அன்புள்ள ஜெயமோகன்,
கடந்த 2, 3 மாதங்களாக ஒரு பெரும் வாசிப்பு சுழலுக்குள் சிக்கி திளைத்துக் கொண்டிருக்கிறேன். எதேச்சையாக கால்பங்கு கரமசோவ் சகோதரர்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து தொடரமுடியாமல் அதிலிருந்து விலகி கான்ஸ்டன்ஸ் கார்னெட் (Constance Garnett) ஆங்கிலமொழிபெயர்ப்புக்கு வந்து அது என்னை ஒரே வீச்சில் இழுத்துக்கொள்ள அதுகொடுத்த தெம்பில் அடுத்து அடுத்து உலக பேரிலக்கியங்களை ஆங்கிலத்தில் வாசித்து வருகிறேன்.
கரமசோவ் சகோதரர்களுக்கு அடுத்து நான் படித்த புத்தகம் தாமஸ் மண்ணின் “புடன் புரூக்ஸ்“.
இரண்டு காரணங்கள், ஒன்று பணி நிமித்தமாக கடந்த ஒன்னறைஆண்டுகளாக ஜெர்மனியில் இருப்பதால் அது இப்புத்தகத்தை படிக்க ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இப்புத்தகம் இந்நாட்டை எனக்கு மேலும் அணுக்கமாகலாம் என்ற எண்ணம். இன்னொன்று ருஷ்ய பேரிலக்கியவாதிகளுக்கு நிகராக நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் பெயர் தாமஸ் மண். இவர் படைப்பைப் பற்றி அதிகம் நமது வாசகர்கள்நடுவே விவாதிக்கப்படாததாலும் இப்புத்தகத்தை எடுத்தேன்.
ஜெர்மனியின் வடக்குப் பகுதியின் ல்யூபெக் நகரில் வசித்து வரும் புடன்புரூக்ஸ் வம்சத்தினரின் வீழ்ச்சியை சித்தரிக்கும் பெரும் நாவல் இது. நான்கு தலைமுறைவழியாக சென்று ஒரு குடும்பம் வீழும் சித்திரம் இது. 1835ல் இருந்து அடுத்த 40 வருடங்கள் நடக்கும் நிகழ்வுகளாக நாவல் விரிகிறது. தாமஸ் மண் இதை தன் முதல்நாவலாக தன் 26வது வயதிலேயே இதை எழுதிவிட்டார். பல வருடங்க்களுக்கு பிறகு நோபல் பரிசு கிடைக்கும் போதும் இதைக் குறிப்பிட்டே மண்ணுக்கு பரிசுவழங்கப்பட்ட்டது. வில்லியம் ஃபாக்னர் உலகின் தலைசிறந்த நாவலென இதை கூறுகிறார்.
நாவலின் கட்டமைப்பில் மிகவும் வியப்பழால்த்தியது இதன் வடிவமும் கூறுமுறையும் தான். அத்தனை இளம் வயத்தில் மண்ணுக்கு தெரிந்திருக்கிறது எது காலம் கடந்துநிற்குமென. நாங்கு தலைமுறை வாழ்வை சொல்லும் இந்நாவலில் உணர்ச்சிக் கொந்தளிப்பான பல தருணங்களை ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்கிறார். பல அன்றாடசிறு விஷயங்களை விரிவாக விளக்குகிறார். ஒவ்வொரு நிகழ்வும் 40 வருட வாழ்வில் அதன் பெறுமதியைப் பொறுத்தே அழுத்தம் பெறுகிறது.
