கல்கத்தாவில் என் நண்பர் ஒருவர் கொஞ்சநாள் மலையாள நாளிதழின் செய்தியாளராக இருந்தார். சென்னையில் மெரினா கடற்கரையில் மலையாள எழுத்தாளர் ஒருவரும் நானும் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருந்தோம். எழுத்தாளரும் இதழாளரும் மதுவின் போதையில் இதமாக தளர்த்திக்கொண்டிருந்தார்கள். கடலை விற்கும் ஒரு குள்ளச்சிறுவன் ஒரு தகர டப்பாவை அடித்தபடி எங்களைக் கடந்து சென்றான் நான் புன்னகை செய்தேன்
’என்ன?’ என்றார் எழுத்தாளர் . ’டின் டிரம்’ என்றேன். நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் குந்தர் கிராஸின் நாவல் அது. அதில் நாயகனாகிய ஆஸ்கார் [Oskar Matzerath] குள்ளன். வளரமாட்டேன் என முடிவெடுத்தவன் ஒரு தகரடப்பாவை கழுத்தில் தொங்கவிட்டு அடித்துக்கொண்டிருப்பான். ஜெர்மனிய மனசாட்சியை அப்படி கிராஸ் சித்தரிப்பதாக விமர்சகர்களின் வாசிப்பு. அதைச்சொன்னேன்.
நண்பர் முகம் சுளித்தார் .பின்பு ‘நான் கிராஸை வெறுக்கிறேன்’ என்றார். ‘நீங்கள் டின் டிரம்மை வாசித்துவிட்டீர்கள்தானே?’ என்றேன். ‘இல்லை, கேள்விப்பட்டதுடன் சரி…ஆனால் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன்’
நிகழ்ச்சி கல்கத்தாவின் நடந்தது. 1988ல் கிராஸ் தன் மனைவியுடன் கல்கத்தாவில் தங்கியிருந்தார்.வறுமையின் அழகியலை கண்டடைவதற்காக. இந்தியாவை பல்வேறு அடுக்குகள் கொண்ட ஒரு நாடாக கண்ட கிராஸ் அந்த மர்மத்தை அறியவிரும்பினார்
தகவலறிந்த கல்கத்தாவின் எழுத்தாளர்கள் காபிஹவுஸில் கிராஸை ஒரு சந்திப்புக்கு கூப்பிட்டார்கள். இதழாளர்களும்தான். அன்று ஒரு நூல்வெளியீடும் அதன்மேல் விவாதமும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. கிராஸ் தாமதமாக வந்தார். விவாதங்கள் கிராஸ் புரிந்துகொள்ளும் வசதிக்காக ஆங்கிலத்தில் நடைபெற்றன. மேலைநாட்டு கீழைநாட்டுக் கோட்பாடுகளும் இலக்கிய நுட்பங்களும் அலசப்பட்டன.
சட்டென்று கிராஸ் கோபத்துடன் பேச ஆரம்பித்தார். அவர் வரும் வழி முழுக்க சாலையோரங்களில் கிடந்த மனித மலம் பற்றி அவர் பேசினார். மனிதர்கள் கல்கத்தாவில் வாழும் வாழ்க்கையின் இழிவைச் சுட்டிக்காட்டினார். அந்த இழிவுக்கு எதிராக ஏதும் செய்யாமல் இந்திய அறிவுஜீவிகள் இலக்கியத்தையும் தத்துவத்தையும் விவாதித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம் , போலித்தனம் என்று சாடினார். முதலில அவர்கள் தங்கள் புறவாழ்க்கையை சரி செய்யட்டும். அதன்பின்னர் ஆன்மீகமும் தத்துவமும் இலக்கியமும் பேசலாம் என்றார்.
கூட்டம் அதிர்ந்து போனது. பெரும்பாலானவர்களுக்கு கிராஸ் சொன்னது சரி என்றே அப்போது தோன்றியது. சிலர் ஏதோ சொல்ல முயன்றனர். கிராஸ் கேட்க தயாராக இல்லை. அவர்களை அவமதிக்கும்விதமாகப் பேசிவிட்டு கிளம்பிவிட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள் ஒரு தார்மீகச் சிக்கலில் மாட்டினார்கள். உடனே கிராஸை ஆதரித்து பேசுவதே முற்போக்கு, மனிதாபிமானம். அந்த நிலைபாட்டை எடுத்து கிராஸை விட மேலே சென்று பேச ஆரம்பித்தார்கள்.
‘கிராஸ் சொன்னதில் என்ன தப்பு? அப்படித்தான் கேட்கவேண்டும்’ என்றார் எழுத்தாளர். ‘மனுஷன் இங்கே சாகிறான்…என்ன இலக்கியம் வேண்டிக்கிடக்கிறது?’ என்று பேச ஆரம்பித்தார்கள்.
இதழாளர் ‘எனக்கும் சரி என்றுதான் தோன்றுகிறது. ஆனால் நான் கிராஸின் முகபாவனையை பார்த்தேன். அதிலிருந்தது வெறுப்புதான். அது எனக்கு ஏனோ மனக்கசப்பை அளிக்கிறது’ என்றார்.
