ஐரோப்பா-6,மேற்குமலைமுடி

shak

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒருகாலகட்டத்தில் பள்ளிக்கல்வியின் தவிர்க்கமுடியாத பகுதியாக இருந்தது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் பெரும்பாலான பள்ளிநூலங்களில் இருக்கும். முதன்மையாக, பழந்தமிழ் இலக்கியங்களின் முறையாக பிழைநோக்கப்பட்ட எளிய பதிப்புகள். புலியூர் கேசிகன் உரையுடன் சங்கப்பாடல்களை நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் வாசித்தது ஒரு மாபெரும் திறப்பு. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட வெளிநாட்டு இலக்கிய அறிமுக நூல்கள் ஒரு புத்துலகைத் திறந்துவைத்தவை. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ, லிட்டன்பிரபுவின் பாம்பியின் கடைசிநாட்கள்  முதலிய செவ்வியலக்கியப் படைப்புகளை எளிய நடையில் சுருக்கி கோட்டோவியங்களுடன் நல்ல காகிதத்தில் கெட்டி அட்டையில் வெளியிட்டார்கள். என் நடுநிலைப்பள்ளி நாட்களில் ஒரே வீச்சில் உலக இலக்கியச்சூழலை அறிந்துகொள்ள வழியமைத்தவை அந்நூல்கள்.

நான் ஷேக்ஸ்பியரின் படைப்புக்களை வாசிப்பது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த கா.அப்பாத்துரையின் ‘ஷேக்ஸ்பியர் கதைக்கொத்து’ என்னும் நூலில்தான். ஐந்தாம் வகுப்பை முழுக்கோடு பள்ளியில் முடித்து ஆறாம் வகுப்பை அருமனை உயர்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக வந்திருந்தேன். முத்தையா என்னும் ஆசிரியர்தான் நூலகத்துக்குப் பொறுப்பு. என் வாசிப்பார்வத்தைக் கண்டு அவர் அந்நூலை எனக்கு அளித்து “இதப்படிலே.இவனுக்குமேலே கதைசொல்றவன் கெடையாது” என்றார்.  மாக்பெத்தும், லியர் மன்னனும், ஹாம்லெட்டும் என்னை ஆட்கொண்டார்கள்.

கா அப்பாத்துரை
கா அப்பாத்துரை

பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரல்வாய்மொழியில் 1907ல் பிறந்தார். இயற்பெயர் நல்லசிவம். திருவனந்தபுரம் பல்கலை மாணவர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் முதுகலைப் பட்டம்பெற்றவர். இந்தி, சம்ஸ்கிருதம் ஆகியமொழிகளிலும் பட்டம்பெற்றிருக்கிறார். நெல்லையிலும் மதுரையிலும் காரைக்குடியிலும் இந்தி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். அக்காலத்தைய தமிழியக்கச் செயல்பாடுகளில் முதன்மைக்குரல்களில் ஒன்றான கா.அப்பாத்துரை மொழியாக்கம், வரலாற்றாய்வு, தமிழாய்வு என எழுதிக்குவித்தவர். இவருடைய மொழியாக்கத்தில் மலையாள முதல்நாவல்களான இந்துலேகா , மார்த்தாண்டவர்மா போன்றவை தமிழில் வெளிவந்துள்ளன. பதினொன்றாம்நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய ஆசிரியரான  முரசாகி ஷிகுபு எழுதிய The Tale of Genji  இவருடைய மொழியாக்கத்தில் செஞ்சி கதை என்றபேரில் வெளிவந்துள்ளது. குமரிக்கண்டம் பற்றி நிறைய எழுதியவர் என்றாலும் இவருடைய வரலாற்றாய்வுநூல்களில் தென்னாட்டுப் போர்க்களங்கள் தான் முக்கியமான படைப்பு.

