ஈரோட்டில் இருந்து…

d

வெண்முரசின் அடுத்த நாவலுக்கான உளநிலையில் இருக்கிறேன். இதை ஒரு திகைப்பு என்று சொல்லலாம். எப்போதுமே தொடங்குவது வரை அடுத்து என்ன எழுதப்போகிறேன் என்ற பதற்றம்தான் இருக்கும். நாவலின் வடிவம் குறித்த எந்தத் திட்டமும் இருக்காது. முதல் அத்தியாயம்தான் மொத்த நாவலின் வடிவையும் முடிவுசெய்கிறது. அந்த முதல் அத்தியாயத்தை முதல் வரி, முதல் பத்தி முடிவுசெய்கிறது. முதல் அத்தியாயத்தை மையமாகக்கொண்டு தேடிக்கண்டடைந்துகொண்டே செல்வது என் பணி

இத்தகைய சூழலில் எப்போதும் ஐயங்கள் அலைக்கழிக்கின்றன. எழுதியவை சென்றடைகின்றனவா என்ற ஐயம் படுத்தி எடுக்காத எழுத்தாளன் இல்லை. அதிலும் இத்தகைய பெரிய ஆக்கம், ஒன்றுக்குமேற்பட்ட தளங்களைத் தொட்டுச்செல்லும் படைப்பு, ஓரளவேனும் வாசிக்கப்படுவதற்கு ஆழ்ந்த கவனம் தேவை. நுட்பமானவற்றை தொட்டுணரும் தன்மையும் ,உணர்வுரீதியாக அணுகும் கூர்மையும், முன்முடிவுகளையும் முந்தைய வாசிப்புப்பழக்கங்களையும் கடந்துசெல்லும் சுதந்திரமும் தேவை. அத்துடன் தொடர்ச்சியாக வாசித்தவற்றைத் தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அத்தகையோர் நம் சூழலில் பெரும்பாலும் வெளிக்குத்தெரிவதில்லை.

வெண்முரசு எழுதத் தொடங்கும்போது நான் எதிர்பார்த்தது நூறு வாசகர்களை. அவர்கள் இறுதிவரை வாசிக்கவேண்டும் என்று விரும்பினேன். இன்று உருவாகியிருக்கும் மாபெரும் வாசகப்பரப்பு மிக வியப்புக்குரியது. இத்தனை ஆயிரம்பேர் இத்தனை ஆயிரம் பக்கங்களை வாசிப்பது தமிழில் இதற்கு முன் நடந்திருக்காது. அத்துடன் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும் நுண்வாசிப்புகள் இதை ஊக்கம் குன்றாமல் எழுதிச்செல்ல உதவுகின்றன. பிற எவரையும் விட அவ்வாசகர்களுக்கு நான் கடன்பட்டவன்

வேணுவெட்ராயன்
வேணுவெட்ராயன்

தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி
தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி

மணிபாரதி,அந்தியூர் மணி
மணிபாரதி,அந்தியூர் மணி

இத்தகைய நூல்களை கூட்டுவாசிப்பினூடாகவே அறியமுடியும். ஒருவர் விட்ட தளத்தை இன்னொருவர் நிரப்புவதனூடாக நிகழும் வாசிப்பு ஒன்றாகத் திரள்கையில் ஒரு பேருள்ளத்தின் அறிதலாக மாறிவிடுகிறது. கடிதங்கள், குழுமங்கள் வழியாகவும் பாண்டிச்சேரி, சென்னை போன்ற ஊர்களில் நிகழும் விவாத அரங்குகள் வழியாகவும் அந்த கூட்டுவாசிப்பு நிகழ்கிறது. ஆனால் எதிலும் நான் கலந்துகொள்வதில்லை. ஏனென்றால், வாசிப்புக்கு ஏற்ப புனைவு மாற்றம்கொள்ளக் கூடாது. எழுதும்போது அங்கே வாசகனே இல்லை. அது ஆசிரியனுக்கு மட்டுமே உரிய கனவுலகு. மேலும் இன்றுள்ள வாசகனுக்காக புனைவுகள் எழுதப்படுவதில்லை. வழிவழியாக வந்துகொண்டிருக்கும் வாசகனையே புனைவுகள் எதிர்கொள்கின்றன. இன்றைய சுவை, இன்றைய கருத்துநிலை ஆகியவை இலக்கியத்துக்கு ஒரு பொருட்டே அல்ல. நிகழ்கால மதிப்பீடுகளால் அல்ல, காலமிலா ஆழத்திலுள்ள ஆசிரியனின் கனவில், இலட்சியத்தில் இருந்தே படைப்புக்கள் உருவாகவேண்டும்.

இதுவரை சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் நிகழ்ந்த இரு வாசகர்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவை இரண்டுமே மிக உளநிறைவளிப்பவையாக இருந்தன. அவை தொடங்கி சிலகாலம் ஆகிவிட்டிருந்தமையால் கூட்டுவாசிப்பு ஒவ்வொருவரையும் நுண்ணிய வாசகராக ஆக்கிவிட்டிருந்ததை உணரமுடிந்தது. அந்த நம்பிக்கையே ஈரோட்டில் நிகழ்ந்த வெண்முரசு கூட்டத்திற்குச் செல்ல ஊக்குவித்தது. ஆயினும் விவாதங்கள் நிகழும் முதல்நாள் செல்ல நான் விரும்பவில்லை. இரண்டாம்நாள் மதியம் நண்பர்களையும் வாசகர்களையும் சந்திக்கத்தான் முதன்மையாகச் சென்றேன்.

