ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

ராய் மாக்ஸம்
ராய் மாக்ஸம்

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

லண்டனில் மிக மையமான ஓர் இடத்தில் ராய் மாக்ஸம் வசிக்கிறார். அவர் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பிவந்து கையிலிருந்த பணத்துக்கு வாங்கிப்போட்ட இடம் அது. இன்று அது மிக மதிப்பு மிக்கது. கீழே கடைகள். மேலே அவருடைய இல்லம். அவர் மணம் செய்துகொள்ளாதவர். அவருடைய முன்னாள் தோழிகள் அன்றி இப்போது துணை எவருமில்லை. தானாகவே சமையல் செய்துகொள்கிறார். சன்னல்களில் வளர்ந்திருக்கும் செடிகளுக்கு நீரூற்றுகிறார். நாகரீகமான, பிரிட்டிஷ்த்தனமான, பிரம்மசாரி அறை. நிறைய ஒலிநாடாக்களைக் கண்டு நான் புன்னகைத்துக்கொண்டேன். பெரிசுகள் உலகமெங்கும் ஒரே வார்ப்புதான், சேர்த்துவைத்தவற்றை விட்டுவிட மனமிருக்காது

லண்டனின் தெருக்கள் நெரிசலானவை. நகர்மையத்தின் கட்டிடங்கள் பொதுவாக மிகப்பழையவை. குறுகலான படிகள் கொண்டவை. நகருக்கு வெளியே அமைதியான பெரிய புல்வெளிகளும் அழகிய மாளிகைகளும் உள்ளன. ஆனாலும் நகர்மையத்திற்குத்தான் சந்தை மதிப்பு அதிகம். ஏனென்றால் அங்கே தங்குவது கௌரவம்.

நானும் அருண்மொழியும் சிறில் அலெக்ஸ் மற்றும் அவர் மனைவி சோபனாவும் அவரைப் பார்க்கச் சென்றபோது ராய் உவகை அடைந்தார். ராய் எப்போதுமே குடும்பத்துடன் இருக்க விரும்புவர். நாங்கள் ஏற்பாடு செய்த தமிழகப் பயணத்தின்போது அவர் விடுதிகளில் தங்க மறுத்துவிட்டார். வீடுகளில் குடும்பத்துடன் தங்கினார், எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும். வெளியே போய்விட்டு வந்தால் ‘ஏருனா’ என்று அழைத்தபடி நேராக சமையலறைக்கே சென்று அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருப்பார். மென்மையான நகைச்சுவை கொண்ட ராய் பெண்களிடம் பேசும்போது குறும்பாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பார். சிறில் அலெக்ஸின் மனைவி சோபனா அவருக்காக சமைத்துக் கொண்டுவந்த உணவை வாங்கி குளிர்பெட்டிக்குள் வைத்தார் எங்களுக்கு தேநீர் போட்டுத்தந்தார்.

Jeyamohan UK visit 008

ராய் சரியான பழையபாணி பிரிட்டிஷ் சார்புகள் கொண்டவர். கிரிக்கெட் மோகம். காபி குடிப்பதில்லை, டீதான். காபி அமெரிக்கர்கள் குடிக்கும் பானம் என்று நக்கல்வேறு. கால்பந்து நுணுக்கமில்லாத முரட்டு ஆட்டம்.  இந்தியாவிற்கு பலமுறை வந்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மக்களுடன் செல்வதை விரும்புபவர். நான் குளிர்சாதன  பெட்டியில் பதிவுசெய்தமைக்காக வருந்தினார். ரயில் பயணிகளுடன் ஓரிரு நிமிடங்களில் ஒண்ணுமண்ணாக ஆனார். ‘கல்யாணமாயிற்றா?” என்ற கேள்விக்கு மட்டும் “இந்தியாவில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கண்களைச் சிமிட்டியபடிச் சொல்வார். பெண்கள் கேட்டால் ‘உங்களைப்போல ஒருவரை’ என்று சேர்த்துக்கொள்வார்.

ராய் மாக்ஸம் [Roy Moxham ] பிரிட்டிஷ் எழுத்தாளர். 1939 ல் இங்கிலாந்தில் வொர்ஸெஸ்டர்ஷயரில் எவெஷம் என்னும் ஊரில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். 1961ல் இன்றைய மலாவியிலுள்ள ந்யாஸாலேண்டுக்கு ஒரு தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகியாகச் சென்றார். 1973ல் லண்டன் திரும்பி  ஆப்ரிக்க கலைப்பொருட்கள் மற்றும் பழைய இதழ்களுக்கான ஒரு விற்பனைநிலையத்தை தொடங்கினார். 1978ல் கேம்பர்வெல் கலைக்கல்லூரியில் சேர்ந்து பழைய நூல்களைப் பராமரிக்கும் பணியைக் கற்றுக்கொண்டார். காண்டர்பரி தேவாலயத்தில் பழைய ஆவணங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார்.  லண்டன்பல்கலையில் நூல்பராமரிப்பாளராக பணியாற்றி 2005ல் ஓய்வு பெற்றார்

ராயின் முதல் நூல் தேயிலையின் வரலாறு பற்றியது. இந்தியா வந்து மறைந்த கொள்ளைக்காரியான பூலன்தேவியுடன் தங்கி அவருடைய வரலாற்றை எழுதினார். [Outlaw: India’s Bandit Queen and Me,2010]  இவ்விரு நூல்களும் அவருக்குப் பெரும்புகழை ஈட்டித்தந்தவை. ஆனால் அவர் பெரிதும் கவனிக்கப்பட்டது அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் வேலி குறித்து எழுதிய The Great Hedge of India என்ற நூலுக்காகத்தான்.

Jeyamohan UK visit 320

பிரிட்டிஷ் இந்தியாவின் தொடக்க நாட்களில் இந்தியநிலத்தின்மேல் அவர்களுக்கு நேரடிக் கட்டுப்பாடு இருக்கவில்லை. ஆகவே நிலவரி பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவர்களுக்கிருந்த முதன்மையான வருவாய் வணிகம் மூலம் வந்ததும் மன்னர்களிடம் பெற்ற கப்பமும் சுங்கமும்தான். சுங்க வருவாயை பெருக்கும்பொருட்டு அவர்கள் உப்புக்கு வரிவிதித்தனர். உப்பு இந்தியாவின் தெற்கே கடற்கரைப்பகுதிகளில் உருவாகி வண்டிப்பாதைகளினூடாக வடக்கே விரிந்திருந்த கங்கைவெளிக்கும் இமையமலைப்பகுதிகளுக்கும் செல்லவேண்டியிருந்தது. அன்று அரிசிக்கு நிகரான விலை உப்புக்கு இருந்தது. வெண்தங்கம் என்றே அழைக்கப்பட்டது.

