மோவாயிசம், தாவாயிசம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ

மோவாயிசம் பற்றிய தங்கள் ஆய்வுக் கட்டுரை படித்தேன்.மிகச் சிறப்பாயிருந்தது.நாடி என்ற சொல்லின் மருவூச் சொல்லே நாட்டி என்ற ஆங்கிலச் சொல் என்று ’நான்மணிக்கடிகையில் நானோ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் செம்புலப்புழுதியார் கூறியிருப்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

மாவாய்* பிளந்தானை மல்லாரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்…

(*மோவாய் என்றும் பாடபேதம்)என்று கோதை அருளிச்செய்த ஸ்ரீயப்பதியான எம்பெருமானை க்‌ஷீர சாகரத்தில் நித்ய ஸூரிகளான கின்னரர் கருடர்கள் கிம்புருஷ கோஷ்டிகளோடு தண்டம் சமர்ப்பித்தால் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் லபிக்கும் என்ற ஐயாயிரப்படி ஆச்சாரியாரின் விளக்கமும் குறிப்பிடத்தக்கது.

தயவு செய்து தங்கள் கட்டுரையை நகைச்சுவை என்று வகைப்படுத்தவும்.இல்லையென்றால் ஜே.ஜே வின் நூல்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க முயற்சி செய்த அறிஞர்கள் மோவாயிசம் என்ற துறையை உருவாக்கி இரண்டு நாள் கருத்தரங்கமும் நடத்திவிடுவார்கள்.

இவ்வளவு சீரியசான அங்கதக்கட்டுரையைப் படித்து நாளாகிறது.அவ்வப்போது இதுபோன்ற சீரிய ஆய்வுகளை வெளியிடவும்

அன்புடன்
ராமானுஜம்

அன்புள்ள ராமானுஜம்

கட்டுரைகளுக்கு கீழே கேள்விபதிலையே அமைக்கலாம்

குறுவிடை தருக

மோவாயிசத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?

பெருவிடை தருக

மோவாயிசம் என்றால் என்ன? மோவாயின் படத்துடன் உதாரணம் தந்து விளக்குக

நம் ஜனங்கள் கூர்ந்து வாசிப்பார்கள்

ஜெ

==============================

அன்புள்ள ஜெயமோகன்

தாவாயிசம் என்று ஒன்று உள்ளது. அதைப்பற்றி நீங்கள் எழுதியிருக்கலாம். இது இரு மாநிலங்கள் இரு அரசாங்கங்கள் இரு மனிதர்கள் நடுவே உள்ள பிரச்சினையை பற்றிய இசம். காவேரி நதிநீர் தாவா என்றும் முல்லைப்பெரியார் தாவா என்றும் நாளிதழ்கள் இதைச் சொல்வதை கவனித்திருப்பீர்கள். தாவா என்றால் அதை ஏழு படிகளில் தீர்க்கலாம் என்பதே தாவாயிசத்தின் அடிப்படை கோட்பாடுகள்

1. வருஷத்திற்கு ஒருமுறை அறிக்கை விடுதல்.

2 இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை போராட்டம். அரைமணிநேர உண்ணாவிரதப்போராட்டம் கூட வழக்கம்தான்.

3 ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நிபுணர் குழு

4 பத்து வருடத்திற்கு ஒருமுறை விசாரணைக் கமிஷன்

6 இருபது வருடங்களுக்கு ஒருமுறை ஒரு வரலாற்று நூல்

7 ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை ஒரு பெருமூச்சு

தாவாயிசம் என்ற பெயரின் ஊற்று தாவா என்பதாகும். தாவா என்றால் வழக்கு. தாவா என்ற சொல்லின் ஊற்று தாவாங்கட்டை என்பதாகும். சம்பந்தப்பட்டவர் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் தாவாங்கட்டையை தாங்குவதனால் இந்த பெயர் வந்தது

சிவம்

முந்தைய கட்டுரைதிருவண்ணாமலை
அடுத்த கட்டுரைசென்னை புத்தக கண்காட்சியில்