IMG_2138

ஐரோப்பா பயணத்தினூடாக முந்தைய நாவலில் இருந்து பெருமளவுக்கு விலகி வந்துவிட்டேன். ஈரோட்டுக்குச் சென்று அடுத்த நாவலுக்கான தூண்டுதலைப் பெறவேண்டுமென்று தோன்றியது. ஈரோட்டுக்கு 25 ஆம் தேதி இரவு ரயிலில் சென்று அதிகாலையில் இறங்கினேன். கிருஷ்ணன், அந்தியூர் மணி, சந்திரசேகர் ஆகியோர் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார்கள். டீ குடித்துவிட்டு பேருந்தில் வந்திறங்கிய பாலசுந்தரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினோம். நண்பர் செந்தில்குமார் வீட்டில் குளித்துவிட்டு காஞ்சிகோயிலில் அமைந்த பண்ணைவீட்டுக்குச் சென்றேன்

முந்தையநாள் நிகழ்ந்த சந்திப்புக்கு வந்த நண்பர்கள் காலைநடை சென்றிருந்தார்கள். பேசிக்கொண்டிருக்கையிலேயே ஒவ்வொருவராக வந்தார்கள். மறுநாள் நிகழ்ச்சிக்கு மேலும் நண்பர்கள் வந்தனர். காலைச்சிற்றுண்டிக்குப்பின் அமர்வுகள் தொடங்கின. அந்தியூர் மணி [மணிபாரதி] வெண்முரசில் உள்ள வேறு இலக்கியங்களின் எடுத்தாள்கை பற்றி பேசினார். பாண்டிச்சேரி கமலக்கண்ணன் மழைப்பாடலின் குறியீடுகள், உணர்ச்சித்தருணங்கள் பற்றிப் பேசினார். திருமூலநாதன் மழைப்பாடலில் தமிழ்ச்செவ்விலக்கியங்களின் வரிகள் எவ்வகையில் ஆளப்பட்டுள்ளன என்று பேசினார். வேணு வெட்ராயன் நீலம் நாவலின் புனைவாக்கத்தை உளவியல் கோணத்தில் ஆராய்ந்து பேசினார்.அக்கட்டுரைகளைப்பற்றி விவாதங்கள் நிகழ்ந்தன.

20180826_084543

முந்தையநாள் நிகழ்வுகளைப்பற்றி கிருஷ்ணன் சொன்னார். மதுசூதனன் சம்பத் முதல் அரங்கைச் சிறப்பான ஓர் உரையுடன் தொடங்கிவைத்தார் என்றும் ஜெயகாந்த் ராஜு, ராகவ், ரகு, பாரி ஆகியோரின் கட்டுரைகளும் பங்களிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது என்றும் சொன்னார். நான் பத்துநிமிடம் வெண்முரசு குறித்து உரையாடி அதன்பின் கேள்விகளுக்கு மறுமொழி சொன்னேன். பின்னர் வழக்கம்போல அரட்டை. மதியத்துடன் நிகழ்ச்சி முடிந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றார்கள். மாலையில் கிளம்பி ஈரோடு வந்தேன். இரவு ஒன்பது மணிக்கு எனக்கு நாகர்கோயிலுக்குப் பேருந்து.

ஒரு படைப்பை எழுதும் எழுத்தாளனுக்கு எழுதும்போதும்சரி, பின்னரும் சரி திறனாய்வுகளால் எப்பயனும் இல்லை. சொல்லப்போனால் எதிர்விளைவே உருவாகும். திறனாய்வுகள் அவற்றின் உச்சநிலையில்கூட சமகாலம் சார்ந்தவை. நிகழ்காலம் நோக்கி எழுதும் கட்டாயத்தை ஆசிரியனுக்கு அளிப்பவை. நிகழ்கால அறிவுத்தளம் படைப்புக்கு மிகப்பின்னால் எங்கோதான் நின்றிருக்கும்.  திறனாய்வின் நோக்கம் ஒன்றே, மேலும் கூர்ந்த வாசிப்பை, கூட்டுவாசிப்பை உருவாக்குவது. அவ்வாசிப்பினூடாகத்தான் படைப்பை நோக்கி வாசகன் வந்தடைகிறான்.

ஆனால் படைப்பு பரவலாகப் படிக்கப்படுகிறது, நுட்பமாக பின்தொடரப்படுகிறது என்பதைப்போல ஆசிரியனுக்கு ஊக்கமூட்டுவதும் வேறில்லை. அவன் எதிர்வினைகளைக் கவனிப்பது அதற்காக மட்டுமே. இவ்விரட்டைநிலை ஒருவகையான அலைபாய்தல்தான். ஈரோடு சந்திப்பு மீண்டும் என் வாசகர்களைப் பற்றிய நம்பிக்கையை உறுதிசெய்தது.

IMG_2142

செல்லும்போது ரயிலில் அருணாச்சலம் மகாராஜன் எழுதிய கிராதம் குறித்த கட்டுரையை வாசித்தேன். மிக விரிவாக, நாவலின் பல்வேறுகூறுகளைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்ட நுட்பமான கட்டுரை அது. கிராதம் இப்போது நான் கடந்துவந்துவிட்ட நாவல்.அக்கட்டுரையினூடாக முற்றிலும் புதியதாக அந்நாவலை நான் சென்று உணர்ந்தேன். அது ஓர் ஊக்கத்தை அளித்தது. மிக அருகே அருணாச்சலம் மகாராஜனை உணர்ந்தேன். [கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்]

திரும்பி வரும்போது தோன்றியது ஒருவேளை நாளையே திசைதேர்வெள்ளம் நாவலைத் தொடங்கிவிடுவேன் என்று. இன்று தொடங்கிவிட்டேன்.

கனவிருள்வெளியின் திசைச் சுடர், கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்
முந்தைய கட்டுரைஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்
அடுத்த கட்டுரைகாந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா