ஐரோப்பா-6,மேற்குமலைமுடி
ஜெ வணக்கம்
நான் அனுப்பிய புகைபடங்களின் தொகுப்பு பயணங்களில் பங்கேற்றவர்கள் எடுத்த புகைபடங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு. Stratford-upon-Avon புகைபடங்கள் எப்படி விட்டு போயிற்று என்று தெரியவில்லை. எடுத்தவர்கள் இந்த தொகுப்பில் இணைக்காமல் இருந்து இருக்கலாம். அன்று மாலையில் சென்ற Broadway Tower படங்கள் தொகுப்பில் இருக்கின்றன. நீங்கள் இந்த கட்டுரை எழுதிய பிறகுதான் படங்கள் விட்டு போனது உரைத்தது
நீங்கள் Stratford-upon-avonல் Shakespeare பற்றி சொன்னது நினைவில் இருக்கிறது. எப்படி அவர் இளமையில் எழுதிய நாடங்கள் உத்வேகத்துடனும், இறுதியில் எழுதிய நாடங்கள் sceptical இருந்ததாக சொன்னீர்கள்.
மேற்குமலைமுடி தலைப்பு புரியவில்லை.
சதீஷ்
அன்புள்ள சதீஷ்
ஸ்டிராட்போர்டு புகைப்படங்கள் ஒன்றிரண்டே இருந்தன. பயணம் நடந்து நான்கு ஆண்டுகளாகின்றன. ஆகவே பல புகைப்படங்கள் கிடைக்கவில்லை. நண்பர்கள் எடுத்தார்களா என்றும் தெரியவில்லை. அன்று நாம் அவான் நதிக்கரைக்கும் சென்றோம்
நீங்கள் உடனிருந்த நினைவு இனிதாக உள்ளது. ஷேக்ஸ்பியர் ஆக்கங்களில் உள்ள நுண்கசப்பு பற்றி அப்போது பேசிக்கொண்டோம். வியாசனை இமைய மலைச்சிகரம் என்பார்கள். ஷேக்ஸ்பியர் மேற்கின் சிகரம்
ஜெ
வணக்கம் ஜெ
ஷேய்க்ஸ்பியரை பார்க்காமல் படிப்பது நாம் தொடர்ந்து செய்து வரும் தவறு. நீங்கள் சொல்வது போல ஒரு நாடகத்தை படிக்கையில் அது வெறும் வசனங்களாக மட்டுமே நம் கண் முன் தெரிகிறது, இதை எப்படி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொடர்ந்து பார்க்க முடியும் என்ற ஐயம் நிச்சயம் எழும். பெர்னார்ட் ஷாவின் man and superman படிக்கையில் நான் அடைந்த ஐயம் அதுவே. இந்த நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சாக சலிப்பு வரமால் பாக்க முடியுமா என்ன என்று நினைத்தேன். பிறகு நேஷனல் தியேட்டர் தயாரித்த ரால்ப் பிஎன்னஸ் ஜாக் டேன்னராக நடித்த நாடகத்தை பார்த்த பிறகு நான் எவ்வளவு தவறான நினைப்பில் இருந்தேன் என கண்டு கொண்டேன்.
ஷாவின் ஒவ்வொரு வசனமும் அது சொல்லப்படும் விதத்திலேயே செறிவு பெறுகிறது. ஒரு முறை நாடகத்தை பார்த்த பிறகு அதை படிக்கையில் இன்னும் நுண்ணியமாக அதனுள் செல்ல முடியும்.
