ஐரோப்பா-5, அடித்தளத்தின் குருதி

lona

என் அம்மாவின் மலையாள நூல் சேகரிப்பில் இரு விந்தையான நூல்கள் இருந்தன. இரண்டுமே மொழியாக்கநூல்கள். ஒன்று கோட்டயத்த்தில் வாழ்ந்த ரிச்சர்ட் காலின்ஸ் என்னும் பாதிரியாரின் மனைவியான ஃப்ரான்ஸிஸ் வைட் காலின்ஸ் [Mrs Frances Wright Collins] 19 ஆம் நூற்றாண்டில் எழுதிய The Slayer Slain என்னும் ஆங்கில நாவலின் மலையாள மொழியாக்கமான காதக வதம். கோட்டயத்திலிருந்து அந்நாளில் வெளிவந்துகொண்டிருந்த கிறித்தவ இறையியல் இதழான வித்யா சம்கிரஹ் அதை வெளியிட்டது. வைட் அந்நாவலை முழுமையாக்கவில்லை.அதை அவர் கணவர் எழுதி முழுமையாக்கினார். இன்னொன்று லண்டன் கொட்டாரத்திலே ரஹஸ்யங்கள். George W. M. Reynolds என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் எழுதிய  The Mysteries of the Court of London என்னும் நாவலின் தொன்மையான மொழியாக்கம்.

இரு நூல்களுமே பைபிளை செய்யுளில் எழுதியதுபோன்ற நடை கொண்டவை. நான் அவற்றை பலமுறை வாசிக்கமுயன்று தோற்றேன். முதல்நாவல் 1872 லும் இரண்டாவது நாவல் 1910 லும் வெளிவந்திருந்தன. அவற்றை அம்மா எங்கோ கைவிடப்பட்ட நூலகமொன்றிலிருந்து வாங்கியிருந்தாள்.  காதக வதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, அது ஒரு நல்லுபதேசக் கதை. பின்னாளைய மலையாள நாவல் இலக்கியத்திற்கு அது தொடக்கமாக அமைந்தது. மேலும் பல ஆண்டுகள் கடந்தே 1889ல் முதல் மலையாள நாவலாகக் கருதப்படும் இந்துலேகா [ஒ.சந்துமேனன்] வெளிவந்தது. நடுவே இந்த லண்டன் அரண்மனை ரகசியங்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் வெளிவந்தது என எண்ணி வியந்திருக்கிறேன்

reyno

George William MacArthur Reynolds  [1814 – 1879] பிரிட்டிஷ் எழுத்தாளர், இதழியலாளர். ராணுவ அதிகாரியின் மகனாகப்பிறந்தார். ராணுவப்பயிற்சி பெற்றபின் எழுத்தை வாழ்க்கையாகத் தேர்வுசெய்தார்.வாழ்நாளின் பெரும்பகுதியை பிரான்ஸில் கழித்தவர். மதுவிலக்குக் கொள்கைகொண்டவர், அதற்காக ஒரு இதழையும் நடத்தியிருக்கிறார். [The Teetotaler ].தாக்கரே, டிக்கன்ஸ் ஆகியோரின் காலகட்டத்தில் அவர்களைவிடவும் பிரபலமாக இருந்திருக்கிறார். பெரும்பாலும் வணிகக்கேளிக்கை எழுத்துக்களை எழுதினார்.மிக விரைவிலேயே மறக்கப்பட்ட ரெய்னால்ட்ஸின் நாவல்கள் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் விரும்பப்பட்டவை. இந்தியாவில் பெரும்பாலான பழைய நூலகங்களில் அவை இருக்கும்.

