«

»


Print this Post

திருட்டுத்தரவிறக்கம், இரவல் -கடிதங்கள்


ille

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு,

 

சொன்னால் நம்ப மாட்டீர்கள் ‘பொன்னியின் செல்வன்’ ஆயிரம் பக்கங்கள் அதைத் தொடர்ந்து ‘உடையார்’ கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் தங்களின் ‘வெண்முரசு’ பிரயாகை வரை கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் ‘அறம்’ சிறுகதைகள் ‘செம்மீன்’ ‘ ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ ‘தண்ணீர்’, ‘கோபல்ல கிராம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள் ‘ மற்றும் பல சிறுகதைகள் கட்டுரைகள் அனைத்தும் pdf வடிவில் (கைபேசியில்) படித்தவை.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் வாசித்தவை. இதில் இலக்கியத்தின் மீது ஏற்பட்ட உந்துதல் காரணமாக சில புத்தகங்களை வாங்க முயற்சித்து தங்களின் ‘விஷ்ணுபுரம்’, ‘இடக்கை’, ‘சிவப்பு சின்னங்கள்’,’, ‘ராசலீலா’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்,’, ஆகியவை அனைத்தும் வாங்கி வாசித்து முடித்தவை. இதில் ‘இடக்கை’ தவிர மீதி அனைத்துமே கழிவு விலைக்காக காத்திருந்து  வாங்கியவை தான். எனது மாத ஊதியம் 12000 வாடகை வீடு என்னால் இயன்றவரை புத்தகங்களை வாங்க முயற்சிக்கிறேன், தற்போது பூமணியின் அஞ்ஞாடி, சிதம்பர சுப்ரமணியன் மண்ணில் தெரியுது வானம், வாங்குவதற்கு முயற்சியில் இருக்கிறேன்.(அஞ்ஞாடி வாங்குவது கனவு தான்) சரி நூலகத்தில் புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று அருகில் உள்ள நூலகத்திற்கு (பல்லடம்) சென்றேன் அங்கு முதலில் நீங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து அந்த உறுப்பினர் அட்டையை கொண்டு வந்தால்தான் இங்கு புத்தகங்கள் எடுக்க முடியும் என்று சொன்னார்கள் ஆனால் நான் இருக்கும் பகுதியில் நூலகம் ஒரு நாள் கூட திறந்து இருந்து நான் பார்த்ததில்லை. சிங்கப்பூரில் sms செய்தால் புத்தகம் வீடு தேடி வருவதாக நீங்கள் சொல்கிறீர்கள், இலக்கியம் வாசித்தால் அரசு பணம் தருவதாக சொல்லுகிறீர்கள் ஆனால் நம் நாட்டின் நிலையோ புத்தகங்களை தேடி போனாலும் விரட்டி விடுகிறார்கள்.

 

( கடந்த கடந்த 5 ஆண்டுகளாக தொலைக்காட்சியோ திரையரைபடமோ பார்ப்பதில்லை). ஆடு மாடு மேய்க்கும் சாதாரண விவசாயிக்கு எதற்கு இலக்கியமெல்லாம் என்றுகூட ஒரு சமயம் தோன்றுகிறது. “தங்களின் மாடன் மோட்சம்  படித்ததில் இருந்து எந்த ஒரு சுவையான உணவை உண்ணும் போது மனதில் வரும் முதல் வரி “அமிர்தமாட்டும் இருக்குடா அம்பி ” என்பது தான். சரி இப்படி இருக்கிறது நிலைமை இதனால் இயல்பிலேயே ஒரு பிச்சைக்காரன் அருகில் இருக்கும் பிச்சைக்காரனின் திருவோட்டில் எட்டி பார்க்க தானே செய்வான்.