கா.அப்பாத்துரைக்கு முன்னோடியாக அமைந்தது பிரிட்டிஷ் கட்டுரையாளரும் தொல்பொருள் சேகரிப்பாளருமான சார்லஸ் லாம்ப் [Charles Lamb  1775 – 1834] எழுதிய Tales From Shakespeare. என்னும் கதைநூல் 1807 ல் வெளிவந்த இந்த குறுங்கதைத் தொகுதி ஷேக்ஸ்பியரை உலகமெங்கும் கொண்டுசென்றது. அப்போது பிரிட்டிஷ் பேரரசு உலகின் பெரும்பகுதியை ஆண்டது. அங்கெல்லாம் ஆங்கிலக் கல்வியை அவர்கள் கொண்டுசென்றார்கள். பிரிட்டிஷார் வகுத்த ஆங்கிலக் கல்வியின் முதன்மை ஆசிரியராக ஷேக்ஸ்பியர் இருந்தார். அவரை ஒரு பிரிட்டிஷ்பெருமிதமாகவே அவர்கள் கருதினர். ஷேக்ஸ்பியரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முதல்நூலாக சார்லஸ் லாம்பின் கதைத் தொகுதி புகழ்பெற்றது. பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் பாடமாக இருந்தது. பல்லாயிரக்கணக்காக அது அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. இன்றும்கூட அது பல கல்விநிலையங்களில் பாடமாக உள்ளது.

lamb
சார்ல்ஸ் லாம்ப்

உலகமெங்கும் முந்நூறாண்டுக்காலம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மதநூல்களைப்போலப் பயிலப்பட்டன. ஆங்கில நடையைக் கற்றுக்கொள்வதற்கு ஷேக்ஸ்பியர் கவிதைகளில் பயிற்சி இருந்தாகவேண்டும் என்று சொல்லப்பட்டது. பேச்சில் ஷேக்ஸ்பியர் வரிகளை மேற்கோளாக்குவது அன்றைய படித்த நாகரீக மனிதர்களின் இயல்பாகக் கருதப்பட்டது. பேராசிரியர்கள் ஷேக்ஸ்பியர் வரிகளை வேடிக்கையாகவும் கவித்துவமாகவும் கையாள்வதும் அதை மாணவர்கள் புரிந்துகொண்டு சிரிப்பதும் அன்று சாதாரணம். சென்றகால அரசு அதிகாரிகளின் கோப்புக் குறிப்புகளில் ஷேக்ஸ்பியர் வரிகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

சில நினைவுகள். இந்திரா பார்த்தசாரதியின் நாவலொன்றில் ஒரு சிறு கிராமத்தில் விருந்தினராக வீட்டுக்கு வரும் நாடோடிக்கிழவர் பேச்சின் நடுவே  the rest is silence என்ற ஷேக்ஸ்பியர் வரியை சொல்வதைக் கண்டு கதைசொல்லி வியப்பதை எழுதியிருப்பார். நான் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் இளங்கலை பயின்றபோது Adwanced English கற்பித்த ஆசிரியர் ஆர்தர் டேவிஸ் எரிச்சலுடன் Listen to many, speak to a few ,do nothing  என்று சொன்னது ஷேக்ஸ்பியரின் வரியின் மீதான அவருடைய பகடி என  மாணவர்கள் அறிந்திருந்தார்கள் என்பது பலர் சிரித்ததிலிருந்து தெரிந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் அறுபதுகளைச் சேர்ந்த கோப்பு ஒன்றை ஒரு வழக்குக்காக பார்த்தபோது அக்கால அதிகாரி ஒருவர் Nothing can come of nothing. என்ற ஷேக்ஸ்பியர் வரியை குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன்.

[மொத்த ஷேக்ஸ்பியரே இவர்களிடம் மேற்கோளாக மாறிவிட்டார் என்பார்கள். ஷேக்ஸ்பியர் நூல் ஒன்றை நூலகத்தில் எடுத்து வாசித்த பெண்மணி ஏகப்பட்ட மேற்கோள்கள், ஆகவே நடை நன்றாக இல்லை என்று திருப்பிக்கொடுத்துவிட்டார் என்று  ஒரு நகைச்சுவை உண்டு].

