கரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு

kiraa

துரைசாமி நாயக்கர் என்ற கதை நாயகரின் வழியே பயணிக்கிறது இந்த நெடுங்கதை. கிரா  கதை  சொல்லும்   இலக்கிய வடிவின் முன்னோடி. .அவரின்  குரலின் மூலம்  இந்தக்கதை சொல்லப்படுகிறது  கடும்  உழைப்பாளியான   நாயக்கரின்தெளிவான திட்டமிடலும் முன்னோக்கு சிந்தனைகளும்  வியாபார  நுணுக்கங்களும்   அவரை   பணக்காரராக ஆக்குகின்றன.

வெறும் ஐந்து ஏக்கர் கம்மம்புல் மட்டுமே  விளையும்  மானாவரி நிலம். பொக்கை மண்  என்று குறிப்பிடுகிறார்.  நாத்துக்கூளம் மட்டும் விளைவிக்க முடியும். அதாவது கம்புப்பயிர் கதிர் பிடிக்காமல் வெறும்புல்லாகவே வளர்ச்சி குன்றிவிடும். நாயக்கரின் அண்டை நிலங்களிலும் சாலைகளிலும் இருக்கும் சாணிகளை  பொறுக்கிச்  சேர்த்து நிலத்தில் போடுகிறார்.கோடை உழவு முறையாக செய்யப்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்கிறார்.  மண்வளம் மேம்பட்டு கம்புப் பயிரில்  கதிர்கள் உருவாகி  மணிகள் விளைகின்றன. விரைவிலேயே ஒரு ஏக்கருக்கு  இரண்டு  கோட்டை என்ற  அளவில் மகசூல் எடுக்கிறார். சற்றேறக்குறைய  இரண்டு  டன்களுக்கு அதிகம் என புரிந்துக்கொள்கிறேன்.

இன்றுவரை  கம்புப் பயிரில் ஒரு ஏக்கருக்கு  இந்த அளவே அதிகபட்ச  மகசூல் என்று பதிவாகியிருக்கிறது.  இந்த உயர் விளைச்சலுக்கு  மண்வளம்  மேம்பட்டதே  மிகமுக்கிய காரணம் காரணங்களை  யூகிக்க முடிகிறது.  மண் அரிப்பினால்  மேல் மண் முழுவதுமாக  அடித்துச்  செல்லப்பட்டிருக்கும்.  மேலும் களர் நிலமாக  இருந்திருக்க வேண்டும்.  இந்த  இரண்டு  காரணங்களால்   மண்ணில்  கரிமச்  சத்துக்கள் குறைவாகவும்  நுண்ணுயிர்களின்   செயல்பாடுகள்  இல்லாமலும்  இருந்த காரணங்களினால்   மண்ணில் கரைய முடியாத உப்புக்களான  கார்பனேட் பைகார்பனேட்களின்   அளவு மிகும்போது  மண்ணில் இரும்பு,   துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற  சத்துக்கள் பயிருக்குக்  கிடைக்காது. குறிப்பாக  கம்பு  போன்ற தானியப்  பயிர்களுக்கு இவை  மூன்றும் இன்றியமையாதவை.  அதனால்தான்  பயிர்  வளர்ச்சி குன்றி கதிர்கள்  வளராமல்  வெறும்  நாத்துக்கூளம்   மட்டும் விளைந்திருக்கிறது. கதையினை படிக்குபோது ஏற்படாத   கிளர்ச்சி, பயிர்களில்  சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி  செய்து  காரணங்களை அறிந்தபோது, ஏற்பட்டது.  நாயக்கர் எனக்கு  மானசீக வழிகாட்டியாக திகழ்கிறார்.

