும் சிலர்…” என்றான் நகுலன். “காவல்மேடைமேல் ஒருமுறை ஏறியபோது கண்டேன் அவர் போரிட்ட இடத்தின் விந்தையை. பரவிப்பெருகும் வெள்ளம் நடுவே பிலத்தில் சுழித்து இறங்கி மறைவதுபோல நமது படை அவரை அணுகி மறைந்துகொண்டிருந்தது. அவருடைய தேர் சென்ற வழி இருபுறமும் எழுந்த பிணக்குவியல்களால் நன்கு தெரிந்தது.” பீமன் பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் “மெய்யாகவே அவரை தேரில் தொடர்வதற்குத் தடையாக இருந்தது அப்பிணக்குவியல்தான். பிணவேலி என்று என் தேர்ப்பாகன் சொன்னான்” என்றான்.

யுதிஷ்டிரர் “அனைத்தையும் அழித்தபடி பற்றிப் படர்ந்தேறுகிறார் பிதாமகர். நேற்று நாம் வகுத்த சூழ்கைகள் அனைத்தும் பொய்யென்றாயின. அவரை நாம் சரியாக மதிப்பிடவில்லை. முதியவர் என்றும் மூத்தவரென்றும் மட்டுமே நோக்கினோம். ஏனென்றால் அவரது மைந்தர்களாக நாம் பிறிதெவ்வகையிலும் அவரை எண்ணியதில்லை. இரக்கமற்ற களப்போர் வீரர் என்றும் குறிதவறாத வில்லவர் என்றும் நாம் அவரை மதிப்பிட்டதில்லை. அதை நேற்று கண்டோம்” என்றார். தலையை அசைத்து “களத்தில் இளையோரை முன்னிறுத்தினால் மூதாதையின் கைதளரும் என்று எண்ணியதைப்போல் இப்போரில் நாமிழைத்த பெரும்பிழை பிறிதொன்றில்லை” என்றார்.

“அது நம் பிழை அல்ல, அரசே. அவருடைய திறன் என்று கொள்க! ஒவ்வொருவருக்கும் அவர்கள் தாண்டுதற்கரிய எல்லைகள் உண்டு. தந்தை எனும் எல்லையை கடந்தார் பீஷ்மர்” என்றான் சாத்யகி. யுதிஷ்டிரர் “என் கண் முன்னால் செத்துக் குவிந்தனர் மென்மயிர் பரவிய மழலை மாறா முகத்தோர், நம் குருதிவழியை கொண்டுசெல்லவேண்டிய மைந்தர். அவர்கள் மண்ணோடு மண்ணாகக் கிடப்பதை கண்ட பின்னரும் உயிருடன் மீண்டதை எண்ணி நேற்று நான் ஒருகணமும் துயிலவில்லை” என்றார். அவரிடம் சீற்றம் குடியேறியது. “இங்கு படைசூழ்கையில் எவரோ உரைத்தனர் தன் மைந்தரை தானே பலிகொடுக்கும் குலம் வெல்லும் என்று. தனக்கு கருணையும் இரக்கமும் இல்லையென்று அது பிறருக்கும் தனக்கும் அறிவித்துக்கொள்கிறது என்று. அதை சொன்னபோது அந்த அவையில் நின்ற தெய்வம் நகைத்தது போலும். இதோ அள்ளிக் குவித்திருக்கிறோம் நம் வீட்டு வாயிலில் நம் குலத்து மைந்தர்களை. நாமே கொன்று கூட்டினோம் அவர்களை. இனி விண்வாழும் மூதாதையரிடம் சென்று சொல்ல நம்மிடம் சொற்களில்லை.”

பீமன் கைவீசி “போதும், அழுது புலம்புவதற்கு நாம் அவை கூட்டவில்லை. ஆவதென்னவென்று உரையுங்கள். இன்று எப்படி பிதாமகர் பீஷ்மரை எதிர்கொள்ளப்போகிறோம்?” என்றான். “ஒன்று உரைக்கிறேன், இன்று அம்முதியவர் அதே வில்துடிப்புடன் களம் நின்றாரென்றால் நம்மில் பாதி பேர்கூட எஞ்சப்போவதில்லை. இன்றும் களம்படாது அவர் திரும்பிச் செல்வாரென்றால் நாளை மறுநாள் இப்போர் முடியும். பாண்டவர் தரப்பில் படையென்றும் குடியென்றும் எதுவும் எஞ்சப்போவதில்லை.” சகதேவன் “மூத்தவரே…” என்றான். “நான் எதையும் எண்ணிச் சொல்லவேண்டியதில்லை. அவைசூழ்கை அறியா மந்தன் என நின்று இதை சொல்கிறேன். இப்போருக்கு நாம் எழுகையில் விழைவுக்கேற்ப ஒவ்வொருவரையும் மதிப்பிட்டோம். பிதாமகர் பீஷ்மரை வெறும் தந்தை என்று…”

அவன் வாய் ஏளனமாக சுழித்தது. “சென்று கண்டு கால்பணிந்து தந்தையே என்றால் அவர் கனிவார் என்று கருதியிருக்கலாம். அவ்வாறு சென்றதே அவருக்கு வாய்ப்பென்றாயிற்று. வாழ்த்திவிட்டார் என்பதனால் நெறிநின்றவர் ஆனார். வாழ்த்தியமையால் உருவான ஐயத்தைப் போக்க கொன்று குவிக்கிறார்.” எவரும் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் “மந்தா, உன் சொல்லின் நஞ்சு ஒன்றே எனக்கு இனி எஞ்சியிருக்கிறது” என்றார். சகதேவன் கடுமையான குரலில் பீமனிடம் “மூத்தவரே, நாம் பழிச்சொல் உரைக்கவும் அவைகூடவில்லை. இனி படைசூழ்கை குறித்து நீங்கள் பேசினால் போதும். அவை சொல்லெடுக்கட்டும்” என்றான்.

அவையில் அமர்ந்திருந்த அனைவருமே நோயுற்றவர்கள்போல் தோன்றினர். துயில்நீப்பின் கருவளையங்கள் படிந்த விழிகளும், உலர்ந்த உதடுகளும், இருக்கை கைப்பிடிமேல் தளர்ந்தமைந்த கைகளுமாக அமர்ந்திருந்தனர். அர்ஜுனன் பீமனை நோக்கி “இந்தத் தருணத்தில் இனி நாம் இழந்தவற்றை கணக்கிலெடுக்க வேண்டியதில்லை என்று எண்ணுகின்றேன். இழந்ததென்ன என்று அறியாத எவரும் இன்று நம் படையில் இருக்கமாட்டார்கள். ஆவதென்ன என்று எண்ணுவோம்” என்றான். யுதிஷ்டிரர் கசப்புடன் “ஆவது ஒன்றே. நாம் பிதாமகரை வெல்ல வேண்டும். அது நம்மால் இயல்வதல்ல என்று ஒருநாளில் அவர் நமக்கு காட்டிவிட்டார்” என்றார்.

சீற்றத்துடன் திரும்பிய பீமன் “எனில் சென்று அஸ்தினபுரியை ஆளும் இழிமகனின் காலடியில் தலைவைத்து பணியுங்கள். மணிமுடியை அவனுக்கு அளித்து தொழும்பர் குறியேற்று பணிபுரியுங்கள். வெல்ல இயலாதென்ற உணர்வுடன் களம் நிற்கிறீர்கள் என்றால் உங்களை நம்பி வேல் கொண்டெழுந்த பல்லாயிரவரை பலி கொடுக்க எண்ணுகிறீர்கள் என்றே பொருள்” என்றான். “மூத்தவரே, பொறுங்கள்” என்றான் சகதேவன். “என்ன பொறுப்பது? நிகழ்ந்தது ஒருநாள் போர். அதற்குள் ஒவ்வொருவரும் அரைப்பிணங்களென அமர்ந்திருக்கிறார்கள். அவை நடுவே அமர்ந்து ஒருவர் வான்நோக்கி ஓலமிடுகிறார். தொல்புகழ் கொண்ட குருகுலம், பாண்டுவின் குருதி இத்தனை இழிந்தமையுமென்று எண்ணியதில்லை” என்றான் பீமன்.

