‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-1

பகுதி ஒன்று : விண்புரள்தல்

bowகுருக்ஷேத்ரத்தில் பாண்டவரின் படைமுகப்பில் அமைந்த கொடிமேடையில் காவலிருந்த பாண்டவ வீரனாகிய ஜலன் கீழ்வானில் ஒரு சிறிய செந்தீற்றலை கண்டான். அது ஓர் எரிவிண்மீன் என எண்ணி அதை சொல்ல தன்னருகே அமர்ந்திருந்த துணைக்காவலனாகிய சோமிதனை நோக்கினான். அவன் அரைத்துயிலில் கொடித்தூணுடன் உடலைச் சேர்த்து தலைகுனிந்து முகவாய் மார்பில் படிந்திருக்க அமர்ந்திருந்தான். அவனைத் தொட்டு “எரிவிண்மீன்!” என்றான் ஜலன். “ஆம்” என துயிலிலேயே சோமிதன் மறுமொழி சொன்னான். “எரிவிண்மீன்” என்றான் ஜலன். “ஆம், அம்புகள்!” என்று அவன் சொல்லி சப்புக்கொட்டியபின் திரும்பியமர்ந்து மெல்ல குறட்டைவிட்டான். ஜலன் விழிதிருப்பியபோது மீண்டுமொரு எரிவிண்மீன் இறங்குவதை கண்டான். அவனுக்கு மெய்ப்பு எழுந்தது. நெஞ்சு ஓசையுடன் அறைந்தது.

முதல்நாள் போர் முடிந்த குருக்ஷேத்ரக் களம் முன்னிரவிலேயே புண்பட்டோரும் பிணங்களும் உடைந்த தேர்களும் சிதறிய படைக்கலங்களும் அகற்றப்பட்டு தூய்மைசெய்யப்பட்டிருந்தது. குருதிபடிந்த களத்திற்கு சூழ்ந்திருந்த குறுங்காட்டிலிருந்து செந்நாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் வராமலிருக்க எல்லைகளில் மீன் எண்ணைப் பந்தங்கள் நெருக்கமாக எரியவைக்கப்பட்டிருந்தன. தொலைவில் ஒரு அனல்கோடென அது குருக்ஷேத்ரத்தை வளைத்துச் சென்றது. களமெங்கும் கல்லெறித்தொலைவு இடைவெளி விட்டு நடப்பட்டிருந்த தூண்களின் பந்தங்களில் எரிந்த தழலொளி அலையடித்த நிலம் கூர்ந்துநோக்கியபோது செந்நிற நீர்ப்பரப்புபோல தோன்றியது. எடைமிக்க யானைப்பிணங்களை அகற்றும்பொருட்டு தடித்த பலகைகள் போடப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த பாதைகள் இறுதியாக எடுத்து அகற்றப்பட்டபோது அவற்றின் தடம் மட்டும் மண்ணில் எஞ்சியிருந்தது. புழுதிபறக்கும்படி காற்று ஏதும் வீசவில்லை, ஆனால் அந்தத் தடம் நோக்க நோக்க அழிந்தபடி வந்தது.

காற்றிலிருந்த குருதிவாடை மாறிக்கொண்டே இருந்தது. எரியும் செங்குருதியின் நிலையழியச் செய்யும் மணம் மெல்ல உருமாறி புதுச்சீழ்வாடை ஆயிற்று. பின்னர் நாள்பட்ட நெஞ்சுச்சளியின் வாடை. பின்னிரவில் அழுகும் ஊனின் கெடுநாற்றம் எழுந்து குமட்டச் செய்தது. செல்லச்செல்ல கந்தகம் கலந்ததுபோல், புளிப்பு ஏறுவதுபோல அந்த வீச்சம் மாறியது. காற்று வீசும் திசைக்கேற்ப அதன் இயல்பு வேறுபட்டுக்கொண்டிருந்தது. நேர்எதிரில் ஒழிந்துகிடந்த படுகளத்தில் இருந்து வந்தபோது கெடுநாற்றம் உடலைச் சூழ்ந்து தோல்வழியாகவே உள்ளே நுழைந்து உள்ளுறைந்தவற்றை நடுங்கச் செய்தது. வாயிலூறிய நீரே அந்த கெடுநாற்றம் கொண்டிருந்தது. அவர்கள் துப்பிக்கொண்டே இருந்தனர். “வாய் சீழ்கொண்ட புண் என ஆகிவிட்டிருக்கிறது” என்று சோமிதன் சொன்னான். அதை சொல்லெனக் கேட்டபின் ஒரு துளிகூட வாய்நீரை விழுங்க இயலவில்லை. ஆனால் சற்றுநேரமானதும் தொண்டையில் குருதிவாடை ஒரு கரகரப்பாக எஞ்சியிருப்பதாக தோன்றியது.