 

ஏழுமலை

 

அன்புள்ள ஏழுமலை

 

உங்கள் நிலை புரிகிறது. ஆனால் இப்படி நூல்களுக்காக தேடும் பலரும் அறியாத ஒன்றுண்டு. தமிழகத்தின் எந்த ஊரிலும் நல்ல நூலகங்கள் உண்டு. அங்கே நல்ல நூல்கள் பெரும்பாலும் கிடைக்கும். அங்கே என்ன இருக்கப்போகிறது என்னும் அவநம்பிக்கையைக் களையவேண்டும். அங்கே கொஞ்சம் காத்திருக்கவேண்டியிருக்கலாம். நேரம் கணித்து செல்லவேண்டியிருக்கலாம். பலநூலகங்களில் கொஞ்சம் தேடவேண்டியிருக்கும். ஆனால் கண்டிப்பாக நூல்கள் உண்டு. பெரும்பாலான நூலகங்கள் கைவிடப்பட்டு கிடக்கின்றன தமிழ்நாட்டில். வாசிக்க விழைபவர்கள் ஒரு கட்டத்தில் நூலகங்களைத்தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாசிப்புவெறிக்கு நூல்களை காசுகொடுத்து வாங்குவது கட்டுப்படியாகாது, எவருக்கும். இன்னும் கொஞ்சம் முயலலாம் என நினைக்கிறேன்.

 

ஜெ

 

 

அன்பின் ஜெ,

 

வணக்கம்!.

 

திருட்டுத்தரவிறக்கம் குறித்தான பதிவினை தளத்தில் கண்டேன். புத்தகங்களை இரவல் பெற்று வாசிப்பதிலும் எனக்கு ஒவ்வாமை உண்டு. இரவல் புத்தகங்களை படித்தபின் திருப்பிகொடுக்கையில் அப்புத்தகம் அளித்த உணர்வுகளும் இரவல் உணர்வுகளாய் அதனுடன் சென்றுவிடுவதாக எண்ணுவதுண்டு.

 

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களை  சொந்தமாக வாங்கியபிறகே வாசிக்க துவங்குவது வழக்கம்.

 

இரவல் கொடுக்கையில் “வாசித்த பின் மறக்காமல் திருப்பி கொடுத்துவிடவும்” என்று புத்தகத்தில் எழுதிவிடுவேன்.

 

– யோகேஸ்வரன் ராமநாதன்.

 

 

அன்புள்ள யோகா

 

நூல்களை இரவல்கொடுக்கையில் ஒன்று செய்யவேண்டும். சின்ன நூல்களை கொடுக்கவேண்டும். மெய்யாகவே வாசித்துவிட்டு உரிய நேரத்தில் சிரமம் எடுத்து திருப்பிக்கொண்டுவந்து கொடுக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். வாசிப்பவர்கள் மேலும் வாசிக்க விரும்புவார்கள், ஆகவே திரும்பக்கொண்டுவந்து தந்துவிடுவார்கள். வாசிப்புப்பழக்கம் அற்றவர்கள், தொடர்ச்சியாக வாசிக்காதவர்களே வாங்கிய நூல்களை ஊறப்போட்டு திரும்பத்தராமல் வைத்திருப்பார்கள். ஆச்சரியமென்னவென்றால் இவர்கள்தான் முக்கியமான, பெரிய நூல்களை இரவல் கேட்பார்கள். வாசிக்காதவர்கள் என்பதனால் இவர்களுக்கு அந்நூலை தங்களால் வாசிக்கமுடியுமா, என்பதுகூட தெரிந்திருக்காது.

 

எந்த நூலும் 15 நாட்களுக்குமேல் இன்னொருவர் கையில் இருக்கக்கூடாது. அந்நூல் சேதமடைந்தே திரும்பி வரும். திருப்பிக்கொண்டுவருவதற்கான தேதியை கடைப்பிடிப்பவர்களுக்கே மேலும் நூல்களை அளிக்கவேண்டும்.  ‘சும்மா இந்தவழி வந்தேன், அதான் புக்கை திருப்பிக்குடுக்கலாம்னு நினைச்சேன்’ என்று சொல்பவர்களுக்கு நூலை இரவல் அளிக்கக்கூடாது. அதன்பொருட்டே வருபவர்களுக்கே அளிக்கவேண்டும்

 

ஜெ

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/112485