ஸ்டிராட்போர்ட் அரங்கு கனடா
ஸ்டிராட்போர்ட் அரங்கு கனடா

இவர்கள் பெரும்பாலும் அக்கால ஆங்கிலேய ஆசிரியர்களிடம் படித்தவர்கள். அவர்கள் ஷேக்ஸ்பியர் வெறியர்கள். அவர்களிடமிருந்து அந்நோய் தொற்றிக்கொண்டது. அக்காலக் கல்லூரிகளில் ஒரு ஷேக்ஸ்பியர் நிபுணர் இருப்பார். ஷேக்ஸ்பியர் என்றே அடைமொழி இருக்கும். மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியில் லைசாண்டர் என்ற ஆசிரியருக்கு அப்படி ஓர் அடைமொழி உண்டு. வசையாக கொஞ்சம் மாற்றியும் சொல்வோம்.

ஆச்சரியமான ஒன்றுண்டு, இந்தியர்களின் உள்ளத்தில் ஷேக்ஸ்பியரின் செல்வாக்கு மிகமிகக் குறைவு. இந்திய இலக்கியச் சிற்பிகள் எவருமே தங்களைக் கவர்ந்த முன்னோடிப்படைப்பாளியாக அவரைச் சொன்னதில்லை. கற்பனாவாதக் கவிஞர்களில் பைரன்,ஷெல்லி, கீட்ஸ், வெர்ட்ஸ்வெர்த் ஆகியோரும் பிற்காலக் கவிஞர்களில் டி.எஸ்.எலியட்டும் இந்தியமொழிகளில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தியவர்கள். இந்திய மொழிகள் அனைத்திலுமே ஒரு ஷெல்லியும் எலியட்டும் இருப்பார்கள் என்று சுந்தர ராமசாமி சொன்னதுண்டு. தமிழில் ஷெல்லிக்கு பாரதி எலியட்டுக்கு சி.மணி. மலையாளத்தில் ஷெல்லிக்கு சங்கம்புழா எலியட்டுக்கு என்.என்.கக்காடு. ஆனால் ஷேக்ஸ்பியர்கள் இல்லை

இந்திய கட்டிடக்கலை குறித்தும் இலக்கியம் குறித்தும் முக்கியமான நூல்களை எழுதியிருக்கும் கே.ஆர்.அய்யங்கார் இந்திய மொழிகளில் ஷேக்ஸ்பியர் எப்போது மொழியாக்கம் செய்யப்பட்டார் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  Shakespeare in India  என்னும் தலைப்பில்.. இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன. இந்திய மொழிகளில்  அச்சில்வெளிவந்த மிக ஆரம்பகால படைப்புகள், ஷேக்ஸ்பியர் மொழியாக்கங்கள்தான்.

மலையாளத்தில் ஷேக்ஸ்பியரின் The Comedy of Errors நாடகத்தை கல்லூர் உம்மன் பிலிப்போஸ் உரைநடையில் 1866ல் ஆள்மாறாட்டம் என்றபேரில் மொழியாக்கம் செய்தார். அது உரைநடையிலக்கியத்தின் தொடக்ககால நூல்களில் ஒன்று. தமிழில் விஸ்வநாத பிள்ளை 1870ல்  The Merchant of Venice  ஐ மொழியாக்கம் செய்தார். பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் நான்கு நாடகங்களை தமிழாக்கம் செய்துமேடையேற்றினார். இலக்கிய நோக்கில் அரு.சோமசுந்தரம், கள்ளபிரான் பிள்ளை, சி.நமச்சிவாயம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பாளர்கள். இந்த மொழியாக்கங்கள் எவையுமே கவித்துவமானவை அல்ல.  தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள், இலக்கியத்தகுதி கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் ஷேக்ஸ்பியரை மொழியாக்கம் செய்ததில்லை. ஆகவே தமிழிலும் மலையாளத்திலும் ஷேக்ஸ்பியரின்  கருத்தியலோ அழகியலோ எந்த இடத்தையும் பெறவில்லை. ஏன் என்பது ஆய்வாளர்களுக்குரிய தேடல்.

பம்மல் சம்பந்த முதலியார்
பம்மல் சம்பந்த முதலியார்

என்னுடைய உளப்பதிவு இது. ஒன்று, ஷேக்ஸ்பியர் எலிசபெத் –விக்டோரிய யுகத்தின் அடையாளமாகவே இங்கே முன்வைக்கப்பட்டார். ஆகவே அவர் கல்வித்துறையிலேயே திகழ்ந்தார். இந்திய இலக்கியம் என்பது ஆங்கில ஆதிக்கத்திற்கும் அதன் விழுமியங்கள் நிறைந்திருந்த கல்விநிலையங்களுக்கும் எதிராக எழுந்த ஒன்று. ஆகவே ஷேக்ஸ்பியரை இந்திய இலக்கிய முன்னோடிகள் பொருட்படுத்தாமலிருந்திருக்கலாம். ஷேக்ஸ்பியரின் உலகப்பார்வை அங்கதம் நிறைந்த கசப்பு கொண்டது. அது இலட்சியவாதம் பெருகி எழுந்த பத்தொன்பதாம்நூற்றாண்டு இந்திய உள்ளத்துக்கு உவப்பாக இல்லாமலிருந்திருக்கலாம். அதோடு ஷேக்ஸ்பியர் பேசிய ஐரோப்பிய வரலாற்றுச்சூழலுடன் ஒன்றமுடியாததும் காரணமாக இருந்திருக்கலாம்

சென்ற இருபத்தைந்தாண்டுகளாகத்தான் ஷேக்ஸ்பியர் பள்ளிப்பாடங்களில் இருந்து வெளியேறி வருகிறார். உலக அளவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுக்கச் சென்ற Plain Language Movement அதற்கு முக்கியமான காரணம். அவ்வியக்கத்தின் வேர்கள் நவீனத்துவ அழகியலில் உள்ளன. நவீனத்துவ எழுத்தாளர்கள் மொழியை ஒலியழகுடனும்  சொல்லணிகளுடனும் எழுதுவதை எதிர்த்தார்கள். சிக்கலான மொழி நடைமுறையில் பயனற்றது என்று வாதிட்டனர். மக்கள் பேசும் மொழிக்கு அணுக்கமாக இருப்பதே நல்ல நடை என்ற கருத்து நவீனத்துவத்தின் ஆசிரியர்களால் சொல்லிச்சொல்லி நிறுவப்பட்டது.  காம்யூ, காஃப்கா, ஹெமிங்வே ஜார்ஜ் ஆர்வல் போன்றவர்கள்   மிக எளிய நேரடி நடையில் எழுதியவர்கள். அந்த அலை உலகம் முழுக்கச் சென்றது. தமிழில் ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுஜாதா போன்றவர்கள் அந்நடைக்காக வாதிட்டிருப்பதைக் காணலாம்

ஷேக்ஸ்பியர் இல்லம் இங்கிலாந்து
ஷேக்ஸ்பியர் இல்லம் இங்கிலாந்து

நேரடியான எளிய நடையை முன்வைத்தவர்களுக்கு இதழியலுடன் உள்ள தொடர்பு குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் ஆர்வெல், ஹெமிங்வே போன்றவர்கள் இதழியலாளர்கள் மட்டுமல்ல, போர்ச்செய்தியாளர்களும் கூட.ஆகவே நேரடித்தன்மை, சுருக்கம் ஆகிய இரண்டும் அவர்களுக்கு முதன்மையாகப் பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் நவீனத்துவம் ஓர் இலக்கிய அலையாக உலகமெங்கும் பரவியது. அதன் விளைவாக அதுவரை உலகமெங்கும் ஆங்கிலக்கல்வியின் ஒருபகுதியாக இருந்த பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