கைநீட்டியபடி யுதிஷ்டிரர் எழுந்தார். உடல் நடுங்க, வாயோரம் எச்சில் தெறிக்க கூவினார். “இழிந்தமைவது இன்றல்ல, மூடா. நேற்று நீ பிதாமகரின் அம்புகளுக்கு முன் நிற்கவொண்ணாது பின்னடைந்தாயல்லவா அப்போது” என்றார். “இன்று பின்னடைவதில்லை” என்று பீமன் கூவினான். “நேற்று நான் நாளைப் போருக்கென காக்கப்பட்டேன். நோக்குக அவை, இன்று களம்படுவேன்! அன்றி அம்முதியவரைக் கொன்று மீள்வேன்.” அர்ஜுனன் “வெறும் வஞ்சினங்களுக்கான இடமல்ல இது, மூத்தவரே. இது என் போர், இதை நான் நிகழ்த்துகிறேன்” என்றான். “அவ்வண்ணமெனில் நேற்று நிகழ்த்தவேண்டியதுதானே? நேற்று எங்கு போயிற்று உன் வீரம்?” என்றான் பீமன்.

அர்ஜுனன் சொல்லெடுப்பதற்குள் “உன் காண்டீபத்தை வந்து பற்றியது அறம். தொல்குடியின் நெறி. தந்தைமுன் நின்று கால்நடுங்கும் சிறுவனென்றானாய். அறிவிலி, இன்றுமட்டும் அந்த எல்லையை எப்படி கடப்பாய்?” என்றான் பீமன். “இப்போது சென்றதை பேசிக்கொண்டிருப்பவர் நீங்கள், மூத்தவரே” என்று நகுலன் சொன்னான். “மூடு வாயை!” என்று கையை ஓங்கியபடி அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான் பீமன். இளைய யாதவர் மெல்ல கனைத்தபோது அவையில் ஓர் அசைவு ஏற்பட்டது. பீமன் உடல் பதிந்து அமைய திரும்பி அவரை பார்த்தான். “நாம் எதையும் மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை, குறைத்துக் கருதவும் வேண்டியதில்லை. நேற்று நிகழ்ந்தது நாம் எண்ணியிராதது” என்றார்.

“நம் இளையோரை இழந்தோம். பீஷ்மரின் கைத்திறனை முன்னரே அறிந்திருந்தும் நெஞ்சக்கடுமையை நேற்றுதான் அறிந்தோம். இழந்தது எதுவானாலும் ஈட்டியது அவ்வறிதல் என்று கொள்க!” என்றார். பின்னர் அவர் உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று வந்தது. “எய்தவேண்டியவை அனைத்தையும் தந்தையரைக் கடந்து சென்றுதான் அடையவேண்டுமென்று நெறியுள்ளது போலும். தடையென்று எழுந்து வந்து நிற்கும் தந்தையர்ப் பெருந்திரளின் வடிவமாக பீஷ்மர் இங்கு வில்லேந்தி நம்முன் வந்து நிற்கிறார்.” பீமன் அர்ஜுனனை நோக்கினான். அவன் கைகளை மார்பில் கட்டி வெறித்து நோக்கி அமர்ந்திருந்தான்.

“மைந்தரை இழந்ததும் நன்றே. இழப்பு குறித்த அச்சமே செயலில் தயக்கமென்று ஆகிறது. நாம் எய்தும் இழப்பு எதுவரை என்றும் இப்போது கண்டோம். நம் எல்லைகள் இரண்டும் தெளிவடைந்தன. நம்மால் கடக்க முடியுமா என்று பார்ப்போம்.” பீமன் “யாதவரே, நம் படைகள் இருக்கும் நிலையை தாங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. நேற்று நம் படைகளை கொடுங்கனவுகள் அலைக்கழித்திருக்கின்றன. அடுக்கடுக்காக மண் திறந்துகொள்ள பாதாளதெய்வங்கள் எழுந்து வந்து பரவி குருதிகொண்டாடுவதை கண்டிருக்கிறார்கள். பலர் அலறி கூச்சலிட்டு எழுந்து விழுந்திருக்கின்றனர். தங்கள் படைக்கலங்களாலேயே உடலை கிழித்துக்கொண்டிருக்கின்றனர் சிலர். நம் படைகளில் அனைவருமே கனவுகண்டதாக சொல்கிறார்கள். காலையில் எழுந்து காய்ச்சல்கொண்டவர்களைப்போல் நடுங்கி அமர்ந்திருக்கின்றனர் இளையவர்களும் முதியவர்களும்” என்றான்.