உப்புவண்டிகளுக்கு சுங்க வரி விதிக்கும்பொருட்டு பிரிட்டிஷார் இந்தியாவுக்குக் குறுக்கே முள்மரங்களை நட்டு அவற்றை இணைத்து மிகபெரிய வேலி ஒன்றை அமைத்தார்கள். மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. 12 அடி உயரம் உடையது அன்று உலகிலிருந்த மாபெரும் வேலி அது. அதில் வாயில்களை அமைத்து காவலர்களை நிறுத்தி சுங்கம் வசூலித்தார்கள். ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளமிருந்த அந்த வேலியில் 1872ல் கிட்டத்தட்ட 14000 காவல் நின்றார்கள்.

Jeyamohan UK visit 004-COLLAGEஇந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை.    ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது.  . அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்லியிருந்தார். ராய் வியப்படைந்து அந்த வேலி பற்றிய ஆவணங்களைத் திரட்டினார்.  அதற்காக பயணம் செய்தார். அப்பயணமும் அவ்வேலி குறித்த கண்டடைதலும்தான் உப்புவேலி [தமிழில் சிறில் அலெக்ஸ்]

பிரிட்டிஷார் 1803  முதல் இந்த வேலியை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை 1843 ல் கட்டிமுடித்தார்கள். பிரிட்டிஷார் இந்தியாமேல் முற்றதிகாரத்தை அடைந்து நிலவரியை ஒழுங்குபடுத்தி கடற்கரைகளை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது உப்புவேலி தேவையில்லாமலாகியது. கைவிடப்பட்டு அழிந்தது. சிலருடைய நினைவுகளில் மட்டும் அது எஞ்சியிருந்தது.  மத்தியப்பிரதேசத்தில் அவ்வேலியின் எச்சங்களை ராய் கண்டுபிடித்தார். இன்று அங்கே ஓர் உணவகம் உள்ளது, உலகமெங்கும் இருந்து ஆய்வாளர்கள் வருகிறார்கள்.

south-kensington

ராயின் நூலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் அந்த வேலி உண்மையில் இந்தியாவுக்குச் செய்த அழிவு என்ன என்று அவர் சொல்லியிருப்பதுதான். உப்பு மட்டுமல்ல உணவுத்தானியமும் இந்தியாவில் வண்டிகள் வழியாகவே உள்நாடுகளுக்குச் சென்றது. 1870களில் இந்தியாவில் வந்த மாபெரும் பஞ்சத்தில் மேற்குப்பகுதியில் தேவைக்கும் மேலாக உணவுத்தானியம் விளைந்தது. மறுபக்கம் கிழக்கில் மழைபொய்த்து பெரும்பஞ்சம் வந்தது. உப்புவேலி உணவு மேற்கிலிருந்து கிழக்கே செல்லவிடாமல் தடுத்துவிட்டது. கூடவே உப்பின்விலையும் தாறுமாறாக ஏறியது. மக்கள் பட்டினியாலும் உப்புக்குறைபாடாலும் கோடிக்கணக்கில் செத்து அழிந்தனர். அவர்களைப்பற்றிய முறையான கணக்குகள் கூட இன்றில்லை. இந்திய வரலாற்றாசிரியர்கள் அவர்களைப்பற்றி பெரிதாக எழுதியதுமில்லை.

ராயின் The Theft of India: The European Conquests of India, 1498-1765 இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கம் தொடங்கிய காலம் முதல் காலனியாதிக்கம் வரை நிகழ்ந்த தொடர்ச்சியான சூறையாடலின் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இன்று உலகமெங்கும் வலுவடைந்துள்ள காலனிய – பின்காலனிய ஆய்வுகளில் மிகமுக்கியமான ஒரு பாய்ச்சல் இந்நூல். ஆகவே ஏகாதிபத்தியத்தின் நல்ல பக்கங்களை முன்னிறுத்த விழைபவர்களுக்கு எரிச்சலை ஊட்டியதும்கூட. ராயின் நூல் முக்கியமான ஒரு பார்வையை உருவாக்குகிறது. இந்தியாமேல் படையெடுத்துவந்த போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் நேரடியாக மானுட அழிவையும் செல்வ இழப்பையும் உருவாக்கியவர்கள். ஆனால் இருநூறாண்டுக்கால பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவான உயிரிழப்பும் பொருளிழப்பும் பற்பல மடங்கு.

அமர்த்யா சென்
அமர்த்யா சென்

இந்தியப் பஞ்சங்களைப்பற்றி இந்திய ஆசிரியர்கள் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பலகாரணங்கள். ஒன்று, முதன்மை ஆவணங்கள் அனைத்தும் லண்டனில் இருந்தன என்பது. இன்னொன்று, பொதுவாக ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் பிரிட்டிஷாரை எதிர்மறை வெளிச்சத்தில் காட்ட விரும்பியதில்லை. அது ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களை எரிச்சலூட்டி இவர்களுக்குக் கிடைக்கும் சர்வதேசக் கவனிப்பை இல்லாமலாக்கும். இவர்கள் தேசியவெறியர்கள் என முத்திரைகுத்தப்படுவார்கள். அது கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு மிகப்பெரிய தடை. மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களுக்கு எப்போதுமே ஐரோப்பிய வழிபாட்டு நோக்கு உண்டு. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஆங்கிலேய ஐரோப்பிய வாசகர்களுக்கு எரிச்சலூட்டும் எதையும் எழுத இயலாது.

ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிற காலனிநாடுகளிலும் உருவாக்கப்பட்ட செயற்கைப்பஞ்சங்களைப்பற்றிய ஆய்வுகள் வர தொடங்கின. இந்தியச் சூழலில் அமர்த்யா சென் 1998ல் நோபல்நினைவுப் பரிசு பெற்றபின் அவர் பஞ்சங்களைப் பற்றி எழுதிய நூல்கள் பேசப்படலாயின. தொடர்ச்சியாக கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் வெளிவந்தன.

1933ல் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் பிறந்தவர் அமர்த்யா சென். அவருடைய தாத்தா க்ஷிதிமோகன் சென் சாந்திநிகேதனத்தின் ஆசிரியராக இருந்த புகழ்மிக்க இந்துஞான அறிஞர். [இந்துஞானம் எளிய அறிமுகம்- க்ஷிதிமோகன் சென். தமிழாக்கம் சுனீல் கிருஷ்ணன்]. கல்கத்தா பல்கலையிலும் கேம்பிரிட்ஜிலும் பயின்ற அமர்த்யா சென் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பொருளியல் ஆசிரியராக இருந்தார். ஹார்வார்ட் பல்கலையில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். வளர்ச்சிநிலைப் பொருளியலின் நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இந்தியப்பஞ்சங்கள் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டவை என்று அமர்த்யா சென் விரிவாக விளக்குகிறார். அப்பார்வை இந்தியாவில் ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது.

