சர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்

ch

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

 

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உங்கள் கருத்தை வாசித்தேன். சர்ச்சிலையும் ஹிட்லரையும் ஒப்பிடுவது அபத்தம் என்பது என் எண்ணம். சர்ச்சில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவர் இடத்தில் ஹிட்லர் இருந்திருந்தால் காந்தியின் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியிருப்பார். காந்தியை மரியாதையாக ஆகாகான் மாளிகையில் சிறைவைத்தவர் சர்ச்சில். காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர். சர்ச்சில் போரில் ஹிட்லரை வெல்லாமல் இருந்திருந்தால் உலகை ஹிட்லர் பேரழிவுக்கு உள்ளாக்கியிருப்பார்.

 

சர்ச்சில் கடுமையான கருத்துக்கள் கொண்ட பழைமைவாதி. ஆனாலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகவும் மாற்றுக்கருத்துக்களுக்குச் செவிகொடுப்பவராகவும்தான் இருந்தார். ஹிட்லரை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். ஹிட்லரைப்பற்றிப் படிக்க ஏராளமான நூல்கள் உள்ளன. ஹிட்லரைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஹிட்லர் நேரடியாகவே இனப்படுகொலைகளை நிகழ்த்திய கொடூரமான மனிதர். ஹிட்லர்போன்ற கொடியவர்கள் வரலாற்றில் அரிதாகவே எழுவார்கள்.

 

சர்ச்சில் இந்திய சுதந்திரப்போராட்டத்தை ஹிட்லர் யூதர்களை அடக்கியதுபோல அடக்கியிருக்கலாம். கொலைவெறியாடியிருக்கலாம். அதைச்செய்யாததே அவரை ஹிட்லரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதெல்லாம் இன்றைக்கு சர்ச்சிலை திட்டுபவர்களுக்குத்தெரிந்திருக்காத விஷயங்கள். சர்ச்சில் ஒரு பிரிட்டிஷ் ஆட்சியாளர். அவர் மனசுக்கு சரியென்று பட்டத்தைச் செய்தார். அவர் ஒரு பிரதமராக பிரிட்டனுக்கு நல்லது செய்தார். வெற்றி தேடித்தந்தார். அவர்தான் காந்தியை புகழ்ந்தும் அஞ்சலி செலுத்தினார்.

 

உங்கள் கருத்துக்களை நீங்கள் மேலும் வாசித்து தெளிவுபடுத்திக்கொண்டு எழுதவேண்டும். இணையத்திலிருந்து  தகவல்களை எடுத்து  கருத்துக்களை எழுதுகிறீர்கள். வரலாற்றைச் சற்றுப் புரிந்துகொண்டு எழுதுங்கள்

 

ஆர். சத்யநாராயணன்

 

 

அன்புள்ள சத்யநாராயணன்,

 

உங்கள் சிறு கடிதத்துக்குள் எத்தனை முன்முடிவுகள். அனைத்தையும் ஒவ்வொன்றாக மறுக்கவேண்டும். ஒன்று , எவ்வகையிலும் ஹிட்லரை ஏற்கவோ மழுப்பவோ அக்கட்டுரை முயலவில்லை. ஹிட்லர் தோற்றார் என்பதனால் அவரைப்பற்றிய சரித்திரம் உலகமெங்கும் தெளிவாகத் தெரிகிறது. சர்ச்சிலும் ஸ்டாலினும் வென்றவர்கள் என்பதனால் அவர்களுக்குச் சாதகமான சித்திரம் உலகமெங்கும் உருவாக்கப்பட்டது. ஸ்டாலின் இன்று வெளிப்பட்டுவிட்டார். இன்னமும் ஐரோப்பிய அறிவியக்கத்தால் சர்ச்சில் நிலைநிறுத்தப்படுகிறார். கீழைநாட்டினரான நாம் சர்ச்சிலைப்பற்றிய நமது நோக்கை  நம் வரலாற்று அனுபவங்களிலிருந்து உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

 

இக்கருத்துக்கள் எதுவும் புதியவை அல்ல. நான் சர்ச்சிலைப்பற்றியும் அவருடைய மறைமுகப் பங்களிப்புள்ள பஞ்சங்களைப்பற்றியும் முதல் விரிவான கட்டுரையை எழுதியது 1991ல். என் புரிதல் உரிய நூல்களின் வழியாக மட்டுமல்ல உரியமுறையில் வரலாற்றை வாசித்த பேரறிஞர்களுடனான நேரடி உரையாடல்களின் வழியாகவும்கூட. ஆனால் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் கழைக்கூத்துகளுடன் போரிடுவது என் நோக்கம் அல்ல.

 

நீங்கள் பல நூல்களை படிக்கிறீர்கள், பாராட்டுக்கள். ஆனால் ஓர் எளிய பயணக்கட்டுரை நேரடியாகச் சொல்லும் மையக்கருத்தைப் புரிந்துகொள்ள இத்தனை இடர்கொள்கிறீர்கள். அக்கட்டுரையின் மையமே பிரிட்டிஷ் பண்பாட்டிலுள்ள இரட்டை அம்சம்தான். ஹிட்லரை அல்லது போல்பாட்டைப் புரிந்துகொள்வதுபோல பிரிட்டிஷாரைப் புரிந்துகொள்ளக்கூடாது என்றும் அது மிகப்பெரிய பிழை என்றும்தான் அக்கட்டுரை சொல்கிறது.

 

பிரிட்டிஷாருக்குப் பொதுவாகவே இரண்டுமுகங்கள் உள்ளன. ஒருபக்கம் ஜனநாயகவாதிகளாக, பேச்சுவார்த்தையில் நம்பிக்கைகொண்டவர்களாக, அறிவார்ந்தவர்களாக, தனிப்பட்ட பண்புநலன்கள் கொண்டவர்களாக அவர்கள் இருப்பர்கள். அது நடிப்பல்ல, உண்மையான இயல்பு. ஏனென்றால் அவர்கள் பிரிட்டன் என்னும் வளர்ந்த பண்பாட்டின் உறுப்புகள்.  மறுபக்கம் ஈவிரக்கமற்ற சுரண்டல்காரர்களாகவும் இனவாதிகளாகவும் பேரழிவை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் பிரிட்டன் எனும் பேரரசின் உறுப்புகள்.

 

பிரிட்டிஷ் அரசுக்கே அந்த இரட்டைமுகம் உண்டு. இந்தியக்கலைச்செல்வங்களைக் காத்தவர்கள், இந்தியாவில் சட்ட ஒழுங்கை உருவாக்கியவர்கள், இந்தியாவில் பொதுக்கல்வி முதலியவற்றை அறிமுகம் செய்தவர்கள் அவர்கள். மறுபக்கம் இந்தியாவை மாபெரும்பஞ்சங்களை நோக்கித் தள்ளி கோடானுகோடிபேரைக் கொன்றழித்தவர்கள். இந்த இரட்டைநிலையைத்தான் பல்வேறு உதாரணங்கள் வழியாக அந்தக்கட்டுரையில் குறிப்பிடுகிறேன். சர்ச்சில் எழுத்தாளர், ஜனநாயகவாதி என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கே அவர் பேரழிவின்சிற்பி என்பதும் உண்மை. ஒன்றைச் சொல்லும்போது இன்னொன்றைக் காட்டி மறுப்பது பிழை. இதைப்புரியவைக்கவே நான் முயல்கிறேன்.

 

ஹிட்லரையும் சர்ச்சிலையும் இக்கட்டுரை ஒரே நிரையில் நிறுத்துவது அவர்கள் ஒரே குணாதிசயம் கொண்டவர்கள் என்பதற்காக அல்ல, அவர்கள் உருவாக்கிய ஒட்டுமொத்த விளைவு ஒன்றே என்பதற்காக. ஹிட்லரும் முசோலினியும் போல்பாட்டும் ஸ்டாலினும் மாவோசே துங்கும் ஒரே நிரையில் வருவது அவ்வாறுதான்.இதேபோல போல்பாட்டையும் ஹிட்லரையும் ஒப்பிட்டால் எவராவது கிளம்பி வந்து ஹிட்லர் ஜெர்மானியக் கலையையும் இலக்கியத்தையும் போற்றியவர், வாக்னரின் ரசிகர் ஆனால் போல்பாட் கெமர் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டிருந்தாலும் கம்போடியாவின் பண்பாட்டை முற்றழிக்க முயன்றவர் , ஆகவே அவர்கள் வேறு வேறு என்று வாதிடமுடியும்.

 

இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான குணாதிசயம் கொண்டவர்கள் முற்றிலும் மாறுபட்ட  கொள்கை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் உருவாக்கிய விளைவும் அவர்கள் அதை எதிர்கொண்ட மனநிலையும் ஒன்றே. அக்கட்டுரையில் இருந்து அதையாவது புரிந்துகொள்ளுங்கள்.