அரைநாழிகைக்கு ஒருமுறை இரு பக்கங்களிலும் உள்ள காவல்மாடத்திற்கு அவன் அகல்சுடரைச் சுழற்றி கொம்பூதி செய்தியனுப்பவேண்டும். அவர்களின் மறுசெய்தி வந்ததும் அதை ஏற்றுச் சுழற்றி ஊதியபின் வேலுடன் அமர்ந்துகொள்ளவேண்டியதுதான். ஒவ்வொருமுறையும் செய்தியனுப்பியதுமே உடல் மெல்ல தளர உள்ளம் ஓய்வை உணர்ந்தது. இன்னும் அரைநாழிகைப்பொழுது அரைத்துயில் கொள்ளலாம். அரைநாழிகைப் பொழுதுதான் எத்தனை நீண்டது! முழுத்துயிலுக்கு அது ஒரு கணம். அரைத்துயிலில் எத்தனை கனவுகள், எவ்வளவு எண்ணங்கள்! நிகழ்வுப்பெருக்கு. கால அடுக்கு புரண்டபடியே இருக்கிறது. வாழவாழ தீராதது. விழித்துக்கொண்டு அருகே நேரம்காட்ட வைத்திருக்கும் மணல்குடுவையை நோக்குகையில் மேலும் பொழுதிருக்கும். அந்தச் சிறுபொழுது மேலும் நீண்டது. அதற்குள் நூறு வாழ்க்கைகளை திணிக்கமுடியும்.

துயில் அத்தனை இனிதானதென்று அவன் எப்போதும் அறிந்திருந்ததில்லை. படைப்புறப்பாடு தொடங்கிய நாள்முதல் ஒருபோதும் நான்கு நாழிகைப் பொழுதுக்குமேல் உளமழிந்து உறங்கியதில்லை. பயணத்திலும் அவனுக்கு குறைவான துயிலே வாய்த்தது. ஆனால் ஒவ்வொருமுறையும் காலையில் எழும்போது உள்ளம் நிறைவு கொண்டிருந்தது, உடல் புதியதெனத் தோன்றியது. அந்தப் பயணத்தைப்போல வேறெப்போதும் அவன் தன் வாழ்க்கையில் மகிழ்ந்திருந்ததில்லை. அவன் மெய்மறந்து துயின்றது போருக்கு முந்தையநாள்தான். குருக்ஷேத்ரத்திற்கு வந்தபின் செய்வதற்கு ஏதுமில்லை. பெரும்பாலான பொழுதுகளில் நண்பர்கள் சொல்லாடுவதைக் கேட்டபடி மடியில் வேலுடன் அமர்ந்திருந்தான். போரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். தொல்கதைகள், மூத்தார்கூற்றுகள், நம்பிக்கைகள்.

“அம்பு ஆலையில் நெருப்பில் உருகி, அனலென்றாகி கூடத்தால் அறையுண்டு உருப்பெறும்போதே அது எவரைக் கொல்லும் என்பது முடிவாகிவிடுகிறது. அம்புக்கும் அதன் பலிக்குமிடையேயான ஆடலே போர்” என்றார் சம்பர். “அந்த அம்பு பிழைத்ததே இல்லையா?” என்றான் இளைஞன் ஒருவன். “பிழைக்காது. பிழைத்தால் அது மீண்டும் வரும். அறிக, களத்தில் விழுந்த அனைத்துப் படைக்கலங்களும் பொறுக்கிச் சேர்க்கப்படும். இறந்தவர் உடல்களில் தைத்தவைகூட பிடுங்கி கொண்டுசென்று மீண்டும் உருக்கி அடித்து வளைவும் சதைவும் நீக்கி படைக்கலக்கூர் அளிக்கப்படும். அவை அழியா வஞ்சத்துடன் மீண்டும் களம் நுழையும். இலக்கை தேடிவரும்.” அவன் அதை கேட்டபோது சிற்றுயிர் ஒன்று முதுகெலும்பில் ஊர்வதுபோல உடல்சிலிர்த்தான். அவனருகே அமர்ந்திருந்த சூலன் “மானுடரிடம் தோற்பதில் இங்கே எவருக்கும் உடன்பாடில்லை. ஊழ்வடிவென எழும் தெய்வங்களுடன் போரிட்டு வீழ்ந்ததாக எண்ண விழைகிறார்கள்” என்றான்.

