மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்
மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இந்த விவாதத்திற்காகக் கேட்கவில்லை, என் உண்மையான ஐயம் இது. மனுஷ்யபுத்திரன் ஏன் அரசியல் கவிதைகள் எழுதக்கூடாது? அவர் என்ன எழுதவேண்டும் என்றுசொல்ல வாசகனாக உங்களுக்கு உரிமை உண்டா? அப்படிப்பட்ட கட்டாயங்களுக்கு அவர் ஆளாகவேண்டுமா?
ரவி இளங்கோ
***
அன்புள்ள ரவி
மனுஷ்யபுத்திரன் அன்றுமின்றும் எனக்குப்பிரியமான கவிஞர். எனக்கு உகந்த கவிஞர்களின் கவிதை மட்டுமல்ல அவர்களின் தோற்றமும் குரலும்கூட எனக்கு முக்கியமானவை. தேவதேவன், விக்ரமாதித்யன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் புகைப்படங்களே எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பவை. எங்கு நோக்கினாலும் சிலகணங்கள் நோக்காது கடந்துசெல்வதில்லை. கவிஞனுக்கும் வாசகனுக்குமான உறவென்பது எளிமையானஒன்றல்ல, வாசகன் கவிஞனுடன் தானும் வாழ்கிறான். ‘பிடித்தால்படி பிடிக்காட்டி போ’ என்பது போன்ற மனநிலைகளுக்கு அதில் இடமில்லை
மனுஷ்யபுத்திரன் எதையும் எழுதலாம், அது ஆத்மார்த்தமாக இருக்கும் என்றால். தன் கவிஞனின் ஒரு சொல்லில் பொய்மை குடியேறுமென்றால் அதை அறிபவனே வாசகன். மனுஷ்யபுத்திரன் அரசியலை எழுதலாம், எந்த அரசியல்வேண்டுமென்றாலும். ஆனால் அது அவருடைய குருதியும் கண்ணீருமாக இருக்கவேண்டும். இன்றைய அதிகார அரசியலில், கும்பல்பண்பாட்டில் அத்தகைய அரசியலுக்கு இடமில்லை என அறியாத அப்பாவிகள் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. அரசியல் ஆதரவாளர்களின் கைத்தட்டலுக்காக, முச்சந்தி அரசியலின் ஆவேசங்களை ஒட்டி அவர் எழுதும்போது தன் சிறந்த கவிதைகளின் மொழிநடையை, படிமங்களை அதற்கு அளிக்கிறார். அவருடைய கவிதையின் வாசகர்களுக்கு அது மிகமிகச் சங்கடமூட்டும் விஷயம்
என் விமர்சனங்கள் மனுஷ்யபுத்திரனுக்கு ஆத்திரமூட்டும் என்று அறிவேன், அதன்பொருட்டு வருந்தவும் செய்கிறேன். இன்று அவருடன் முகநூலில் கும்மியடிக்கும் கும்பலுக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லை என்று அவரே உள்ளூர அறிவார். இந்த அரசியல், இப்போது அவர் தேடிச்செல்லும் இலக்குகள் எல்லாம் மிகச் சாதாரணமானவை என அவர் அறியும் காலம் பல ஆண்டுகளுக்குப்பின் வரும். அன்று அவர் எழுதத் தொடங்கிய காலம் முதல் அவர் கவிதைகளுடன் வந்துகொண்டிருக்கும் வாசகனின் கருத்தின் மதிப்பை உணரக்கூடும்
ஜெ
பிகு
இந்த விவாதத்தை இங்கே முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்
எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்