நான் கிராஸ் இந்தியா பற்றி எழுதிய ஒரு கட்டுரையை நினைவுகூர்ந்தேன். அதிலும் கல்கத்தாவின் சித்தரிப்பு முழுக்க அவர் அங்கே சாலைகளிலும் சாக்கடைகளிலும் கிடக்கும் மலத்தைப்பற்றி நிறையச் சொல்லியிருப்பார். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு ஐரோப்பியன் இந்திய மண்ணில் காலடி வைத்தால் உடனே அவனுக்கு தெரிவது மலம்தான். அவன் அன்னியமலத்தை பார்ப்பது பெரும்பாலும் அதுவே முதல்முறையாக இருக்கும். அதன்பின் இந்தியாவின் எந்த பழம்பெருமையும் இன்றைய சிறப்பும் அந்த மலத்தின்வழியாகவே அவன் மனத்துக்குள் செல்லும்.
உண்மையில் பொது இடத்தில் மலம் கழிக்கும் வழக்கம் இருக்கும் வரை நம்மை நாகரீக மனிதர்கள் என்று சொல்வதே மிகை என்றுதான் நானும் நினைக்கிறேன். இந்தியா பொதுச்சுகாதாரத்தில் காட்டும் அலட்சியம் போல நம்மை இழிவுபடுத்தும் அம்சம் இன்னொன்று இல்லை. உலகில் மிக மிக அசுத்தமான நாடுகளில் ஒன்று இந்தியா என என்னிடம் பல அன்னியர் சொல்லியிருக்கிறார்கள். அதை ஒரு பிரச்சினையாக கருதிய கடைசி அரசியல் தலைவர் காந்தி.
ஆனால் குந்தர் கிராஸ் சொன்னது அது மட்டும்தானா? ‘தெருவிலே மலம் கழிக்கும் மக்களைக்கொண்ட நாட்டுக்கு என்ன நாகரீகம் இருக்கப்போகிறது’ என்று அதை மறு அமைப்பு செய்யலாம். ‘பிச்சைக்காரர்களும் குடிசைவாசிகளும் கொண்ட இந்த தேசத்துக்கு எதற்காக இலக்கியமும் கலைகளும்?’ என்று மாற்றிச்சொல்லலாம். அவர் இலக்கியவாதிகளிடம் போய் குப்பை பெருக்கச் சொல்கிறார். அல்லது கிளர்ச்சி செய்யச் சொல்கிறார். அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடச் சொல்கிறார்.
அங்கே கூடியிருந்தவர்களுக்கு அது தேவை. இந்தியாவில் கல்கத்தா அளவுக்கு ஐரோப்பிய வழிபாடு மேலோங்கிய ஒரு பகுதி இல்லை.’ பொங்காளிகள்’ இந்தியாவின் எந்த இலக்கியத்தையும் வாசிக்க மாட்டார்கள். சிவராம காரந்தையும் , பிரேம்சந்தையும் , பஷீரையும், புதுமைப்பித்தனையும் கேள்விப்பட்ட ஒரு வங்காளியை நான் பார்த்ததில்லை. சொந்த இலக்கியம், விட்டால் ஐரோப்பா. கிராஸை அவர்கள் அழைத்ததில் உள்ள புல்லரிப்பும் அவருக்காக ஆங்கிலத்தில் பேசிய பணிவும் புரிந்துகொள்ளக்கூடியதே. கிராஸை கவர அவர்கள் எப்படி பேசியிருப்பார்கள் என்றும் ஊகிக்க முடிகிறது.
கிராஸ் கல்கத்தாவுக்கு வந்ததை ஒரு கௌரவமாக அவர்கள் எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் ’பொங்க்ளா’ மேன்மையை காண வரவில்லை, வறுமையை காணவே வந்தார் என்பது அவர்களுக்கு தேவையான அதிர்ச்சி. அவர்கள் அதை உடனே செரித்துக்கொண்டு விடுவார்கள். அறிவுஜீவிகளுக்கு பாவனைகள்தானே உலகம்.
’கிராஸிடம் நான் பேச முடிந்திருந்தால் நான் ஒரு கேள்விதான் கேட்டிருப்பேன்’ என்றேன். பதினெட்டாம் நூற்றாண்டின் வியன்னா இன்று கல்கத்தா இருப்பதைவிட கேவலமான நிலையில் இருந்தது. இதைவிட குடிசைகள். இதைவிட கேவலமான அசுத்தம். அன்றும் வியன்னாவில் பேரறிஞர்கள் நுண்ணிய தத்துவங்களை ஆராய்ந்தார்கள். உயர்கலைகள் உருவாகி ரசிக்கப்பட்டன. ஐரோப்பிய தத்துவம், ஐரோப்பிய இசையின் பொற்காலமே அதுதான். அன்றைய தத்துவ, கலை மேதைகளைப்பற்றியும் இதைத்தான் கிராஸ் சொல்வாரா? அவர்களின் சாதனைகளை நிராகரிப்பாரா?
கிராஸ் நேர்மையாக பதில் சொல்வாரென்றால் அமைதிகாப்பார். ஒரு சமூகத்தின் பொருளியல் பிரச்சினைகளுக்கும் அதன் சிந்தனை மற்றும் கலை வளர்ச்சிக்கும் நேரடித்தொடர்பு இல்லை. சொல்லப்போனால் அந்த வறிய ஜெர்மனி உருவாக்கிய கலைகளையும் இலக்கியத்தையும் இன்றைய செல்வந்த ஜெர்மனி உருவாக்கவில்லை. இன்று அந்த நாடே பண்பாட்டுத்தளத்திலும் சிந்தனைத்தளத்திலும் சூம்பி கிடக்கிறது.
கொடிய வறுமையில்கூட ஒரு சமூகம் உயர்சிந்தனைகளையும் நுண்கலைகளையும் நாடுகிறது, சாதிக்கிறது. அந்த வறுமையில் இருந்து வெளியேறுவதற்கான அடிப்படையான துடிப்பே அந்த ஆற்றலை அதற்கு அளிக்கிறது என்றுகூடச் சொல்லலாம். சிந்தனையும் கலையும் வறுமையில் இருந்து ஒளிந்துகொள்ளும் முயற்சிகள் அல்ல. மாறாக அவை வறுமைக்கு எதிரான முயற்சிகள். ஜெர்மனிய வரலாறு காட்டுவதும் அதையே.
ஆம், நாம் இன்று தெருவில்மலம் கழிக்கும் எளிய மக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட சமூகம்தான். பட்டினிப்பட்டாளங்களின் தேசம்தான். ஆனால் நமக்கு சிந்தனையும் உயர்கலையும் தேவையில்லை என்று சொல்லமுடியுமா? இந்த சமூகத்தின் ஒருமுனை பொருளியல் விடுதலைக்காக, மேம்பாட்டுக்காக போராடுகிறது. அதே வேகம்தான், அந்த உயிராற்றல்தான் கலையிலக்கியச் செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது. வறுமையும் மிடிமையும் நோயும் வாட்டி வதைத்த கர்நாடக மண்ணில் நின்று காரந்த் ’மண்ணும் மனிதரும்’ கொள்ளும் உறவின் ஒட்டுமொத்த அர்த்தமென்ன என்று வினவியது ஒரு பெரும் மானுட அறைகூவல்.
அந்த வேகத்தை ஏன் கிராஸ் காணமுடியவில்லை? ஏன் மொத்த ஐரோப்பாவே இந்திய இலக்கியத்தின் சாராம்சமான பகுதியை ஒருபோதும் உள்வாங்கிக்கொள்ள தயாராக இல்லை? அதை நான் ஐரோப்பியமைய நோக்கு என்றுதான் சொல்வேன். ருட்யார்ட் கிப்ளிங்கிலும், இ.எம்.ஃபோஸ்டரிலும் இருந்த அதே காலனியாதிக்க மனநிலை.
’உயர்சிந்தனையையும் கலைகளையும் பண்பட்ட, மேலான மக்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உன்னிடம் அந்த நுண்ணுணர்வு இன்னும் உருவாகவில்லை. நீ இன்னும் சோற்றுக்குப் போராடுபவன் மட்டுமே. ஆகவே நீ சோற்றுக்கு போராடு. அதைப்பற்றி வேண்டுமானால் நீ எழுது. நான் அதை வாசித்து உன்னைப்பற்றி தெரிந்துகொள்கிறேன். நீ என்னிடம் தத்துவமோ மெய்யியலோ பேசவேண்டியதில்லை. நீ கலைகளை உருவாக்க வேண்டியதில்லை’ – கிராஸ் அன்று கல்கத்தாவின் ஆங்கிலவழி இலக்கியவாதிகளிடம் சொன்னதும் இதுவே.
அதைத்தான் நம் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மிக எளிய வாழ்க்கைச்சித்திரங்களை மட்டுமே அளிக்கிறார்கள். இந்தியாவை, பிரிட்டின் கனவான்களால் கைவிடப்பட்ட பரிதாபத்துக்குரிய இந்த நாட்டை, எப்படி ஐரோப்பியர் உருவகித்திருக்கிறார்களோ அந்த சித்திரத்தை மட்டுமே அவர்களுக்கு அளிக்கிறார்கள். அவர்களை மட்டுமே ஐரோப்பா அங்கீகரிக்கிறது. அவர்களுக்கு தாராசங்கர் பானர்ஜி தேவையில்லை. அமிதவ் கோஷ் போதும்.
என்றென்றும் கழுத்தில் டின்னுடன் இந்திய இலக்கியமும் மெய்யியலும் கலைகளும் இருக்கவேண்டும் என நினைக்கிறார் கிராஸ். அவர்களுக்கெதற்கு முரசுகள்? கல்கத்தா அவருக்கு ஓரு மானுட மிருககாட்சி சாலை. அங்கே மலம் சிதறிக்கிடப்பதைக் காணும்போது அவர்கொள்ளும் கோபத்துக்கு மிக ஆழத்தில் ஒரு வெள்ளையன் நிறைவு கொள்கிறான். எவ்வளவு ஆதாரங்கள் சாலையெங்கும்!
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2011 ஜனவரி