மறுநாள் காலையில் போர் என்று அறிவித்தபோது முதல் கொந்தளிப்புக்குப் பின் அதுவரை போரைப்பற்றி பேசிக்கொண்டே வந்த அத்தனை படைவீரர்களும் முற்றாகவே சொல்லழிந்துவிட்டிருந்தார்கள். எவருமே போரைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. ஒற்றைச்சொற்களில் அன்றாடச் செய்திகளையே பேசினர். உணவுண்டதுமே ஆங்காங்கே படுத்துக்கொண்டார்கள். அவன் அன்று துயிலப்போவதில்லை என்றே எண்ணினான். ஆனால் படுத்ததுமே கைகால்கள் உடலில் இருந்து உதிர்ந்து அகல உடல் எடைகொண்டு மண்ணில் பதிய சித்தம் கரைந்து அழிய ஆழ்துயிலில் மூழ்கி மறுநாள் கொம்போசை கேட்டுத்தான் விழித்தெழுந்தான். தன்னைச் சூழ்ந்திருந்த படை விழவுக்களிப்புடன் ஒருங்கிக்கொண்டிருப்பதை கண்டான். கவசங்களை அணிகையில், படைக்கலம் சூடுகையில் சிரிப்பும் களியாட்டுமென படைகள் முழங்கின.

அணிகொண்டு படைமுகப்புக்குச் செல்கையில் அவன் அதற்கும் படைநகர்வுக்கும் வேறுபாடிருப்பதாக உணரவில்லை. முரசுகள் ஒலித்து கொம்புகள் அறைகூவி போர்க்கூச்சல் எழுந்தபோது எண்ணத்தில் ஏதும் பதியாமலேயே உடல் மட்டும் மெய்ப்புகொண்டது. இடக்கால் துடிக்கலாயிற்று. “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற கூச்சல் அவனை சூழ்ந்தபோது அறியாமல் தானும் கூவியபடி வேலுடன் முன்னால் ஓடினான். படைக்கலங்கள் கலக்க, உடல்கள் முட்டித் ததும்பிய அணுக்கப் போரில் அவன் ஒருகணமும் தன்னை அறியவில்லை. அலைக்கொந்தளிப்பு கொண்டு ஒழுகும் பெருநதியில் தானும் மிதந்து செல்வதாகவே உணர்ந்தான். தன் நூற்றுவர்தலைவனின் ஆணைகளை மட்டுமே விழிசெவிகொண்டு அவற்றுக்கேற்ப செயல்படுவதன்றி எதையுமே எண்ணவில்லை.

பின்னர் அவன் எதையுமே எண்ணிச்செய்யவேண்டியதில்லை என்றாயிற்று. அவன் உடலும் உள்ளமும் முன்னரே முடுக்கிவிடப்பட்ட கைவிடு பாவை என செயல்படலாயின. முடிவிலாது நீண்டு நீண்டு சென்றது பொழுது. எண்ணுகையில் ஒருகணமே என உளம்மயங்கச் செய்தது. அவன் சென்ற படை கேடயம் உருகி நீண்டு வேலாவதுபோல் வடிவம் கொண்டபோது அவன் படைமுகப்புக்கு சென்றான். அங்கே அம்புகள் விண்ணிலிருந்து சிறுபுட்களின் கூட்டம் என விழுந்துகொண்டே இருந்தன. அவற்றின் ஓசையிலாத் தொடுகைக்கு திடுக்கிட்டு இறுதிச் சொல்லுக்கு காற்றில்லாது விழுந்துகொண்டிருந்தனர் வீரர்கள். அவர்கள் வேறெங்கோ விழுந்தபடி இருக்க அவன் தன் உலகில் வேலுடன் இயங்கிக்கொண்டிருந்தான். இறப்பு எனும் எண்ணம் ஒருகணம்கூட உள்ளத்திலெழவில்லை.