சர்ச்சில் பொம்மையுடன் மதுஸ்ரீ
சர்ச்சில் பொம்மையுடன் மதுஸ்ரீ

இந்திய அறிவுச்சூழலில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய நூல் மதுஸ்ரீ முகர்ஜி எழுதி 2010 ல் வெளிவந்த  Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II . மதுஸ்ரீ முகர்ஜி வங்காளத்தில் பிறந்தார். ஜாதவ்பூர் பல்கலையில் இயற்பியலில் பட்டம்பெற்றார். சிகாகோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றபின் கலிஃபோரினியா தொழில்நுட்ப கல்விநிலையத்தில் மேலதிக ஆய்வை மேற்கொண்டார். அறிவியல், பொருளியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இப்போது ஜெர்மனியில் ஃப்ராங்பர்ட் நகரில் வசிக்கிறார்.

மதுஸ்ரீயின் நூல் பொருளியல் மாணவர்களுக்குரியதல்ல, பொதுவாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே சீண்டும் தலைப்பும் விறுவிறுப்பான நடையும் கொண்டிருந்தது. அத்துடன் உறுதியான ஆதாரங்களுடன் திட்டவட்டமான கருத்துக்களைச் சொன்னது. இரண்டாம் உலகப்போரில் வங்கம்,பிகார் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்களில் முப்பதுலட்சம் பேர் வரை உயிரிழந்தனர். ஏற்கனவே நிகழ்ந்த இரு மாபெரும் பஞ்சங்களில் கோடிக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்த பின்னர் இப்பஞ்சம் உருவாகியது. முந்தைய பஞ்சங்களிலிருந்து அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதோடு மேலும் அலட்சியமான நிலைபாட்டையே சென்றடைந்தது. பஞ்சம் அந்த அலட்சியத்தின் விளைவு

Jeyamohan UK visit 025-COLLAGE

எப்படியாவது உலகை வென்றாகவேண்டும் என்னும் கனவில் இருந்த ஏகாதிபத்தியம் பட்டினிச்சாவுகளை பொருட்டாக நினைக்கவில்லை, அதை போர்ச்சாவுகளின் ஒரு பகுதியாகவே நினைத்தது.வின்ஸ்டன் சர்ச்சில் ’இந்தியாவில் பஞ்சத்தில் மக்கள் சாகிறார்கள் என்று குறைசொல்கிறார்கள். முந்தைய பஞ்சங்களில் பல லட்சம் பேர் செத்தார்கள். அப்படியென்றால் மீண்டும் சாவதற்கு எங்கிருந்து ஆட்கள் வந்தார்கள்? இந்தியர்கள் எலிகளைப்போல. ஒவ்வொரு இந்தியனும் பல குழந்தைகளைப் பெற்று பெருகுவார்கள்’ என்றார்.

இரண்டாம் உலகப்போரின் பொருட்டு இந்தியாவிலிருந்து ஏராளமான உணவுத்தானியம் ஏற்றுமதியானதே பஞ்சத்திற்கான முதன்மைக் காரணம். அந்த ஏற்றுமதியைக் குறைக்க சர்ச்சில் உறுதியாக மறுத்துவிட்டார். அது சர்ச்சில் இந்திய மக்கள்மேல் நிகழ்த்திய ரகசியப்போர் என்று மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் குற்றம்சாட்டுகிறது. பொதுவாக பொருளியல்நூல்களுக்கு இருக்கும் பற்றற்ற நடை இல்லை என்றாலும் மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் எவராலும் ஆதாரபூர்வமாக மறுக்கமுடியாததாகவே இன்றுவரை உள்ளது. கூடவே பல்லாயிரம்பேரால் படிக்கப்பட்டு பிரிட்டிஷ்காலப் பஞ்சங்களைப்பற்றி இந்திய அறிவுலகம் பேசியே ஆகவேண்டும் என்னும் நிலையை அது உருவாக்கியது. இன்று ஏராளமான நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ராயுடன் லண்டனில் உலவச்செல்வது ஒரு துன்பியல் அனுபவம். அவர் அங்குள்ள பப்களை தவிர எதைப்பற்றியும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொரு பப்புக்கும் தனித்தனியான சமூகப்பின்புலமும் பண்பாட்டு வேறுபாடுகளும் அதன் விளைவான தனித்தன்மையும் உண்டு என்றார். மாலையில் அன்றைய மனநிலைக்கேற்ப பப்பை தெரிவுசெய்து சென்று அமர்ந்து இரவில் திரும்புவது அவருடைய வாழ்க்கை.

ukd

ராய் சொன்னபின்னர்தான் பப் என்பதை அறியும் யோகமில்லாதவனாகிய நான் செல்லும் வழியிலுள்ள மதுவிடுதிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவற்றின் முகப்பில் சாலையோரமாகவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அனைவருமே மிக ஓய்வான மனநிலையில் காணப்பட்டனர். கண்முன் ஒரு பீரோ ஒயினோ விஸ்கியோ இருக்கையில் ஓய்வாகத் தளர்த்திக்கொள்ளவேண்டும், அர்த்தமில்லாத சின்னப்பேச்சுக்களை பேசவேண்டும் என அவர்கள் உளம்பழகியிருக்கிறார்கள்

உண்மையில் ஐரோப்பிய நகரங்களில் நாம் காணும் புறப்பகுதி வாழ்க்கை தமிழகத்திலென்றல்ல இந்தியநகரங்கள் எதிலும் இல்லாத ஒன்று. இந்தியாவில் நகரம் என்றால் அங்கே வணிகநிலைகளும் அலுவலகங்களும் தொழில்முறைவிடுதிகளும் உணவகங்களும் தேனீக்கூடு போல மக்கள் செறிந்து பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். சாலைகள் அனைத்துமே நெரிசலானவை. சென்னைபோன்ற நகர்களில் பூங்காக்களோ சதுக்கங்களோ இல்லை. மெரினாவை மாபெரும் சந்தைக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். ஓய்வாக மக்கள் அமர்ந்திருக்கும் ஓர் இடத்தை இங்கே எங்கும் காணமுடியாது. ஏனென்றால் அதற்கென்ற இடங்களே இல்லை. சென்னையில் நட்சத்திரவிடுதிகளின் மதுக்கூடங்களைத் தவிர அமர்ந்து பேச இடம் என ஏதுமில்லை.

pub

ஒரு மாநகர் இப்படி இடைவெளியே இல்லாமலிருப்பதுபோல மூச்சுத்திணறும் அனுபவம் ஏதுமில்லை. இந்தியாவில் எந்த வெற்றிடத்தைக் கண்டாலும் அங்கே கட்டிடங்களைக் கட்டவே நம் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பெருநகர்களுக்கு வெற்றிடம் நுரையீரல்போல என அவர்கள் உணர்வதில்லை. நம் நகரங்கள் உண்மையில் நகரங்களே அல்ல, மக்கள்செறிந்த கட்டிடக்குவியல்கள்.நான் சென்னையை நாடாமலிருப்பதற்கு முதற்காரணம் இதுவே.

