கேரளக் கருத்துரிமை -கடிதங்கள்

meesha

கருத்துரிமையும் கேரளமும்

மலையாள மொழியில் எழுத்தாளர் எஸ்.ஹரிஸ் மாத்ருபூமி இதழில் தொடராக எழுதிவந்த நாவலை இந்து அமைப்புகள் அவரது குடும்பத்தை மிரட்டல் விடுத்து நிறுத்தி இருக்கிறது. இது காலச் சுவடு தலையங்கத்தில் வந்திருக்கிறது. இதைப்பற்றி நீங்கள் எதுவுமே சொல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது வேண்டுமென்றே தவிர்த்தீர்களானால் ஏன் என தெரிந்துக்கொள்ள விழைகிறேன்.

அன்புடன்
தினேஷ் ராஜேஷ்வரி.

அன்புள்ள தினேஷ்

கருத்துரிமையும் கேரளமும் என்ற கட்டுரையில் விரிவாகவே பேசியிருக்கிறேன்

ஜெ

ஜெ

ஹரீஷ் அந்நாவலை எந்த சமரசமும் இல்லாமல் எழுதி நூலாக, சொந்தச்செலவிலாவது வெளியிடவேண்டும் என்று எண்ணுகிறேன் 

அந்நூல் ஏற்கனவே டிசி புத்தக வெளியீடாக வந்துள்ளது
அன்புடன்
பாலா திரிச்சூர்
அன்புள்ள பாலா
நன்றி நான் அத்தகவலை அறிந்திருக்கவில்லை
ஜெ
220px-Mannam_Statue,_Vaikom_cropped
அன்புள்ள ஜெ
மீச நாவலைப் பற்றி நாயர் சர்வீஸ் சொசைட்டியின் எதிர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? கேரள எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் நாயர்கள். கேரளத்தில் மிக அதிகமாக எழுதப்பட்ட பின்புலமும் நாயர்களுடையது. மிக அதிகமான விமர்சனமும் நாயர்கள்மேல்தான் வந்துள்ளது. இப்போது இந்த எதிர்ப்பு எழுவதன் பின்னணி என்ன?
ஆர். ராமச்சந்திரன்
அன்புள்ள ராமச்சந்திரன்
கேரள நாயர் சொசைட்டி காந்தியவாதியான மன்னத்து பத்மநாபன் அவர்களால் உருவாக்கப்பட்டது. நாராயணகுருவைச் சென்று சந்தித்து கால்தொட்டு வணங்கி வைக்கம் ஆலயநுழைவுப்போராட்டத்தில் கலந்துகொண்டவர் அவர். ஒருகாலத்தில் அது நாயர் சாதியை கல்விநோக்கிக் கொண்டுவருவதற்காகவும் நிலவுடைமை காலகட்டத்து மூர்க்கங்களில் இருந்து விடுவிப்பதற்காகவும் மட்டும் செயல்பட்டது, வெற்றியும் பெற்றது
அதன் வீழ்ச்சி தொடங்கியது 1956ல் சட்டபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்ட கம்யூனிஸ்டு அரசுக்கு எதிரான ‘விமோசன சமரத்தில்’ கிறித்தவத் திருச்சபைகளுடனும் ஸுன்னி இஸ்லாமிய அமைப்புகளுடனும் அது கைகோத்துக்கொண்டபோது. அப்போதே அது முற்போக்கு எண்ணமுள்ளவர்களால் கைவிடப்பட்டு ஒரு குறுங்குழுவாக ஆகிவிட்டது.
1986ல் தகழி சிவசங்கரப்பிள்ளையின் கயறு நாவல் தேசிய அளவில் தொலைத்தொடராக வெளிவந்தபோது [இயக்கம் எம்.எஸ்.சத்யூ] அதில் நாயர்களின் மருமக்கள் வழி சொத்துரிமைமுறை காட்டப்பட்டது தங்களை இழிவுபடுத்துகிறது என போராடி அதை நிறுத்தினர் நாயர்கள். அன்றுமுதல் இந்த உளநிலை பெருகித்தான் வருகிறது.
வைக்கம் முகமது பஷீரின் பாத்துமாவின் ஆடு நாவலில் ஒரு நிகழ்ச்சி. தன் குடும்பத்தின் மொத்தக் குழந்தைகளையும் திரட்டிக்கொண்டு மையச்சாலை வழியாக ஆற்றுக்குக் குளிக்கச்செல்கிறார் பஷீர். அத்தனைபேரும் நிர்வாணமாக இருக்கிறார்கள். குளித்துமுடித்ததும் இளையவனாகிய அப்து “த்தாத்தா எனக்கு வேட்டி வேணும்” என்கிறான். ஏனென்றால் அவன் வகுப்பில் படிக்கும் ஒரு பையன் அப்பால் வேட்டி கட்டி நின்றிருக்கிறான். இவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. அப்துவுக்கு தன் துண்டை பஷீர் அளிக்கிறார். அவன் வேட்டி கட்டியதும் மற்ற அத்தனைபேரும் மர்மஸ்தானங்களை பொத்திக்கொள்கிறார்கள். வெட்கம்! அத்தனைபேருக்கும் ஆடை கொடுத்தால் பஷீர் நிர்வாணமாகச் செல்லவேண்டியிருக்கும்
இன்று மனம் புண்படுவது ஒரு மோஸ்தர்., ஒரு நாலாந்தர அரசியல் உத்தி. எப்போதும் அதற்கு எளிய இரை இலக்கியவாதிதான்
ஜெ
முந்தைய கட்டுரைஐரோப்பா-1, அழியா ஊற்று
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன் ,இலக்கியம் அரசியல்