அவன் அவர்கள் மேல் கால்வைத்து முன்னால் சென்றான். நீண்ட வேலால் எதிரில் வந்தவர்களின் கழுத்தில் கவச இடைவெளியை மட்டும் குறிவைத்து குத்திக்கொண்டே சென்றான். அவர்கள் மானுடர் அல்லாமலாயினர். கவசம் நடுவே ஒரு சிறு இடைவெளி அன்றி வேறேதுமல்ல அவர்கள். அவன் முன் காற்றுப்பரப்பில் அலையடித்த அந்த இடைவெளிகள் கரந்தும் தெளிந்தும் விளையாடின. அவன் வேல் சென்றபோது ஒழிந்தும் வேல் தூக்கப்பட்டபோது அணைந்தும் அவனைச் சுற்றிச் சுழன்றன. அவனுக்கு அருகே அவன் படைத்தோழன் சூலன் வந்துகொண்டிருந்தான். பொருளின்றி அவன் எதையோ கூவிக்கொண்டே இருந்தான். அவன் ஊரில் விழவுகளில் கூவும் பொருளிலா மொழி அது. அவர்கள் ஒரு கன்றுக்குட்டியை தோளிலேற்றியபடி ஓடி மலை ஒன்றில் ஏறி மேலிருக்கும் சிற்றாலயத்திற்கு கொண்டுசெல்லும் போட்டி ஒன்றை நிகழ்த்துவார்கள். அதில் வென்றவனை அழகிய மகளிர் மணப்பார்கள். சூலனின் தோளில் இருக்கும் கன்றை அவன் உணர்ந்தான். ஆனால் தான் கூவிக்கொண்டிருப்பது எதை என சூலன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வேலுடன் திரும்பிய அவன் ஒருகணத்தின் ஆயிரத்திலொரு துளியிலென பீஷ்மரின் விழிகளை விழிநோக்கினான். அவனருகே வந்துகொண்டிருந்த சூலன் தோல்பறை கிழியும் மூச்சொலியுடன் மண்ணில் விழுந்து இரு கைகளையும் இழுத்துக்கொண்டு கால்களை அறைந்து உயிரிழந்தான். அவன் திரும்பி நோக்குவதற்குள் படை அவனை தள்ளிக்கொண்டு சென்றது. அது பீஷ்மரின் அம்பு என எண்ணுவதற்குள் அவனை கடந்து சென்றது ஒரு எறிவேல். அவன் கைவேல் சுழல உள்ளம் பொருளிலா சுழற்சியென்றானது. வேல்வடிவப் படை மீண்டும் விரிந்து கேடயமாகியது. அவன் மீண்டும் படையின் பின்பக்கம் சென்றான். கேடயம் வாளென்றாகியபோது மிக விலகிச் சென்றான். அதன்பின் அவன் சூலனின் உடலை காணவில்லை. அவன் குடிவழக்கப்படி எரியேறியிருப்பான். விண்ணில் நிறைந்துள்ள மூச்சுலகில் இருப்பான். எஞ்சிய போரை ஆற்றாமையுடன், கசப்புடன், கண்ணீருடன் நோக்கிக்கொண்டிருப்பான்.

அந்திக் கொம்புகள் முழங்கியபோது அவன் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்பதையே உணரவில்லை. அவனருகே நின்றிருந்த வீரர்கள் படைக்கலம் தாழ்த்தி “மாமன்னர் யுதிஷ்டிரருக்கு வெற்றி! மின்கொடிக்கு வெற்றி! குருகுலம் வாழ்க!” என்று கூவியதை திரும்பித்திரும்பி நோக்கினான். “செல்வோம்” என்றான் ஒரு வீரன். “எங்கே?” என்றான். “இன்றைய போர் முடிவடைந்தது. மகிழ்க, நாம் உயிருடன் இருக்கிறோம்.” அவன் உளம் வெறித்து நின்றான். “கள்ளுண்க, களிகொள்க, நாம் சாகவில்லை. நாம் எஞ்சியிருக்கிறோம்.” பெருமழை அறைந்ததுபோல உடல்குளிர்ந்து மெய்ப்புகொள்ள அவன் அச்சொற்களின் பொருளை உணர்ந்தான். உயிருடனிருக்கிறேன், எஞ்சியிருக்கிறேன். இன்னமும் காலம் இருக்கிறது. இன்னுமிருக்கிறது வாழ்வு. அவன் வேலைத் தூக்கி “வெற்றிவேல் வீரவேல்!” என்று கூச்சலிட்டான்.

அன்று உலர்ந்த குருதி ஆடையென உடலில் ஒட்டிப்படிந்திருக்க படைநிலையை அடைந்து அப்படியே வெறும் மண்ணில் விழுந்து விழிமயங்கினான். பெரிய மரப்பீப்பாய் வண்டிகளில் ஃபாங்கம் கலந்த புளித்த கள் கொண்டுவரப்பட்டது. கொப்பரைக் குடுவைகளை நீட்டி அதை வாங்கி அருந்தினர் வீரர்கள். சிரிப்பு, வெறிக்கூச்சல். மதுக்கொப்பரையை தலைக்குமேல் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என கூவினர். “தோழா, நாம் ஏன் வெற்றிகூவுகிறோம்? நம் படைகளில் பத்திலொன்றை ஒரே நாளில் பீஷ்மர் கொன்றழித்துவிட்டார், அறிவாயா?” என்றான் ஒருவன். “ஆம், அதற்கென்ன? நான் உயிருடன் இருக்கிறேன். என் வெற்றி இதுவே” என்று வெற்றிகூவியவன் சொன்னான். கூடிநின்றவர்கள் வெறிநகைப்பொலித்தனர். கொப்பரையை தலைமேல் வைத்து நடனமிட்டபடி “உண்மின் கள்ளே! அடுமின் சோறே! எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!” என்று ஒருவன் கூச்சலிட்டான்.