இந்திய மொழிகள் பலவற்றில் ரெய்னால்ட்ஸின் நாவல்கள் ஆரம்பகாலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தழுவி எழுதப்பட்ட மர்மக் கதைகள் வழியாகவே இந்தியாவில் ஆரம்பகால வணிகக் கேளிக்கை எழுத்துக்கள் தோன்றின. மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில்’ [1884] ரெய்னால்ட்ஸின் பாதிப்பு நிறைய உண்டு. மறைமலை அடிகளின் கோகிலாம்பாள் கடிதங்கள் [1931] போன்ற அக்கால நாவல்களில் ரெய்னால்ட்ஸின் நேரடி செல்வாக்கைக் காணலாம். நம்பமுடியாத இடத்தில் நிலவறை ஒன்று திறந்தால், சாக்சத் திருப்பங்கள் மூலம் கதாபாத்திரங்கள் வெளிப்பட்டால் அங்கே ரெயினால்ட்ஸ் நின்றிருக்கிறார்.

lonb

ரெய்னால்ட்ஸின் The Mysteries of London என்னும் நாவலின் தொடர்ச்சிதான்  The Mysteries of the Court of London . இவை  ’நகர்மர்ம’ வகை கதைகள். [City mystery]. ஒரு நகரத்தின் மர்மங்களை கற்பனையாகச் சொல்லிச்செல்லும் படைப்புக்கள் இவை. பெரும்பாலும் தொன்மையான நகரங்களே கதைக்களமாக இருக்கும். கண்ணுக்குத் தெரியும் நகரத்தின் அடியில் மேலும் பல அறியா நகர அடுக்குகள் இருப்பதாகவும் அங்கே செல்லும் சுரங்கவழிகள் உண்டு என்றும் இவை புனைந்துகொள்ளும். ரெய்னால்ட்ஸின் நாவலில் சுரங்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் லண்டனே மாபெரும் எலிவளைகளின் தொகுப்புதான் என்னும் எண்ணத்தை அடைந்தேன்.

லண்டன் நண்பர்கள் மாறி மாறி என்னை சுற்றிக்காட்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். பெரும்பாலும் சிறில் அலெக்ஸ். அவ்வப்போது சிவா கிருஷ்ணமூர்த்தி. சிவா கிருஷ்ணமூர்த்தி ஈரோட்டுக்காரர். லண்டனைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகளை இணைய இதழ்களில் எழுதி வருபவர். சமீபத்தில் குறிப்பிடத்தக்க பல கதைகளை எழுதியிருக்கிறார்

சிவா கிருஷ்ணமூர்த்தி
சிவா கிருஷ்ணமூர்த்தி

லண்டனில் நண்பர்களுடன் நடந்துகொண்டிருந்தபோது ரெய்னால்ட்ஸ் நினைவுக்கு வந்தபடியே இருந்தார். நான் நடந்துகொண்டிருந்த நிலத்துக்கு அடியில் இன்னொரு லண்டன் இருக்கிறது. அதற்கும் அடியில் இன்னொன்று. தொன்மையான நகரங்களுக்கு அப்படி பல அடுக்குகள் உண்டு. வரணாசியில் பெரிய வணிகமையங்களும் ஆடம்பரத் திரையரங்குகளும் கொண்ட பகுதியில் இருந்து கங்கைக்கரை வரைச் சென்றால் எளிதாக நாநூறாண்டுகளை கடந்து காலத்தில் பின்னால் சென்றுவிடலாம். அவ்வாறு ஆழம் மிக்க நகரங்களைப் பற்றித்தான் அத்தகைய  நகர்மர்ம நாவல்களை எழுதமுடியும்.

லண்டன் மாநகருக்கு இரண்டாயிரமாண்டுக் கால எழுதப்பட்ட வரலாறுண்டு.  அவ்வகையில் உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்று அது. 1136 ல் ஜியோஃப்ரீ மோன்மோத்  [Geoffrey of Monmout ] என்ற பாதிரியாரால் பிரிட்டனின் ஆட்சியாளர்களின் வரலாற்றைச் சொல்லும்பொருட்டு எழுதப்பட்ட தொன்மத் தொகுதியான Historia regum Britanniae லண்டன் நகரம் ப்ருட்டஸ் ஆஃப் டிராய் என்பவரால் நிறுவப்பட்டது என்கிறது,. அவர் டிராய் நகரை மீட்கும் போருக்குச் சென்று மீண்டவரான ஏனியாஸ் [Aeneas] என்னும் தொன்மக் கதாநாயகனின் வம்சத்தில் வந்தவர். Historia Britonum என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு தொன்மத் தொகைநூலில் இவருடைய கதைவருகிறது. புருட்டஸ் பிரிட்டிஷ் நிலத்துக்கு வரும்போது அங்கே அரக்கர்கள் வாழ்ந்துவந்தார்கள். கடைசி அரக்கனாகிய கோக்மகோக் Gogmagog புரூட்டஸால் கொல்லப்பட்டான். புரூட்டஸ் அங்கே ஓர் ஊரை உருவாக்கினார். அதுவே லண்டன். இது கிமு ஆயிரத்தில் நிகழ்ந்தது என்கிறது ஹிஸ்டோரியா ரீகம் பிரிட்டன். அதை ஒரு தொன்மமாக மட்டுமே ஆய்வாளர் நோக்குகிறார்கள். ஆனால்  கிரேக்கக் குடியிருப்பாளர்கள் தொல்குடியினரை வென்று அந்நிலத்தைக் கைப்பற்றியமைக்குச் சான்று அது.

Brutus of Troy
Brutus of Troy

இங்கே வாழ்ந்த தொல்கால மக்களைப் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கின்றன. ஜியோஃப்ரி கிறிஸ்துவுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட தொன்மையான அரசர்களின் [கற்பனைப்] பட்டியலை அளிக்கிறார். அவர்களில் லுட் [Lud] என்பவர் Caer Ludein என அந்நகரத்துக்குப் பெயரிட்டார். அது மருவி லண்டன் என்று ஆனது என்று ஜியோஃப்ரியின் நூல் குறிப்பிடுகிறது. லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் வெண்கலக் காலகட்டத்து தொல்லியல் தடையங்கள் கிடைத்துள்ளன. தேம்ஸுக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருந்த மரப்பாலம் ஒன்றின் அடித்தண்டுகள் 1993ல் ஓர் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன 

கிபி 43ல் இங்கிலாந்து மண்ணின்மேல் ரோமாபுரி படையெடுத்துவந்து நிரந்தரக் குடியிருப்பை அமைத்தது. அப்போதுதான் வரலாற்றுநோக்கில் லண்டன் [ Londinium]  உருவானது. தேம்ஸின் பாலம் அமைப்பதற்குரிய வகையில் மிகக்குறுகிய பகுதியில் நகரம் உருவானது. அது அக்காலத்தைய வழக்கப்படி ஆற்றங்கரையில் அமைந்த துறைமுகம். கலங்கள் தேம்ஸ் வழியாக உள்ளே வந்தன. கிபி ஆறாம் நூற்றாண்டில் ஜெர்மானிய பழங்குடிகளான ஆங்கிலோ சாக்சன்கள் பிரிட்டன் மேல் படைகொண்டுவந்து லண்டனைக் கைப்பற்றிக் குடியேறினர். பதினொன்றாம் நூற்றாண்டில் பிரெஞ்சு நிலப்பகுதியாகிய நார்மண்டியைச் சேர்ந்த நார்மன்கள் ஆங்கிலோ சாக்ஸன்களை வென்று லண்டனைக் கைப்பற்றினர்.  பதினைந்தாம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பிரபுவான ஹென்றி டியூடர் [Henry Tudor] ஏழாம் ஹென்றி என்றபேரில் லண்டனைக் கைப்பற்றினார். ஒருங்கிணைந்த பிரிட்டனின் சிற்பி என அவர் கருதப்படுகிறார். அதுவரை ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் ஒன்றுடன் ஒன்றுபோரிடும் இனக்குழுக்களின் தொகுப்பாக இருந்த பிரிட்டன் அதன் பின்னர் உலகப்பேரரசாக எழுந்தது.  ரத்தினச் சுருக்கமாக இதுவே லண்டனின் வரலாறு

