மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்

manush

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

 

அன்புள்ள ஜெ

 

இவ்விஷயத்தில் என் மனதில் ஓடிய அனைத்து எண்ணங்களையும் அப்படியே வார்த்தையாக்கி இருக்கிறீர்கள்.. “மகாபாரதம் எழுதினால் பாஜக ஆதரவு பெருகும்” என்று எழுதிய போதே அவர் இலக்கியவாதி என்ற நிலையில் இருந்து முழுமையான அரசியல்வாதியாக தன்னை முன்வைத்து விடடார்.. குருமூர்த்தியிடமும், ராஜாவிடமும் வெளிப்படும் அதே மூர்க்கம் தான் இவரிடமும் வெளிப்படுகிறது..

 

நீங்கள் சொன்னது  போல எல்லாமே அரசியல் மதக் கண்ணாடி வழியாகவே பார்க்கப்படுகிறது.. ஒவ்வொரு வாட்சப் குழுவிலும் அரசியல் பேச வேண்டாம் என்று கதற வேண்டி இருக்கிறது..

 

இறுதியாக ஒரு தகவல் .. இங்கே அமெரிக்காவிலும் அப்படித்தான் நடக்கிறது (conservatives vs liberal).. முட்டாள் தனமும் மூர்க்கத் தனமும் நமக்கு மட்டும் உரியதல்ல என்பதே இப்போதைக்கு ஆறுதல் ..

 

நன்றி

ரத்தன்

அன்புள்ள ரத்தன்

 

ஜெர்மனி சென்றிருந்தபோது அங்கிருக்கும் அரசியல்சூழல் பற்றி பேச்சுவந்தது. அங்கும் இதுதான் பிரச்சினை. நீ எந்தப்பக்கம் என்ற கேள்விதான் எங்கும். இல்லை எனக்கு சில கேள்விகள் உள்ளன என்றாலே நீ எதிரி என்பதுதான் பதில்

 

ஜெ

 

ஜெ

 

நினைத்ததைப்போலவே உங்கள் மீதான வசைகள் இருபக்கமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. ஒருபக்கம் உங்கள் கட்டுரை நுட்பமான ஃபாசிசம் என திமுக ஆதரவாளர்கள் [இந்த ஆதரவாளர்களிடமிருந்து தப்பினால்தான் திமுகவுக்கு எதிர்காலம்] இன்னொரு பக்கம் கழுதைகள் நடக்கும் போது எல்லா பக்கமும் எத்திகொண்டே நடப்பதுபோல உங்கள் கட்டுரை என்று இந்துத்துவ வசை. இரண்டுபேருக்குமே பார்வை ஒன்றுதான். அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதை கூடச்சேர்ந்து அதே குரலில் கோஷமிடாத அத்தனைபேருமே எதிரிகள், பாவிகள், ஃபாஸிஸ்டுகள். நாம் எந்தவகையான துருவப்படுத்தலின் நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் சூழல் இது

 

 

சத்யா

 

அன்புள்ள சத்யா

 

எதிர்பார்த்ததுதான் இது, இவர்களுக்கு வேறுவழியில்லை. அவர்களின் தரப்பை அப்படி மட்டுமே காத்துக்கொள்ளமுடியும். ஒரு தரப்பை தன்னலத்துக்காகவோ மூர்க்கமான சாதிய, இன, நம்பிக்கைக்காகவோ சார்ந்திருப்பவர்கள் வேறொன்றும் செய்யமுடியாது. அவர்கள் எந்த கருத்தாலும் பாதிக்கப்படுவதில்லை. இக்கட்டுரை என்னைப்போலவே சிந்திக்கும் சிலருக்காக, அவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதன் சொல்வடிவமாக மட்டுமே எழுதப்பட்டது

 

ஜெ

 

 

திரு ஜெ,

 

உங்கள் கட்டுரையின் சாரம் ஒன்றே. அதாவது குருமூர்த்தி சொன்னது  மென்மையான அசட்டுத்தனம். ஆனால் மனுஷ்யபுத்திரன் சொன்னது மன்னிக்கமுடியாத பாவம் இல்லையா? நல்ல சமநிலை. மனுஷ்யபுத்திரன் திமுக காரர். ஆகவே அவருக்கு ஏதாவது எதிர்ப்புவந்தால் திமுக காரர்கள்தான் காக்கவேண்டும். அதாவது நீங்கள் குமுதத்தில் எழுதினால் குமுதம்தான் உங்களுக்காகப் போராடவேண்டும், இல்லையா?