1970 களில் அமெரிக்காவில் அது ஒரு கொள்கையாகப் பரவலாயிற்று. செய்தி,வணிகம், அரசுநிர்வாகம் ஆகிய தளங்களில் மிக எளிமையான நேரடியான ஆங்கிலமே பயன்படுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. 1976ல் ஜிம்மி கார்ட்டரின் அரசு எளிய ஆங்கிலத்தையே அரசில் பயன்படுத்தவேண்டும் என ஆணை பிறப்பித்தது. எளிய ஆங்கிலம் பல்லினக்குடியேற்றம் கொண்ட அமெரிக்காவுக்கு தவிர்க்கமுடியாததாக இருந்தது. அத்துடன் பெருவளர்ச்சி அடையத் தொடங்கிய அறிவியல்- தொழில்நுட்பத்துறை  எளிய ஆங்கிலத்தையே நாடியது

விளைவாக இந்தியாவிலும் கல்வித்துறை மாற்றங்கள் உருவாயின. கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட ஆங்கிலத்தை ‘நடைமுறை’ ஆங்கிலமாக மாற்றவேண்டும் என்று கொள்கை வகுக்கப்பட்டது. விளைவாக கவிதை மிகவும் குறைக்கப்பட்டது. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கவிதை. பெரும்பாலான பாடங்களில் அமெரிக்க எழுத்து அதிக இடம்பெற்றது. அந்த அலையில் ஷேக்ஸ்பியர் காணாமலானார். நான் என் கல்லூரி புகுமுக வகுப்பில் இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களை படித்திருக்கிறேன். A Midsummer Night’s Dream, As You Like It. என் மனைவி என்னைவிட எட்டாண்டுகள் இளைவள். அவள் ஷேக்ஸ்பியரின் மிகச்சிறிய மனப்பாடச்செய்யுள் ஒன்றை மட்டுமே படித்திருக்கிறாள். மற்றபடி ஷேக்ஸ்பியரை கல்விக்கூடம் வழியாக அறியவே இல்லை.

shak6
ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு, ,பழையபடம்

இதில் ஒரு வேடிக்கை, அக்காலத் தமிழ்ப் பாடத்திட்டமும் ஆங்கிலப்பாடத்திட்டத்தை ஒட்டி அமைக்கப்பட்டது என்பதே. ஆகவே ’நாடகச்செய்யுள்’ ஒரு பாடம். அதற்கு தமிழில் செய்யுள் நாடகங்கள் இல்லை. ஆகவே ஆசிரியர்கள் அதன்பொருட்டு நாடகங்கள் எழுதினர். சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியம் அவ்வாறு எழுதப்பட்டதே. புலவர் ஆ.பழநியின் அனிச்ச அடி போன்ற பல நாடகங்கள் பின்னாளில் எழுதப்பட்டன. எச்சுவையும்  இல்லாத இந்த சக்கைகளை ஷேக்ஸ்பியரை நினைத்துக்கொண்டு மாணவர்கள் மென்று விழுங்கவேண்டியிருந்தது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசிக்க மிகச்சிறந்த வழியாக நான் கண்டுகொண்டது ஆங்கிலப் பட்டப்படிப்பு முதுகலைப் படிப்புகளுக்குப் பாடமாக பரிந்துரைசெய்யப்பட்ட நாடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள உரையுடன் கூடிய நூல்கள். சாணித்தாளில் வெளியிடப்பட்டவை. பழையபுத்தகக் கடைகளில் ஓரிரு ரூபாய் விலையில் கிடைக்கும். ஒருபக்கம் மூலம், நேர் எதிர்பக்கம் சொற்பொருள், பொழிப்புரை. என்னிடம் ஏறத்தாழ எல்லா ஷேக்ஸ்பியர் நாடகங்களும் இருந்தன. இணையம் இல்லாத அந்தக்காலத்தில் மிக எளிதாக பொருளறிந்து வாசிப்பதற்கு உதவியானவை அவை.

