இலக்கியத்துள் நுழைதல்…

nave

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க

ஜெ,

ஒரு சாதாரண முதல் நிலை வாசகன் நான். சுஜாதா எழுத்துக்களை மட்டுமே புரிந்துகொள்ளக் கூடியவன். தங்களை நெருங்கும் அறிவுக்கூர்மை என்னிடம் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பே புதுமைப்பித்தன், ஜெயமோகன் என்று வாசிக்க வந்துவிட்டாழும் கூட முழுமையாக புரிந்துகொண்டு ரசிக்க முடியவில்லை. என் இலக்கியத் தரம் என்பது சுஜாதாவோடு நின்றுவிட்டதாகப் படுகிறது. சுந்தர ராமசாமி ஓரளவிற்கு நெருக்கமாகிறார். வாழ்வின் அன்றாட பிரச்சினைகளில் உளன்று எதிலும் அடுத்த நிலைக்கு செல்ல இயலவில்லை. உறுதி எடுத்துக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் எதாவது பிரச்சினையால் தொடர இயலாமல் போகிறது. இலக்கியமும் புரியவில்லை, இலக்கியப் போலிகளையம் இனங்கானத் தெரியவில்லை.

மெய்ஞ்ஞான தேடலோடு, அறிவுப்பூர்வமான தர்க்கங்களோடு, முதல் தர இலக்கிய வாசகனாக தங்களை நெருங்க விரும்புகிறேன்.

ஆர்.எஸ்.லிங்கம்

***

அன்புள்ள லிங்கம்,

முதல் முக்கியமான நல்ல விஷயம் நீங்கள் உங்களை ஆரம்பகால வாசகன் என தன்னுணர்வது. அவ்வுணர்வு இருந்தால் அதிகம்போனால் ஈராண்டுக்குள் குறிப்பிடத்தக்க வாசகனாக ஆகிவிடமுடியும். மிகப்பெரிய பிரச்சினை ஆரம்பகால வாசகனாக உள்ளே நுழைகையிலேயே ஏற்கனவே எல்லாம் அறிந்துகொண்டுவிட்டேன் என்னும் எண்ணத்துடன், அதன் விளைவான உறுதியான முன்முடிவுகளுடன் இருப்பது.

முன்பெல்லாம் அப்படி உள்ளே நுழையும் புதியவாசகன் முதிர்ந்த வாசகர்களையோ எழுத்தாளர்களையோ சந்திக்கவும், உரையாடவும் வாய்ப்பிருந்தது. அங்கே அவனுடைய முன்முடிவுகள் உடையும். தன்முனைப்பும் பழுதுபடும். கற்றல் நிகழும், விளைவான முன்னகர்வும் இருக்கும். துரதிருஷ்டவசமாக இன்று அந்நிலை இல்லை. சமூக ஊடகங்களின் காலம். உள்ளே நுழைந்து ஓரிரு விஷயங்களில் நக்கலாகோவோ ஆக்ரோஷமாகவோ கருத்துச் சொல்லிவிட்டால் எந்த தொடக்கநிலையாளனும் தன்னை எழுத்தாளன், சிந்தனையாளன் என்றெல்லாம் எண்ணிக்கொள்ள முடியும். எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வது, அவர்களை கண்டிப்பது என செயல்பட முடியும். ஒவ்வொரு நாளுமென தன்னிலை உறுதிப்பட்டு ஆணவமாக மாறுவதனால் இவர்கள் பத்திருபதாண்டுக்காலம் இத்தளத்தில் செயல்பட்டாலும் எந்தவகையான கற்றலும், முன்னகர்தலும் நிகழ்வதில்லை. உடன் ஒர் அரசியல்நிலைபாடும் இருக்குமென்றால் அந்த அடையாளத்தை சூடிக்கொண்டு ஆடுவதற்குண்டான வாய்த்தாரிகளையும் அடவுகளையும் சமூகவலைத்தளங்களிலேயே கற்றுக்கொள்ளலாம். ஆதரவுக்கும்பல் ஒன்றும் அமையும்.

நீங்கள் இரண்டுவகையானவர்களை அறிவுத்தளத்தில் சந்திக்கலாம். உங்கள் அறியாமையை, நீங்கள் கற்கவேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து உங்களுக்குக் காட்டுபவர்கள். உங்கள் அறியாமையையே புகழ்ந்து உங்களை ஏற்றிவிடுபவர்கள். முதல்வகையினர் மட்டம்தட்டுபவர்களாகவும் இரண்டாம் வகையினர் தோழமையானவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். ஆனால் இரண்டாம்வகையினர் உண்மையில் தங்கள் அரசியலுக்கும், குழுத்தேவைக்கும் உங்களைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் அன்றி வேறல்ல. நீங்கள் மேலே கற்றுவிடலாகாதென்பதில் அவர்கள் கவனமாக இருப்பதைக் காணலாம்.