 

சிவக்குமார்

 

அன்புள்ள சிவக்குமார்

 

அருமையான புரிதல். நீங்கள் வேலூரில் இதற்காக ஒரு தனிப்பயிற்சி நிலையம்கூட நடத்தலாம்

 

ஜெ

 

திரு ஜெ

 

நீங்கள் பெருமாள் முருகன் விஷயத்தில் அளித்த நிபந்தனையில்லாத ஆதரவு ஏன் மனுஷ்யபுத்திரனுக்கு இல்லாமல்போயிற்று? அவருக்கு மட்டும் அஞ்சுபக்கம் நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்திருப்பது ஏன்? அவர் இஸ்லாமியர் என்பதனால்தானே?

 

எம்

 

அன்புள்ள எம்

 

பெயர் தேவையில்லை என்ற உங்கள் அச்சத்தைப்பற்றி யோசியுங்கள். எம்.எஃப்.ஹூசேய்னும், எம்.எம்.பஷீரும் இஸ்லாமியர்களே. ஆனால் அரசியல்வாதிகளல்ல, வெறும் இலக்கியவாதிகள்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

அருமையான கட்டுரை. இத்தகைய கட்டுரைகள் வரும்போது வழக்கமாக நீங்கள் அந்தர் பல்டி அடித்துவிட்டீர்கள் என்று சொல்லத்தான் சம்பந்தப்பட்டவர்கள் ஆசைப்படுவார்கள்.  அதற்காக நுணுகி வாசிப்பார்கள். நீங்கள் 2009ல் எழுதிய இந்து தாலிபானியம் உட்பட அத்தனை கட்டுரைகளையும் பின்னிணைப்பாக அளித்து உங்கள் பார்வை தொடர்ச்சியாக சீராக எப்படி இருந்துகொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறீர்கள். ஆகவே கட்டுரையை வாசிக்காமலேயே மட்டையடி அடிக்கிறார்கள். நீங்கள் ஃபாஸிஸ்ட் என சிலர் எழுதியதை வாசித்தேன். சென்ற ஐம்பதாண்டுகளாக அப்பட்டமான நாஸித்தனமான வெறுப்பரசியலை செய்துவரும் ஃபாஸிஸ்டுகள் மற்றவர்களை அப்படிச் சொல்வது ஆச்சரியமில்லை. இவர்களை ஃபாஸிஸ்டுகள் என்று சொன்னவர்கள் இந்தியாவின் முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். அந்த வார்த்தையை என்ன ஏது என்று தெரியாமல் வசையாக பிடித்துக்கொண்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்

 

அருண்குமார்

 

அன்புள்ள அருண்குமார்,

 

இத்தகைய கருத்துக்கள் வரும்போது கட்சி சார்பானவர்களின் பதற்றம் ஏற்கனவே தங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்துக்கு ஒரு விளக்கத்தை அளிப்பது மட்டுமே. அவர்கள் அதைச்செய்யட்டும். என் கட்டுரையிலேயே எல்லாம் தெளிவாக உள்ளது

 

ஜெ

 

ஜெயமோகன் அவர்களுக்கு

 

உங்கள் கட்டுரை இரண்டுபக்கமும் சாத்த முயல்கிறது. அதில் எச்.ராஜா, குருமூர்த்தி போன்றவர்களைச் சொல்ல கீழ்மை அறிவின்மை உட்பட எல்லா சொற்களையும் பயன்படுத்தும் நீங்கள் மனுஷ்யபுத்திரனை மட்டும் எத்தனை மென்மையான சொற்களால் சொல்கிறீர்கள். அது பயத்தால் வாய்குளறுவதனால்தானே? இஸ்லாமியர் என்றதுமே வரும் அந்தப் பயம்தான் இங்கே செல்லுபடியாகிறது. ஆகவேதான் ராஜா போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.