ஐரோப்பிய நகரங்கள் அனைத்திலுமே மிகப்பெரிய பூங்காக்கள் உள்ளன.  பெரும்பாலான நகரங்களின் மையங்களில் மிகப்பெரிய நகர்ச்சதுக்கங்கள் உள்ளன. அங்கே வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே புகை இல்லை. சதுக்கங்களில் மக்கள் சட்டையை கழற்றிவிட்டு படுத்து வெயில்காய்வதை, புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பதை, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பல நகர்களில் நகரின் மையப்பகுதியிலுள்ள தெருக்களில் வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை, மின்சாரத்தால் ஓடும் டிராம்களைத் தவிர. இதனால் புகையும் தூசியும் கிடையாது. எல்லா விடுதிகளுக்கும் தெருவோரத்தில் திறந்தவெளி உணவக அமர்விடங்கள் உள்ளன. மக்கள் சாலைரமாக அமர்ந்து உண்ண விரும்புகிறார்கள்.

sq

லண்டனின் சதுக்கங்கள் ஐரோப்பிய நகர்களை ஒப்புநோக்க நெரிசலானவை. ஏனென்றால் பெரும்பாலானவை ஏற்கனவே புகழ்பெற்ற சுற்றுலா மையங்களாக ஆகிவிட்டவை. எங்குபார்த்தாலும் தலைகள். ஆனால் ஐரோப்பிய உள்ளம் ஒழுங்கு என்பதை நோன்பாகக் கொண்டது. இன்னொருவருக்கு நாம் தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதிலிருந்து வரித்துக்கொண்டது அவ்வொழுங்கு. எனவே கூச்சல்கள், முட்டிச்செல்லுதல்கள், ஆக்ரமித்தல்கள் இல்லை. அத்தனை நெரிசல்களிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் தனியுலகில் இருக்க இயன்றது. சாலையோரங்களில் உண்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் அச்சாலைகள் நிறைந்து பெருகுவது தெரியாதென்றே தோன்றியது

வெஸ்ட்மினிஸ்டர் நகர்ப்பகுதியிலுள்ள டிரஃபால்கர் ஸ்குயர் முன்பு சேரிங் கிராஸ் என அழைக்கப்பட்டிருக்கிறது. 1805ல் ல் பிரிட்டிஷ் கடற்படை நெப்போலியனை ஸ்பெயினில் உள்ள டிரஃபால்கர் கடல்முனையில் வென்றதன் நினைவாக டிரஃபால்கர் சதுக்கம் என பெயர்மாற்றம்செய்யப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு முதலே இச்சதுக்கம் நகரின் மையமான இடமாக இருந்திருக்கிறது. புகழ்பெற்ற சிற்பியான ஜான் நாஷ் இச்சதுக்கத்தைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களையும் சிற்பங்களையும் புதுப்பித்து அமைத்தார்.

nel
நெல்சன்

சதுக்கத்தின் மையத்திலுள்ளது நெப்போலியனை வென்ற தளபதி நெல்சனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெற்றித்தூண். 169 அடி உயரமானது இது 1854ல் வில்லியல் ரால்ட்டன் என்னும் சிற்பியால் அமைக்கப்பட்டது. இ.எச்.பெய்லியால் அமைக்கப்பட்ட நெல்சனின் சிலை தூணின்மேல் அமைந்துள்ளது. 1867ல் சர் எட்வின் லாண்ட்ஸீரால் அமைக்கப்பட்ட நான்கு வெண்கலச் சிம்மங்கள் தூணைச் சுற்றி இருக்கின்றன. ஏழு டன் எடையுள்ளவை இவை. டிரஃபால்கர் போரில் கைப்பற்றப்பட்ட பீரங்கிகளை உருக்கி அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் அடித்தளத்திலுள்ளன. அவற்றில் பிரிட்டிஷாரின் போர்வெற்றிகளும், வெற்றித்தளபதிகளும் பொறிக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல எந்த ஐரோப்பிய வரலாற்றுச்சின்னத்திற்கும் உரிய மிக விரிவான நுணுக்கமான வரலாறு இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது.

Heliodorus pillar
Heliodorus pillar

இந்தியா முழுக்க பல்வேறு வெற்றித்தூண்கள் உள்ளன. பெரும்பாலானவை ஏதேனும் ஆலயத்துக்குக் கொடிமரங்களாகச் செய்து அளிக்கப்பட்டவையாக இருக்கும். உதாரணம், கிருஷ்ண தேவராயர் தன் தென்னாட்டு வெற்றிக்காக நிறுத்தியதுதான் அஹோபிலம் நரசிம்மர் ஆலயத்தின் முன்னால் உள்ள கல்லால் ஆன கொடித்தூண். அரசர்கள் ஓர் ஆலயத்திற்குச் செல்வதை ஒட்டி அங்கே தூண் ஒன்றை செய்தளிப்பதுண்டு. இந்தியாவிலுள்ள அத்தகைய தூண்களில் பழைமையானது விதிஷாவில் உள்ள வாசுதேவர் ஆலயத்துக்கு கிரேக்க மன்னரின் தூதரான ஹிலியோடோரஸ் [Heliodorus] வழிபட வந்ததை ஒட்டி அளித்தது. அதன் உச்சியில் கருடன் செதுக்கப்பட்டுள்ளது. கிமு 113 ஆம் ஆண்டைச்சேர்ந்தது இத்தூண். சுங்க வம்ச மன்னராகிய பகபத்ரரின் ஆட்சியிலிருந்தது இப்பகுதி. இந்தியாவில் வைணவம் குறித்து கிடைக்கும் மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது என்கிறார்கள்.

கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர்
கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர்

ஆனால் இந்தியாவிலுள்ள தூண்களில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கர் கோட்டையில் சமண வணிகரான ஜீஜா பாகேர்வாலா [Jeeja Bhagerwala ]  பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டிய புகழ்த்தூண்தான். சித்தூரை ராவல்குமார் சிங் ஆட்சி செய்தபோது இது கட்டப்பட்டது. சமண மதத்தின் உண்மையை நிறுவும்பொருட்டு இது அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் அழகான ஒற்றைச்சிற்பம்.பூத்த மலர்மரம்போல நோக்க நோக்க தீராதது. இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் இந்து நாகராபாணி கட்டிடக்கலைக்கும் இடையேயான உரையாடலின் விளைவு.

li
சிம்மம், நெல்சன் சிலையருகே

இந்த வெற்றித்தூண்கள் அந்நாட்டினருக்கு பெருமிதத்தை அளிக்கக்கூடும், உண்மையில் ஜனநாயக யுகத்தில் சென்றகாலப் போர்வெற்றிகள் அப்படியேதும் பெருமிதத்தை அளிப்பதில்லை. பிறநாட்டினருக்கு அவை வெறும் சுற்றுலாக் கவற்சிகளே. டிரஃபால்கர் தூணின் பிரம்மாண்டம்தான் என்னை ஆட்கொண்டது. ஓர் அரசரை நேரில் பார்ப்பதுபோன்ற பிரமிப்பும் விலக்கமும் கலந்த உணர்வு. சென்ற நூற்றாண்டிலென்றால் அது பணிவை உருவாக்கியிருக்கக் கூடும். இத்தகைய பெருங்கட்டிடங்கள், வெற்றிநிமிர்வுகள் சாமானியர்களான நம்மை நோக்கி அதட்டுகின்றன. நாம் நம்மையறியாமலேயே அமர்ந்து அவர்களின் பூட்ஸ்களின் நாடாக்களை கட்டிவிடத் தொடங்குகிறோம்.  ஆனால் சித்தூர் புகழ்த்தூண் அந்த விலக்கத்தை உருவாக்கவில்லை. அதை நோக்கியபடி அமர்ந்திருக்கையில் உளவிரிவும் அமைதியும்தான் உருவானது. ஏனென்றால் அது எந்த உலகியல் வெற்றியையும் அறிவிப்பதல்ல.

எனக்கு ஒரு பெருங்கட்டுமானம் தெய்வத்திற்குரியதாக இருக்கையில் மட்டுமே உள்ளம் அமைதிகொண்டு அதை ஏற்கமுடிகிறது. அரண்மனைகளும் வெற்றித்தூண்களும் எனக்கு எதிரானவை என்றே என்னால் எண்ணமுடிகிறது. ஒரு மாபெரும் சிலை சென்றகால மாவீரனுடையதென்றால் அது எனக்குப் பொருளிழந்த ஒன்றே. அது ஒரு தெய்வத்துடையது என்றால் அத்தெய்வம் என்னை நோக்குவதை உணர்வேன். இருபதாம்நூற்றாண்டில் உருவான மாபெரும் தெய்வச்சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி.

நெல்சன்

நெல்சன்

நெல்சன் நெப்போலியன் மேல் கொண்ட வெற்றி பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. உலகின்மீதான ஆதிக்கம் எவருக்கு என்னும் போட்டியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மேல் பிரிட்டன் கொண்ட வெற்றி அது. அதுவே பிரிட்டனின் கடலாதிக்கத்தை உருவாக்கியது. இந்தியா மீதான பிரிட்டனின் பிடி இறுகியதும் அதன்பின்னரே.

அட்மிரல் நெல்சன் [Horatio Nelson, 1st Viscount Nelson 1758 –1805 ] பிரிட்டிஷ் வீரத்தின் அடையாளமாக கருதப்படுபவர். பிரிட்டிஷ் பேரரசின் சோதனையான காலம் நெப்போலியனுடனான போர்களின் காலகட்டம்தான். அப்போது நெப்போலியனை எதிர்த்து வென்றவர் நெல்சன்.

நெல்சன் போர்முனையில் பலமுறை காயம்பட்டிருக்கிறார். ஒரு கண்ணையும் கையையும் இழந்தபின்னரும் தளராமல் களத்தில் இருந்தார். இயற்கையின் அடிப்படைச்சக்தியின் மானுடவெளிப்பாடு என கதே வர்ணித்த நெப்போலியனை டிரஃபால்கர் போரில் வென்று தான் மடிந்தார். இன்றும் பிரிட்டனில் மிக நினைவுகூரப்படும் மனிதராக நெல்சன் இருக்கிறார்.

statue
வெண்கலச்சிலைகள் நெல்சன் தூணில்

நெல்சனை அடிக்கடி நினைவுகூர்ந்த தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில். பிரிட்டன் உலகை ஆளும் பேரரசாக உயர்ந்து, தொழிற்புரட்சி உச்சத்தை அடைந்து, புதிய பொருளியல் விசைகள் உருவாகி வந்து, குடியாட்சிக்கருத்துக்களும் தனிமனித விடுதலை சார்ந்த விழுமியங்களும் வலுப்பெற்று, பேரரசின் வெற்றிமுழக்கங்களுக்கு அடியில் எளியவர்களின் அவநம்பிக்கைகள் திரண்ட இருபதாம்நூற்றாண்டில் பிரிட்டனை ஆட்சிசெய்தவர் சர்ச்சில். ஆனால் நெல்சனின் அதே பேரரசுக் கனவை தானும் கொண்டிருந்தார். நெல்சன் முன்வைத்த வீரவிழுமியங்களை மீண்டும் எழுப்பி நிலைநாட்ட முயன்றார். இரண்டாம் உலகப்போர்  அவருக்கான வாய்ப்பாக அமைந்தது. உலகப்போரில் மிகப்பெரிய இழப்புகளுடன் பிரிட்டன் வென்றதற்கு சர்ச்சிலின் ராணுவநுட்பம் அறிந்த தலைமையும் அவருடைய ஓங்கி ஒலித்த குரலும் முக்கியமான காரணம். ஆனால் போருக்குப்பின் பிரிட்டன் தன் நிலப்பிரபுத்துவகால சுமைகளை இறக்கிவைக்க முடிவுசெய்தது. சர்ச்சில் பதவியிழந்தார்.

 churchil

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill  [1874 –1965] அடிப்படையில் ஒரு ராணுவவீரர். பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி போன்ற முகங்களெல்லாம் அதற்குமேல் அமைந்தவையே. பிரிட்டனைப்பற்றி, உலகைப்பற்றி, எளிய மக்களைப்பற்றி அவருடைய எண்ணங்கள் அனைத்தும் ராணுவ அதிகாரிக்குரியவை.  வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்பென்ஸர் குலத்தின் கிளை வழியான  மார்ல்ப்ரோ டியூக்குகளின் குடும்பத்தில் பிறந்தார். சர்ச்சிலின் தந்தை  ராண்டால்ஃப் சர்ச்சில் பிரபு. தாய் ஜென்னி ஜெரோம் அமெரிக்கச் செல்வந்தர் லியனோர்ட் ஜெரோம் என்பவரின் மகள்.  இளமையிலேயே பிரபுக்களுக்குரிய முறையில் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் கல்விநிலையங்களில் வளர்ந்தார். ராணுவத்தில் சேர்ந்த சர்ச்சில் கியூபா, இந்தியா, சூடான் போன்ற நாடுகளில் போரில் பங்கெடுத்தார்.