“ஆம், அதை என்னிடமும் சொன்னார்கள்” என்றார் இளைய யாதவர். “நீங்கள் கனவுகாணவில்லையா?” என்று பீமன் கேட்டான். அவர் புன்னகையுடன் “இல்லை” என்றார். மேலும் புன்னகை விரிய “அதன்பொருள் நீங்கள் கனவுகண்டீர்கள் என்பதுதான் அல்லவா?” என்றார். பீமன் “ஆம்” என்றபடி தலைதிருப்பிக்கொண்டான். யுதிஷ்டிரர் “இங்கு அனைவருமே அக்கனவுகளை கண்டிருக்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தான். “நாம் பகலைப்பற்றி மட்டும் பேசுவோம்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்குமுன் நான் அறியவேண்டுவது ஒன்றுண்டு. நேற்று நாம் படைகளின் நம்பிக்கையின்மையை போக்க அரவானை பலி கொடுத்தோம். இன்று மும்மடங்கு சோர்வில் அவர்கள் உள்ளனர், இன்று செய்யவேண்டியதென்ன?” என்றான் பீமன்.

இளைய யாதவர் “இனி இப்போரை பீஷ்மரே கொண்டுசெல்வார்” என்று அதே புன்னகையுடன் சொன்னார். “ஒவ்வொரு வீரனும் தன் எல்லையை கண்டுவிட்டான். சாவதொன்றே வழி என்றால் புகழுடன் சாகலாமென்று எண்ணுவான். இனி நம் படைகள் பின்னடி வைக்க இயலாது. காண்க, இன்று அவை உச்சவெறிகொண்டு களம் நிற்கும்! வேட்டையாடப்படும் விலங்கிலும் வீரம் எழுவதுண்டு.” பீமன் பெருமூச்சுவிட்டபின் பீடத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டான்.

இளைய யாதவர் “இன்று நாம் அமைக்கவிருக்கும் படைசூழ்கை என்ன என்று படைத்தலைவர் கூறுக!” என்றார். யுதிஷ்டிரர் கைகாட்ட திருஷ்டத்யும்னன் “இன்று காலை எழுந்தவுடனே அப்படைசூழ்கையை முடிவு செய்துவிட்டேன். ஏழு பகுதிகளாக முழுமையாக வரைந்து அவைமுன் படைத்திருக்கிறேன்” என்று கைகாட்டினான். படைத்தலைவன் வஜ்ரசீர்ஷன் அந்தப் படைசூழ்கை வரைவுகளை கன்றுத்தோல் சுருள்களாக கொண்டுசென்று இளைய யாதவரிடம் அளித்தான். அவர் அவற்றை ஒவ்வொன்றாக விரித்து கூர்ந்து நோக்கி தலையசைத்தார். அவை அவர் நோக்குவதை நோக்கி அமர்ந்திருந்தது. யுதிஷ்டிரர் “கிரௌஞ்ச வியூகம்” என்றார். இளைய யாதவரின் முகத்தில் எவ்வுணர்வும் வெளிப்படவில்லை.

சுருள்களைச் சுருட்டி அப்பால் வைத்துவிட்டு “இதன் நோக்கம் என்ன?” என்றார். திருஷ்டத்யும்னன் “யாதவரே, நாரைச்சூழ்கையை நான் வெவ்வேறு கோணங்களில் நோக்கிவிட்டேன். நமக்கு இன்று தேவை விரைந்து செல்லும் பறவையுடல். உடலிலிருந்து நெடுந்தூரம் விலகி சொடுக்கி எழும் நீள்கழுத்து கொண்டது நாரை. அதன் முனையில் கூர்கொண்ட அலகு அமைந்துள்ளது. நாரையின் கழுத்து எண்புறமும் வளைவது. தன் உடலில் எங்கும் சென்று தொடுவது. தன் எதிரியை பாம்பென்றாகி வளைக்கவும் கொத்தவும் வல்லது. நாகத் தொடுகையின் விரைவு கொண்டது” என்றான். இளைய யாதவர் “மெய், இன்று விரைவொன்றே நம்மை காக்கும்” என்றார்.