 

மகேந்திரன்

 

அன்புள்ள மகேந்திரன்

 

நான் சொல்வது அக்குரல் இந்துமதம் என நான் நம்பும் மெய்தேடும் பாதையின் அடையாளம் அல்ல என்று மட்டுமே.

 

அக்கட்டுரை தெளிவாகவே சொல்வது இதைத்தான், நான் மனுஷ்யபுத்திரனின் கருத்துரிமையையே ஆதரிக்கிறேன், சில நிபந்தனைகள் மற்றும் ஐயங்களுடன். அந்நிபந்தனைகள் எழுத்தாளனின் பொறுப்பு மற்றும் அடையாளம் சார்ந்தவை. அவருடைய அக்கவிதையில் ஓர் இந்துவின் நோக்கில் பிழையாக ஏதுமில்லை. அதற்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறேன்.

 

ஜெ

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

 

வணக்கம்.
வழக்கம் போல் ஒரு பிரச்சனையின் எல்லா கோணங்களையும் சரிவர ஆராய்ந்து காய்தல் உவத்தலின்றி எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் என்ன செய்ய உங்களை போன்ற மிகச் சிலரே (ஏன் எனக்குத்தெரிந்து நீங்கள் ஒருவரேயென்றும் கூட கூறலாம் )பாகுபாடின்றி உண்மையை உரக்கச் சொல்லுகிறீர்கள்.இது எத்தனை பேரிடம் சென்றடையுமோ தெரியவில்லை.இந்த மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் கயமைத்தனம்தான் என்னைப்போன்ற சாமானிய நடுத்தர இந்துக்களையும் சில சமயங்களில் எரிச்சலுற செய்கிறது மேலும் எதிர் பக்கம் ஈர்க்கிறது.இவர் ஒரு காலத்தில் இலக்கியவாதியாக இருந்திருக்கலாம் இப்போது அத்தகுதியை முற்றிலும் இழந்து ஒரு கட்சியின் அடியாளாகத்தான் என் கண்ணுக்குத்  தெரிகிறார்.எனவே அறம் பேணும் எந்த இலக்கியவாதியும் நீங்கள் கூறியபடி இந்த நிகழ்வில் இவர்  பின்னே நிற்கத் தேவையில்லை.மேலும் இவரை போன்றவர்களின் ஒரு பக்கம் சார்ந்து நிற்கும் தன்மையினால் இவர்களின் நம்பகத்தன்மை எங்கள் மத்தியில் என்றுமே சந்தேகத்துக்குரியதுதான்.
அன்புள்ள,
அ .சேஷகிரி.
*

 

ஜெ,

 

உங்கள் கட்டுரையில் ஒரே விஷயம்தான் நான் கேட்க விரும்புவது. கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன? எதுவரை எழுத்தாளன் செல்லலாம்?

 

ரவி

 

அன்புள்ள ரவி,

 

எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்துக்கு எல்லையே இல்லை. எல்லை வகுக்கப்படுமென்றால் அதனுடன் போராடி எந்தத் துன்பத்தையும் ஏற்கவும் மடியவும்கூட அவன் சித்தமாகவேண்டும். ஆனால் அது எழுத்தாளனாக நின்று, அவ்வகையில் தன் ஆளுமையை வரையறைசெய்துகொண்டு பேசும்போது மட்டுமே. அரசியல்வாதிகளின் கருத்துச் சுதந்திரம் அரசியலுக்கு உட்பட்டது

 

ஜெ

கருத்துரிமையும் கேரளமும்

இரு எல்லைகள்

பஷீரும் ராமாயணமும்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

இந்துத்துவம் காந்தி

எம் எஃப் ஹூசேய்ன்

ஹூசேய்ன் கடிதங்கள்

காதலர் தினமும் தாலிபானியமும்

தேவியர் உடல்கள்

முந்தைய கட்டுரைகும்பமுனி யார்?
அடுத்த கட்டுரைஐரோப்பா-1, அழியா ஊற்று