 

ஒரு குற்றம் என்பது செய்வது மட்டும் அல்ல,  செய்யவேண்டியதைச் செய்யாமலிருப்பதும் கூடத்தான். அதுவும் தெரிந்தே, விளைவுகளை முற்றிலும் புரிந்துகொண்டே செய்யாமலிருப்பது பெருங்குற்றம். அப்பேரழிவுக்குப்பின்னர் அதைப்பற்றிய குற்றவுணர்வு சற்றுமின்றி  இனவாத நோக்குகொண்டிருத்தல் மேலும் பெரிய குற்றம். சர்ச்சிலை அவருடைய ‘நல்ல ஆங்கிலத்துக்காக’ மன்னித்துவிடலாம் என்று சொல்வதைப்போன்றது அவருடைய பிரிட்டிஷ் ஜனநாயகப் பண்புகளைப்பற்றிப் பேசுவது. அவருடைய குற்றங்களைப்பற்றிய பேச்சு இந்தியச்சூழலில் இருந்தே எழுந்து வரமுடியும். ஐரோப்பிய நூல்களை மேற்கோள்காட்டித்தான் அது மறுக்கவும்படும் – பெரும்பாலும்  தோலைமட்டும் உண்ணத்தெரிந்த அரைகுறை வாசிப்பாளர்களால்.

 

நீங்கள் சொல்லும் இந்த  ‘ஒண்ணாம் வகுப்பு’ கருத்துக்களெல்லாம் இந்தியச் சூழலில்  முக்கியமான அரசியல்சிந்தனையாளர்களால் ஏற்கனவே பக்கம் பக்கமாக பேசி விவாதிக்கப்பட்டவைதான். எளிமையான செய்திகளும் அரட்டைக் கருத்துக்களும் அல்ல வரலாறு. அது நுட்பமான ஊடுபாவுகளால் பின்னப்பட்டது. அதை அறிவதற்கு நீங்கள் விவாதிக்கும் இந்த சலசலப்பு மனநிலை எவ்வகையிலும் உதவாது.

 

முதல் விஷயம், காந்தி பிரிட்டிஷ்காரர்களின் ‘கருணையால்’ போராடியவர் அல்ல. அன்று பிரிட்டிஷ்காரர்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு இன்றியமையாதது. இந்தியா மீதான தங்கள் ஆதிக்கமென்பது ‘அறத்தின்பாற்பட்டது’ ‘வெள்ளையனின் பொறுப்பு’ சார்ந்தது என்ற சித்திரத்தை உலகளாவ உருவாக்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் அனைத்து பிரச்சாரங்களும் அதனடிப்படையிலேயே அமைந்தன.இந்தியாவை இருண்டநிலமாக கட்டமைத்தனர். அவ்வெண்ணத்தை உறுதிப்படுத்தவே காதரீன் மேயோ போன்றவர்களை கொண்டு மதர் இந்தியா போன்ற நூல்களை எழுதச்செய்தனர்.

 

பிரிட்டிஷார்.  காந்தியையோ இந்திய சுதந்திரப்போராட்டத்தையோ நேரடி வன்முறையால் எதிர்கொள்வது பிரிட்டிஷார் இருநூறாண்டுகளாக உருவாக்கிக்கொண்டிருந்த பிம்பத்தை அவர்களே உடைப்பதற்குச் சமம். காந்தியின் போராட்டங்கள் அனைத்துக்கும் அமெரிக்க ஊடகங்களின் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. அவர் இடைவிடாது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், அனைத்துப்போராட்டங்களையும் சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் நடத்தினார்

 

இன்னொன்று பிரிட்டிஷாரே ஒருமுகம் கொண்டவர்கள் அல்ல. அவர்களிலேயே வலுவான ஜனநாயகவாதிகள் இருந்தனர். அவர்களின் தரப்பு ஒவ்வொருநாளுமென ஓங்கிக்கொண்டிருந்த ஒன்று. இறுதியாகச் சர்ச்சிலை தூக்கி எறியவும் அவர்களால் முடிந்தது. காந்திக்கு பிரிட்டனின் எளிய மக்களிடையேகூட பெரும் செல்வாக்கு இருந்தது. சர்ச்சில் ராணுவபலத்துடன் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் அவருடைய குடிகளின் எண்ணங்களை மதித்தே ஆகவேண்டும்.