புரவியில் ஊர்ந்து படைநிரைகளின் ஊடாக வந்த நூற்றுவர்தலைவன் ஜலனிடம் “இன்று பின்னிரவில் நீ களக்காவல். இப்போதே உறங்கி எழுக!” என்று ஆணையிட்டுச் சென்றான். “ஆம், அவ்வாறென்றால் நாளை நீ களத்தில் இல்லை… பீஷ்மரின் அம்புகளிலிருந்து இன்னொரு நாள் உனக்கு விலக்கு… அருந்துக கள்! ஆடுக கூத்து! உனக்கு பீஷ்மரின் கொடை ஒரு நாள்!” என்றான் ஒருவன். வீரர்கள் கூவிச்சிரித்து அவன் தலைமேல் கள்ளை சரித்தனர். அவன் ஊன்சோறு உண்டு மீண்டும் கள்ளருந்தி படுத்துக்கொண்டபோது பீஷ்மரின் அந்த விழிமின்னை எண்ணிக்கொண்டான். நெஞ்சு துணுக்குற புரண்டுபடுத்து அவ்வெண்ணத்தை விரட்டினான். இருந்துகொண்டிருக்கிறேன், இன்னும் இறக்கவில்லை. அவ்வெண்ணமே இனித்தது. மேலும் மேலும் ஆறுதல் அளித்தது. மெல்லிய தலைவருடல்போல். அன்புமொழிபோல். மடி வெம்மைபோல்.

bowதுயிலின் களைப்பு தசைகளில் இனிய உளைச்சலாக, வாயில் மெல்லிய உலர்தலாக, கண்களில் எரிச்சலாக பரவியது. கைகளை நீட்டி சோம்பல்முறித்துக்கொண்டான். உடலை நீட்டி இனிய வலியை அடைந்தான். எங்கோ ஒரு மென்முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பன்றிமுகமுள்ள பாதாளதெய்வங்கள் கெடுநாற்ற ஆவியெழும் வாய்களைத் திறந்து சூழ்ந்துகொண்டதுபோல கனவு கண்டு விழித்துக்கொண்டான். உடல்நடுங்கிக்கொண்டிருந்தது. வாயில் குளிர்ந்த சீழ் என நீர் ஊறச்செய்யும் கெடுநாற்றம். மலைமலையென மலம் குவிந்திருப்பதுபோல. அவன் ஆடையை உதறியபடி எழுந்து நின்றபோதுதான் விண்ணில் எரிகோடு தீற்றிச்செல்வதை கண்டான்.

அவன் எறிவேலை தன் இரு கால்களுக்கு நடுவே வைத்தபடி நோக்கி அமர்ந்திருந்தான். துயின்றுகொண்டிருக்கிறோம் என்னும் உணர்வு அவனுக்கு இருந்தது. துயிலில் நோக்க முடியுமா என்ற ஐயம் ஊடே எழுந்தது. அவ்வாறென்றால் அது கனவு. ஆனால் அவன் அதை மிகத் தெளிவாக நோக்கி எண்ணத்தாலும் தொடர்ந்துகொண்டிருந்தான். மீண்டுமொரு எரிவிண்மீன் இறங்கி இருளில் புதைந்து மறைந்தது. இந்த எரிவிண்மீன்கள் எங்கே விழுகின்றன? அங்கே அவை விண்ணின் விழிகளென ஒளிகொண்டிருக்குமா? அணையாது எஞ்சி குளிர்ந்தும் ஒளிகொண்டிருக்கும் எரிவிண்மீனே அரசர்களின் மணிமுடிகளில் அருமணிகளென அமர்ந்திருக்கிறது என்று மூதன்னை சொல்வதுண்டு. ஒளிகரந்த கல். அங்கிருந்தபடி உலகை இமைக்காது நோக்குகிறது. மொழியிலாது ஆணையிடுகிறது. அரசர்கள் அவற்றின் ஆணைகளை சொல்லாக்குபவர்கள் மட்டுமே. குருதி என அது கூவுகிறது. மேலும் குருதி, உலராப் பெருங்குருதி என ஆர்ப்பரிக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் மானுடக்குருதி பிடித்திருக்கிறது. குருதி கோராத் தெய்வங்களே இல்லை. குருதிவிடாயை அவை அரசர்களுக்கு அளிக்கின்றன.

மீண்டுமொரு எரிவிண்மீன்! இன்று ஏன் இத்தனை எரிவிண்மீன்கள்? அவை அரிதாகவே உதிருமென்று அவன் கேட்டிருக்கிறான். விண்ணிலிருந்து ஓர் எரிவிண்மீன் உதிர்வதென்றால் பெருவீரர், பேரறத்தார்கள், அறிவமர்ந்தோர், முனிவர் என எவரேனும் அங்கே சென்றிருக்கவேண்டும். அவர்களுக்கான இடத்தை அளிக்கும்பொருட்டு அவை உதிர்கின்றன. ஏனென்றால் விண்ணில் ஒரு விண்மீன்கூட கூடவோ குறையவோ முடியாது. அவற்றை எண்ணி அடையாளமிட்டு நிரத்தியிருப்பது பிரம்மம். மணல்பருக்களையும், மழைத்துளிகளையும், உயிர்களின் ஒவ்வொரு முடியையும் எண்ணி அமைத்திருப்பது. “இங்கே ஒன்றும் கூடுவதோ குறைவதோ இல்லை. குறையாநிறையா பரப்பு இது. இதைப்போல எண்ணவொண்ணா உலகுகள். அவற்றின் எண்ணிக்கை மாறாது காப்பதே பிரம்மம்” மூதன்னையின் சொற்கள்.

