‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3

bowஇரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட பாவைகள் என ஒருவரால் ஒருவர் தூக்கப்பட்டு எழுந்து படைக்கலங்களைத் தூக்கி ஆட்டி போர்க்கூச்சலெழுப்பியபடி அவளுடன் பெருகிச்சென்றனர். துறுத்த கனல்விழிகளும் இளித்த வெண்பற்களும் பெருகிச்சுழலும் கைகளுமாக ஆழுலகத் தெய்வங்கள் அவர்களுடன் ஊடுகலந்து கொந்தளித்தன. கன்னங்கரு நிறத்தில் ஒரு நதி அலையடித்துச் சரிவிறங்குவதுபோல அப்படை முன்னால் சென்றது.

செருகளத்திற்குள் சென்றதும் பேய்த்தெய்வங்கள் குருதிமணம் கொண்ட ஓநாய்களையும் கழுதைப்புலிகளையும்போல தரையை முகர்ந்தும் கைகால்களால் சுரண்டியும் எக்களிப்போசையிட்டு துள்ளிக்குதித்துச் சுழன்றன. பல்லிளித்து உறுமி ஒன்றுடனொன்று பூசலிட்டன. வானோக்கி முகம்தூக்கி ஊளையிட்டு நெஞ்சிலறைந்துகொண்டன. ஜலன் அவர்களின் நடுவே அஞ்சியும் ஒதுங்கியும் முன்னால் சென்று அம்பையை அடைந்தான். அவள் தன் முன் விரிந்துகிடந்த கௌரவப் படையை நோக்கி சென்று அதன் முகப்பில் நின்று இரு கைகளையும் விரித்து அறைகூவினாள். அவள் விரல்நகங்களில் விழிகளெழுந்ததுபோல் ஒளியிருந்தது. அவள் குரல் அலையலையாக எழுந்து இருளில் பரவியது.

மறுபக்கமிருந்து ஒரு பெண்ணுருவம் வருவதை ஜலன் கண்டான். விழிகூரும்தோறும் அவள் உருவம் தெளிவுற்றது. இளநீலப் பட்டாடை அலைகொண்டு காற்றில் பறக்க கூந்தல் எழுந்து சிறகென உலைய அவள் சீரடியில் நடந்து வந்தாள். கண்கள் அம்பையை நோக்கி உறுத்திருந்தன. அவளுக்குப் பின்னால் அவளைப்போலவே நீலப் பட்டாடை அணிந்த எழுவர் வந்தனர். மேலும் பலர் தொடர்வதுபோல் இருளுக்குள் அசைவுகள் திளைத்தன. கௌரவப் படையே எழுந்து வருவதுபோல் ஜலன் உணர்ந்தான்.

அம்பை தன்னைத் தொடர்ந்து வந்தவர்களிடம் கைகாட்டிவிட்டு செருகளத்து எல்லையை கடக்க முனைந்தபோது அவள் இரு கைகளையும் விரித்துத் தடுத்து “நில்!” என்றாள். “யார் நீ? என்னை தடுப்பதென்றால் என்ன பொருளென்று அறிவாயா?” என்று அம்பை உறுமினாள். “ஒவ்வொன்றையும் எரியாக்கி சாம்பலாக்கும் தழல் நான். விலகுக, என் சினத்தைத் தாங்குபவரென எவரும் இங்கில்லை. அகல்க!” எதிரில் நின்றவள் “நான் கங்கை. அனைத்தையும் உண்டு வயிற்றிலடக்கும் நீர் நான். எரிவடிவனின் இணையமர்ந்தவள். என் மைந்தனைக் கொன்று வஞ்சம் தீர்க்கும்பொருட்டே நீ களம் புகுந்துள்ளாய் என்று அறிவேன். எண்ணுக, ஒருபோதும் அது நிகழப்போவதில்லை! அவன் வாழ்நாளெல்லாம் என்னால் காக்கப்பட்டவன். இந்நிலத்தில் நீரென்று ஒழுகுவன அனைத்தும் என் வடிவே. அவனுக்கென எழுந்து திரள பல்லாயிரம் அன்னையர் இங்குள்ளனர்” என்றாள்.