 

கடைசியாக இந்தியா அல்லது கீழைநாடுகள் மேல் பிரிட்டிஷார் கொண்டிருந்த ஆதிக்கம் என்பது நேரடியான ராணுவமேலாதிக்கம் அல்ல. அது ஒருவகையான கருத்தியல் ஆதிக்கம். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நல்லது செய்பவர்கள் என இந்தியர்களிலேயே கணிசமானவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தமையால் அவர்களின் துணையுடன் உருவாக்கிக்கொண்ட ஆதிக்கம் அது. இந்திய ராணுவத்தின் 90 சதவீதம் இந்தியர்களால் ஆனது.  இந்தியர்கள் பிரிட்டன் மேல் கொண்ட நம்பிக்கையை உடைக்காமலேயே ஆதிக்கத்தை தக்கவைப்பதே பிரிட்டனின் அனைத்து அரசியல்சூழ்ச்சிகளையும் வடிவமைத்தது. அதை ஒருபோதும் சர்ச்சிலோ அவருடைய அரசோ உடைக்கமுடியாது. [இப்படியே சென்றால் தென்னாப்ரிக்காவின் நிறவெறி அரசும் பி.டபிள்யூ,.போத்தாவும்  ஜனநாயக சக்திகளே என வாதிடத் தொடங்குவீர்கள். அவர்களும் நெல்சன் மண்டேலாவை கொல்லவில்லையே?]

 

சர்ச்சிலும் அவருடைய ஏகாதிபத்தியமும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தை, ஜனநாயக உலகை அஞ்சவேண்டியிருந்தது. ஆனால் ஹிட்லர் அப்படி எதையும் சார்ந்து அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. அவருடைய ஆதிக்கம் என்பது அவருடைய நாடு அவருக்களித்த முழுமூச்சான ஆதரவு மற்றும் நேரடி ராணுவ வல்லமை சார்ந்தது. வரலாற்றை ஒற்றைத்தகவல்களாக புரிந்துகொள்ளாதீர்கள், கருத்துக்களாக, ஒட்டுமொத்த் சித்திரமாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். இல்லையேல் நீங்கள் வாசித்ததாகச் சொல்லிக்கொள்ளும் நூல்களுக்கே பொருளில்லை.

 

இத்தகைய ஒரு புதிய கருத்து சொல்லப்படும்போது பொதுவான வாசகர்களுக்குப் புரிகிறது. தாங்கள் ஏராளமாக வாசித்திருக்கிறோம் என்று நம்பி, தனக்கும் ஏதேனும் தெரியும் என எல்லா சந்தர்ப்பத்திலும் சொல்லவேண்டும் என முயல்பவர்களுக்குத்தான் அதைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. எங்கும் நிரந்தரமாக ஒரேவகைக் கருத்தை மட்டுமே பார்க்கும் பாடப்புத்தக வாசிப்பின் பயிற்சி இது. இக்கருத்துடன் ஒருவர் முரண்படலாம், வாதிடலாம். ஆனால் அக்கருத்தையே வந்தடையாமல் தகவல்களை மட்டும் வாசிப்பதென்பது ஒருவகை பரிதாபம்.

 

இது பயணக்கட்டுரை. கண்ணுக்குத்தெரியும் காட்சிகளிலிருந்து எண்ணியவை மற்றும் வாசித்தவற்றினூடாக ஒரு வலைப்பின்னலை உருவாக்கிக்கொள்ளும் வடிவம் கொண்டது. ஆய்வுக்கட்டுரை அல்ல. அரிய செய்திகளை கண்டடைந்து சொல்வதுமல்ல. கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் இடங்கள் பெரும்பாலானவை உலகப்புகழ்பெற்றவை, பலநூறுபேர் எழுதியவை. ஆகவே அவ்விடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள் மற்றும் எளிய அடிப்படைச் செய்திகளை மட்டுமே கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். அவை எந்நூலிலும், இணையத்தின் எப்பகுதியிலும் கிடைப்பவைதான். அவற்றினூடாக ஒவ்வொரு கட்டுரையும் சென்றடையும் ஓர் தனிப்பார்வை உள்ளது. அதைச் சென்றடைபவர்களுக்காகவே அவை எழுதப்பட்டுள்ளன

 

ஜெ

 

ஹிட்லரும் காந்தியும்

முந்தைய கட்டுரைபுனைவின் வழித்தடம்
அடுத்த கட்டுரைஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்