இது கனவல்ல. கனவில் இத்தனை தெளிவாக சொற்கள் எழுவதில்லை. மீண்டுமொரு விண்மீன் உதிர்ந்தது. விண்மீன்களா? அல்லது வேறு ஏதேனுமா? விண்ணிறங்கும் தெய்வங்களா? தெய்வங்கள் தங்கள் விழிகளில் இருப்பென எஞ்சி ஒளிர்ந்தபடி மண்ணில் விழுகின்றன. இங்கே சிறகுமீட்டும் வண்டுகளாகின்றன. ஒளிரும் மின்மினிகளாகின்றன. இளங்காற்றும் நறுமணமும் ஆகின்றன. விண்ணின் முடிவின்மையில் இருந்தாலும் அவை விழைவையும் வஞ்சத்தையும் வைத்து ஆடும் களமென்று அமைந்தது இப்புவிமட்டுமே. மீண்டும் ஒரு விண்மீன் உதிர அவன் பெருமூச்சுவிட்டான். விண்மீன்களேதான். நேற்று குருக்ஷேத்ரத்தில் இறந்தவர்கள் விண்ணமைகிறார்கள். இத்தனை அறத்தோரா? மாவீரர்களா? இறந்த அரசர்கள் சிலர்தானே?

ஏன், அரசர்களல்லாத அறத்தோர் இருக்கவியலாதா? நேற்று எளிய வீரர் எத்தனைபேர் பெருவீரத்தை விளைவித்திருப்பர்? அறத்தின் குன்றேறி விண்ணிலூர்ந்திருப்பர்? ஐயமில்லை, அவ்விண்மீன்கள் எளிய படைவீரர்களையே வாழ்த்தி வீழ்கின்றன. அரசர்கள் அங்கே செல்வதில்லை. அவர்களின் ஆணவத்தால் அடைந்த அனைத்தையும் ஈடுசெய்துவிடுகின்றனர். அறியப்படாத வீரனே தெய்வத்தை அணுகமுடியும். இங்கு எவராலும் அவன் அறியப்படுவதில்லை என்பதனாலேயே அவனை தெய்வம் அறிந்தாகவேண்டும். இனிய, எடைமிக்க, துயர் ஒன்று நெஞ்சை அடைக்க ஜலன் செருமிக்கொண்டான். அழுகையோசைபோல அவனுக்கே அவ்வொலி கேட்க விழித்துக்கொண்டான். வேல் அருகே சரிந்துகிடந்தது. அதை கைநீட்டி எடுத்தபோது அவன் களத்தின் நடுவே ஒரு பெண் நடந்துவருவதை கண்டான்.

சற்றுநேரம் அது கனவென்றே அவன் எண்ணினான். இல்லை, இல்லை என அவன் விழியும் சித்தமும் வலியுறுத்தின. அதன்பின்னர் ஒரு திடுக்கிடல் ஏற்பட்டு உடல் அதிர மேலாடையை எடுத்து அணிந்தபடி எழுந்து நின்றான். கொம்பை எடுத்து ஊதி பிற காவலரை எழுப்பலாமா என எண்ணினான். ஆனால் அது வெறும் கனவென்றால் அவர்கள் அவனை ஏளனம் செய்வார்கள். இது களம், இங்கே உயிருக்கு மதிப்பில்லை, நூற்றுவர்தலைவன் வாளை உருவி தலையை வெட்டிவீசினால்கூட வியப்பதற்கில்லை. அவன் கண்களை இமைத்து இமைத்து கூர்கொள்ளச் செய்து உற்றுநோக்கினான். அது பெண்ணுருவேதான். என்ன செய்கிறாள்? நிலத்தை தொட்டுத்தொட்டு பார்க்கிறாள். இரு கைகளையும் வான் நோக்கி விரிக்கிறாள். அவள் ஆடையும் குழலும் எழுந்து நீண்டு பறந்து அலைகொள்கின்றன. ஆனால் எங்கும் காற்றுவீசவில்லை. ஐயமில்லை, இது கனவேதான்.