அம்பை ஒருகணம் திகைத்து பின் சினத்துடன் கைநீட்டியபடி அவளை அணுகி “பெண்பழி கொள்பவனின் அன்னைக்கே முதல்பழி. நீ கொண்ட பழி தீர்வது உன் மடியில் கிடந்து அவன் குருதிவடிய உயிர்துறக்கும்போதுதான். நீயல்ல, முதல்மூவரும் அவர்களின் இடம் அமர்ந்த அன்னையரும் எண்ணினாலும் அவனை காக்கவியலாது. தெய்வங்களுக்கும் மேலானது சொல். குருதியும் கண்ணீரும் கொடுத்து கணம்தோறும் பேணப்படும் சொல்லுக்கு அவிநிலைக்கா வேள்வித்தீயின் ஆயிரம்மடங்கு விசை உண்டு என்று அறிக… விலகுக, என் வழியை எவரும் தடுக்கவியலாது!” என்று அலறினாள். வெறிச்சிரிப்புடன் “வையம் காத்திருக்கிறது அவன் வீழ்வதைக்காண. அன்று தொடங்கிய ஒன்று இக்களத்தில் நிறைவுறுகிறது. நீர்மகளே, எப்போதும் சமன்களால் ஆனது இப்புடவி. எனவே முடியாக் கணக்குகளென ஏதும் இங்கு எஞ்சுவதில்லை” என்றாள்.

அம்பை போர்க்கூச்சலுடன் முன்னகர அவளை எதிர்க்குரலுடன் கங்கை தடுத்தாள். அம்பை அவளை முட்டிக்கடக்க முயல அவர்களுக்குப் பின்னால் பெருகிவந்த படைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. சில கணங்களுக்குள் விழிமலைக்கச் செய்யும் பெரும்போர் அங்கே நிகழத் தொடங்கியது. வாள்களும் வேல்களும் மின்னிச் சுழன்று உலோக ஒலியுடன் மோதிக்கொண்டன. வெறிகொண்ட பேய்த்தெய்வங்கள் ஒன்றையொன்று வெறுங்கைகளால் கிழித்துக்கொண்டன. குருதிவெறிகொண்டு கூச்சலிட்டன. வௌவால்கள்போல் கைகளை சிறகுகளாக்கி எழுந்து பறந்து அமைந்து போரிட்டன. புதுக் குருதியின் வாடை எழுந்து சூழ்ந்தது.

ஜலன் சொல்லின்றி ஒழிந்த சித்தத்துடன் வெற்றுவிழிகளாக நின்று அதை நோக்கிக்கொண்டிருந்தான். சுழன்று நோக்கியபோது விழிதொடும் எல்லைவரை போரின் அலைக்குமுறலையே அவன் கண்டான். மெல்ல கால்தளர்ந்து நிலத்தில் அமர்ந்து முகத்தை கைகளால் பொத்திக்கொண்டான். செவிபுகுந்து உடலை நிறைத்து கைவிரல்நுனிகளைக்கூட அதிரச்செய்யும் அளவுக்கு எழுந்துகொண்டிருந்தது போரின் முழக்கம். ஓசை அவன் விழிகளுக்குள் ஒளிவெடிப்புகளாகவும், நாவில் கடுங்கசப்பாகவும், தோலில் நடுக்காகவும் கூடியது. இருமுறை வயிறு எக்கி வாயுமிழ்ந்தான். பின்னர் களைப்புடன் மல்லாந்து விழுந்தான்.

அவன்மேல் கால்கள் பறந்தோடின. எடைமிக்க பிணங்கள் துடித்தபடி மேலும் மேலுமென விழுந்தன. குருதி பெரிய மழைத்துளிகளாக பொழிந்துகொண்டே இருந்தது. அவன் குருதிச்சேற்றில் மிதந்ததுபோல கிடந்தான். எங்கோ இருந்து அங்கு நிகழும் போர்க்கொப்பளிப்பை நோக்கிக்கொண்டிருந்தான். எடைமிக்க ஒன்று நீரில் அமிழ்ந்திறங்குவதுபோல குமிழிகளுடன் சுழித்தது அப்பெருந்திரள். கணந்தோறும் பெருகும் வெறியுடன் ஒவ்வொரு உடலும் இன்னொன்றை கவ்விக்கொண்டது. விழுந்த உடல்கள்மேல் போரிட்டவர்கள் ஏற மேலும்மேலுமென குவிந்து குவிந்தெழுந்தது.

விழிகளுக்குமேல் மெல்லிய வெளிச்சம் பரவுவதை உணர்ந்ததும் ஜலன் கண்விழித்தான். எழுந்தமர்ந்தபோது படுகளத்தில் அசைவுகள் நிலைத்திருந்ததை கண்டான். கையூன்றி எழுந்து தள்ளாடும் கால்களில் நின்றபடி சுற்றிலும் நோக்கினான். வாள்களையும் படைக்கலங்களையும் தாழ்த்தி களைப்புடன் மூச்சிளைத்தபடி இருபுறமும் வீரர்கள் நின்றிருந்தனர். பேய்த்தெய்வங்கள் நிலத்தில் கால்களையும் கைகளையும் ஊன்றிப்பரவி நிணத்தையும் குருதியையும் அள்ளி அள்ளி மாந்திக்கொண்டிருந்தன. ஓசையின்றி உறிஞ்சியும் ஒன்றோடொன்று பல்காட்டி சீறியும் அவை சுவைகொண்டாடின. அவற்றின் உடல்களே குருதியில் திளைக்கும் நாவுகள் போன்றிருந்தன.

அவன் படைமுகப்பில் அம்பையும் அவளுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் நிற்பதை கண்டான். அவர்களுக்கு எதிர்முகம் கொண்டு கங்கையும் ஏழு தங்கைகளும் நின்றிருந்தனர். இருசாராரும் ஒருவரை ஒருவர் முட்டி உச்சவிசையில் அசைவிழந்தவர்கள் போலிருந்தனர். ஜலன் “அன்னையே!” என அழைக்க விழைந்தான். ஆனால் அவன் கூற விழைந்த எவற்றுக்கும் சொல் திரளவில்லை. அவன் நா வறண்டு ஒட்டியிருந்தது. கால்கள் மண்ணில் ஆழப்பதிந்தவை போலிருந்தன.

“இந்த நாள் முடியலாம், இந்தப் போர் ஓயாது… ஆயிரமாண்டுகளாகட்டும். இப்புவியிலுள்ள குருதி முழுக்க இங்கே பெருகட்டும். என் பழி கொள்ளாமல் இங்கிருந்து நான் அகலப்போவதில்லை” என்று அம்பை சொன்னாள். “உன் வஞ்சத்திற்கு என் மைந்தனை நான் விட்டுத்தர இயலாது. நானும் என் தங்கையர் பன்னீராயிரவரும் அவனுடன் நிற்போம். அவன் தேரை எங்கள் விசையால் செலுத்துவோம். அவன் அம்புகளை நாங்கள் ஏந்தி வருவோம். அவனை வெல்ல எவராலும் இயலாது” என்றாள் கங்கை. “உன் குருதிவழியினர் முற்றழியலாகாது எனில் திரும்பிச்செல். அவர்களை அவன் கால்தொட்டு வணங்கி சொல்பெற ஆணையிடு…”

அம்பை “என் குருதிவழியா?” என்று சிரித்தாள். “என் குருதி இவர்களல்ல… இங்குள்ள அத்தனை மகளிர் நெஞ்சங்களிலும் வஞ்சமென மறைந்திருப்பது அது. அது எந்நிலையிலும் அழியாது… நீ எதுவரை காக்க இயலும் உன் மைந்தனை? பார்க்கிறேன். இங்கே அவன் நெஞ்சக்குருதி சிதற விழுவதை நான் காண்பேன். அக்குருதியாலன்றி எதனாலும் என் நெஞ்செரி அணையாது.” கங்கை கீழ்வானை நோக்கினாள். அம்பையும் தங்கையரும் உடன் நோக்கினர். அங்கே முதல் கதிரின் வண்ணத்தீற்றல் தெரிந்தது. அம்பை பெருமூச்சுடன் திரும்பி “இரவு செல்க! நான் பகலிலும் இங்குதான் இருப்பேன். இவர்களின் கனவுகளில்… ஒருகணமும் இங்கிருந்து ஒழியமாட்டேன்” என்றபின் மறுதிசை நோக்கி விலகிச்சென்றாள். அவள் உடன்பிறந்தாரும் உடன் சென்றனர்.

ஜலன் அவர்கள் சென்று மறைவதை நோக்கியபடி நின்றான். திரும்பிப் பார்த்தபோது தன் தங்கையருடன் கங்கையும் அப்பால் சென்று மறைவதை கண்டான். குருதியுண்ட பேய்த்தெய்வங்கள் பெருத்த வயிறுகளை கைகளால் ஏந்தியபடி வண்டுகள்போல நிலத்தில் ஊர்ந்து அகன்றுகொண்டிருந்தன. ஒளி மேலெழுந்தோறும் அவர்கள் நிழல்களென இழுபட்டு சுருங்கி மறைந்தனர். படைக்கலங்களுடன் நின்றிருந்த வீரர்கள் பெருமூச்சுடன் திரும்பி நடந்தனர். தொய்நடையில் சென்று தாங்கள் ஏற்கெனவே படுத்திருந்த இடங்களை அடைந்து கையூன்றி அமர்ந்து கால்நீட்டி சலிப்போசையுடன் மீண்டும் படுத்துக்கொண்டார்கள். களைத்த மூச்சொலிகளும் மென்முனகல்களும் ஒலித்தன.