நாவலின் ஆரம்பத்தில் யோஹான் (Johann) சீனியர் தான் வாங்கிய புது இல்லத்திற்காக ஒரு விருந்து கொடுக்கிறார். பல பக்கங்களுக்கு நீண்டு செல்லும் இவ்விருந்தில்அக்குடும்பத்திற்கு நெருக்கமான அதன் சூழலை வடிவமைக்கும் பல்வேறு மனிதர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரின் முக அமைப்பும் அவர்களின் தனித்தன்மையும்நுட்பமாக சித்தரிக்கப்படுகிறது. யோஹானின் ஒரே மகனான ஜானின்(Jean) மூத்தமகளான டோனியின் (Tony) சற்றே முன்னெழும்பிய மேலுதடும், உறவினரின் மகளானகுளோதில்டேவின் (clothilde) பெரும்பசியும், எந்த வியாதிக்கும் பிரென்சு ரொட்டியும், புறாக் கறியும் மட்டுமே மருந்தாகச் சொல்லும் குடும்ப மருத்துவரென விதவிதமானமுகங்களின் நிறை வந்துகொண்டே இருக்கிறது. இப்படைப்பில் வரும் அத்தனை கதாப்பத்திரங்களும் தனக்கேயான தனித்துவமான குணாதிசயங்களுடன் கண்முன் எழுந்துவருகிறது.
இப்படைப்பை நுண்தகவல்களின் பெருநிறை என சொல்லலாம். மனிதர்களின் சித்தரிப்புகள் ஒருபுறமென்றால், புறசித்தரிப்புகள் மற்றொரு புறம். புடன்புரூக்ஸ் வீட்டின்விரிவான விவரிப்பில் தொடங்கி ஒவ்வொரு பருவ நிலை மாற்றங்களின் வெவ்வேறு வண்ணங்களும் நாவல் முழுக்க விரவுக் கிடக்கிறது.
இந்நாவலை செவ்வியல் படைப்பாக்கும் முதன்மையான அம்சம் இதன் வடிவமும் கூறுமுறையும் தான். இம்ப்பிரனிசம் ஓவியத்தில் ஒளியும் இருளும் முயங்கிஉருவாக்கும் ஒவியமுறைக்கு இணையானது இதன் கூறுமுறை. எங்கு ஒளி விழ வேண்டும் எங்கு இருள் படரவேண்டும் என்பதில் உள்ள தேர்வு முறைதான் இதை ஒருஅசாதாரணமான படைப்பாக மாற்றுகிறது.
இதே அழகியலை வைத்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் வெவ்வேறு வகையாக தீட்டி எடுக்கும் விதம் ஒரு பேரிலக்கியவாதியின் ஆற்றலையும் அவன்பெருந்தோற்றத்தையும் முழுமையாக உணரமுடிகிறது.
உதாரணத்திற்கு மூன்றாம் பாகத்தில் ஒரு அத்தியாயம் வருகிறது. ஞாயிறு பின் மதியவேளையில் ஒரு நடை செல்ல முதிய ஜான்னுக்காக அவரது மனைவி, மூத்தமகன் டாம், மகள் டோனி காத்திருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல பொறுமை இழந்து டோனி தன் அம்மாவிடம் அப்பாவைப் பற்றி குறை கூறி அலுத்து கொள்கிறாள். ‘வயது ஆக ஆக அப்பா அனைத்தையும் மிக மெதுவாக செய்கிறார். அனைத்துக்கும் மிக தாமதமாகவே வருகிறார். எப்போதும் தன் மேசையிலேயே அமர்ந்து நிறுவனவேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு15 நிமிடம் முன்னால் தன் பேனாவை நிறுத்தினால் நாம் என்ன திவால் ஆகிவிடப் போகிறோமா?’
செப்டம்பர் மாதம் பாதி முடிந்தும் இன்னும் உஷ்ணம் குறையவில்லை. இன்னும் ஒரு க்ஷணம் கூட தாங்க முடியாது என்னும் நிலை வரும்போது மேற்குலிருந்து குளிர்காற்று வீசுகிறது. மெல்ல அறையின் வண்ணம் மாறி அதுவரையிலிருந்த பளீர் வெளிச்சம் மங்க வரவேற்பரையின் பொருட்கள் அனைதிலும் செவ்வொளி பட்டு கூர்கொள்கிறது. மாடியிலிருந்து பணிப்பெண் முகம் வெளிறி ஓடி வந்து Mr.Kounsel என்கிறாள். சட்டென நிலைமையைப் புரிந்து கொண்ட டாம் விரைந்து மாடிக்கு ஓடியபடியேதன் தங்கையிடம் மருத்துவரை அழைக்க சொல்கிறான். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் ஜான் ஏற்கனவே இறந்து போயிருக்கிறார்.