டால்ஸ்டாய் ஷேய்க்ஸ்பியரை நிராகரித்தது அவரின் நாடகங்களை ஒரு இலக்கியமாக கருதி மட்டுமே என நான் எண்ணுகிறேன். உதாரணமாக ஜூலியஸ் சீசர் இல் ஆண்டனி பேசுவதற்கு முன் கூட்டத்தில் இருப்பவர்கள் சீசரை கொன்றதே நல்லது, ரோம் சீசர் இல்லாமல் நன்றாக செயல் படும் என்றவாறு பேசுகின்றனர். ஆண்டனி சீசர் ரோம் மக்களுக்கு விட்டு சென்றதை விளக்கியதுமே மக்கள், ஐயோ ஒரு கொடூரமான செயல் இங்கு நிகழ்ந்துவிட்டது, சீசர்க்கு துரோகம் செய்ய பட்டுள்ளது என கலவரத்தில் இறங்குகின்றனர். டால்ஸ்டாய் இந்த வகையில் எங்காவது மக்கள் மாறுவர்களா என கேட்கிறார். அதற்கு கோரியலேன்னுஸ் நாடகத்தில் வரும் மற்றொரு காட்சியையும் உதாரணமாக குறிப்பிடுகிறார். இந்த காட்சிகளை படிக்கையில் டால்ஸ்டாய் சொல்வது சரிதானென தோன்றும். ஆனால் நாடக ஓட்டத்தில் பார்க்கையில் அது கவித்துவம் நிறைத்த ஒரு உச்ச புள்ளி என கண்டடைவோம்.
ஷேய்க்ஸ்பியர் ஒருபோதும் படிப்பதற்காக நாடகங்களை இயற்றவில்லை, நடிப்பதற்காகவும் அதை பார்த்து ரசிப்பதற்காகவும் தான். பள்ளிகளில் ஷேய்க்ஸ்பியரை படிக்கும் முன் ஒரு முறையேனும் அந்நாடகத்தை பார்க்கவைத்தால் என்றும் மனதில் நிற்கும்.
மரீனா என்ற புனைபெயர் கொண்ட டீ. ஸ். ஸ்ரீதர் தன் ‘சின்ன வயதினிலே’ நூலில் அண்ணா என அவர் அழைத்த அவரின் தந்தை, வீட்டின் மாடியில் மாலை நேரங்களின் ஷேய்க்ஸ்பியர் வகுப்புகள் எடுப்பார் என்பதை படித்து நான் ஆச்சரியப்பட்டேன். தனி வகுப்புகள் கவனிக்கும் அளவிற்கு மாணவர்கள் ஷேய்க்ஸ்பியர் மேல் ஆர்வம் கொண்டிருந்தனர் அந்நாளில். அதன் மூலமே இயல்பான உரையாடல்களில் கூட சகஜமாக ஷேய்க்ஸ்பியர் வசனங்களை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இன்று ஷேய்க்ஸ்பியரை இலக்கியமாகவும் படிக்காமல் நிகழ்த்து கலையாக நாடகத்தையும் பார்க்காமல் மூச்சுக்கு மூச்சு சினிமா வசனங்களை மட்டுமே மேற்கோள்காட்டி பேசி மீம் போடு வருகிறோம்.
ஷேய்க்ஸ்பியர் வசனங்களை பார்ப்பதும் கேட்பதும் எழுச்சி ஊட்டும் ஒரு அனுபவம். உதாரணத்திற்கு இந்த இணைப்பை பார்க்கவும் அண்டோனியின் பேச்சு உயிர் பெற்று வருவதை ஒவ்வொரு முறையும் வியந்து வியந்து பார்த்திருக்கிறேன்.
ஸ்ரீராம்
அன்புள்ள ஸ்ரீராம்
பொதுவாக இன்றைய ஆங்கிலமே ஒரு வகை எளிய சுருக்கமான ஆங்கிலமாக ஆகிவிட்டிருக்கிறது – தி ஹிந்து ஆங்கிலம் தவிர. சமீபத்தில் ஒரு மாறுதலுக்காக ஜார்ஜ் எலியட் படித்தபோது அது தோன்றியது. அதற்குக் காரணம் ஆங்கிலம் உலகளாவியதாக, ஆகவே தனிநிலம் அற்றதாக மாறிவிட்டதா என எண்ணிக்கொண்டேன்
ஜெ