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் சிறப்புகள் குறித்து பலவாறாக எழுதப்பட்டுள்ளது. நான் முக்கியமாக நினைப்பது அவற்றின் ‘நாடகத்தன்மை’தான். நாடகாந்தம் கவித்துவம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லாட்சிக்குச் சிறந்த உதாரணங்கள் அவை. நாடகம் என்பது மிகச்சிறிய ஓர் கால இட எல்லைக்குள் வைத்து வாழ்க்கையைச் சொல்லியாகவேண்டிய கட்டாயம் கொண்டது.எந்தக் கலைக்கும் அதன் எல்லையே சாத்தியமும் ஆகிறது. நாடகம் அந்த எல்லை காரணமாகவே வாழ்க்கையின் உச்சத்தருணங்கள் வழியாகச் செல்லவேண்டியிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அத்தகையவை. ஓதெல்லோ தொடங்குமிடம் ஓர் உதாரணம். டெஸ்டெமோனாவைத் தேடி வாளுடன் அரங்கில் பாய்ந்து நுழையும் வீரர்கள், அங்கே வந்து அவர்களிடம் உங்கள் வாள்களை உறையிலிடுங்கள், நிலவொளியில் துருப்பிடிக்கப்போகின்றன என  ‘பஞ்ச் டயலாக்’ பேசும் ஓதெல்லோ என அது பரபரப்பாகவே ஆரம்பித்து அப்பரபரப்பு குறையாமல் மேலே செல்கிறது.

sham4
ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு,

அந்த உச்சப்படுத்தல் கொஞ்சம் செயற்கையானதே, ஆனால் கலை  என்பதே அடிப்படையில் செயற்கையானதுதான். இயற்கையானதாகத் தெரிவதுகூட செயற்கையான செதுக்கல்தான். இயற்கையான வெளிப்பாட்டின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தல்ஸ்தோய் ஷேக்ஸ்பியரை நிராகரித்தது புரிந்துகொள்ளக்கூடியதே, ஆனால் அவருடைய  The Power of Darkness கூட ஷேக்ஸ்பியர் பாணி செயற்கை உச்சங்கள் கொண்டதே. ஷேக்ஸ்பியரின் கலை அந்த உச்சங்களினூடாக அது சென்றடையும் வாழ்க்கைத்தரிசனங்களில் உள்ளது. அது மானுடனின் அனைத்து இருள்களையும் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்கிய ஒரு பார்வையைச் சென்றடைவது. பலசமயம் எதிர்மறைத்தன்மை கொண்டதாயினும் பகடியும் கவித்துவமும் கலந்தது

ஆனால் இன்று ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேடையில் நடிக்கமுடியுமா என்னும் ஐயம் எனக்கிருந்தது.2001ல் கனடாவுக்குச் சென்றபோது அ.முத்துலிங்கம் அவர்களின் உதவியால் Stratford Shakespeare Festival லுக்குச் சென்றேன். கனடாவின் ஒண்டோரியோ மாநிலத்தில் உள்ள ஸ்டிராட்போர்ட் என்னும் ஊரில் நிகழும் ஷேக்ஸ்பியர் நாடகவிழா நாடகத் தயாரிப்பாளரான டாம் பாட்டர்ஸன் Tom Patterson அவர்களால் தொடங்கப்பட்டது. பாட்டர்ஸன் கனடாவின் ஸ்ட்ராஃபோர்டு ஊரைச் சேர்ந்தவர்.இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரின் பெயர் அது. அவர் அங்கே 1953 ல் மேயர் டேவிட் சிம்ப்ஸனின் உதவியுடன் அந்த நாடகவிழாவை ஒருங்கிணைத்தார்.அக்கால நட்சத்திரமான அலெக் கின்னஸ் அதை தொடங்கிவைத்தார். மிகச்சிறிய புறநகரான ஸ்டிராஃபோர்ட் மெல்ல புகழ்பெறலாயிற்று. இன்று திறந்தவெளி அரங்குகள், மரபான அரங்குகள் என பற்பல நிரந்தர நாடக அரங்குகளுடன் முக்கியமான கலைமையமாக ஆகியிருக்கிறது இவ்வூர்