இந்த அத்தியாயத்தை வடிவமைத்திருக்கும் விதம் இந்த நாவலின் அழகியலையும் ஆசிரியரின் கவனம் விழும் இடங்கலையும் நமக்கு உணர்த்துகிறது.
ஒரு சராசரி வாசகன் ஜான் இறக்கும் அந்த சம்பவத்தை மட்டும் அந்த அத்தியாயத்திலிந்து எடுத்துக் கொண்டு அடுத்து சென்றுவிடும் அபாயம் உள்ளது. ஆனால் பத்துபக்கம் நீளும் இவ்வத்தியாத்தில் அந்த இடம் வெரும் 5 வரிகளே வருகிறது. அப்படியென்றால் ஆசிரியர் கோருவது இந்த 5 வரிகளின் வெளிச்சத்தில் அந்தஅத்தியாயத்தின் மற்ற வரிகள் என்ன பொருள் அளிக்கின்றன என்பதுதான். அப்படி வாசிக்கும் போது ஜானின் நடவடிக்கையும் அந்த கால மாற்றமும் மேலதிகமான குறியீட்டுப் பொருள் தருகிறது.
இதன் மிக நிதானமான நடையாலேயே சிறு சிறு நிகழ்வுகளின் சித்திரங்களின் கவித்துவத்தையும் குறியீட்டுத் தன்மையையும் மேலதிக கவனம் கொண்டு வாசிக்கவேண்டியுள்ளது.
நாவலின் முதல் முடிச்சு அலது சிக்கல் டோனி மூலம் நிகழ்கிறது. புடன்புரூக்ஸ் நிருவனத்திடம் வர்த்தகம் செய்ய வரும் க்ரூன்லிக்(Grünlich) எனும் தொழிலதிபர்டோனியை மணந்து கொள்ள குடும்பத்திடம் சம்மதம் கேட்கிறார். ஆனால் டோனிக்கு க்ரூன்லிக்கின் செயற்க்கையான அதிகப்படியான பவ்யமான நடத்தை ஒவ்வாமையைஉருவாக்குகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அவனுடைய நாசூக்கான அடக்கமான தன்மை விரும்பப்படுகிறது. ஜான் தன்னுடைய தொழில் இணைப்புகள் மூலம் அவனுடைய குடும்பப் பிண்ணனியையும் தொழில் நிலவரத்தையும் விசாரித்துவிட்டு டோனியின் சம்மதத்திற்காக மட்டும் காத்திருக்கிறார். டோனியால் முழுமையாகமறுத்தாலும் முதன்முறையாக அத்தனை பேர் மத்தியிலும் தன்னைப் பற்றிய முக்கியத்துவமும் பேச்சும் நிகழ்வது கண்டு தன் உள்ளம் கொள்ளும் கிளுகிளுப்பை மிகவும்விரும்புகிறாள்.
ஒரு மாறுதலுக்காக டோனியை அருகிலிருக்கும் கடற்கரை நகரில் தன்னுடைய நண்பருடைய வீட்டில் தங்க ஜான் ஏற்பாடு செய்கிறார். அங்கு சில நாட்களில் நண்பனின்மகனும் தன் மகளும் காதலிப்பதை அறிந்து தன் மகன் டாம் மூலமாக வீட்டிற்கு கூட்டிவரச் செய்து டோனிக்கு மீண்டும் க்ரூன்லிக்கை மணக்குமாறு அறிவுறுத்துகிறார்.