lond

ரெய்னால்ட்ஸின் நாவலை இன்று நினைவுகூர்ந்தால் அது மூழ்கிச்செல்லும் காலகட்டம் லண்டனின் புகழ்பெற்ற மதப்பூசல்களின் யுகம் எனத் தெரிகிறது. மதப்பூசலின் அடியில் இனவேறுபாட்டின் காழ்ப்புகள் இருந்தன. அவை அதிகாரப்போர்களாக ஆகி அரண்மனைச் சதிகளாக வெளிப்பட்டன. லண்டன் என்பது ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும்  இங்கிலாந்தும் முட்டிக்கொள்ள்ளும் உயர்விசைப்புள்ளி அல்லவா? ரெய்னால்ட்ஸ் வெறும் கொலைகள், அவற்றை கண்டடைதல் என்றே கதை சொல்லிச் செல்கிறார். ஆனால் அக்கதைகள் நின்றிருக்கும் களம் அங்கே இருந்தது

இந்தியாவில் அப்படி சிலநகரங்களை வைத்து எழுதமுடியும். தமிழகத்தில் மதுரையும் காஞ்சியும். ஆனால் எழுதப்பட்டதில்லை. டெல்லி பற்றி நிறையவே எழுதலாம், ஆனால் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. வரணாசியின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள சிவ்பிரசாத் சிங்கின் நீலநிலா, உஜ்ஜயினியின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள அமர் மித்ராவின் துருவன் மகன் போன்றவை வரலாற்றுநாவல்களே ஒழிய நகர்மர்மக் கதைகள் அல்ல. நகர்மர்மக் கதைகளுக்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. அவை நிலைகொள்ளும் அதிகார அமைப்புக்கு அடியிலுள்ள புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளைச் சுட்டிக்காட்டும் தன்மை கொண்டவை

lonc
மாபெரும் சகடம், உடன் நண்பர் சதீஷ்

லண்டனின் புகழ்பெற்ற நிலஅடையாளங்களை நின்று நோக்கியபடி நானும் அருண்மொழியும் நண்பர்களுடன் நடந்தோம். சிறில் அலெக்ஸ் வீட்டில்தான் தங்கியிருந்தோம். அவர் நகருக்கு சற்று வெளியே இருந்தார். அங்கிருந்து நிலத்தடி ரயிலில் லண்டன் நகருக்குள் புகுந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரயில்களில் ஏறி நகர்ச்சாலைகளில் வெளிப்பட்டோம். தலைக்குமேல் நகரம் கொந்தளித்துக்கொண்டிருக்க உள்ளே நகரின் குடல்களினூடாக ரெயினால்ட்ஸின் சுரங்கப்பாதைகளில்  செல்வதுபோலப் பயணம் செய்தோம்.பெருச்சாளிகள் வளைகளிலிருந்து வெளிவருவதுபோல. அல்லது விட்டில்கள் பெருகிஎழுவதுபோல. எங்களைக் காத்து நின்றிருந்த நண்பர்களுடன் பேசியபடி நகரை பெரும்பாலும் நடந்தே உணர்ந்தோம்.

நியூயார்க்கின் டைம் ஸ்குயரில் நிற்கையில் எனக்குப் பட்டது, அது மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட ஓர் இடம் என்று. லண்டனைப்பற்றியும் அதுவே தோன்றியது. எங்குநோக்கினாலும் சுற்றுலாப்பயணிகள். புகைப்படங்கள் எடுப்பவர்கள், சாப்பிடுபவர்கள், வேடிக்கை பார்த்து பேசிச்சிரிப்பவர்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம். தேம்ஸ் நீலக்கலங்கலாக ஓடியது. அதில் படகுகள் வெண்பாய் விரித்து பறப்பவைபோலச் சென்றன. பாலத்தில் நின்றபடி தேம்ஸின் நீர்ப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். நீர் கண்ணெதிரிலேயே குறைய தரைவிளிம்பு தெரியலாயிற்று. நகர்நடுவே ஓடும் நதிகளுக்குரிய துயரம். நகரின் கழிவுகளைச் சுமந்தாகவேண்டும். எத்தனை தூய்மைப்படுத்தினாலும், என்னென்ன சட்டங்கள் இருந்தாலும் அது மாசுபடுவதை தடுக்கவியலாது. அந்த நீரிலும் மென்படகுகளில் இளைஞர்கள் விளையாட்டுத்துழாவலில் ஈடுபட்டிருந்தார்கள்.