ஜலன் அவர்களின் நடுவே நடந்தான். மிக விரைவிலேயே அவர்கள் துயில்கொண்டுவிட்டனர் என்று தோன்றியது. முகத்தசைகள் மெல்ல தளர கைகால்கள் தொய்ந்துவிழ அவர்கள் உதடுகள் அதிரும் குறட்டையொலியுடன் ஆழ்துயிலில் மூழ்கினர். ஜலன் தன் காவல்மேடையை அடைந்தான். அங்கே சோமிதன் கால்களை நீட்டி மார்பின்மேல் வேலை வைத்து அணைத்தபடி படுத்திருந்தான். அவன் தன் இடத்தில் அமர்ந்து வேலை கால் நடுவே வைத்துக்கொண்டு வானை நோக்கினான். மேலும் இரு முகில்கள் செந்நிறப்பூச்சு கொண்டிருந்தன. இன்னும் சற்றுநேரத்தில் விடியத் தொடங்கும். முதற்கொம்பொலி எழ அரைநாழிகைகூட இல்லை. அவன் விண்ணையே நோக்கிக்கொண்டிருந்தான். உதிர்ந்த விண்மீன்களை எண்ணினான். எண்ணங்கள் குழம்பிக் கரைந்து உருவழிவதை அவனே எங்கோ இருந்து நோக்கிக்கொண்டிருந்தான்.

bowமுன்காலையில் தன்னை எழுப்புவது எது என்று பீஷ்மர் எண்ணி வியப்பதுண்டு. நெடுநாள் நோன்பால் உடலில் உருவான ஒழுங்கு அது என்று அறிந்திருந்தாலும் எங்கிருந்தோ எவரோ வந்து தொட்டு எழுப்புவதாகவே அவர் உணர்வது வழக்கம். அந்தத் தொடுகையை அரிதாக உடலால் உணரமுடியும். மென்மையான கை. அன்னைக்குரியது, அல்லது இளமகவுக்குரியது. அத்தொடுகைக்கு முந்தைய கணம் ஒவ்வொரு முறையும் ஒன்று. அவர் காட்டில் நின்றிருப்பார். நதிக்கரைகளில், அருவியின் ஓரம், அவைகளில் அமர்ந்திருப்பார். எவருடனேனும் சொல்லாடிக் கொண்டிருப்பார் அல்லது நூல்நோக்கிக் கொண்டிருப்பார். இலக்கு நோக்கி அம்புகளை எய்தபடி ஊழ்கத்திலிருப்பார். அக்கனவுக்கு வெளியிலிருந்து மென்மையாக அது நீண்டுவரும்.

அத்தொடுகை அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் கனவென்றாக்கி பின்னால் தள்ளும். அந்த நாளை நோக்கி சித்தம் விரிந்தெழச் செய்யும். அத்தொடுகையை உணர்ந்த கணமே அது இல்லையென்றாகும். கனவினுள் தானும் சென்று மறையும். ஆனால் அதை அவரால் எண்ணி எடுக்க முடியும். நெடுநேரம் மீட்டிக்கொள்ளவும் இயலும். அக்கனவின் பொருளையோ பொருளின்மையையோ எண்ணியபடி நீராடச் செல்கையில் அத்தொடுகையை வந்தடையும் எண்ணம் புன்னகையுடன் முகம் மலரச்செய்யும். நீருக்குள் எப்போதும் அவர் தன்னை முழுமையாக உணர்வார். நெடும்பொழுது நீந்தித்திளைக்காமல் அவர் நீராடியதேயில்லை.

கைகளைக் கூப்பியபடி மஞ்சத்தில் கண்விழித்து கையூன்றாமல் உடல் மடித்து எழுந்து அமர்ந்து கைகளை விரித்து நோக்கினார். காலை வழுத்தலை உரைத்தபின் பெருமூச்சொலியுடன் எழுந்து சுவரில் தொங்கிய மரவுரியை எடுத்தார். அவர் அறைவாயிலில் விஸ்வசேனர் நின்றிருந்தார். அவர் எழுந்த ஓசை பீஷ்மரை எழுப்புவது என்றுமுள வழக்கம். அவரை வெறுமனே நோக்கிவிட்டு நடக்க அவர் பீஷ்மருக்கு முன்னால் சென்றார். வானில் செந்தீற்றல்கள் எழத் தொடங்கியிருந்தன. மிக அப்பால் ஒரு தனி கரிச்சானின் கீறல் ஒலி எழுந்து இருளில் அகன்றது. விஸ்வசேனர் கொப்பரையில் நீரை கொண்டுவந்து மருதமரத்தின் அடியில் வைத்தபின் அகன்று நின்றார்.

அவர் சிறுகுடுவையை கையில் எடுத்து கொப்பரையிலிருந்து நீரை அள்ளியபோது நீல ஆடை அலைவுறும் அசைவுடன் அக்கால்களை கண்டார். நெஞ்சு துணுக்குற நிமிர்ந்து நோக்கினார். அவளை அவர் நன்கறிந்திருந்தார். “அன்னையே…” என்றார் பீஷ்மர். “இது என் நீர். இதனருகே உனக்காக காத்திருந்தேன்…” என்றாள் கங்கை. அவர் பெருமூச்சுடன் “உன்னிடம் விடைபெற்றுச் செல்லவேண்டும் என வந்திருந்தேன்… அன்று மாலைவரை உன் கரையிலேயே இருந்தேன். உன்னை சந்திக்க என்னால் இயலவில்லை” என்றார். “ஆம், நான் உன்னை நோக்கிக்கொண்டிருந்தேன். நீ கிளம்பவிருந்த அப்போருக்கு வாழ்த்துரைக்க என் உளம் எழவில்லை” என்றாள் கங்கை.

“என் கடமை” என்றார் பீஷ்மர். “நன்று, வாழ்நாளெல்லாம் முதல் நெறியெனக் கொண்ட ஒன்றை இறுதியில் போட்டுடைப்பதுதான் நெறிபோலும்” என்று கங்கை சொன்னாள். பீஷ்மர் துயருடன் ஏறிட்டு நோக்கி “எனக்கு தெரியவில்லை, அன்னையே. நான் செய்வதென்ன என்று எத்தெளிவும் எனக்கில்லை. என் உள்ளியல்பு சொல்வதை செய்வதொன்றே என் வழி எனத் தோன்றியது” என்றார். “தவிர்க்கமுடியாமைக்கு எதிராக நோன்புகொண்டவன் நீ” என்றாள் கங்கை. “ஒருவகையில் அது நன்று, எவ்வகையிலும் தவிர்க்கமுடியாதது அது என நீ கண்டுகொண்டாய். தந்தையால் கொல்லப்படாத சிம்மக்குருளையே காட்டை ஆளவேண்டும் என்பது உயிர்நெறி.”

பீஷ்மர் “இனி நான் சொற்களை விரும்பவில்லை, அன்னையே” என்றார். “உள்ளும் புறமும் சொல்லிச் சொல்லி சொற்பொருள் அனைத்தையும் முற்றாக கடந்துவிட்டிருக்கிறேன்.” கங்கை “நான் உன் நலம்காக்க வந்தேன். ஏனென்றால் இப்புவியில் நான் ஈன்ற ஒரே மைந்தன் நீ” என்றாள். பீஷ்மர் “அது என் பேறு” என்றார். “உன்னை அவர்கள் களத்தில் வெல்லக்கூடும்” என்றாள் கங்கை. அவர் மறுமொழி சொல்லவில்லை. “வாய்திறந்து பேசு, அறிவிலி… நீ களம்பட்டுக் கிடப்பதைக் காண நான் விழையவில்லை” என்று கங்கை சீறினாள்.

“ஊழ் அதுவெனில் நான் என்ன செய்வது?” என்றார் பீஷ்மர். “ஊழை துணைக்கொள்வது கோழைகளும் வலிவிலாதோரும் சொல்லும் வீண்சொல். நீ களம்படலாகாது. இப்புவியில் எவரும் உன்னை வெல்லலாகாது” என்று கங்கை மூச்சிரைக்க சொன்னாள். கைநீட்டி அவர் அருகே வந்து “ஏனென்றால் மைந்தன் எனும் நீ என் பிறிதுவடிவம். ருத்ரப்பிரயாகையில் நான் கொண்ட பேராற்றலை உன் தோள்களுக்கு அளித்திருக்கிறேன்” என்றாள். பீஷ்மர் “ஆற்றலால் என்ன பயன்? அன்னையே, இப்போரில் எத்துணை விரைவில் நான் களம்படுவேனோ அத்துணை நன்று என்று கொள்கிறேன்” என்றார்.