“நாரையின் உடல் என நம் படை அமையட்டும். அதன் முகப்பில் கூரலகு என அர்ஜுனன் அமைக! தொடர்ந்து அதன் நீள்கழுத்தில் பீமசேனரும் அபிமன்யூவும் சாத்யகியும் நானும் பிற மைந்தரும் அமைவோம். அதன் இறகுகளாக பாஞ்சாலப் படை விரிந்திருக்கும். உடலென்றும் காலென்றும் பிற படைகள் நிலைகொள்ளும்” என திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “நாரை இன்றைய போரில் ஒன்றை மட்டுமே இலக்கெனக் கொண்டது. எந்த ஆழத்தில் மூழ்கியும் அதையே கொத்தி எடுக்க அது முயலும், அதன் முழுதுடலும் அவ்வலகுக்கும் கழுத்துக்கும் துணைப்புலம் என அமையும்.” அவன் சொல்லிமுடித்ததும் அவையினர் கைகளைத் தூக்கி “ஆம்!” “வெற்றிச்சூழ்கை!” “கொத்தி எடுப்போம் இரையை!” என்று கூவினர்.

பீமன் “அவையோரே, நேற்று என் கனவில் நான் எனக்கென வஞ்சினமொன்றை உரைத்தேன். இன்று அதை நெஞ்சில் கொண்டே களத்தில் எழவிருக்கிறேன்” என்றான். அனைவரும் அவனை நோக்க “நேற்று எந்தத் தடைகளெல்லாம் என் கால்களை தடுத்தன, தோள்களில் எடையாகியன என்று எண்ணி நோக்கினேன். அவை அனைத்தையும் இன்றுடைப்பேன். என்னுள் வாழும் தந்தையையும் மைந்தனையும் இன்று குருக்ஷேத்ரக் களத்தில் பலி கொடுப்பேன். அவையோர் அறிக! என்னுள் வாழும் நல்லறத்தோனையே இன்று பலி கொடுப்பேன். பயின்ற உடலென, வெறிகொண்ட உள்ளமென, விலங்கென நின்று எதிர்ப்பேன். இன்று பெருங்குருதியாடியே மீள்வேன்” என்றான்.

இளைய யாதவர் அர்ஜுனனை நோக்கி “இது உன் போர், பார்த்தா” என்றார். அர்ஜுனன் “ஆம், எண்ணியிராப் பெருவீரத்துடன் எழுந்து நிற்கிறார் பீஷ்ம பிதாமகர். எல்லையற்றது எனத் தெரிகிறது அவர்கொண்ட இரக்கமின்மை. ஆயினும் நான் அவரை வெல்வேன். ஏனெனில் வென்றாகவேண்டுமென்பதே நெறி. இப்புடவி அத்தகைய பல்லாயிரம் நெறிகளின் நெசவால் ஆனது” என்றான். தன் மார்பில் கைவைத்து “அவையோரே, பிறிதின்மை ஒன்றை என் உள்ளத்தில் ஆழ உணர்கிறேன். அவ்வாறன்றி வேறு வழியில்லை என என் அகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அது ஒன்றே என்னை செலுத்துகிறது” என்றான்.

“அது உன் இயலாமைக்கு நீ அளிக்கும் அணிகலனாகவும் இருக்கலாம். உன் கால் தயங்குவது ஏன் என்று நீ அறிவாய்” என்று பீமன் சொன்னான். சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுத்து பின் அடக்கிக்கொண்ட அர்ஜுனன் “என் எல்லையையும் நான் அறிவேன்” என்றான். பற்களைக் கடித்து கைகளை ஓங்கியபடி “இன்று உன் கண்முன் அதை நான் கடக்கிறேன். இன்றுடன் நீ என்னை கைவிடுவாய், அன்றி உன்னைக் கடந்து மேலெழுவாய்” என்றான் பீமன்.

யுதிஷ்டிரர் “பொழுதணைந்துவிட்டது… அவை எழுக!” என்றார். அவையினர் அனைவரும் எழுந்து நின்று தங்கள் வாள்களை உருவி தலைக்குமேல் தூக்கி அசைத்து “வெல்க குருகுலம்! வெல்க மின்கொடி! வெல்க யுதிஷ்டிரப் பேரறத்தான்! வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று போர்வஞ்சினம் ஒலித்தனர்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஉணர்ச்சிகளும் கலையும்
அடுத்த கட்டுரைரிஷான் ஷெரீஃபுக்கு விருது