ஜலன் எண்ணி அடிவைத்து நடந்து அவள் அருகே சென்றான். எதிர்பார்த்ததுபோல் அணுகும்தோறும் கலைந்து உருவழிந்து அவள் மறையவில்லை. மேலும் தெளிவடைந்தபடியே சென்றாள். அவன் அஞ்சி நடை தயங்கினான். ஆயினும் பள்ளம் நோக்கி விழுபவன் என அவளை நோக்கி செலுத்தப்பட்டான். அவள் கூந்தலின் நீளம் அவனை திகைக்கச் செய்தது. நெடுந்தொலைவுவரை அது அலையடித்தது, அவளுக்குப் பின் ஒரு நீரோடை பெருகிச்செல்வதைப்போல. அவள் அவனை அறியவில்லை. மிக அருகே சென்று அவன் நின்றபோதுகூட அவள் விழிகள் அவனை நோக்கவில்லை. அவள் பிச்சி என தெரிந்தது. மெல்லிய குரலில் தனக்குத்தானே என ஏதோ சொல்லிக்கொண்டாள். உதடுகள் அசைந்தபடியே இருந்தன. கருவிழிகள் நிலையற்று அலைந்தன. கைவிரல்களில் ஏதேதோ முத்திரைகளாக ஒரு தனிமொழி ஓடிக்கொண்டிருந்தது.

“அன்னையே…” என அவன் அழைத்தான். அதன்பின்னர்தான் அவள் அரசகுடியினள் என தன் உள்ளம் உணர்ந்திருப்பதை அறிந்தான். “அன்னையே, நீங்கள் யார்?” என்றான். அவள் அவன் சொற்களை செவிகொள்ளவில்லை. “அன்னையே, நீங்கள் எவரென்று நான் அறியலாமா?” என்றான். “ஏனென்றால் இது படுகளம். இங்கே படைநோன்புகொண்ட வீரர் அன்றி பிறர் வரலாகாது. பெண்டிர் நுழைய நெறியில்லை.” அவள் திரும்பி அவனை நோக்கினாள். அவன் மெய்ப்புகொண்டு கைகூப்பினான். கருவறையிலமைந்த தெய்வமுகம், தெய்வங்களுக்குரிய கடந்த நோக்கு. “நான் பாண்டவப் படையின் களக்காவலன்… ஹம்சபுரத்தைச் சேர்ந்த துஷாரகுடியினன்” என்றான் ஜலன். அவள் மீண்டும் களத்தை நோக்கி குனிந்தாள். அவள் நோக்குவதென்ன என்று அவன் நோக்கினான். அது மண்ணில் பதிந்த வடு. தொடுக்கப்பட்டு குறிபிழைத்த அம்பு புதைந்து உருவானது.

“அவன் விட்ட அம்புகள்… இந்தப் போரில் அவன் விட்ட நான்காயிரம் அம்புகள் பிழைத்தன” என்று அவள் சொன்னாள். “ஆயிரத்தில் ஒன்று மட்டுமே பிழைக்கும் திறன்கொண்டவன் அவன். இந்த அம்புக்குரிய வீரன் ஒரு கணநேர இடைவெளியில் உயிர்பிழைத்தான். இன்று அங்கே தன் அணிகளுடன் வெறுந்தரையில் உளமழிந்து உறங்கிக்கொண்டிருக்கிறான்.” அவள் தன் கால்களால் அம்புத்தடங்களை தொட்டபடி நடந்தாள். “இதோ இங்கே இன்னொன்று… இதோ பிறிதொன்று.” ஜலன் “அன்னையே, நீங்கள் யார்?” என்றான். அவள் இரு கைகளையும் விரித்தாள். “அவன் கொன்றுகுவித்தான்… இப்படைகளில் பத்திலொன்று ஒருநாளிலேயே அழிந்தன. அவனுக்கு எதிர்நின்றிருக்க எவராலும் இயலவில்லை…” அவளிடமிருந்து எழுந்த உறுமலோசை ஜலனை எலும்புகுளிரச் செய்தது. “அன்னையே…” என்றான். “வா என்னுடன்!” என்று அவள் சொன்னாள். “நான் காவல்பணியில் இருக்கிறேன், அன்னையே!” அவள் அதை கேட்கவில்லை. வெறிப்புகொண்ட விழிகளுடன் “என்னுடன் வா!” என்றாள்.