பொதுவாகவே  நவீன இலக்கியம் விவசாயிகளின் வாழ்க்கை விவசாயம்  நொடித்துப் போனதால் ஏற்படும் துயரங்களை  மட்டுமே குறிப்பிடுகிறது.  ஆனால் கிரா  மட்டும் வேறுபடுகிறார். நாயக்கர்  எதிர்மறைத்தன்மை இல்லாமல் இயல்பானவராக இருக்கிறார். குறைவான மகசூல் எடுக்கும்  விவசாயிகளின்  செயல்முறைகளை  ஒப்பீடு செய்கிறார்.  ஒரு  தேர்ந்த இசைவல்லுனர் போல  ஒத்திசைவாக  ஒவ்வொரு  செயல்முறைகளையும்  செய்கிறார். அப்படிச் செய்யும் விவசாயிகள்  இன்னும் இருக்கிறார்கள்.  உழவு மாடு பராமரிப்பு,  களை நிர்வாகம்,  காவல்  வைத்தல், விற்பனை  நுணுக்கம்   என ஒவ்வொன்றிலும்   தனித்தன்மையுடன்  இருக்கிறார். தன் சாதனைகளை வெளிப்படுத்துவதே இல்லை. யாருக்கும் சொல்லிக் கொடுப்பதும் இல்லை.  இவர் சொல்லியிருந்தாலும்   மற்ற  விவசாயிகள்  ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியிருப்பார்களா  என்பது  சந்தேகமே .  மனிதாபிமானம் அற்றவர் என்று  எளிதில்  வகைப்படுத்த  முடியாதவராக  இருக்கிறார்.

சரி, கதையின் இலக்கிய சாராம்சம் தான் என்ன? நிலத்தை பெண்மையுடன் உருவகப்படுத்தியிருக்கிறார்  கிரா.   நிலத்தைப்  பண்படுத்துவது  போல பெண்மையைப்  போற்றுவதும்  ஆண்மையின் அடையாளமாக  எழுதாப்  பொருளில் உணர முடிகிறது.  நுண்ணுணர்வு  உள்ளுணர்வு  மிக்க  கிட்டத்தட்ட  ஒரு முற்றும்  துறந்த முனிவரைப்  போல நாயக்கரின்  வாழ்க்கையை  கிரா எழுதியிருக்கிறார்.  அவரின் இறப்பையே  உணரும்  உள்ளுணர்வு  வெளிப்படுகிறது.  அவருக்காக ஏற்றி  வைத்த தீபம்  அணையாமல்  பிரகாசமாய் எரிகிறது.

ஐபோனில்  எழுத முயற்சித்தேன்.  பிழைகள் குறைவாகவும்  விரைவாகவும்  எழுதமுடிந்தது.  சுரேஷ் பிரதீப் ஒரு முக நூல்  விவாதத்தின் போது,   போனிலேயே   எழுதலாமே என்று சில குறிப்புகளை  அளித்தார்.  அவர் கதைகள்   நாவல் என அனைத்தையும் போனிலேயே  எழுதுவதாக  கூறியபோது    வியப்பாக  இருந்தது.  முயற்சித்ததில் எளிதாகவே இருக்கிறது .  இளையவர்களுடன்  நட்பு பேணுவதன்  அவசியத்தை உணர்ந்தேன்.

அன்புடன்

தண்டபாணி

970225_10204195453764858_160073027844960754_n

அன்புள்ள தண்டபாணி,

இக்கதை பற்றி நான் கிரா அவர்களைப்பற்றிய என் கட்டுரையில் மிக விரிவாக விவாதித்திருக்கிறேன். அது ஒரு விவசாயி உருவாவதன் சித்திரம் மட்டுமல்ல, விவசாய மிச்சம் மூலதனமாகத் திரள்வதன் கதையும்கூட. நாயக்கரிடம் விவசாயிக்குரிய விழுமியங்கள் ஏதுமில்லை, லாபநோக்கு மட்டுமே உள்ளது. நாயக்கர் நடந்தே போடும் புதிய ஒற்றையடிப்பாதை முக்கியமான ஒரு படிமம்

ஒரு வேளாண் அறிவியலாளராக உங்கள் வாசிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. இப்படித்தான் பலகோணங்களில் கதைகள் வாசிக்கப்படவேண்டும்

போனில் தட்டச்சு செய்வதன் பெரிய இடர் அதிலுள்ள தானியங்கி சொல்லமைப்புதான். அனைத்துவயல்களில் இருந்தும் என உத்தேசித்து அன்னைவயல்களில் இருந்தும் என தட்டச்சு செய்திருந்தீர்கள். கூகிள் பெரிய கவிஞராகவும் அவ்வப்போது ஆகிவிடும்

ஜெ

நெல்லும் தண்டபாணியும்
முந்தைய கட்டுரைஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்
அடுத்த கட்டுரைஅலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை