பாலகிருஷ்ணன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ.

வணக்கம்.

பல நாட்களுக்குப் பின் உங்கள் தளத்தில் உணர்ச்சிபூர்வமாக பி.கெ.பாலகிருஷ்ணன் குறித்த கட்டுரையைப் படித்தேன். எழுத்தின் ஆளுமையும் வீரியமும் எல்லோருக்கும் வசப்படுவதில்லை. நான் மலையாள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசித்ததில்லை. எனினும், உங்கள் சித்திரத்திலிருந்து, பி.கெ.பாலகிருஷ்ணன் என்ற உங்கள் ஆதர்ஷ எழுத்தாளரின் படைப்பையும் படிக்க வேண்டும் என்ற உந்துதல் உண்டானது.

வரலாறு மூலமாகச் சமூகத்தைப் பார்வையிடுவது, மனிதநேயம் உள்ளவர்களின் கடமை என்று உணர்கிறேன். அவரைப் பற்றி உளப்பூர்வமான அறிமுகத்தை அளித்ததன் மூலமாக குருதக்ஷிணையை செலுத்தி இருக்கிறீர்கள். தமிழகத்தின் துரதிர்ஷ்டம், ஜால்ராதாசர்களே இங்கு எழுத்தாளர்களாகவும் இலக்கியவாதிகளாகவும் அறியப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் கட்டுரை சிறு உறுத்தலையேனும் ஏற்படுத்தக்கூடும்.

‘பூமியில் இன்று வாழும் எந்த சிந்தனையாளனிடமும் எனக்கு தாழ்வுணர்ச்சி இல்லை’ என்ற அவரது கர்வம், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்க வேண்டியது. அது இல்லாததால்தான், ”நீ தமிழகத்தின் முகவரி; தமிழ் மொழியின் அகவரி’ என்றெல்லாம் சில தமிழ்ப் புலவர்கள் யாரையும் புகழ்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கட்டுரைக்கு நன்றி.

என,

சேக்கிழான்

அன்புள்ள சேக்கிழான்,

நன்றி

நினைவுகளை பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது, அதற்கான காலம் இது. இலக்கியத்தை ஒரு தொடர் ஓட்டமாக கண்டால் நாம் யாரிலிருந்து யாரை நோக்கிச் செல்கிறோம் என்பது முக்கியம் என்று படுகிறது.

ஜெ

==============

பி.கெ.பாலகிருஷ்ணன் பற்றிய கட்டுரை அற்புதமாக இருந்தது. உங்கள் எழுத்து நடை அவரை என் அருகில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. பாராட்டுக்களும், நன்றியும்

சந்திரமௌலி

அன்புள்ள சந்திரமௌலி,


ஓர் எழுத்தாளனின் ஆளுமையை பதிவுசெய்ய இன்னொரு எழுத்தாளனால்தான் முடியும். அப்படி பதிவாக வேண்டியது அவசியமும் கூட. பாலகிருஷ்ணனைப்போன்றவர்கள் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைசென்னை புத்தக கண்காட்சியில்
அடுத்த கட்டுரைகண்டவை, கவலைப்பட்டவை