அன்புள்ள ஜெ,
நலமா?
தங்களுடைய புதிய காலம் என்ற விமர்சன நூலை இன்றுதான் முழுமையாக வாசிக்க முடிந்தது. எந்தக் கோட்பாட்டின் துணுயுமின்றி சுந்தரராமசாமி தரும் அனுபவ அழகியல் பதிவுகள் போல, அதில் படைப்பாளிகளின் படைப்பு நுணுக்கங்களைக் கண்டறிந்து விளக்கமாக எழுதியிருந்தீர்கள். இவ்வாறான விமர்சன நூல்கள் சமகாலத்தில் தங்களிடமிருந்து வருவதில்லை என்பது சற்று அயர்ச்சியைத் தருகிறது. ஒரு படைப்பாளியின் படைப்புலகினை எடுத்துக் கொண்டால் அவர்களது படைப்பின் நுணுக்கங்களையும் அதிலுள்ள அநாதியான பாகங்களையும் ஆராய்ந்து கட்டுரையினை மிகவும் பிரயோஜனமாக ஆக்கும் வல்லமையுள்ளவர்கள் எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்தாளர்களில் இருவர்தான். ஒருவர் சுந்தரராமசாமி. மற்றையவர் ஜெயமோகன்.
மேலும் மனுஷ்யபுத்திரன் மீதான தங்களுடைய விமர்சனத்தை வாசித்திருந்த பலர் அதன் நேர்மைத் தன்மையைக் கருதிப் பராட்டுக்களைக் கூறியிருந்தனர். இன்னொரு புறம் வழக்கம்போல உங்களுக்கு இந்துத்துவ முத்திரை குத்திக்கொண்டிருந்தார்கள். இந்த இருவரையும் பொருட்படுத்தாமல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து விடுவதுண்டு என்று ஒருமுறை ஒரு எதிர்வினைக்கான பதிலில் எழுதியிருந்தீர்கள்.
இங்கு முத்திரை குத்தும் பலர் தாங்கள் புதிய காலம் என்ற நூலில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பற்றி “கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்”என்ற தலைப்பில் மிக நீளமான ஒரு கட்டுரை எழுதியதையும் அந்தக் கட்டுரையைப் போல் வேறு யாரும் அதற்கு முன்பும் பின்பும் மனுஷ்யபுத்தினைப் பற்றி அவ்வளவு நுணுக்கமாக எழுதியதில்லை என்பது எனது வாசிப்பு அனுபவம். அதில் எவ்வித காழ்ப்பும் அற்ற விமர்சனத்தன்மை மலிந்திருந்தது. அதனை வாசிக்கும் ஒரு வாசகனுக்கு தற்போதைய தங்களுடைய மனுஷ்யபுத்திரன் பற்றிய இந்துமத விவாதங்கள் ஓரளவுக்குப் புரிதலைத் தந்திருக்கும்.
அந்தக் கட்டுரையில் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி இப்படிக் கூறியிருப்பீர்கள்.
“மனுஷ்யபுத்திரன் கவிதைகளை தமிழின் எழுச்சிவாத அழகியல்க் கூறு நவீனக் கவிதைக்குள் அடைந்த வெளிப்பாடு என்று கூறலாம். எழுச்சிவாதத்தின் கட்டற்ற இலக்கிய வடிவம், நேரடியான உணர்ச்சி வெளிப்பாடு, உச்சப்படுத்தும் போக்கு ஆகியவற்றின் மூலம் உருவானவை அவரது கவிதைகள். சுகுமாரன் கவிதைகளைவிட மேலும் நெகிழும் தன்மை கொண்டவை. அந்தவகையில் நெகிழ்ச்சியையே அழகியலாகக் கொண்ட தமிழ் பக்திக் கவிதைகளுக்கு சமகால நீட்சியாக அமைபவை அவை. ஆனால் நவீன அரசியல் மனத்தால் வெளிப்படுத்தப்படுபவை. கடவுளையும் ஆன்மீகத்தையும் வெளியேற்றிவிட்டு அங்கே அரசியலைக் குடியேற்றிக் கொண்ட மனம் அது”
இவற்றை விடுத்து இன்றைய நாட்களில் அரசியல் நோக்கங்களால் உள்வாங்கப்பட்டுத் தனது கவிதையை மனுஷ் எழுதியுள்ளார். அதில் அநேகமாகத் தேவி என்பது குறிப்பது இந்துமதப் பெண் கடவுளைத்தான் என்பது வெளிப்படை. அதனைப் பட்டவர்த்தனமாகத் தாங்கள் தோலுரித்து எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்துத்துவர்கள் மற்றும் போலி நாத்திகர்கள் கூறுவது போல அல்லாமல் சக படைப்பாளியின் கருத்துரிமையையும் தங்களது நிரந்தரமான பண்பாட்டு நம்பிக்கைத் தளத்தையும் அதில் இருத்தி அந்த எதிர்வினையை எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
நமது தமிழ்ச் சூழலில் ஒவ்வொன்றுக்கும் யாரோ ஒருவர்தான் காரணம் என்று கூறி நமது அடிப்படைப் பிழைகள் ஏற்க மறுக்கப்படுகின்றது என்பதே உண்மை. மதமாற்ற வெறியர்கள் உருவாக்கிய அனைத்துக்கும் பிராமணர்கள் காரணம் என்பது போல ஏதோ ஒன்றைத் தூக்கியபடி வந்துவிடுகின்றனர்.
ஒரு தருணம் தாங்கள் கூறிய விடயம் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது. இப்பொழுது நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கிறேன் ஆதலால் அரசியல் விவாதங்களைத் தவிர்த்துக் கொண்டுள்ளேன் என்று. அதற்கான அர்த்தம் தற்போதுதான் புரியத் தொடங்குகிறது.
சுயாந்தன்
அன்புள்ள சுயாந்தன்
என்னுடையது டி.எஸ்.எலியட்டையும், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸையும் தொடக்கமாகக் கொண்ட, பின்னாளில் அமெரிக்காவில் புதுத்திறனாய்வு [new criticism] என்ற பேரில் வளர்ச்சியடைந்த திறனாய்வுமுறை. ஆல்லன் டேட்[ Allen Tate] கிளிந்த் புரூக்ஸ் [ Cleanth Brooks] ராபர்ட் பென் வாரன் [ Robert Penn Warren] ஆகியோர் இதன் முன்னோடிகள். இதுவரையிலான திறனாய்வுமுறைமைகளில் இலக்கியம் என்னும் தனித்த அறிதல்முறைக்கு மதிப்பளிக்கக்கூடிய, இலக்கியத்தை நுண்ணுணர்வால் வாசிக்கக்கூடிய, இன்னொரு அறிவுத்துறையின் துணைக்கருவியாகச் செயல்படாத இலக்கியத் திறனாய்வு முறை அதுதான்
அந்த முறை எல்லா அறிவுத்துறைகளின் அறிதல்ளையும் பயன்படுத்திக்கொள்ளும். பல்வேறு அறிவுத்துறைகளின் கலைச்சொற்களை தன் சொற்சூழலில் பொருள் அளித்து கையாளும். கதைமாந்தரை ஆராய்வதற்கு உளவியல் திறனாய்வு, ஆசிரியனை அறிய அவன் வாழ்க்கையையும் ஆளுமையையும் கூர்ந்துநோக்கும் வாழ்க்கைவரலாற்றுத் திறனாய்வு ஆகியவற்றைக் கையாளும். படைப்பின் பின்புலத்தை உணர வரலாற்று ஆய்வுகளையும் சமூகவியல் ஆய்வுகளையும் பயன்படுத்திக்கொள்ளும். இந்த அறிவுத்துறைகள் எல்லாம் எந்த வகையில் ஒன்றாகின்றன என்றால் அவ்விமர்சகனின் சிந்தனையிலும் ஆளுமையிலும்தான் என்பதே பதிலாகும்
இந்த விமர்சன முறை படைப்பின் மீதான தன் கண்டடைதல்களை மொழியினூடாக வாசகனின் நுண்ணுணர்வுக்கு உணர்த்தி விட முடியுமென நம்பும். இலக்கியவிமர்சனமும் ஒருவகை இலக்கிய ஆக்கமே என்று கொள்ளும். ஆகவே படிமங்களை, அணிமொழிகளை, உருவகங்களைப் பயன்படுத்தும். டி.எஸ்.எலியட் இன்றுவரை இலக்கியவிமர்சனத்தில் அவர் கையாண்ட நுட்பமான படிமங்களுக்காகவே நினைவுகூரப்படுகிறார் .இன்றுவரை புனைவுகளை வாசிப்பதில் அவ்விமர்சனமுறை உருவாக்கிய திறப்புகளை பிறவிமர்சன முறைகள் அளிக்கவில்லை.
பிற விமர்சனமுறைமைகள் கல்வித்துறை சார்ந்தவை. ஆகவே புறவயத்தன்மையை, முறைமையை மிகையாக நம்புபவை. இலக்கியவாசிப்பு – விவாதத்தில் புறவயத்தன்மையோ முறைமையோ ஓர் எல்லைக்குமேல் பயனற்றவை என்பது ஓரு கண்கூடான உண்மை. ஒரே முறைமையை கையாண்டு ஒருவர் நுட்பமாக வாசித்து எழுதவும் இன்னொருவர் மொண்ணையாக எழுதவும் இயலும் என்னும் நிலையில் வாசகன் என்னும் நிலையின் தனித்திறனே இலக்கியவிமர்சனத்தைத் தீர்மானிக்கமுடியும். அந்த தனிப்பட்ட ரசனைக்கு இடமளிக்கும் திறனாய்வு முறை அது. அதேசமயம் அந்த ரசனையின் விளைவான கண்டடைதல்களை கூடுமானவரை புறவயமாக முன்வைக்கத் தேவையான முறைமைகளைக் கொண்டுள்ளது. ரசனையை புறவயமாக ஆக்கும் பெருமுயற்சி என அதைச் சொல்லலாம்.
ஆகவே இந்த விமர்சனமுறை மேற்கோள்களை நம்புவதில்லை. விமர்சனத்துக்கென புறவய வடிவைக் கொண்டிருப்பதுமில்லை. விமர்சகனின் தனிப்பட்ட அனுபவங்களுக்கு ஓர் எல்லைவரை இடமளிக்கிறது. வெளிப்பாட்டை ஒரு இலக்கியப்படைப்பின் வடிவம்போலவே ஒவ்வொருமுறையும் புதிதாக நிகழ்த்துகிறது. தமிழில் இந்த விமர்சன முறைமையின் தொடக்கப்புள்ளி என சி.சு.செல்லப்பாவைச் சொல்லவேண்டும். முன்னரே ரசனைவிமர்சனம் வ.வே.சு அய்யர்,ரா.ஸ்ரீ.தேசிகன் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் ‘அலசல் விமர்சனம்’ என்றபேரில் இந்த ஆய்வுமுறையை செல்லப்பாதான் விரிவாக நிகழ்த்தினார். அதற்கான தேவையையும் வழிமுறைகளையும் கலைச்சொற்களையும் விளக்கி எழுதினார்.
தமிழ்க் கல்வித்துறைக்குள் இத்தகைய விமர்சனத்தை உருவாக்கியவர் பேராசிரியர் ஜேசுதாசன். அவர் அதை ‘கண்ணாடியைத் திருப்பித்திருப்பிப் பார்த்து நம்மைப்பார்த்துக்கொள்வதுபோல வாசகன் படைப்பை அணுகுவது’ என்று வரையறை செய்தார். படைப்பின் ஓர் அம்சம் கூட விடப்படலாகாது என்றும், படைப்பின் பின்புலமும் ஆசிரியனின் வாழ்க்கையும் முழுமையாகவே கருத்தில்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார். கல்வியாளர்களால் முற்றாக ஒதுக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவை கல்லூரிக்கு வரவழைத்து இந்தத் திறனாய்வுமுறை பற்றி வாசகர்களிடையே வகுப்பெடுக்கச் சொன்னார்
ஆனால் பேராசிரியர் நவீன இலக்கியம் பற்றிப் பெரிதாக ஏதும் எழுதவில்லை. அவருடைய ஆளுமை அணுக்கமான மாணவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதிலேயே செலவாகியது. அவருடைய மாணவர்களில் வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் அந்தவகையான ஆய்வுமுறையை முன்னெடுத்து முக்கியமான நூல்களை எழுதினர். புதுமைப்பித்தன் பற்றிய வேதசகாயகுமாரின் ஆய்வும், புதுக்கவிதை பற்றிய ராஜமார்த்தாண்டனின் ஆய்வும் முன்னோடி முயற்சிகள்.
வேதசகாயகுமார் புதுமைப்பித்தனைப்பற்றிய விமர்சன ஆய்வை மேற்கொண்டபோது பேராசிரியர் புதுமைப்பித்தனின் பின்புலம் பற்றிய விரிவான ஆய்வும் அவருடைய எழுத்துக்களின் முழுமையான தொகையும் தேவை என வலியுறுத்தினார். ஆகவே கிட்டத்தட்ட பத்தாண்டுக்காலம் அலைந்து தேடி புதுமைப்பித்தனின் அறியப்படாத பல கதைகளை வேதசகாயகுமார் கண்டடைந்தார். சிலகதைகள் தழுவல்கள் என்றும் கண்டுபிடித்தார்.அது அன்று பெரிய விவாதங்களை உருவாக்கியது. ஆனால் விமர்சன ஆய்வுக்கு அப்படிச் சார்புகள் இல்லை என்பதே அவருடைய நிலைபாடாக இருந்தது.
இந்தியமொழிகள் அனைத்திலுமே முக்கியமான விமர்சகர்களாகக் கருதப்படுபவர்கள் இந்த மரபைச் சேர்ந்தவர்களே. தமிழில் சுந்தர ராமசாமியின் விமர்சனம் இந்த மரபை ஒட்டியது. வெங்கட் சாமிநாதனை இம்மரபில் சேர்க்கவியலாது. அவருடையது ரசனை விமர்சனம், ஆனால் வெளிப்பாட்டில் முறைமை இல்லாதது. ஒருவகை நீள் உரையாடல் அது.
இந்தியாவெங்கும் இவ்வகை விமர்சனங்களை பெரும்பாலும் படைப்பாளிகளே எழுதியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். கன்னடத்தில் ராமச்சந்திர ஷர்மா, யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஆகியோர் எழுதிய விமர்சனங்கள் இவ்வகைப்பட்டவை. மலையாளத்தில் ’சாகித்ய பஞ்சானன்’ என அழைக்கப்பட்ட பி.கே.நாராயணபிள்ளை இம்மரபின் தொடக்கப்புள்ளி. குட்டிக்கிருஷ்ண மாரார், எம்.பி.பால் போன்ற பெரும் விமர்சகர்கள் இம்மரபினர். இதன் முதன்மை விமர்சகர் கே.பி.அப்பன்.
நீங்கள் சுட்டிய அந்நூலில் உள்ள என் விமர்சனங்கள் இவ்வகைப்பட்டவை. ஒட்டுமொத்தமாகவும் நுணுக்கமாகவும் அப்படைப்பாளிகளையும் படைப்பையும் அணுகும் பார்வை கொண்டவை. யுவன் சந்திரசேகரின் தமிழ் ஸ்மார்த்தப் பின்புலம், மதுரைவட்டாரத்தில் அவர் பிறந்து வளர்ந்தது அவருடைய ஆக்கங்களை எப்படித் தீர்மானிக்கிறது என அது ஆராய்கிறது. அவருடைய ஆக்கங்களில் உள்ள செவிவழிநுட்பத்தின் ஊற்றிடம் அது. ஜோ.டி.குரூஸை மீனவ வரலாற்றுப் பண்பாட்டுப்புலத்தில் வைத்து புரிந்துகொள்ள முயல்கிறது. அவ்வாறே மனுஷ்யபுத்திரனின் உடற்குறை எப்படி அவருடைய கவிதைக்கூறுகளை, வாழ்க்கை நோக்கை உருவாக்கியிருக்கிறது என நோக்குகிறது.
உடற்குறையால் இளமையில் ஒதுக்கப்பட்டவர் மனுஷ்யபுத்திரன். அந்த ஒதுக்குதலில் இருந்து தன் ஆற்றலைத் திரட்டி எழுந்துவந்தவர். அந்த உடற்குறை ஒரு ஆழ்படிமமாக அவர் உள்ளத்தில் இருக்கக் கூடும். அதிலிருந்தே அனைத்து ஒடுக்கப்பட்டமக்களுடனும் அவர் தன்னை அடையாளம் கண்டுகொள்கிறார். எல்லாவகையான அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கிறார். அவருடைய அரசியலை அது முடிவுசெய்கிறது. அவருடைய கவிதைகளின் மையவிசை அந்த எதிர்ப்பரசியலே. அந்த அரசியலின் உண்மையான வேகமே அவருடைய கவிதைகளின் அழகியலை உருவாக்குகிறது. அதன் முன்னோடிகள் சுகுமாரன், ஆத்மாநாம். அவர்களின் நவீனத்துவ வடிவிலிருந்து மேலும் நெகிழ்வான ஒன்றை அவர் உருவாக்கிக் கொண்டார். ரூமி போன்றவர்களின் கவிதைகளில் இருந்து உருவான அவ்வடிவம் பக்திக்கவிதைகளுக்குரிய நெகிழ்ச்சி கொண்டது. இதுவே அவ்விமர்சனத்தின் சுருக்கம். அதையே கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் என்று மதிப்பிட்டேன்.
என் நோக்கில் மனுஷ்யபுத்திரனைப்பற்றிய ஒட்டுமொத்தமான மதிப்பீடாக, ஆய்வாக வெளிவந்தது இந்தக் கட்டுரைதான். இன்று வாசித்தாலும் அக்கட்டுரையின் உண்மையான ரசனையும், நேர்மையான மதிப்பீடும் மனுஷ்யபுத்திரனை பெருமதிப்புடன் அணுகி ஆராய்வதைக் காணமுடியும். ஆனால் நம் சூழல் மிக விந்தையானது. மிக எளிய அரசியல்சரிகளால் ஆனது இது. அறிவுஜீவிகள் என்பவர்கள்கூட இந்த சில்லறை உணர்ச்சிகளில் திளைக்கிறார்கள். அரசியல்சரிகள் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமானவையே. ஆனால் தத்துவம், இலக்கியவிமர்சனம் போன்ற அறிவுத்துறைகளுக்கு அவை பொருந்தா. இலக்கியவிமர்சனம் வாசிப்பவன் எளிமையான வழிப்போக்கன் அல்ல, அவன் தேர்ந்த இலக்கிய வாசகன். அவனுக்குத்தெரியும், என்ன பேசப்படுகிறது என்று. ஆனால் என் கட்டுரை வந்தபோது மனுஷ்யபுத்திரனை ஊனமுற்றவர் என முத்திரை குத்துகிறேன் என குற்றம்சாட்டப்பட்டது. வசைகள், எதிர்ப்புகள். விளக்கம் சொல்லிச் சொல்லி நாட்கள் வீணாயின.
அதற்குக் காரணம் இணையச் சூழல். எல்லாரும் ஏதாவது சொல்லலாம் என்னும் வசதி. சம்பந்தமில்லாதவர்களெல்லாம் உள்ளே புகுந்து எனக்கு வகுப்பெடுக்கவும் என்னை வசைபாடவும் தொடங்கினார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு அவர் மீது 1991 முதல் நான் கொண்டுள்ள நட்பும் மதிப்பும் உள்ளூரத் தெரியும். ஒரு தருணத்திலும் அவருடைய ஆளுமையை, கவிஞர் எனும் இடத்தை மறுத்தவன் அல்ல. அவருக்கு நான் எழுதிய நீண்ட நீண்ட கடிதங்களை இப்போதும் மானசீகமாக எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். என் கட்டுரையின் சாரமும் அவருக்குத் தெரியும். பின்னர் அவரே அதைப்பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். ஆயினும் அப்போது அவர் அந்த அலையில் நீந்த விழைந்தார் .நான் அப்போதும் அவருடைய கவிதைகளின் நல்ல வாசகனாகவே இருந்தேன். சென்ற ஆண்டு அவருடைய பெருந்தொகைகள் வெளிவந்தபோது ஒட்டுமொத்தமான ஒரு நோக்கை முன்வைக்கமுடியுமா எனக் கோரி எனக்கு அவற்றை அனுப்பி வைத்தார்.
[எம்.வேதசகாயகுமார்]
மனுஷ்யபுத்திரனின் உண்மையான அரசியல் உண்மையான கவிதைகளை உருவாக்கியது. அவ்வரசியல் அன்றும் எனக்கு உவப்பானது அல்ல. நான் சந்தித்தபோது அவர் தீவிர இடதுசாரிக் குழுக்களுடன் தொடர்பிலிருந்தவர். ஆயினும் அக்கவிதைகள் முக்கியமானவை என நினைத்தேன். இன்றைய அரசியல் என்ன என்று அனைவருக்கும் தெரியும். இதில் மிகையான பரப்புணர்ச்சிகளுக்கு அப்பால் ஆழமான நம்பிக்கையும் அதுசார்ந்த தீவிரமும் உண்டு என நம்பும் எவரும் இருப்பார்களா? இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு கவிதையுடன் என்ன தொடர்பு இருக்கமுடியும்?
இன்று நான் பின்னர் வந்த படைப்பாளிகளைப் பற்றி அவ்வகையில் விரிவான கட்டுரைகளை எழுத விரும்பவில்லை. குறிப்பிடும்படி எவரேனும் எழுதினால் சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடவே நினைக்கிறேன். இந்நூல் எழுதப்பட்டு உருவான மனக்கசப்புகளின்போது மனுஷ்யபுத்திரன் கவிதைகள் மேல் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அருண்மொழி மேற்கொண்டு சமகால எழுத்தாளர்களைப்பற்றி எழுதவேண்டாம் என மீண்டும் மீண்டும் சொன்னாள். அதை நான் ஏற்றுக்கொண்டேன்
ஏனென்றால் இன்றைய சமூக ஊடகச் சூழல் அப்படி. இலக்கியவிமர்சனங்கள் பொதுவாக நீளமானவை, ஒட்டுமொத்தமான மதிப்பீட்டை முன்வைப்பவை. சமூகவலைத்தளக்காரர்கள் அவற்றை முழுமையாக வாசிப்பதில்லை. ஆனால் எதையாவது சொல்ல விரும்புவார்கள். சில்லறை அரசியல்நிலைபாடுகளின் அடிப்படையில் அவற்றில் ஒருசில துண்டுகளை வெட்டி எடுத்து விளக்கமளித்து கும்மியடிக்க ஆரம்பிப்பார்கள். நாம் நினைப்பதற்கு நேர் எதிரானவையாக அவை இருக்கும். நான் சொன்னது அதுவல்ல என நான் திரும்பத்திரும்பக் கூச்சலிடவேண்டியிருக்கும். அந்த எழுத்தாளனும் அந்த கூட்டு உணர்ச்சிகளுக்குள் சென்று நம்மீது கடும் காழ்ப்பை அடைகிறான்.
இலக்கியவிமர்சனத்தின் நோக்கம் கூட்டுவாசிப்பை உருவாக்குவது. அதனூடாக வாசிப்பின் கூர்மையை பெருக்குவது, எல்லாக்கோணங்களையும் திறப்பது. இன்று எல்லா தரப்புமே உச்சகட்ட அரசியல்நிலைகளில் எதிரெதிராக நின்றுகொண்டிருக்கிறார்கள். எவரும் எதையும் செவிகொள்வதாக இல்லை. அது இப்படி உடனடியாக வம்புகளாக ஆகும் என்றால் விமர்சனம் என்பது தேவையற்ற நேரவிரயம், உழைப்புவிரயம் என்று தோன்றுகிறது.
ஜெ
***