thames

இத்தகைய பயணங்களில் நாம் பழகிய தடங்களினூடாக அடித்துச் செல்லப்படுகிறோம். நாம் என்ன பார்க்கவேண்டும் என்பதை லண்டனின் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் சென்றுதேய்ந்த தடத்தினூடாக முடிவுசெய்து வைத்திருக்கிறார்கள். வேறு வழியாக நாம் செல்லவே முடியாது. சுற்றுலா மையங்கள் அறுதியாக வரையறைசெய்யப்பட்ட அர்த்தம் கொண்டவை. நாம் சென்றுநோக்கும் ஒரு வரலாற்றுத்தலம் நம்மால் அர்த்தப்படுத்தப்படுகிறது, நம்முள் விரிவடைகிறது. சுற்றுலாமையங்களில் விடுபடுவது அதுதான்

தேம்ஸின் கரையோரமாக வேடிக்கை பார்த்தோம். தெருப்பாடகர்கள், இசைக்கலைஞர்கள், நினைவுப்பொருட்கள் விற்பவர்கள், ஓவியர்கள்… வெவ்வேறுவகையான முகங்கள். நம்பமுடியாதபடி மாறுபட்ட தலைமயிர் அலங்காரங்கள். மானுட முகம் என ஒன்று உண்டா என்றே ஐயம் எழும். மஞ்சளினத்தின் முகமும் கறுப்பினத்தின் முகமும் உறுப்புகளின் அமைப்பால் மட்டுமே ஒன்று என்று தோன்றும். ஆனால் புன்னகையில் ஒளிரும் அன்பு, சிரிப்பு, தன்னுள் ஆழ்ந்திருக்கும் அழுத்தம் என முகங்களின் உணர்வுகள் மானுடம் முழுக்க ஒன்றே

lons

நான்கு நாட்கள் லண்டனில் கண்ட வெவ்வேறு இடங்களைப்பற்றி விரிவாகவே எழுதலாம், ஆனால் இன்றைய இணைய உலகில் செய்திகள் மிக எளிதாக எங்கும் கிடைக்கின்றன. நான் எழுத எண்ணுவது என் உள்ளம் எவற்றையெல்லாம் அவற்றுடன் இணைத்துக்கொண்டது என்பதைப்பற்றி மட்டுமே. அதன் தர்க்கமென்ன என்பதிலுள்ளது இந்நிலத்தை இன்று நான் எப்படி உள்வாங்கிக்கொள்கிறேன் என்பது, இந்நிலம் என் பின்புலத்திற்கு என்னவாகப் பொருள்கொண்டது என்பது

லண்டனின் கண் எனப்படும் மாபெரும் சக்கரராட்டினம் லண்டனின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்மேலேறி லண்டனை பார்ப்பதென்பது ஓரு சுற்றுலாச் சடங்கு. ஏற்கனவே அமெரிக்காவில் டிஸ்னிலேண்டிலும் யூனிவர்சல் ஸ்டுடியோவிலும் மாபெரும் ரங்கராட்டினங்களில் ஏறியிருக்கிறேன். என்ன வேடிக்கை என்றால் அப்போதும் சிறில் அலெக்ஸ்தான் உடனிருந்தார். ஆனால் சுற்றுலாக்களின் மகிழ்ச்சிகளில் ஒன்று எல்லா தன்னிலைகளையும் கழற்றிவிட்டு நாமும் சுற்றுலாப்பயணியாக அவ்வப்போது ஆவது. ஆகவே நானும் அருண்மொழியும் அதில் ஏறிக்கொண்டு வானுக்கும் மண்ணுக்கும் சுற்றிவந்தோம். அதன் மேலே சென்றால் லண்டனைப் பார்க்கலாம் என்றார்கள். நான் பார்த்தது தலைசுற்றச்செய்யும் ஒளிப்பிழம்புகளின் சுழியை மட்டுமே