இங்கு நெருக்கடியில் மனித மனத்தின் ஆழம் போடும் வேடங்கள் தாமஸ் மண்ணின் விவரிப்புகளில் அபாரமாக வெளிப்படும். இவ்வளவு கறாரான நெருக்கடிகளுக்குமத்தியிலும் மொத்த குடும்பத்தினரின் எண்ணமும் தன் திருமணத்தை சுற்றியே மையம் கொண்டிருப்பதனால் உருவாகும் உவகையால் மட்டும் அவள் அந்ததிருமணத்திற்கு சம்மதிக்க முடிவெடுக்கிறாள். ஆனால் அவள் உள்ளம் அதை தன் குடும்பப் பெயருக்காக அதை எடுப்பதாக நுட்பமாக மாற்றிக்கொள்கிறது. அப்போதுஅருகே மேசையிலிருக்கும் தன் வம்சாவள்யின் அட்டவனையில் தன் பெயருக்கு அருகில் க்ரூண்லிக் பெயரை எழுதுவதன் மூலமாக இது காட்டப்படும்.
இப்படி எண்ணற்ற தருணங்கள் மூலம் கோர்க்கப்பட்டு இப்பெரும் படைப்பு நகர்ந்து செல்கிறது. எந்த ஒரு செவ்வியல் படைப்பைப் போல இதுவும் ஒருபக்கம் விலாவரியான புறச்சித்திரங்களை அளித்துக் கொண்டே மற்றொருபக்கம் மனித மனத்தின் மெல்லிய நுட்பமான ஆழங்களையும் தொட்டுச் செல்கிறது. இரண்டையும் தனக்கேயுரிய உணர்ச்சி கலவாத இயல்புவாத நடையில் சொல்லிச் செல்கிறது.
இந்நாவலில் மற்றுமொரு முக்கிய பாத்திரம் டாம். சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலியான தன் வம்சாவளியின் பெயரையும் நிறுவனத்தையும் அடுத்த கட்டதிற்குஎடுத்து செல்வான் என எண்ணும் அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் சுமக்கும் டாம். அதேபோல் தன் தந்தை இறந்த பின்பு தன்னுடைய அபார தைரியத்தாலும் புதியசவால்களை சந்திக்கும் மனோ திடத்தாலும் மேலும் மேலும் வளர்ந்து ஒரு கட்டத்தில் செனட்டராகிறான். ஆனால் அதுவே அவன் சரிவிற்கும் முதலெழுத்தாகஅமைந்துவிடுகிறது. எந்த இயல்பு தன்னை அங்கு தன்னை அழைத்து வந்ததோ அதுவே அங்கிருந்து கீழே உருட்டியும் விடுகிறது. ஒளி தன் காலடியில் உருவாக்கும் இருள்போல. தன் நிறுவனத்தின் அனத்து அலகுகலும் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனாலேயே உயர்ந்து வந்த டாம் அதே இயல்பால் செனட்டரான பின்பும் தன் புதியபொறுப்பில் அதை செய்யமுயன்று தோற்கிறான். ஒரு கட்டத்தில் அனைத்து சிறு தவறுகளையும் தான் ஒருவனே திருத்த முயன்று சக அதிகாரிகளிடம் கோமாளிஆகிறான்.
அதே சமயம் தன் சகோதரன் கிறிஸ்டியான் (Christian) மூலம் வரும் குடும்பப் பிரச்சனையும் இதனுடன் இணைந்துகொள்கிறது. கிறிஸ்டியான் டாமிற்கு நேர் எதிர்.ஆரம்பத்திலிருந்தே எதையும் அலட்சியத்துடனும் அனைத்தையும் ஒரு கோணல் புத்தியுடன் அணுகுபவன். தன் குடும்பச் சூழலில் அனைவரிடமும் அவமானத்தையும்இகழ்ச்சியை மட்டுமே பெற்று வாழ்பவன். அந்த கொடூர பற்சக்கரங்களுக்கு நடுவில் சிக்கி முழுக்க சிதையாமல் இருக்க உதவுவது அவனுடய கலையார்வம் மட்டுமே.அனைவரையும் கூர்மையாக நோக்கி அப்படியே தன் உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை அறிந்தவன். குறைந்த காலம் தானிருந்த நாடக வாழ்க்கையின் அனுபவநிழலில் மீதி வாழ்க்கையை கழிப்பவன்.
