வாசகர்களுடன் உரையாடல் -கடிதங்கள்

reader

வாசகர்களின் உரையாடல்

ஜெ அவர்களுக்கு

 

வணக்கம்..  நலமா.

 

வாசகர்களுடன் உரையாடல் பற்றிய பதிவைப் படித்தேன்.

 

உங்களுடைய சிந்தனை என் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. வீட்டின் மூலையில், தனிமையில் இணையத்தின் வழி மட்டுமே இலக்கிய உலகை, அறிவுசார் தேடலை அனுபவிக்கையில், நான் நேசிக்கும் பெரிதும் போற்றும் படைப்பாளிகளுடன் உரையாடுதல் என்பது பெருங்கனவே.

 

உங்களுக்கு என் முதல்  மின்னஞ்சலை அனுப்பிய தருணம் இன்றும் நினைவிருக்கிறது. அதை அனுப்புவதற்கு முன் எத்தனையோ தடவை தட்டச்சு செய்து அழித்தேன். ஒரு வழியாக அனுப்பிவிட்டேன்.. ஆனாலும், உங்கள் தளத்தில் அது வெளியான போது ஏற்பட்ட படபடப்பு மிகவும் புதியது.. அழகானது..

 

நீங்கள் சொன்ன

 

“நான் தமிழகமெங்கும் பரவி வாழ்வதற்குச் சமம் அது.” வரி சத்தியமானது..

 

ஆனால், உங்களிடம் ஒரு தயக்கம் விலகி, அஞ்சல் செய்யத் துவங்கியதைப் போல், வேறெவரும் இத்தனை அணுக்கமானவராக பொதுவெளியில் தன்னை முன்னிறுத்துவதில்லை என்பதே உண்மை..

 

தொடருங்கள் உரையாடலை… அதன் வழியே நானும் சிறிது கற்றுக் கொள்கிறேன்..

 

பவித்ரா..

 

 

அன்புள்ள ஜெ,

 

வாசகர்களுடன் உரையாடுதல் கட்டுரையை வாசித்தபோது ஓர் எண்ணம் ஏற்பட்டது. நான் உங்களுக்குக் கடிதங்கள் எழுதியதில்லை. இந்தக்கடிதத்தையே ரொம்பவும் தயங்கித்தான் எழுதுகிறேன். என் சூழலில் கடிதமெல்லாம் எழுதுவது கஷ்டம். ஆனால் எல்லா கடிதங்களையும் நானே எழுதியதுமாதிரி, எல்லா பதிலும் எனக்காகவே சொல்லிக்கொள்வது மாதிரி நினைத்துக்கொள்வேன்

 

 

ஆகவே எத்தனை நீளமான பதிலாக இருந்தாலும் என்னால் வாசிக்கமுடிகிறது. அதைவிட நீளம் குறைவான ஒரு கட்டுரையை நிறுத்தி நிறுத்தி பலதடவை வாசித்துத்தான் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. கேள்விபதில் பாணியில் உங்களுடன் ஒரு நெருக்கம் தோன்றுகிறது. நம் மனசில் தோன்றும் சந்தேகங்கள் அடுத்த சிலநாட்களில் வேறு எவரவாது கேட்டிருப்பார்கள். இந்த உரையாடலுக்கு கடந்தகாலத்திலே வசதி இல்லை. சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நிகழ்ந்த உரையாடல்களைச் சொல்கிறீர்கள். அந்த வாய்ப்பு சிலருக்கே கிடைத்தது. இன்றைக்கு இணையம் அந்த வாய்ப்பை அனைவருக்கும் வழங்கியிருக்கிறது

 

 

எம்

முந்தைய கட்டுரைஹோம்ஸ்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஐரோப்பா-6,மேற்குமலைமுடி