shamr
ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு, ,பழையபடம்

ஷேக்ஸ்பியர் நாடகவிழாவாக இருந்தாலும் அனைத்து நாடகங்களும் அங்கே அரங்கேறும். நான்  வில்லியம் ரோஸ் எழுதிய Guess Who’s Coming to Dinner போன்ற நவீனயுக நாடகங்களை அங்கே பார்த்தேன் இவையெல்லாம் பேசிக்கொண்டே இருக்கும் நாடகங்கள், வசனமழை என்றுதான் வாசிக்கையில் நினைத்திருந்தேன். ஆனால் மேடையில் பார்க்கையில் , நாடக அரங்கை நிறைக்கும் உடலசைவுகள், நேரக்கணக்கு தவறாத சொல்பரிமாற்றம், இயற்கையான நடிப்புடன் அபாரமான அனுபவமாக இருந்தன. இங்குதான் முதல்முறையாக ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை மேடையில் பார்த்தேன். Twelfth Night. மிகத்தேர்ந்த அரங்கப்பயிற்சியால் கண்களை விலக்கமுடியவில்லை, கீழே விழுந்த ஒரு கைக்குட்டையைக்கூட இடைவேளையிலேயே எடுக்கமுடிந்தது. பயின்ற குரல்களால் பேசப்பட்ட ஒரு வசனம்கூட புரியாமலில்லை – எனக்கு ஆங்கில உச்சரிப்பு எப்போதுமே புரிந்துகொள்ளக் கடினமானது. அரங்க அனுபவம் என்றால் என்ன என்று அறிந்துகொண்ட நாட்கள் – நான் தமிழில் இன்றுவரை ஒரு மேடைநாடகத்தைக்கூட ரசித்ததில்லை.

அசல் ஸ்டிராட்போர்டுக்குச் செல்வோம் என அப்போது எண்ணியிருக்கவில்லை. Stratford-upon-Avon என அழைக்கப்படும் சிற்றூர் பிரிட்டனில் வார்விக்‌ஷயரில் அவோன் ஆற்றங்கரையில் உள்ளது. ஷேக்ஸ்பியர் பிறந்த ஊர் அது. இங்குள்ள ஹென்லி தெருவில் உள்ள பழைமையான மாளிகையில்தான் ஷேக்ஸ்பியர் பிறந்தார் என்கிறார்கள். வரலாறு என்பதைவிட பெரும்பாலும் இது ஒருவகை நவீனத் தொன்மம்தான். அந்த வீடு 16 ஆம் நூற்றாண்டுமுதல் அங்கிருந்தாலும் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. செங்கல்லாலும் மரத்தாலும் ஆனது. இன்று அது ஷேக்ஸ்பியர் அருங்காட்சியகமாக உள்ளது. பதினாறாம்நூற்றாண்டின் தன்மையை வைத்து நோக்கினால் இது ஒரு பெரிய மாளிகைதான். இந்திய விழிகளுக்கு அந்த மாளிகைக்கும் ஸ்ட்ரார்போர்டில் உள்ள பிற வீடுகளுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. அதை பழைமையான வீடு என வெளியே இருந்து நோக்கினால் சொல்லமுடியாது

shak

ஆனால் உள்ளே சென்றால் பழைமை தெரியும். பல அறைகள் குறுகலானவை. உணவுமேஜை, நாற்காலிகள் எல்லாமே எளிமையான அமைப்பு கொண்டவை.  1564 ல் அங்கே ஷேக்ஸ்பியர் ஜான் ஷேக்ஸ்பியர் என்னும் கம்பிளி வணிகரின் மகனாகப்பிறந்தார். ஜான் ஷேக்ஸ்பியர் தோலால் கையுறைகள் செய்யும்தொழிலையும் செய்துவந்தார். அந்த இல்லத்தின் கீழ்ப்பக்கம் அவருடைய பணிச்சாலையும் கடையும் இருந்தன. அங்கே இப்போது பாதிசெய்யப்பட்ட கையுறைகளுடன் அவருடைய பணிக்கருவிகள் உள்ளன. ஜான் ஷேக்ஸ்பியரிடமிருந்து இந்த இல்லம் ஷேக்ஸ்பியருக்கு வந்தது. அவருக்கு வேறுவீடு இருந்தமையால் அவர் இதை பெரும்பாலும் பயன்படுத்தவில்லை. லூயிஸ் ஹிக்காக்ஸ் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்ட இந்த கட்டிடம் ஒரு விடுதியாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியருக்குப்பின் அவர் மகள் சூசன்னாவுக்கு உரிமையான இவ்வில்லம் அக்குடும்பம் மறைந்தபின் மறக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் தாமஸ் கார்லைல், சார்ல்ஸ் டிக்கன்ஸ் போன்ற பலர் இங்கே வந்து சுவர்களில் கையெழுத்திட்டிருக்கின்றனர்

1846ல் ல் அமெரிக்க வணிகரான பி.டிபார்னம் [ P. T. Barnum]  என்பவர் இந்த மாளிகையை விலைக்கு வாங்கி செங்கல்செங்கல்லாகப் பெயர்த்து அமெரிக்கா கொண்டுசென்று நிறுவ திட்டமிட்டார். அச்செய்தி பிரிட்டனின் தேசிய உணர்வை எழச்செய்யவே  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒரு தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஷேக்ஸ்பியர் பிறந்த ஊர் கமிட்டி அமைக்கப்பட்டது. டிக்கன்ஸ் போன்றவர்களின் உதவியுடன் 3000 பவுண்டுக்கு அந்த இடம் வாங்கப்பட்டு ஷேக்ஸ்பியர் நினைவில்லமாக ஆக்கப்பட்டது.  இன்றிருக்கும் கட்டிடம் அக்கமிட்டியால் விரிவாக்கி கட்டப்பட்டது

shakk

ஸ்டிரார்போர்ட் குளிராக இருந்தது. அந்த கட்டிடத்தின் உள்ளே செல்கையில் வரலாற்றுநிலைகளில் உருவாகும் காலப்பயணம் சாத்தியமானது. குறுகலான அறைக்குள் மூச்சுக்காற்றின் நீராவி நிறைந்திருந்தது. கற்பனையோ உண்மையோ அங்கே ஷேக்ஸ்பியர் வாழ்ந்தார் என்ற எண்ணத்துடன் அவ்வறைகளுக்குள் நடப்பதும், ஷேக்ஸ்பியர் படைப்புகளின் முதல் அச்சுப்பதிப்பு உட்பட அரிய நூல்சேகரிப்புகளை நோக்குவதும் கனவிலாழ்த்துவதாக இருந்தது. மெல்லியகுரலில் உரையாடல்கள். வெளியே நிறைந்திருந்த ஆழ்ந்த அமைதி.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலிருந்து வெவ்வேறு கதைமாந்தர்களை நினைத்துக்கொண்டேன். எனக்கு எப்போதும் நெருக்கமானவனான மாக்பெத். ‘என் வாளே என்னை எங்கே அழைத்துச்செல்கிறாய்?’. காலத்தின் பெருக்கில் கற்பனைக்கதாபாத்திரங்கள் மேலும் மேலும் உண்மையானவர்களாக ஆகிறார்கள். உண்மையான மானுடர் கற்பனைக்கதாபாத்திரங்களாக ஆகிவிடுகிறார்கள். ஷேக்ஸ்பியரைவிட அவருடைய கதைமாந்தர் வரலாற்றில் மேலும் தெளிவுடன் தெரிகிறார்கள்.

வெளிவந்தபோது தோட்டம் இளமழையில் நனைந்திருந்தது. அங்கே லண்டன் வாழ் வங்கத்தவர் கொடையாக அளித்த தாகூரின் கற்சிலை. அருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். கா.அப்பாத்துரை முதல் எழுந்த ஒரு நீண்ட நினைவுச்சரடை உள்ளோ ஜெபமாலை போல மணிமணியாகத் தொட்டு உருட்டமுடிந்தது.

முந்தைய கட்டுரைவாசகர்களுடன் உரையாடல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாடு- கடிதங்கள்