buckingham-palace

394 அடி விட்டம் கொண்ட பெரும் சக்கரம் இது. மெர்லின் எண்டர்டெயினர்ஸ் அமைப்புக்குச் சொந்தமானது. ஜூலியா ஃபார்பீல்ட் மற்றும் டேவிட் மார்க்ஸ் என்னும் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. மில்லினியம் நிறைவை ஒட்டி 2000 ஜனவரி ஒன்றாம்தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. இத்தகைய சக்கரங்களிலுள்ள இன்பம் என்பது ‘பத்திரமான அபாயம்’தான். நம் தர்க்கமனம் அபாயமில்லை என்று சொல்கிறது. உடலும் உள்ளமும் அதை உணராது பதறுகின்றன. இறங்கியதும் உடலையும் உள்ளத்தையும் ஏமாற்றிவிட்டதான ஓர் அசட்டுப்பெருமிதம். அந்தச் சிரிப்பை அத்தனை முகங்களிலும் காணமுடிந்தது.

லண்டனுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் மூன்று அரண்மனைகளைத் தவறவிடுவதில்லை.  அவற்றில் பக்கிங்ஹாம் அரண்மனை முதன்மையானது. பிரிட்டனின் அரசியின் உறைவிடம், பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்தின் குறியீட்டு மையம் இந்த மாபெரும் அரண்மனை. 1703ல் பக்கிங்ஹாம் பிரபுவால் கட்டப்பட்டது. 1761ல் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இதை தன் அரசி சார்லட்டுக்கான மாளிகையாக கொண்டார்.19 ஆம் நூற்றாண்டில் சிற்பிகளான ஜான் நாஷ், எட்வர்ட் ப்ளோர் ஆகியோர் அதை விரிவாக்கி கட்டினர். 1837ல் விக்டோரிய அரசி அதை தன் மாளிகையாகக் கொண்டார்

and
Andrea Palladio

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன் அனுமதிபெற்ற சுற்றுலாப்பயணிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுகிறார்கள். நாங்கள் அந்த மாபெரும் கம்பிவாயிலுக்கு வெளியே நின்று அக்கட்டிடத்தை நோக்கினோம். இந்தியாவை நூறாண்டுகள் ஆண்ட மையம் அது என்ற எண்ணமே என்னுள் இருந்தது. மாளிகைகளுக்கு சில பாவனைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமையமாக உருவாகிவிடும் மாளிகைகள் தோரணையும் அலட்சியமும் வெளிப்படும் நிமிர்வு கொண்டிருக்கும். முகவாயை தூக்கிய உயரமான பிரிட்டிஷ் அரசகுடியினரை காணும் உணர்வை அடைந்தேன்

பக்கிங்ஹாம் அரண்மனை புதுச்செவ்வியல் வடிவிலமைந்தது.[ Neoclassical] பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் பெரும்பாலான அரசுக் கட்டிடங்கள் அந்தப்பாணியில் அமைந்தவையே. இவ்வரசுகளின் அதிகாரக்கொள்கை, அவர்கள் கோரும் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றை குறியீட்டளவில் மிகச்சிறப்பாக உணர்த்தும் பாணி இது.  இத்தாலியச் சிற்பி அண்டிரியா பல்லாடியோ [Andrea Palladio] இந்தப்பாணியின் முன்னோடி. பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டிடக்கலையை ஒட்டி நவீனகாலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டது இந்த வடிவம். காட்சியில் தொன்மையான பெருமாளிகைகளின் மாண்பு தெரியும். ரோமானியபாணியின் உயர்ந்த பெருந்தூண்கள் இதன் முகப்படையாளம். நமது பாராளுமன்றமும் இந்த அமைப்பு கொண்டதே. பக்கிங்ஹாம் அரண்மனை ஒரே சமயம் மாளிகை போலவும் பெரிய அணைக்கட்டு போலவும் எனக்கு பிரமை எழுப்பிக்கொண்டிருந்தது

famine

சென்னை பஞ்சம் -மெட்ராஸ் மெயில்

பக்கிங்ஹாம் என்னும் சொல் சென்னை கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் அவர்களை நினைவிலெழுப்புகிறது.  அவர் வெட்டியதுதான் விழுப்புரத்திலிருந்து சென்னைவழியாக காக்கிநாடா வரைச் செல்லும் 796 கிலோமீட்டர் தொலைவுள்ள பக்கிங்ஹாம் கால்வாய். டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் [1823 – 1889] பல்வேறு அரசியல்சூதாடங்களால் சொத்துக்களை இழந்து கடனாளியாகிய நிலையில் ஓர் ஆறுதல்பரிசாக சென்னை கவர்னர் பதவி அவருக்கு 1877ல் வழங்கப்பட்டது. சென்னை மாகாணம் உச்சபட்ச பஞ்சத்தைச் சந்தித்த காலகட்டம் அது. அது ஒரு செயற்கைப் பஞ்சம். இந்தியாவின் கிழக்குப்பகுதி பஞ்சத்தால் அழிந்தபோது மேற்குபகுதியிலிருந்து பெருமளவுக்கு உணவு வெளியே கொண்டுசெல்லப்பட்டது. சென்னையின் பிரிட்டிஷ் நாளிதழான மெட்ராஸ் மெயில் உட்பட இதழாளர்களும், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீருடன் மன்றாடியும்கூட விசாகபட்டினத்திலிருந்து உணவுத்தானியம் ஏற்றுமதியாவது நிறுத்தப்படவில்லை. அரசு கணக்குகளின்படியே கூட கிட்டத்தட்ட ஒருகோடிபேர் பலியானார்கள். மும்மடங்கினர் அயல்நாடுகளுக்கு அடிமைப்பணிக்காகச் சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அன்னியச்சூழலில் அழிந்தனர்.

அந்தப் பேரழிவுக்கு பக்கிங்ஹாம் ஒருவகையில் பொறுப்பேற்கவேண்டும். அவருடைய ஆட்சி என்பது கட்டுமானத்தொழிலில் இருந்த இந்தியர்கள், ஏற்றுமதியாளர்கள், தோட்டத்தொழில் உரிமையாளர்கள் ஆகியோர் சேர்ந்து செய்த மாபெரும் கூட்டு ஊழலாக மட்டுமே இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களாலும் அவர்களின் அடிபணிந்து வரலாறெழுதியவர்களாலும் அவ்வரலாறு பெரும்பாலும் மறைக்கப்பட்டது, பூசிமெழுகப்பட்டது. முதன்மைக்காரணம், பஞ்சத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள். இன்று மலைமலையாகத் தகவல்களை பிரிட்டிஷ் ஆய்வாளர்களே எடுத்து வைத்தபின்னரும்கூட பிரிட்டிஷ்தாசர்களாகிய இந்தியர்கள் ஒருசாரார் பிரிட்டிஷார் மேல் பிழையில்லை, அவர்கள் சிறந்த நிர்வாகிகள் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

1024px-GrainFamineMadras
பஞ்சத்தின்போது சென்னையிலிருந்து ஏற்றுமதியான உணவுத்தானியம் – மெட்ராஸ் மெயில்

அவர்கள் சொல்வது பிரிட்டிஷார் உருவாக்கிய நிவாரண முகாம்களைப்பற்றி. பிரிட்டிஷார் செய்திருக்கவேண்டியது முதலில் உணவு ஏற்றுமதியை நிறுத்துவது. அது இறுதிவரை செய்யப்படவில்லை. மாறாக நிவாரணநிதி ஒதுக்கப்பட்டு அதில் கட்டுமானங்கள் செய்யப்பட்டன. கட்டுமானம் என்றால் இந்தியாவில் ஊழல் என்றே பொருள். கிட்டத்தட்ட உலகம் முழுக்க அப்படித்தான். அதிலும் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசுநிர்வாகம் ஊழல் வழியாகவே உருவாகி நிலை நின்ற ஒன்று.

அந்த ஊழல்மைய நிவாரணப் பணிகளின் உச்சம் பக்கிங்ஹாம் கால்வாய். அருகே கடல் இருக்க உள்நாட்டு படகுப்போக்குவரத்துக்கு அத்தனை பெரிய கால்வாய் என்பதே ஒரு வேடிக்கை. அந்த மாபெரும் அமைப்பு வெறும் ஐம்பதாண்டுகள் கூட பயன்பாட்டில் இருக்கவில்லை. சொல்லப்போனால் எப்போதுமே முழுமையாக பயன்பாட்டில் இருக்கவில்லை. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இயற்கையான உள்கடல்கள் மட்டுமே சிறிதுகாலம் பயன்பாட்டிலிருந்தன. தொடர்ந்து மணல்மூடிக்கொண்டிருக்கும் இடத்தில் அமைந்த அக்கால்வாயை பராமரிப்பது இயல்வதல்ல என்பதனால் அது கைவிடப்பட்டது. இன்று கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. பிரிட்டிஷாரின் நிர்வாகத்திறன், பொறியியல் திறன் ஆகியவற்றை விதந்தோதுபவர்கள் அந்த மாபெரும் தோல்வியை, ஊதாரித்தனத்தை , ஊழலை கருத்தில்கொள்வதேயில்லை.

buk
பக்கிங்ஹாம் பிரபு

பக்கிங்ஹாம் என்ற சொல்லை கால்வாயுடன் , பஞ்சத்துடன் இணைக்காமலிருக்க என்னால் இயலவில்லை. ரெயினால்ட்ஸின் கதைநாயகனாக அந்த அரண்மனையின் ஆழ்ந்த சுரங்கங்கள் வழியாகச் சென்றால் அடுக்கடுக்காக செல்லும் அதன் அடித்தள வரலாற்றில் எங்கே சென்று சேர்வேன்? கோடிக்கணக்கான எலும்புகளும் மண்டையோடுகளும் குவிந்துகிடக்கும் ஒரு வெளிக்கா என்ன?

பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணைந்து நினைவுக்கு வந்தவர் காந்தி. 1930 ல் வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் வந்த காந்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆறாம் ஜார்ஜ் மன்னரை  சந்திக்கச்சென்றபோது சம்பிரதாயங்களையும் மீறி எளிய அரையாடை அணிந்திருந்தார்.  அவ்வெண்ணம் வந்தபோது மீண்டும் பக்கிங்ஹாம் மாளிகையை நிமிர்ந்து பார்த்தேன்.  அந்த மாளிகையே மன்னரைப்போலத் தோன்றியது. சரோஜினி நாயுடுவுடன் காந்தி கைத்தடி ஊன்றி நடந்துவரும் காட்சி என் உள்ளத்தில் எழுந்தது.

gandhi-handshake-with-king-george

காந்தி 1921 செப்டெம்பரில் மதுரைக்கு வந்து இங்கிருந்த பஞ்சத்தில் நலிந்த விவசாயிகளின் கந்தலணிந்த மெலிந்த உடல்களைக் கண்டபின்னரே அந்த ஆடைக்கு மாறினார். மாபெரும் பஞ்சத்தின் பலியாடுகளில் ஒருவராக அவரும் ஆனார். அவர்களின் பிரதிநிதியாகச் சென்று பக்கிங்ஹாம் அரண்மனையில்  ‘தேவைக்குமேல்’ ஆடையும் அணிகளும் அணிந்திருந்த அரசர் முன் நின்றார். ஒருங்கிணைந்த இந்தியாவின் ஆற்றலின் அடையாளமாக ஆனார். அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் ஒட்டுமொத்தச் சுரண்டலுக்கும் எதிராக இந்தியாவின் பதில்.

முந்தைய கட்டுரைகாந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா
அடுத்த கட்டுரைஹோம்ஸ்- கடிதங்கள்