ஆங்கிலேயரின் இரட்டைப்பண்பு -கடிதங்கள்

நெல்சன்
நெல்சன்veL

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

 

அன்புள்ள ஜெ

 

கலைத்தடுக்கப்பட்ட வரலாறு நீண்ட கட்டுரை. அத்தனைப் புகைப்படங்கள் மற்றும் தகவல்களுடன் அதை வாசிக்கும்போது அது நீண்டுகொண்டே போவதுபோலத் தோன்றியது. வாசித்தபின் ஒரு வடிவமும் மனசில் வரவில்லை

 

அதன்பின்னர் மீண்டுமொருமுறை வேகமாக வாசித்தேன். அதன் வடிவம் புரிந்தது. பிரிட்டிஷ் பண்பாட்டிலிருக்கும் இரட்டைத்தன்மையைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். ஜனநாயகத்தின் மடித்தொட்டிலான நாடுதான் சர்ச்சிலையும் படைத்தது என்ற முரண்பாடுதான் மைய இழை.

 

வரலாற்றின் இரண்டு பக்கங்களும் தெளிவாகத் தெரியும் லண்டன் பாராளுமன்ற வீதியில் கட்டுரை அழகான சிறுகதை மாதிரி முடிவடைகிறது

 

 

கே. அருணாச்சலம்

 

 

 

ஜெ வணக்கம்

 

முதன் முதலாக இங்கே [லண்டன்] வந்த பொழுது, எனக்கு அதிசயமாக பட்டது, இங்கே உள்ள இந்தியர்களின் உலக வகைகள். காலனியாதிக்கத்தின் எச்சமாக, மேற்கு இந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, மௌரிஷீயஸ், ஃபிஜி, கென்யா, உகாண்டா மற்றும் தெற்காசியா  என்ற அனைத்து பிரதேசங்களில் இருந்து இங்கே வாழும் இந்தியர்களை சந்திக்கலாம். இந்திய உணவை தாண்டி, அனைவரிடமும் காணும் பொது அம்சம், இங்கிலாந்து vs காலனிய நாடு ( India, Pakistan, Srilanka, Westindies), கிரிக்கட் போட்டிகளில், இங்கிலாந்தை தவிர்த்து மற்றொரு நாட்டை ஆதரிப்பது. என் மகனின் தலைமுறையில் மாற்றம். எங்கள் வீட்டில் இங்கிலாந்து vs இந்தியா போட்டியென்றால் சற்றே யுத்த சூழ்நிலை.

 

காமன்வெல்த், காலனிய நாடுகளின் கூட்டமைப்பு. அரசிதான் இதன் தலைவி. அவருக்கு வயதாகிவிட்டதால் இப்பொழுது இளவரசர் சார்ல்ஸ். காமன்வெல்த் நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு குடிபுகுபவர்கள், பிரித்தானிய குடியுரிமை பெறாவிட்டாலும், இங்கே வசிக்கும் பொழுது அனைத்து தேர்தல்களிலும் வாக்குரிமை உண்டு.

 

இப்படியிருந்தும், இன்னும் பள்ளிகூட வரலாற்றில் காலானியாதிக்கம் இடம் பெறுவதில்லை. “Sun never sets in the empire” என்பது எப்பேற்பட்ட ஒரு ஆதிக்கம். ஆனால் அதை கற்று கொடுத்தால் காலனியாதிக்கதின் மாபெரும் அழிவுகளையும் கற்று கொடுக்க வேண்டியிருக்கும்.

 

விளைவு, ஒரு குட்டித் தீவுச்சமூக மனபான்மையுடனே உள்ளது இன்றைய பிரித்தானிய சமூதாயம். பிரமாண்டாக கடைசியாக கனவு கண்டதெல்லாம் விக்டோரியா இராணியின் காலத்தில்தான். இலண்டனின் இன்றயை பாதாள சாக்கடை அப்பொழுது கட்டபட்டது.  2016ல் தான் புதிதாக திட்டம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.

 

அன்புடன்

 

 

சதீஷ்

 

 

ஜெ

 

வகுப்பில் வரலாறு எடுக்கும்போதுள்ள பெரிய பிரச்சினை பிரிட்டிஷார் நல்லவர்களா கெட்டவர்களா என்று சொல்வது. அவர்களின் மிகப்பெரிய சுரண்டலையும் அநீதியையும் பற்றிச் சொன்னால் உடனே முல்லைப்பெரியார் அணையைக் கட்டினானே என்று எவராவது கேட்பார்கள். அதிலும் கொஞ்சம் வயதானவர்களின் சிக்கல் பயங்கரமான ஒன்று. வெள்ளைக்காரன் நல்லவன், வல்லவன். பஞ்சம் சுரண்டல் எதற்கும் அவன் காரணம் அல்ல. காந்தியும் நல்லவர், நேருவும் நல்லவர். அப்படியென்றால் அவர்கள் ஏன் வெள்ளையருக்கு எதிராக போராடினார்கள் என்றால் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் இந்த இரட்டைத்தன்மைதான். மோனியர் விலியம்ஸும் வெள்ளையர்தான் லார்ட் கர்சானும் வெள்ளையன்தான். அதைப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

 

எஸ்.சுவாமிநாதன்

 

 

அன்புள்ள ஜெ

 

வெள்ளையரின் இரட்டைநிலை லண்டனைப்புரிந்துகொள்ள மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் புரிந்துகொள்ள உதவியானது. இடதுசாரிகள் சுரண்டலை மட்டும் பார்ப்பார்கள். வலதுசாரிகள் அங்குள்ள ஜனநாயகத்தை மட்டும் பார்ப்பார்கள். இரண்டுமே அவர்களின் சிருஷ்டிதான். இரண்டும் கலந்ததே அவர்களின் முகம்

 

மகாதேவன்

முந்தைய கட்டுரைஆன்மிக வாசிப்பில் நுழைதல்
அடுத்த கட்டுரைஇலக்கியத்துள் நுழைதல்…