குடும்ப உறவுகளின் அவமதிப்புக்கு மேலதிகமாக நரம்பு நோயாலும் அவதியுறுகிறான். விருப்பமில்லாமல் செய்யும் தொழிலால் நஷ்டம் ஏற்பட்டு டாமின் தயவைஎதிர்பார்த்து மேலும் அவமானப்படுகிறான். இந்நாவலைப் பற்றி தாமஸ் மண் குறிப்பிடும் போது இதை தொழில் புரிபவனின் மனநிலைக்கும் ஒரு கலை மனதுக்கும்இடையான மோதலாக தான் உருவாக்க நினைத்ததாக குறிப்பிடுகிறார்.
நாவலின் மைய்யக் கேள்வியாக நிற்பது இக்குடும்பம் வீழக் காரணம் என்ன? எந்தவொரு சிறந்த படைப்பைப் போல இதுவும் பல காரணங்களால் இந்த வீழ்ச்சிநிகழ்கிறது. சமூக அரசியல் மாற்றங்கள், நோய்கள் என. முதன்மையாக இது குடும்ப நாவல் என்பதால் வெளியே நடக்கும் சமூக மாற்றங்கள் சில குறிப்புகளால்ஆங்காங்கே சுட்டப்படுகிறது. உதாரணத்திற்கு வீட்டிற்கு வந்து முகச்சவரம் செய்து விட்டு போவருடன் நிகழும் சம்பாஷனை வழியாக இது காட்டப்படுகிறது. பிரஷ்ஷிய,ஆஸ்த்திரிய அரசுகளிடையே இருக்கும் பிணக்குகளாலும், ஒருங்கிணைந்த வியாபார சங்கம் உருவாவதன் மூலமாகவும் இம்மாற்றம் நிகழ்கிறது. அதேபோல நோய்கள்.கிறிஸ்டியானுக்கு நரம்புச் சிக்கல் இருப்பதைப்போல் ஜானின் மகன் ஹானோ (Hanno) சிறுவயதிலிருந்தே சவலையாக இருக்கிறான். எழுந்து நடக்க ஆரம்பிக்க பிந்துவதுமுதல் சரியாக பற்கள் வளராமல் சிரமப்படுவது, வயிற்றுப் பிரச்சனைகள் எனப் பல.
கிறிஸ்டியானுக்கும், ஹானோவிற்கும் பல இனைக்கோடுகள் வரையலாம். இருவருமே உடல் பலவீனமானவர்கள். இருவருக்கும் கலை ஆர்வம் கொண்டவர்கள்.ஹானோவிற்கு பியனோ வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். தன் தம்பி என்பதால் அவரது பார்வையிலிருந்து ஒதுக்கிய ஜானிற்கு இப்போது தன் மகனை ஒதுக்க முடியாததால்அவனை துன்புறுத்துகிறார், திட்டுகிறார். ஆண் மாதிரி இரு, இந்த மாதிரி பியானோ ஆர்வமெல்லாம் வீண் வேலை என்கிறார். கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹானோஅவருக்காகபாடும் பாடல் நினைவு வராததனால் மூர்க்கமாகிறார். இயல்பிலேயே கோழையான ஹானோ மேலும் உள்ளொடுங்கி போகிறான். நாவலின் இறுதியில்காய்ச்சல் வந்து இறந்து போகிறான்.
