அச்சிலிருது கணினி, கைபேசி, கிண்டில் வரை இன்று புத்தக வாசிப்பு அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது. ஏராளமான இலவச புத்தகங்கள் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன என்றாலும் விலைகொடுத்து வாங்கவேண்டிய புத்தகங்கள் pdf வடிவில் முறையான அனுமதி இல்லாமல் இணையத்தில் கிடைக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான சூழல் இல்லையே, இதை தடுக்க ஏதும் வழி உள்ளதா ?
நன்றி.
அன்புடன்,
வை. தாமோதரன்,
பஹ்ரைன்
அன்புள்ள தாமோதரன்
எந்த வழியிலேனும் படித்த்தால் சரி என்ற எண்ணமே எனக்கு இவ்விஷயத்தில் உள்ளது. ஏனென்றால் ஒருநூலை படித்து சுவை அறிந்தவர் மேலும் படிப்பார், நூல்களை வாங்குவார். பிடிஎஃப் வடிவில் எவராலும் நீண்டநேரம் படிக்கமுடியாது. பெரும்பாலான பிடிஎஃப் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு கணிப்பொறிகளில் உறங்கும் என்பதே நடைமுறை.
ஆனால் இந்த இலவசத் தரவிறக்கத்தில் தமிழ்மக்களின் மனநிலை ஆச்சரியப்படத்தக்கது. ரூ 1000 கொடுத்து ஒரு சினிமாவுக்கு டிக்கெட் வாங்குபவர்கள் நூறுநூபாய் ஒரு நூலுக்கு அதிகவிலை என நினைக்கிறார்கள். எங்கள் பகுதியில் ஒருவர் வீடுவீடாக வந்து குப்பைகளை எடுத்துச்செல்வார். மாதம் ஐம்பது ரூபாய். மாதம் இரண்டுலட்சம் ரூபாய் வருமானமுள்ளவர் அந்த ஐம்பது ரூபாய் எதற்கு கொடுக்கவேண்டும், குப்பையை பக்கத்து பிளாட்டில் போடலாமே என என்னிடம் பேசியிருக்கிறார். நூல்கள் என்றல்ல உயர்வான எதையும் உண்மையாக மதிக்காத மனநிலையையே இதில் காண்கிறேன்
மின்னூல்களை இலவசத் தரவிறக்கம் செய்வதென்பது ஒரு கொள்ளை. திரைப்படங்களை திருட்டுத் தரவிறக்கம் செய்பவர்கள் ‘நடிகன்லாம் கோடிகோடியா சம்பாரிக்கிறான் சார்’ என்றெல்லாம் சில நியாயங்களைச் சொல்வதுண்டு. ஆனால் நூலாசிரியர்கள் சில ஆயிரங்கள்கூட பதிப்புரிமைத்தொகை பெறுவதில்லை. மின்னூல்கள் எந்த தடையுமில்லாமல் ஆசிரியனுக்கு பதிப்புரிமை கிடைக்கச் செய்பவை. அவற்றில் கைவைப்பது கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் திருவோட்டிலிருந்து எடுத்துக்கொள்வது
இங்கே எழுத்தாளன் பிச்சைக்காரன் மட்டுமல்ல, துறவியும்கூட. ஆகவேதான் புன்னகையுடன் உங்களை வாழ்த்துகிறான்
ஜெ