“அறிவிலி… என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா? மூடா, வெற்றியுடையவனுக்கே சிறப்பு அமைகிறது. நீ பயின்ற வில் உனக்கு அதை சொல்லவில்லையா என்ன?” என்று கங்கை பற்களைக் கடித்து சீற்றத்துடன் கேட்டாள். “நீ களத்தில் வீழ்ந்தால் உன் செயல்களெல்லாம் பழியென்று ஆகும். உன் வாழ்க்கையே தீயதென்று மாறும். சூதர்சொல்லில் கொடியோனாக வாழ்வாய்.” பீஷ்மர் “ஆம், தோல்வி என்றால் அதுவே பொருள்” என்றார். “நீ வென்றாகவேண்டும். களத்தில் உன் சொல்லே இறுதியாக நிலைகொள்ளவேண்டும். அதன்பின் துறந்து வந்து என் மடியில் அமர்ந்து உயிர்துறந்து விண்ணெழுக! மண்ணில் உன் பெயர் என்றும் நிலைக்கும்.”

குரல் தழைய விழிகள் சற்றே கனிய “என் மைந்தனிடம் நான் கோருவது அதை மட்டுமே, பழியற்ற வாழ்வொன்றை இங்கு நினைவென்று விட்டுச்செல்லவேண்டும் நீ” என்று கங்கை சொன்னாள். “உன்னை வீழ்த்த அங்கே பெருவஞ்சம் வீறுகொண்டு நின்றுள்ளது. இதோ சற்றுமுன் அதை நேருக்குநேர் பார்த்துவிட்டு வந்துள்ளேன். அவர்கள் உன்னை வெல்ல ஒருபோதும் ஒப்பேன். உன் அன்னையரின் பெருநிரை உனக்குத் துணை என உடனிருக்கும். உன் தோள் ஒருபோதும் தளர்வுறாது. உன் இலக்குகளை எந்த விசையும் விலக்காது” என்றாள் கங்கை.

“நான் வெல்வதற்காக போரிடுகிறேனா என்றே எனக்கு தெரியவில்லை, அன்னையே” என்றார் பீஷ்மர். “போர்க்களத்தில் வில்லுடன் சென்று நின்றிருக்கையில் அங்கிருந்து அவ்வழியே கிளம்பிச்சென்றுவிடுவதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். போர்முடிந்து வில்தாழ்த்தி கிளம்பும்போது சலிப்பும் கசப்பும் தன்வெறுப்புமென என் உள்ளம் தொய்ந்திருக்கும். ஆனால் போர்முரசுகள் ஒலிக்கக் கேட்டதும் என்னுள் இருந்து நான் அஞ்சும் பிறனொருவன் எழுகிறான். என் வில்லை அவன் ஏந்திக்கொள்கிறான். அவனுக்கு உறவுகளேதுமில்லை. இம்மண்ணில் அவன் எய்தவும் ஏதுமில்லை. அளியும் அன்பும் அறமும் அவனறியாதவை. அம்புகள் இலக்கடைவதையன்றி எதையும் அவன் நோக்குவதில்லை. பழுதற்ற கொலைக்கருவி என மாறி களம்நின்றாடுகிறான்.”

“அவனே நீ. இந்தச் சோர்வும் தவிப்பும் அல்ல. வில்லென்பது நாண்பூண்டு இறுகித் துள்ளி நின்றிருப்பதே. தளர்ந்து மேடையில் இருப்பது வெறும் மூங்கில்” என்றாள் கங்கை. பீஷ்மர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். “இது ஒரு நுண்ணிய தன்நடிப்பு என நீ ஏன் புரிந்துகொள்ளவில்லை? களத்தில் முழுவிசையுடன் எழுந்து குருதியாடுவதற்காக நீ உன் ஆற்றல் அனைத்தையும் சேமித்துக் கொள்கிறாய். அதன்பொருட்டு உன் உடலையும் உள்ளத்தையும் ஓய்வுக்கு கொண்டுசெல்கிறாய். அதற்காகவே இப்பற்றற்ற நிலையை பூண்கிறாய். இந்தச் சொற்களினூடாக நீ குற்றவுணர்ச்சிகளையும் வெறுமையையும் பெருக்கிக் கொள்வது ஊசல் இம்முனையின் உச்ச எல்லைவரை வருவதற்கே. அம்முனையில் முழுவீச்சுடன் எழுவதற்குரிய வழி அது.”