கிட்டத்தட்ட கிறிஸ்டியானின் விரக்தி ஒரு சாபம் போல ஜானை சூழ்கிறது அவனது வம்சத்தையே முற்றாக அழிக்கிறது. அதே போலத் தான் டோனியின் சரிவும்.க்ரூன்லிக்குடன் வாழ்ந்த சில வருடங்களிலேயே தெரிந்து விடுகிறது. அவன் ஒரு தோற்றுப் போன வியாபாரி என. தனக்கு வரும் வரதட்சனைப் பணம் மூலம்பெருங்கடனை அடைத்துவிடவே டோனியின் கரம் பிடித்திருக்கிறான். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் கடனில் மூழ்க தந்து மாமனார் ஜானின் உதவியை நாடுகிறான்.அவர் வந்து கடனளித்தவரிடம் உரையாட அனைத்தும் வெளிச்சமாகின்றன. இது அனைவரும் சேர்ந்து நடத்திய சூழ்ச்சி என. திருமணத்திற்கு முன்பு ஜான் க்ரூன்லிக்கைப்பற்றி விசாரிக்கையில், பணம் குடுத்த அனைவரும் சேர்ந்து அவரை இதற்குள் இழுத்திருக்கிறார்கள். சம்பாஷனையின் முடிவில் ஜான் உடைந்து போகிறார். தன் மகளிடம்அனைத்தும் கூறி டோனியையும் அவளது சிறு பெண் குழந்தையையும் அழைத்து சென்று விடுகிறார். அந்த விரக்தியில் சில வருடங்களில் இறந்து போய் விடுகிறார்.
டோனி சில வருடங்கள் கழித்து இன்னொரு திருமணம் செய்து கொள்கிறாள். இவ்வுறவும் நெடுநாள் நீடிக்கவில்லை. தன் கணவன் பெர்மானெடெர் (Permaneder) வீட்டுபணிப்பெண்ணுடன் கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அன்றிரவே கிளம்பி வந்து விடுகிறாள். டாம் பலவகையில் சமாதானம் செய்து பார்க்கிறான். அவன்குடித்திருந்ததால் தவறி நடந்து கொண்டிருப்பானென்றும் அவனுக்கு உண்மையிலேயே அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை தன் வீட்டிலேயே செய்திருக்கமாட்டானென்றும் சொல்கிறான். ஆனால் டோனி மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்கிறாள். தன்னைப் பார்த்து அந்த வார்த்தையை கூறிவிட்டானென்றும் அதன் பிறகுஅவனுடன் ஒரு கணமும் வாழ முடியாதென்றும் கூறுகிறாள். எவ்வளவு வற்புறுத்தி கேட்ட போதும் அது என்னவென கூற மருத்துவிடுகிறாள்.
வக்கீல் மூலம் விவாகரத்து கடிதம் அனுப்பும் போது பெர்மானெடெர் எந்தவித மறுப்புமின்றி ஒப்புக்கொள்வதுடன், முழு வரதட்சனைப் பணத்தையும் திருப்பி அனுப்பிவிடுகிறான். அனைத்தும் முடிந்த சில நாட்களில் எப்படியோ பெர்மானெடெர் கூறியது குடும்பத்தினற்கு தெரிகிறது. அவன் கூறியது Go to devil, you filthy sprat-eating slut!
இவ்வளவுக்கப்புறம் கடைசியாக தெரியும் போது வாசகனுக்கு ஏற்படும் அதிர்ச்சி மிகப்பெரியது. அது குடிகாரனின் நிலை மீறிய வார்த்தை இல்லையென்றும், அதுடோனியின் கடந்தகால மணஉறவையும் அவளின் அந்தரங்க உணர்ச்சியை சிறுமை செய்யும் கீழ்த்தரமான வசை என்றும் வாசகன் உணர்ந்து கொள்கிறான்.பெர்மானெடெர் கொள்ளும் மவனமும் அதை உணர்ந்ததால் தானோ?
இவ்வளவு கசப்பான உறவுகளுக்கு அப்புறம் டோனியின் வாழ்க்கை என்னவாக முன்னகரும்? அனைத்திலும் வெற்றியடையும் தன் சகோதரன் மீது அவளும் அறியாஆழம் கசப்பு கொண்டிருக்குமோ? ஹானோ சவலைத் தனத்தை உள்ளூர மழிந்திருக்குமோ? அந்த கோணத்தில் வாசிப்பதற்கான அத்தனை சாத்தியத்தையும் இப்படைப்புதிறந்தே வைத்திருக்கிறது.
அனைத்தையும் தாண்டி இன்னொரு கோணத்தை தருவதால் தான் இது ஒரு பெரும்படைப்பாகிறது. கிட்டத்தட்ட நாவலின் பாதியில் அது வருகிறது. ஜான் தன் தொழிலில்உச்சகட்ட வெற்றி அடைந்திருக்கிறான். அப்போது தான் செனட்டர் ஆகி தனக்கென ஒரு பிரம்மாண்டமான வீட்டையும் வாங்கியிருக்கிறான். அதன் தோட்டத்தில் அமர்ந்துடோனியிடம் கூறுகிறான். “எதோவொன்று என்னை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது டோனி. இதுவரை வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொண்ட எனக்குஇப்போது சஞ்சலங்கள் வருகின்றன. வெற்றியென்றால் என்ன? ஒவ்வொரு காரியம் செய்யும் போது தான் நிறைவானவனென்றும் அடுத்த நொடி என்ன நிகழுமெனமுந்தைய கணம் தெரிந்தவனாகவும் தன்னை உணர்வதுதானே? அது இப்போது இல்லை. என் வாழ்வின் பிடி என்னிடமிருந்து வழுக்கி செல்வதாகவே உணர்கிறேன்.”டோனி உடனே கூறுகிறாள் “ஏன் அப்படி நினைக்கிறாய். உன் தொழில் சிறப்பாக நிகழ்கிறது. புதிதாக வீடு வாங்கியிருக்கிறாய்.” அதற்கு ஜான் “இந்த வெற்றியும் வீடும்மேலோட்டமானது. வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் எப்போது இந்த வெளியுலக சொத்துக்கள் மகிழ்வு தரஆரம்பிக்கிறதோ, அப்போது உள்ளிருக்கும் ஒன்று வீழ ஆரம்பிக்கிறதென. உள்ளிருக்கும் வீழ்ச்சி வெளியே தெரிய கொஞ்சகாலமாகும் அவ்வளவுதான். சிலசமயம் நம்கண்ணுக்கு பிரகாசமாக தெரியும் நட்சத்திரம் உண்மையில் அங்கு அணைந்து இருண்டிருக்கும்.”
நாவல் காட்டும் தரிசனமென்பது ஒவ்வொரு உயர்வும் தன்னகத்தே வீழ்ச்சியையும் உள்கரந்து வைத்திருக்கும் என்பதுதான். ஓங்கி உயர்ந்திருக்கும் கோபுரத்தின் ஒவ்வொருகல்லும் தன்னுள் சிதறிப் பரவும் விளைவை வைத்திருக்கும். சரிவுக்குத் தேவை ஒரு சிறு தருணம் மட்டும் தான். அது வெளிப்புற காரணமாய் இருக்கலாம். அரசியல் சமூக மாற்றம்போல. அல்லது நோய்களாக இருக்கலாம். ஹானோவுக்கு வருவதை போல. அல்லது விதியின் சாபமாக இருக்கலாம் கிறிஸ்டியான், டோனி வாழ்க்கையை போல. அல்லதுதன் உளவிளைவாக இருக்கலாம். டாம் கூறுவதைப் போல. எழுச்சியை வெற்றியை கண்டு குதூகலிக்கும் அதே மனம் தான் தோல்வியை சரிவை வேண்டி ஏங்குகிறது!
அன்புடன்,
பாலாஜி பிருத்விராஜ்