காடு- கடிதங்கள்

kaadu

 

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

 

 

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

 

சென்ற மாதம் காடு நாவல் வாசித்து முடித்தேன். சுமார் ஒரு வாரம் இதைப்பற்றி யாரிடமும் பேச பிடிக்கவில்லை. இந்த கடிதத்தை இப்போது ஏன் எழுதுகிறேன் என்றும் தெரியவில்லை. இதை நீங்கள் வாசிப்பீர்களா என்றும் உறுதி இல்லை. ஆனாலும் எழுதுகிறேன்.

 

 

பொதுவாக, என்னை பாதித்த விஷயங்களை என் மனைவியோடு உடனுக்குடன் பகிர்வதுண்டு. ஆனால் இந்த நாவல் எனக்கு தந்த அனுபவங்கள் மிகவும் அந்தரங்கமானவை. எனக்கே எழுதப்பட்டது போன்று ஒரு உணர்வு. அதை அந்தரங்கமாக அனுபவிப்பதே நல்லது என்று பட்டது.

 

 

தொடக்கத்தில் உங்கள் நடை கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அது என் முன் விரித்த உலகம் என்னை மேலும் தொடரச் செய்தது.

 

 

வாசிக்கும்போது காடு எனக்கு இதுவரை காட்டி வந்த பிம்பங்களே கண் முன்னே வந்தது. சிறு வயதில் ஊருக்கு அடுத்து உள்ள சிறு காடுகளில் காரணமில்லாமல் சுற்றி அலைந்த நாட்கள் உண்டு. எங்கும் நிறைந்த பச்சையும், ஈரமும் கலந்த சூழலில் நாள் முழுக்க இருந்ததுண்டு. அந்த உணர்வே படிக்கும் போதும். தொண்டையில் ஒரு வித குளிர்ந்த ஈரம். p

 

 

காட்டில் நான் சுற்றும் போது எளிதில் தளர்வும் தனிமையும் அடைவேன். அதனாலோ என்னவோ நாவல் முழுவதும் ஒரு ஆற்றாமையும் சோர்வும் என்னைத் தொற்றிக்கொண்டது. அல்லது ஒரு வேளை கிரியின் மன உளைச்சலும் தத்தளிப்பும் என்னையும் பாதித்தது போலும்.

 

 

நீங்கள் காட்டை நீலியின் (மலையத்திப் பெண்) குறியீடாக காட்டினீர்கள் என்றே எண்ணிக் கொண்டேன் (பிழையானால் மன்னிக்க). அதிர்ந்தேன். நான் காதலித்த பெண்ணை அவ்வாறே கண்டேன். அவள் அருகே இல்லாத போது எனக்கு அவள் சார்ந்த இடமெல்லாம் பொருளெல்லாம் அவளாகவே பட்டது. அவள் எனக்காக உண்டு பண்ணிய உலகமாகவே மாறியது. அந்த இடங்களெல்லாம் எனக்கு தந்த ஏக்கங்கள் அளவிட முடியாதது. ஒரு வித மனப்பிறழ்வு நிலைக்கு ஒப்பானது அது.

 

 

ஒரே ஒரு கேள்வி. உங்களுக்கு இந்த அனுபவங்கள் எப்படி வந்தன? நீங்கள் கிரி/என்னைப் போல காதலித்திருக்கிறீர்களா?

 

 

நான் சிரத்தை எடுத்துக்கொண்டு வாசித்த முதல் இலக்கியம் இதுவே. எழுத்தினால் ஒருவனை இவ்வளவு வீரியமாக தாக்க முடியும் என்று நினைத்ததில்லை. இனி வாசிப்பை விடேன்.

 

 

அனுபவத்திற்கு நன்றி, ஐயா.

 

 

அன்புள்ள,

கௌரி சங்கர்.

திருவனந்தபுரம்

 

 

அன்புள்ள ஜெ

 

காடு நாவலை ஒரு நண்பனிடமிருந்து வாங்கி இப்போதுதான் வாசித்து முடித்தேன். எமர்சனின் இயற்கை என்ற கட்டுரையை நீங்கள் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். அதில்  “இயற்கையானது சோகக் காட்சிக்கும் நகைச்சுவைக் காட்சிக்கும் மிகச் சரியாகப் பொருந்தும் ஒரு நாடகப் பின்புலம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது காற்று மகத்தான நன்மையின் அரவணைப்பாக உள்ளது.”  என்ற வரி வரும். அதை இந்நாவலை வாசிக்கையில் பலமுறை நினைத்துக்கொண்டேன் எமர்சன் சொல்வதுபோல  “காட்டில் மனிதர்கள் பாம்புச் சட்டையுரிப்பது போலத் தங்கள் வயதைக் களைந்துவிடுகிறார்கள். குழந்தைகளாக ஆகிவிடுகிறார்கள். காட்டுக்குள் அழியாத இளமை குடிகொள்கிறது. இந்தக் கடவுளின் தோட்டங்களுக்குள், அன்பும் புனிதமும் நிரம்பிய இப்பிரதேசங்களுக்குள் நிரந்தரமானதொரு திருவிழா கொலு வீற்றிருக்கிறது. அங்கு செல்லும் விருந்தினன் ஆயிரம் வருடங்களானாலும் அலுப்பென்பதை அறிவதில்லை” என்றுதான் காடு நாவலைப் பற்றியும் சொல்வேன்

 

ஆனந்த் சந்திரகுமார்

முந்தைய கட்டுரைஐரோப்பா-6,மேற்குமலைமுடி
அடுத்த கட்டுரைதாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்