பீஷ்மர் “இருக்கலாம்” என்றார். கங்கை மேலும் அருகணைந்து அவர் தோளில் கைவைக்க வர அவர் அறியாது பின்னடைந்தார். “செயல்வீச்சு கொண்ட அனைவருமே இந்த உளச்சோர்வை கொள்கிறார்கள். நீ இன்று தேரிலேறியதுமே படைப்பெருக்குகளை அழிக்கும் காலமானுடனாகிவிடுவாய் என்பதற்கான சான்று இது” என்றாள். “ஆனால் உனக்கு எதிர்நிற்பவள் எளியவள் அல்ல. உன்னிலிருந்து எழுந்தவள் என்பதனாலேயே உன்னை வெல்லும் வாய்ப்புள்ளவள்” என்றாள் கங்கை. இறைஞ்சும் குரலில் “அன்னையே!” என்று பீஷ்மர் அழைத்தார்.

கங்கையின் முகம் மீண்டும் இனிதாகியது. “சற்றுமுன் நான் தொடவந்தபோது நீ விலகியது என் உள்ளத்தை இனிக்கச் செய்தது” என்றாள். “மைந்தா, முழுதமைந்த ஆண்மையின் நிமிர்வும் வீரமும் நீ. பெண்ணிடம் காமம் கொள்வதுகூட அந்த ஆண்மைக்கு குறைவு என்பதனால்தான் நீ அதையும் கடந்தவனானாய். பெண்மையின் முழுநிலை தாய்மை என்றால் ஆண்மையின் முழுநிலை என்பது தன்னிலேயே நிறைவுற்று தொடப்படா மலைமுடியென நின்றிருத்தலே. நிறைவுகொண்ட பேராண்மையே நீ. உன் ஆண்மையின் ஆணவமே அவளை உருவாக்கியது. அதுவும் நீயே.”

“அறிக, எவராயினும் அவரை வெல்வது அவரால் உருவானதாகவே இருக்கவியலும். அது புடவிப்பெருவிசையின் நெறிகளில் ஒன்று” என்று கங்கை தொடர்ந்தாள். “உனக்கிணையான உளவிசை. உனக்கு சற்றும் குறைவிலாத நோன்புறுதி. மைந்தா, உன் பிறிதுவடிவம் அவள். உன்னை வென்றபின் ஒருபால் அமர்ந்து நான் நெஞ்சுருகி அழுகையில் மறுபால் அமர்ந்து அழவிருப்பவள்.” பீஷ்மர் விழிவிலக்கிக்கொண்டார். பின்னர் “அன்னையே” என மென்குரலில் அழைத்தார். “அவளை ஏன் விலக்கினேன், ஏன் சிறுமைசெய்தேன் என்று பல்லாயிரம் முறை நான் கேட்டுக்கொண்டதுண்டு. அது நான் உங்களுக்கு எதிராகச் செய்தது.”

கங்கை திகைத்து நின்றாள். “அன்று ஒருகணம் உங்களை வென்றேன்” என்றார் பீஷ்மர். கங்கை சீற்றத்துடன் “ஆம், அவள் நானே” என்றாள். மேலும் விசைகொண்டு “ஆகவே அவளுக்காக நீ உன் வில்லை தாழ்த்தக்கூடும். அவளிடம் விரும்பி தோற்கவும்கூடும்” என்றாள் கங்கை. “அதைவிட நான் அஞ்சுவது மறுபால் நின்றிருக்கும் இளைய யாதவனை. வானறிந்தது அனைத்தும் அறிந்த மானுடன் அவன். உன் ஆழம்வரை வந்து தொடும் விழிகொண்டவன். அவன் அவளை உன்முன் நிறுத்துவான். அவள்முன் உன்னை மண்டியிடச் செய்வான். நீ புகழ் அழிந்து இழிவுறுவாய்… இனியவனே, இக்களத்தில் நீ விழுந்தாய் எனில் மைந்தர்கொலை புரிந்த கொடுந்தாதை என்ற பெயரையே குடிகள் நாவிலும் கொடிவழியினர் நெஞ்சிலும் எஞ்சவிடுவாய்.”

“நான் என்ன செய்யவேண்டும், அன்னையே?” என்றார் பீஷ்மர். “உன்னைக் காத்து உடனிருக்க என் மைந்தர் எழுவருக்கும் ஆணையிட்டிருக்கிறேன். அந்த நீர்ப்பரப்பை தொடு.” பீஷ்மர் ஐயத்துடன் ஒருகணம் நோக்கிவிட்டு நீர்ப்பரப்பை தொட்டார். நீரிலிருந்து எழுந்தவர்களாக எழுவர் அவருடைய உருவையே தாங்களும் கொண்டு எழுந்து விரிந்து நின்றனர். “மைந்தா, நீ விண்ணாளும் எட்டு வசுக்களில் இளையவனாகிய பிரபாசனின் மண்ணுரு என அறிக. உன் மூத்தவர்களான தரன், துருவன், சோமன், ஆபன், அனிலன், அனலன், பிரத்தியூடன் ஆகியோரை வணங்குக!” என்றாள் கங்கை. அவர்கள் நீண்டு எழுந்த உடலும் வெண்தாடியும் களைத்த விழிகளும் கொண்டிருந்தனர்.

பீஷ்மர் அவர்களை நோக்கி தலைவணங்கினார். “உன் இரு விழிகளிலும் இரு தோள்களிலும் இரு கால்களிலும் முதுகிலும் இவர்கள் குடிகொள்வார்கள். உன்னுடன் இருந்து இப்போரை தாங்களும் நடத்துவார்கள். இனி உன்னுடன் பொருதுபவர்கள் உங்கள் எண்மரையும் எதிர்கொள்வார்கள். விண்ணளந்தோனும் கங்கைசூடியோனும் நேரிலெழுந்தால் அன்றி மண்ணில் எவரும் உன்னை வெல்லவியலாது” என்றாள் கங்கை. பீஷ்மர் “உங்கள் அருள், அன்னையே” என்றார்.

முதல் வசுவாகிய தரன் “அன்னையே, இளையோனின் ஆற்றலென அவன் உடலில் உறைவோம் என ஆணையிடுகிறேன். ஆனால் அறுதியிலாது எதையும் அளிக்கலாகாது என்பது நெறி. போர்க்களத்தில் ஒருமுறை இவன் உளம்தளர்ந்து வில்தாழ்த்துவான் என்றால் எங்களில் ஒருவர் விலகிச்செல்வோம் என்று உணர்க! ஏழுமுறை வில்தாழ்த்தினால் இவன் மட்டுமே எஞ்சுவான். எட்டாவது முறை வில்தாழ்த்துகையில் இவனில் உறையும் பிரபாசனும் மறைவான். வெற்றுடலென அங்கே நின்றிருப்பான்” என்றான். “அவன் உளம்தளர மாட்டான். குன்றா ஊக்கமே அவனை தேவவிரதனாக்கியது” என்றாள்.

“ஆயிரத்தில் ஓர் அம்பு குறிதவறுபவனாகவே அவன் இருக்கிறான். அந்த அம்பு என்றுமிருக்கும்” என்றான் அனலன். “நோன்புகொண்டோர் செல்லத்தக்க உச்சம் அதுவே, ஆயிரத்திலொன்றுமட்டும் பிழைபடும் நிலையை எய்துதல்.” கங்காதேவி சீற்றத்துடன் “என்ன சொல்கிறீர்கள்? அவன் நோன்பு குறையுடையதென்றா? அவன் ஆற்றலில் பிறழ்வுண்டு என்றா?” என்றாள். அனிலன் “ஆயிரத்தில் ஒரு முறை, அன்னையே” என்றான். கங்காதேவி சினத்தில் உடல் எழுந்தமைய அவர்களை மாறி மாறி நோக்கி “இனி எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. அவனுடன் நீங்கள் இருந்தாகவேண்டும். அவன் களத்தில் விழலாகாது. அன்னை என என் ஆணை இது” என்றபின் திரும்பிச் சென்றாள்.

பீஷ்மர் ஏழு தன்னுருக்களையும் நோக்கியபடி நின்றார். “அந்த ஆயிரமாவது அம்பு உன் விழைவே அல்லவா, இளையோனே?” என்றான் சோமன். “அதுவல்லவா உன்னை மானுடனாக இங்கு நிலைநிறுத்துகிறது?” என்றான் துருவன். “அது உன் இனியவர்களுக்கு நீ அளிக்கும் நற்கொடை அல்லவா?” என்றான் ஆபன். பீஷ்மர் கைசோர்ந்தவராக நின்றார். பிரத்தியூடன் அவர் கைகளைப் பற்றி கனிந்த புன்னகையுடன் “நீ விழைவதே நிகழும் இளையோனே, துயர் ஒழிக!” என்றான். பீஷ்மர் புன்னகைத்தார்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஇனக்காழ்ப்பும் இலக்கியவாதிகளும்
அடுத்த கட்டுரைசெயல்படுவோர் அளிக்கும் மீட்பு