அவள் நடக்க அவன் உடன் நடந்தான். கீழே கிடந்த அம்புத்தடங்கள் ஒவ்வொன்றையும் நோக்கி உடல் நடுக்குகொள்ளும் பெருஞ்சினத்துடன் அவள் கூச்சலிட்டாள். “அன்னையே, நீங்கள் யார்?” என்று அவன் அழுகை கலந்த குரலில் கேட்டான். அவள் களத்தின் மறுபக்கமாக செல்ல அவனும் உடன் நடந்தான். அவள் நிலத்திலிருந்த வடு ஒன்றை நோக்கி “அறிவிலி!” என்று கூவினாள். “வீணன்!” என இன்னொரு அம்புவடு நோக்கி பற்களை கடித்தாள். இன்னொன்றை ஓங்கி உதைத்தாள். இன்னொரு வடுமேல் காறி உமிழ்ந்தாள். வடுக்களை நோக்க நோக்க அவள் கொண்ட வெறி ஏறிக்கொண்டே செல்வதை அவன் உணர்ந்தான். இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு தலைதூக்கி விண்ணை நோக்கி பெருங்குரலெழுப்பினாள். பின்னர் ஓடத்தொடங்கினாள். மண்மேல் விழுந்துகிடந்த பல்லாயிரம் அம்புவடுக்களின்மேல் வெறியால் இலக்கழிந்து சுற்றிவந்தாள். கால் தளர்ந்தவள்போல் அமர்ந்தாள்.

“அன்னையே” என அருகே சென்று ஜலன் அழைத்தான். “அவன் இன்னமும் உயிருடன் இருக்கிறான்… அவனை இவர்கள் எவராலும் கொல்ல இயலவில்லை. இந்தக் கடையர்களால் அவன் உடல்மேல் ஒற்றை அம்பையேனும் தொடுக்கமுடியவில்லை…” என்று அவள் இரு கைகளையும் நீட்டி சொன்னாள். அக்கைகள் நரம்புகள் புடைத்து நாணேற்றிய வில் என இழுபட்டு நின்றிருந்தன. கழுத்துத் தசைகள் தெறிக்க வாய் திறந்து வெண்பற்கள் தெரிந்தன. “இவர்கள் எவரும் அவனை கொல்லப்போவதில்லை… கோழைகள்… அறிவிலிகள்!” அவள் உளமுடைந்து விம்மினாள். கண்ணீர் வழிய “பல்லாயிரம் அம்புகள்… இவையனைத்தும் அவனுக்காகத் தொடுக்கப்பட்டு இலக்கிழந்தவை. வீணாக மண் அடைந்தவை… பல்லாயிரம் முறை எண்ணத்தால் கொல்லப்பட்டவன், தொடப்படாதவனாக திரும்பிச் சென்றான். தெய்வங்களே! தெய்வங்களே!” என்றாள். அவள் தன் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டாள். தலையை அசைத்தபடி வீறிட்டலறி அழுதாள்.

அவன் அவள் எவரென்று உணர்ந்துகொண்டான். மூதன்னை கதைகளினூடாக அவனை குழவிப்பருவத்திலேயே வந்தடைந்தவள். கைகளை மார்பில் கட்டி தலைகுனிந்து நின்றிருந்தான். “அவனை எவர் வெல்வார்? அவன் குருதி என்று இக்களத்தில் விழும்? கணங்களே! காலதேவர்களே!” அவள் அலறி கைகளால் குருக்ஷேத்ரத்தின் மண்ணை அறைந்தாள். அந்தக் குருதிச்சேற்றை அள்ளி தன் முகத்திலும் நெஞ்சிலும் பூசிக்கொண்டாள். “அன்னையே, அவரைக் கொல்லும் அம்பு எத்தனைமுறை பிழைத்தாலும் மீண்டும் உருகிமீண்டு கூர்கொண்டு வரும்” என்றான். “இங்கு தடம் விட்டுச்சென்ற அம்புகளில் சில அங்கே அப்பிழைக்காக வெந்து அறைவாங்கிக்கொண்டிருக்கின்றன. உளம் ஆறுக!”

அவள் சுடர் பொங்குவதுபோல் எழுந்து “எங்கே அவன்?” என்றாள். அவன் மறுமொழி சொல்லவில்லை. “எங்கே அந்தச் சிறுமையாளன்? வீரன் என்று காண்டீபம் எடுத்த கீழ்மகன்? என்ன செய்கிறான்? துயில்கிறானா? அவன் நெஞ்சை அறைந்து எழுப்புகிறேன். அவன் முகத்தில் காறியுமிழ்கிறேன்” என்றபடி திரும்பி ஓடலானாள்.

ஜலன் “அன்னையே!” என்று கூவியபடி அவளுக்குப் பின்னால் ஓடினான். அவள் காற்றெனச் சென்றாள். அவ்விரைவை எண்ணி அவன் வியந்தபோதே அதே விரைவில் தானும் சென்றுகொண்டிருப்பதாக உணர்ந்தான். பாண்டவப் படைகளின் நடுவே சென்ற பெரும்பாதையில் இருபுறமும் எரிந்த பந்தங்களின் ஒளியில் செந்நிற ஆடை சுடர்விட அவள் சென்றாள். அவளைத் தொடர்வதன்றி எதையும் எண்ணவியலாதவனாக ஜலன் உடன் சென்றான்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைமோடி,அரசியல்,கருத்தியல்
அடுத்த கட்டுரைநம்பிக்கையின் ஒளி