அரசியலில் ஈடுபட்டு பிரிட்டிஷ் பிரதமரான சர்ச்சில்  இனவாத வெறுப்பரசியலை, பிரிட்டிஷ் தேசியவாத பெருமிதத்துடன் கலந்து ஆக்ரோஷமாகப் பேசுவதற்காகப் புகழ்பெற்றவர். ஒருவகையில் ஹிட்லரின் பிரிட்டிஷ் வடிவம் அவர். ஹிட்லரைப்போலவே தன் இனம் உலகை ஆளவேண்டிய பொறுப்பும் தகுதியும் உண்டு என நம்பியவர். காந்தியை ‘அரைநிர்வாண பக்கிரி’ என்றமைக்காக இன்றும் இந்தியர்களால் நினைவுகூரப்படுபவர். சமீபத்தில் ராய் மாக்ஸமின் நூல் லண்டனில் வெளியிடப்பட்டமையை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் சர்ச்சிலை ஹிட்லரின் இன்னொரு வடிவம் என இந்திய எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சசி தரூர் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேற்குலகுக்கு ஹிட்லரைப் போரில் வென்றவர் என்பதனால் சர்ச்சில் ஒரு கதாநாயகன். சோவியத் ருஷ்யாவின் இறுதிநாள் வரை அதே காரணத்துக்காக ஸ்டாலினும் கதாநாயகனாகக் கருதப்பட்டார். மேற்குலகை வழிபடுபவர்களுக்கும் சர்ச்சில் அவ்வாறு தோன்றக்கூடும். ஆனால் கறாரான வரலாற்றுந் நோக்கில் நவீன ஜனநாயக எண்ணங்கள் அற்ற, பிரிட்டிஷ் இனவெறிநோக்கு கொண்டிருந்த, வேண்டுமென்றே லட்சக்கணக்கான இந்தியர்களின் இறப்புக்குக் காரணமாக இருந்த, அதற்காக எள்ளளவும் வருந்தாத சர்ச்சிலுக்கு ஹிட்லர் சென்றமைந்த அதே வரலாற்று வரிசையில்தான் இடம். வரலாறு அத்திசை நோக்கிச் செல்வதை தடுக்கவியலாது.

par

லண்டனின் பாராளுமன்றச் சதுக்கம் அங்கிருக்கும் சிலைகளுக்காகப் புகழ்பெற்றது. நாங்கள் பல இடங்களில் நடந்து களைத்து அங்கே செல்லும்போது அந்தி. ஆனால் லண்டனில் அது கோடைகாலம் என்பதனால் வெளிச்சமிருந்தது. மத்தியலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அருகே உள்ளது இந்தச் சதுக்கம். முக்கியமான ஒரு சுற்றுலா மையம். வெஸ்ட்மினிஸ்டர் அபே, லண்டன் பாராளுமன்றம், லண்டன் தலைமை நீதிமன்றம் ஆகியவை இதற்குச் சுற்றும் உள்ளன. 1868ல் இச்சதுக்கம் அமைக்கப்பட்டது.பொதுவாக இது பிரிட்டனின் அரசியல் நடவடிக்கைகளின் மையம்

இச்சதுக்கத்தின் மையமான சுவாரசியம் இங்கே நிகழும் அரசியல்போராட்டங்கள். சின்னச்சின்ன கூடாரங்கள், தட்டிகள் வைத்து வெவ்வேறு அரசியல்குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். செசென்யாவுக்கு நீதிகோரி முஸ்லீம்களின் ஒரு புகைப்படக் கண்காட்சி, செர்பியர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றது இன்னொரு தரப்பு. தன்பாலின மணம் அனுமதிக்கப்படவேண்டும் என ஒரு சிறுகுழு. இங்கே 2014லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டதே என்று பார்த்தால் அவர்கள் கோருவது அது துருக்கியில் அனுமதிக்கப்படவேண்டும் என்று.

வழக்கம்போல திபெத்துக்கான தன்னாட்சி உரிமைகோரி ஒரு தட்டிக்குமுன் திபெத்திய பாரம்பரிய உடையில் சிலர் நின்று துண்டுப்பிரசுரம் அளித்தனர். 1995ல் ஆறு வயதில் சீனர்களால் கடத்தப்பட்டு இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாத 11 ஆவது பஞ்சன் லாமாவின் இளமையான பதைப்பு நிறைந்த புகைப்பட முகம்.

dis
டிஸ்ரேலி

பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு சுற்றுலாச் சடங்கு. அங்கிருந்த ஜப்பானிய சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும்பாலானவர்கள் எவரென்றுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கே கூட பெரும்பாலானவர்களைத் தெரியாது. டேவிட் லியோட் ஜார்ஜ்,  ஹென்றி ஜான் டெம்பிள்,  எட்வர்ட் ஸ்மித் ஸ்டேன்லி, ராபர்ட் பீல் ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். என் நினைவில் அப்பெயர்கள் எதையும் சுண்டவில்லை.

ஆனால்  பெஞ்சமின் டிஸ்ரேலி இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் அடிக்கடி காதில்விழும் பெயர். பிரிட்டிஷ் பழைமைவாதக் கட்சியின் தலைவராக இருமுறை பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார். 1868 முதல் 1880 வரை இவர் பிரிட்டிஷ்  பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் இரண்டாவது பெரும் பஞ்சத்தால் இந்தியா கிட்டத்தட்ட அழிந்தது. பாராளுமன்றத்தில் ஜனநாயகவாதிகள் இந்தியாவைக் காக்கவேண்டுமென கோரி கண்ணீருடன் மன்றாடியதை அலட்சியமாகக் கடந்துசெல்ல அவருடைய பழைமைவாதமும் இனமேட்டிமை நோக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் சர்ச்சிலுக்கு இணையாக வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர் டிஸ்ரேலி.

smuts
smuts

சிலையாக நின்றிருக்கும் இன்னொருவர் ஜான் ஸ்மட்ஸ் [Jan Smuts]. காந்தியின் சுயசரிதையில் வரும் பெயர். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதமராக இருந்தவர். போயர் போரில் முதன்மைப் பங்கெடுத்தவர். காந்தி ஜான் ஸ்மட்ஸைப்பற்றி இரண்டு வகையாகவும் குறிப்பிடுகிறார். முதலில் ஸ்மட்ஸ் நேர்மையான நாணயமான அரசியலாளர் என்று சொல்லும் காந்தி பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியலாடல்களுக்குப்பின் ஸ்மட்ஸ் வழக்கமான தந்திரம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர், இனவெறி நோக்கு கொண்டவர் என்கிறார்.

1914ல் ஜான் ஸ்மட்ஸுக்கு காந்தி சிறையில் தன் கையால் தைத்த ஒரு தோல் செருப்பை பரிசாக அளித்ததை காந்தி சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். காந்தியின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது ஸ்மட்ஸ் அதை ஒரு குறிப்புடன் திருப்பியனுப்பினார். “நான் இதை ஒரு கோடைகாலத்தில் அணிந்தேன். ஆனால் ஒரு மாமனிதரின் கையால் உருவாக்கப்பட்ட இதை அணியும் தகுதி தனக்கில்லை’. அச்செருப்பு இப்போது ஆப்ரிக்காவில் Ditsong National Museum of Cultural History யில் அரும்பொருளாக உள்ளது.

காந்திமேல் ஸ்மட்ஸ் கொண்ட மதிப்பு உண்மையானது. ஆனால் இந்தியர்களுக்கான மனித உரிமைகளை அளிப்பதிலும் முழுமையான நிறவெறிப்போக்குடனேயே ஸ்மட்ஸ் நடந்துகொண்டார். அதைப்புரிந்துகொள்வது மிக எளிது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்தப் பொதுக்குணம் இனவாதமும், ஈவிரக்கமற்ற சுரண்டலும். தனிமனிதர்களாக அவர்கள் செய்நேர்த்தி, பண்பு, மென்மையான நடத்தை மற்றும் கலையார்வம் கொண்டவர்கள். இந்த முரண்பாட்டை காந்தி ஸ்மட்ஸுடனான பழக்கம் வழியாகவே கண்டடைகிறார். பின்னர் அவர் பிரிட்டிஷ் உயர்பதவியினரை இயல்பாகக் கையாள இந்த அனுபவம் கைகொடுத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்த இரட்டைப்பண்பை உணராமல் எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மானுடம் கண்ட மோசமான நிறவெறி அரசை நடத்திய ஸ்மட்ஸ் ஒரு சிந்தனையாளர், தத்துவவாதி. ஸ்மட்ஸ் முதல் உலகப்போருக்குப்பின்  உலக ஒற்றுமைக்காக  League of Nations என்னும் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அது பிற்கால ஐக்கியநாடுகள் சபை உருவாவதற்கான முன்னோடி அமைப்பு.

ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்
ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்

இந்த இரட்டைநிலைக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். [Allan Octavian Hume  1829 –  1912)    இன்று அவர் வரலாற்றில் வாழ்வது இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவனர் , ஒருவகையில் இந்திய விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டவர் என்றவகையில். இந்தியர்களுக்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள உரிமைகளைப் பெற்றுத்தரும்பொருட்டு அவர் 1885ல் இந்திய தேசியக் காங்கிரசை நிறுவினார். இந்திய பறவையியலின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்த காலம் முழுக்க இந்தியப் பறவைகளை கவனித்து பல்லாயிரக்கணக்கான மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றின் சிறகுகளையும் வடிவங்களையும் கவனித்து வரைந்து இயல்புகளைக் குறித்துவைத்தார். Stray Feathers  என்னும் பறவை ஆய்விதழை நடத்தினார். இன்னொரு பக்கமும் உண்டு. இந்தியாவில் பேரழிவை உருவாக்கிய உப்புவேலியை 1867 முதல் 1870 வரையிலான தன் பணிக்காலத்தில் முழுமையாக நிறுவி அதன் நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்தவர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்தான்.

பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளில் அதிகாரத்தில் இல்லாதவரான பிரிட்டிஷ்காரர் என்றால் அது  மில்லிசெண்ட் ஃபாசெட் [Millicent Fawcett]. இங்குள்ள ஒரே பெண் சிலை இது. பெண்ணிய நூல்களில் இப்பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். பிரிட்டனில் பெண்ணுரிமைக்காக போராடியவர். மில்லிசெண்ட் [ 1847 –1929 ] மில்லி வழக்கமான புரட்சியாளர் அல்ல. தன் கருத்துக்களால் குடிமைச்சமூகத்தில் கருத்துமாற்றம் உருவாவதற்காக தொடர்ச்சியாக, பொறுமையாகப் பாடுபட்டவர். பெண்களின் கல்வியுரிமை, அரசியல் பங்கேற்புரிமை ஆகியவற்றை இலக்காக்கியவர். பெட்ஃபோர்ட் கல்லூரியின் ஆளுநராக பணியாற்றினார்.  1875  ல் கேம்பிரிட்ஜ் நியூஹாம் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

Millicent Fawcett
Millicent Fawcett

பிரிட்டிஷாரல்லாதவர்கள் மேலும் ஆர்வமூட்டுபவர்கள். ஆபிரகாம் லிங்கன் சிலை அங்கிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நெல்சன் மண்டேலா ,காந்தி இருவரின் சிலைகளும் வியப்பூட்டுபவை. இருவரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி வென்றவர்கள். நெல்சன் சிலை போல வெற்றிச்சிலைகள் வைக்கும் மரபிலிருந்து பிரிட்டிஷ் மனநிலை மெல்ல முன்னகர்ந்து நெல்சன் மண்டேலா போல தங்களை வென்றவர்களுக்குச் சிலை வைத்திருக்கிறது. மிகச்சாதாரணமானதாக இது தோன்றலாம். ஆனால் மிகமிக மெல்லத்தான் இந்தச் சமூக மாற்றம் உருவாகும். நீண்ட கருத்துப்போராட்டம் பின் அதன் நீட்சியான  அரசாடல்கள் இதற்குத்தேவைப்படும்.

mandela

நெல்சன் மன்டேலாவின் சிலை அழகியது. நெல்சன் மண்டேலா உயிருடன் இருக்கையிலேயே இச்சிலைக்கான பணி தொடங்கப்பட்டது. ‘பிரிட்டிஷ் பாராளுமன்ற வாசலில் ஒரு கறுப்பினத்தானுக்கு சிலை இருப்பது தேவைதான்’என நெல்சன் மண்டேலா அதற்கு அனுமதி அளித்தார். தென்னாப்ரிக்க அரசியல்வாதியும் இனவெறி எதிர்ப்புப் போராளியுமான டொனால்ட் வுட்ஸ் இச்சிலையை நிறுவவேண்டும் என முன்முயற்சி எடுத்தார். அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவுடன் திரைப்பட ஆளுமையான ரிச்சர்ட் அட்டன்பரோ இணைந்து எடுத்த முயற்சியால் இச்சிலை 2007ல் நிறுவப்பட்டது. இயால் வால்ட்டர்ஸ் என்ற சிற்பியால் உருவாக்கப்பட்டது இது.

நெல்சன் மண்டேலாவின் சிலையருகே நின்று பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு தகவல்களைக் குறிப்பிட்டேன். ஒன்று , இந்தியாவிலுள்ள அசட்டு இடதுசாரித்தரப்பு ஒன்றுண்டு. உலகப்போர் உருவாக்கிய நெருக்கடிகள் காரணமாக தானாகவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகிச் சென்றார்கள் என்றும் அதில் காந்திக்கும் நேருவுக்கும் பெரிய பங்கு ஏதுமில்லை என்றும், அது வெறும் வரலாற்றுவிளைவு மட்டுமே அவர்கள் வாதிடுவார்கள். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷாரின் மறைமுக ஆட்சியான வெள்ளையர்களின் இனவெறி அரசு 1994 வரை வெவ்வேறு அடையாளங்களுடன், வெவ்வேறு ரகசிய ஆதரவுகளுடன் நீடித்தது.

இன்னொன்று, உலகஜனநாயகத்தின் மடித்தொட்டிலான பிரிட்டன் 1995 வரை தென்னாப்ரிக்க அரசின் வெளிப்படையான இனவெறியை நுட்பமான பசப்புச் சொற்களுடன் ஆதரித்தது.  பிரிட்டிஷ் பிரதமரான மார்கரட் தாச்சர் 22 ஆண்டுக்காலம் இனவெறியர்களின் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலாவை தீவிரவாதி , சமூக விரோதி என கருத்துத் தெரிவித்தார். பிரிட்டனில் ஜனநாயகவாதிகள் ஆப்ரிக்காவின் இன ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக கடுமையாகப் போராடினாலும்கூட பிரிட்டனில் தொடர்ச்சியாக  தென்னாப்ரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு இருந்துகொண்டேதான் இருந்தது. நெடுங்காலம் ஆகவில்லை, அந்த உணர்வுகள் முற்றாக மறைவதுமில்லை.

Gandhi_statue_2

நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை வைக்கப்பட்டு மேலும் எட்டாண்டுகள் கழித்துத்தான் பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தியின் சிலை நிறுவப்பட்டது.  1931ல் காந்தி பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டொனால்டின் அலுவலகத்துக்கு முன் நின்றிருக்கும் ஒரு புகைப்படத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிலை இது. பிலிப் ஜாக்ஸன் இதன் சிற்பி. மண்டேலாவின் சிலை அங்கே வைக்கப்பட்டபின்னர்தான் காந்திக்கும் சிலை வேண்டும் என்ற எண்ணமே எழுந்திருக்கிறது. 2015ல் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதைத் திறந்துவைத்தார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.மற்ற சிலைகளைப்போல உயர்ந்த பீடத்தில் நிமிர்ந்த நோக்குடன் நிற்காமல் தரைமட்டத்தில் இயல்பாக நின்றிருக்கிறார் காந்தி. தோழரைப்போல நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக.

காந்தி சிலைக்கு நேர் மறுமுனையில் நின்றிருக்கிறது வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை. இவோர் ராபர்ட் ஜோன்ஸ் வடிவமைத்த சிலை இது. சர்ச்சில் அவருக்கு பாராளுமன்றச் சதுக்கத்தில் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்று விரும்பியமையால் 1950ல் உருவாக்கப்பட்ட சிலை அது. 1973ல் திறந்து வைக்கப்பட்டது. இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினியின் சாயல் இச்சிலைக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சர்ச்சிலின் ஆணவமும் நிமிர்வும் கலந்த உடல்மொழி கொண்ட சிலை இது

ch

பிரிட்டனின் இன்றைய அறச்சிக்கலை, எப்போதும் அதன் பண்பாட்டில் இருந்து வந்த இரட்டைநிலையைக் காட்டும் இடம் இந்தச் சதுக்கம். எந்த நாட்டையும்போல பிரிட்டன் அதன் கடந்தகாலப் பெருமைகளை தேசிய அடையாளமாகத் தூக்கிப்பிடிக்கிறது. அது நெல்சனை தன் தலைக்குமேல் கொடிபோல ஏந்தி நின்றிருக்கிறது. மறுபக்கம் நவீன ஜனநாயகப் பண்புகளை அது ஏற்றுப் பேணியாகவேண்டியிருக்கிறது. அதன் சென்றகால நாயகர்கள் பலர் ஏகாதிபத்தியத்தின் படைப்பாளிகள்,  காவலர்கள். ஆகவே அவர்களை போற்றி அதைச் சமன் செய்ய அவர்களை எதிர்த்தவர்களையும் போற்றவேண்டியிருக்கிறது

இச்சிலைகள் வழியாகச் செல்லும்போது நாமறிந்த வரலாற்று அடுக்கை வேறொரு கை வந்து கலைத்து அமைத்ததுபோல திகைப்பு ஏற்படுகிறது. காந்தியும் , டிஸ்ரேலியும், சர்ச்சிலும் ஒரே நிரையில் நிற்கும் வரலாறு. ஸ்மட்ஸும்  மண்டேலாவும் அருகருகே நிலைகொள்ளும் வரலாறு. அவர்கள் சிலைகளிலிருந்து உயிர்கொண்டால் என்ன செய்வார்கள்? திகைப்பார்கள்,  ஒருகணம் குழம்புவார்கள். அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள், அல்லது பிரிட்டிஷ் பண்புகளால் ஆனவர்கள் ஆதலால் ஒருவரோடொருவர் மென்மையாக முகமனுரைத்து வணங்கி சம்பிரதாயமான கைகுலுக்கல்களுடன் பிரிந்துசெல்வார்கள். மீண்டும் சிலையான பின் வேறு எங்கோ இருந்து வெடித்துச்சிரிப்பார்கள்.

முந்தைய கட்டுரைஅலெக்ஸ்- நினைவுப்பிரார்த்தனை
அடுத்த கட்டுரைதிருட்டுத்தரவிறக்கம், இரவல் -கடிதங்கள்