நீங்கள் தொடக்கநிலையாளர் என்பதில் நாணுவதற்கேதுமில்லை. எல்லாருமே அப்படித்தான் உள்ளே நுழைகிறார்கள். எந்த அறிவுத்துறையிலும் முதலில் நுழைகையில் ஒரு தயக்கமும் பதற்றமும்தான் உருவாகும். கலைகளில் திட்டவட்டமான பாடங்களோ, புறவயமான நெறிகளோ இல்லை என்பதனால் மேலும் திகைப்பு இருக்கும். இலக்கியம் கலையும் அறிவுத்துறையும் ஒன்றான ஒரு செயல்பாடு

எந்தக்கலையையும் அறிவதற்கு ஒரே வழிதான். சிலகாலம் தொடர்ச்சியாக, சலிக்காமல் அதில் ஈடுபடுதல். எந்த இசையையும் ஆறுமாதம் நாள்தோறும் கேட்டீர்கள் என்றால் அதன் அழகியல் பிடிபடும். இலக்கியமும் அப்படித்தான். தொடர்ச்சியாக வாசியுங்கள். நல்லபடைப்புக்கள் என ஏற்கனவே அறியப்பட்டவற்றை. உங்கள் இயல்பான சுவைத்தரம், அறிவுத்தரத்தை விட ஒரு படிமேலானவற்றை. மிக எளிதிலேயே உங்களுக்கு வாசல்கள் திறக்கும்.

இலக்கியம் அறிவுத்துறை என்பதனால் அதில் இயங்கும் நெறிகளை கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். ஓர் இலக்கியப்படைப்பைப் படித்தபின் அதைப்பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க விமர்சனங்களை வாசித்துப்பாருங்கள். நீங்கள் அந்தப்படைப்பில் எதை கண்டீர்கள், எதைக் காணவில்லை என்பதை குறித்துக்கொள்ளுங்கள். இலக்கியக் கலைச்சொற்களையும், இலக்கிய இயக்கங்களையும் கற்று உளத்தில் நிறுத்திக்கொள்ளுங்கள். நான் எழுதிய ‘நவீன இலக்கியம் ஓர் அறிமுகம்’ உங்களுக்கு உதவும்

இலக்கியவிவாதங்கள் மிக உதவிகரமானவை. ஆரம்பநாட்களிலாவது இலக்கியநிகழ்வுகள், குறிப்பாக விவாத நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள். ஆனால் மூன்று விஷயங்களில் கவனமாக இருங்கள்

1.  இலக்கியம் என்பது அரசியலின் இன்னொரு வடிவம் அல்ல. அதற்கு அரசியலும் ஒரு பேசுபொருள்தான். ஆனால் அது அரசியலையும் உள்ளடக்கிய முழுமைநோக்கை நாடுவது. மானுட உள்ளத்தின் அலைவுகள், மானுட உறவுகளின் சிடுக்குகள், வரலாற்றின் அடுக்குகள், தத்துவம், மெய்யியல் என அதன் எல்லைகள் விரியும். அரசியலை நம் தலைக்குள் ஏற்றி பாறையாக இறுகவைக்கவே இன்றுள்ள சூழல் முயல்கிறது. அதற்கு இடம் கொடுப்பவன் எப்போதைக்குமாக இலக்கியத்தை இழந்துவிடுவான். என்றென்றைக்கும் இலக்கியத்தில் எளிய அரசியலை மட்டுமே பெற்றுக்கொண்டிருப்பான்

2  இலக்கியம் சமகாலத்தில் எழுதப்படலாம். ஆனால் அது சமகாலத்தில் நிலைகொள்வதில்லை. அதற்கு ஒரு காலம்கடந்த தன்மை உண்டு. அன்றாடக் கருத்துலகு சமகாலச் செய்திகளையும் உணர்வுகளையுமே அலம்பிக்கொண்டிருக்கும். இலக்கியம் அவற்றின் ஆழத்திலுள்ள மானுட இயல்புகளின், வரலாற்றுப்போக்குகளின் மாறாத தன்மையையே தேடிச்செல்லும். சமகால விஷயங்களில் மூழ்காதவனே இலக்கியவாசகனாக முடியும்

3. இலக்கியப்பூசல்களில் மையப்பேசுபொருள் மட்டுமே முக்கியமானது. இலக்கியத்தில் ஆணவப்பூசல்களும் தனிநபர்க் காழ்ப்புகளும் எப்போதுமுண்டு. இவற்றில் பெரும்பகுதியை உருவாக்குபவர்கள் இலக்கியவாதியாக ஆகமுடியாமல் போன அரை அறிவுஜீவுகளும் எழுதமுடியாத அரை எழுத்தாளர்களும்தான். அவற்றைப் புறக்கணிக்கவும், மெய்யான விவாதங்களில் பேசப்படும் பொருளை மட்டுமே கவனிக்கவும் பழகுங்கள்.புது வாசகர்கள்  இலக்கியவம்புகளில் ஈடுபட்டு அவ்வழியே அழிந்துபோவது சிற்றிதழ்ச்சூழலில் அடிக்கடிக் காணக்கிடைப்பது என்பதனால் இந்த எச்சரிக்கை

தொடர்ந்து ஈடுபடுங்கள். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஆங்கிலேயரின் இரட்டைப்பண்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅமிஷ் நாவல்கள்