மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

manush

மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதை குறித்து உருவான விவாதத்தில் என் தரப்பைக் கோரி பல கடிதங்கள். அனைத்திலும் இருந்த எல்லா கேள்விகளுக்குமாக ஒட்டுமொத்தமாக இந்த விளக்கம்.

கேரள வெள்ளம் குறித்து குருமூர்த்தி எழுதிய கருத்து பொதுவெளி வெளிப்பாடு என்னும் முறையில் அசட்டுத்தனமானது. ஆனால் மரபான பக்தர்கள் அதைத்தான் சொல்லமுடியும். ஏனென்றால் பக்தியின் அடிப்படையே இயற்கைவிசைகளில் இருந்தும், எதிர்காலத்தின் நிலையின்மையில் இருந்தும், இறப்பிலிருந்தும் உருவாகும் அச்சத்தில் உள்ளது. பக்தி பின்னர் தத்துவத்தையும் மெய்த்தரிசனங்களையும் இணைத்துக்கொண்டு எத்தனை விரிவடைந்தாலும் அந்த ஆதார மனநிலை மாறுவதில்லை. இயற்கைவிசைகளிலிருந்து தன்னை காக்கவேண்டும் என்று கோரும் அதே உள்ளம்தான் இயற்கையின் விசையை இறைவனின் தண்டனை என்றும் எண்ணுகிறது. ஏறத்தாழ இதேபோலவே மோகன் சி லாசரஸ் கேரள வெள்ளம் குறித்து சொல்லியிருக்கிறார். முன்பு உத்தரகண்ட் வெள்ளத்தைப்பற்றி கிறித்தவபோதகரும் அரசதிகாரியுமான  உமாஷங்கரின் கருத்தும் ஏறத்தாழ இத்தகையதே. பகுத்தறிவாளர் என்ன சொன்னாலும் பக்தர்கள் இதைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

அதைத் தொடர்ந்து பகுத்தறிவாளர்கள் கேட்கும் வினா அய்யப்பனை இத்தனை அழிவைச் செய்பவனாகச் சொல்வது எவ்வளவு கொடுமையான கருத்து, குருமூர்த்தியைக் கண்டிக்கவேண்டாமா என்று. தாங்கள் முழுமூச்சாக எதிர்க்கும் ஒன்றைப்பற்றி எத்தனை முழுமையான அறியாமையுடன் இவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இதேபோன்ற ஒரு விவாதத்திலேனும் கொஞ்சமாவது வரலாற்றுணர்வை, கொஞ்சமாவது தர்க்கபுத்தியை இவர்கள் வெளிப்படுத்தியிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! இங்கே பகுத்தறிவென்பது அறிவிலாத குதர்க்கம் மட்டுமே என்பதற்கான சான்று இப்பேச்சுக்கள். மார்க்ஸிய நோக்கில் சிந்திப்பவர்கள் என இங்கே எவருமில்லை என்பதற்கும் இதுவே சான்று.

உண்மையில் உலகிலுள்ள அத்தனை மதங்களிலும் இறைவன் தண்டிக்கும் சினம் கொண்டவனாகவும் அளவற்ற அருள்கொண்டவனாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். விதிவிலக்கு தத்துவ மதங்களான பௌத்தமும் ஜைனமும். அவற்றிலுள்ள இறையுருவகம் ஓர் ஆளுமை அல்ல, ஒரு தத்துவக்கருதுகோள் மட்டுமே. அத்வைதத்தைப் பொறுத்தவரை அழிவு ஆக்கம் என இருமை கடந்த ஒன்றாகவே முடிவிலாத இறை இருக்கவியலும். அருள் -துயர் என உணர்வது மானுடனின் வாழ்க்கையின் சூழலும் அவன் உள்ளத்தின் அளவுக்குட்பட்ட தன்மையும் அளிக்கும் தோற்றங்களே. ஆனால் எங்கும் கருணை மட்டுமே கொண்ட தெய்வ உருவகம் கிடையாது. கிறிஸ்தவம், இஸ்லாம், ஜரதுஷ்டிர மதம் என அனைத்துமே தண்டிக்கும் இறைவனையே முன்வைப்பவை.

மதங்களின் இந்த இருபாற்பட்ட தன்மை பற்றி ஆய்வாளர்கள் பல ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்- குறிப்பாக மார்க்ஸிய அறிஞர்கள். இதை ஒருவகை பிளவாளுமை என்றுகூட வகுத்த ஆய்வாளர்கள் உண்டு. எதையேனும் இங்கு எவரேனும் அறிந்திருக்கிறார்களா? தங்களுக்கு பலி அளிக்கப்படவில்லை, தங்கள் ஆணைகள் மீறப்படுகின்றன என்பதனால் சினம்கொண்டு நகரங்களை முற்றாக அழிக்கும் தெய்வங்களைப்பற்றிய கதைகள் எல்லா தொல்மதங்களிலும் உள்ளன.ஏனென்றால் இந்த அம்சம் பழங்குடி வழிபாடுகளிலிருந்து தொடங்குவது. பழங்குடித் தெய்வங்கள் அனைத்துமே பலிகொள்பவையும் அருள்பவையும்தான்.

முதல்நோக்கில் அது மானுடனின் அச்சத்தின் வெளிப்பாடாகத் தோன்றும். ஆனால் அது ஒரு பெரிய தரிசனமும்கூடத்தான். இயற்கையின் அளவிலா ஆற்றலே உணவாகவும் மருந்தாகவும் அழிவாகவும் நோயாகவும் வருகிறது, அவை ஓர் உச்சநிலையில் ஒன்றே என்பது ஒரு தொல்தரிசனம். ஒரு சிறுசுனையின் பேரழகை இயற்கை என ரசிக்கையில் பெருவெள்ளத்தையும் அவ்வாறே எண்ணிக்கடக்க முடியவேண்டும். உண்மையில் இதை சற்றேனும் உள்வாங்கிக்கொள்ளாத ஒருவர் தன் சொந்தவாழ்க்கையின் இழப்புகளைக் கூட கடந்துசெல்லமுடியாது.

ஆனால்.இந்தப் பேரழிவின் தருணத்தில் குருமூர்த்தி அதைச் சொன்னது பக்தனின் இயல்பான வெளிப்பாடல்ல. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் சொந்த அரசியலை மட்டுமே காணும் சிறுமை. அதை வன்மையாகக் கண்டிப்பது இன்றைய சூழலின் தேவை.

*

அந்த அரசியல்கூற்றுக்கும், அடிப்படையான சிறுமைக்கும் எதிரான  கண்டனத்தை மனுஷ்யபுத்திரன் முன்வைத்தது இயல்பானதே- இரண்டு வகையில். பகுத்தறிவுத்தரப்பு குருமூர்த்தி போன்றவர்களின் பக்திநோக்கை கண்டிப்பது அவர்களின் தத்துவார்த்தமான எதிர்ப்பை காட்டுகிறது. இரண்டாவதாக, பேரழிவையும் தன் அரசியலுக்கு கருவியாக்கும் குருமூர்த்தியின் கீழ்மையை அரசியல்நோக்கிலும் கண்டிக்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக இவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள் எனும்போது அந்தக் கண்டனம் மேலும் ஆற்றலுடன் எழவேண்டியிருக்கிறது

மனுஷ்யபுத்திரனின் அந்தக் கவிதை இந்து மதத்தை இழிவுசெய்கிறதா? அதை எழுத அவருக்கு உரிமை இல்லையா? அதைப்பற்றி எச்.ராஜா உருவாக்கிய வசைபாடலின் இடம் என்ன?

முதல் கேள்வியே இந்துமதத்திற்குப் பொறுப்பேற்க இவர்கள் யார் என்றுதான். இவர்களின் சாதியமேட்டிமைத்தன்மையால், அதை பொதுவெளியில் உளறும் பொறுப்பின்மையால்தான் இந்துமதம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய நவீனச் சிந்தனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்கொண்ட ஒரு மெய்யியல்தரப்பாக இந்துமதம் ஆவதை தடுத்து அதை வெறும் நம்பிக்கைவெறியாக, அரசியல்கூப்பாடாக, முச்சந்தி வன்முறையாக ஆக்கும் இவர்களைப்போல இந்துமதத்திற்கு அழிவைக் கொண்டுவருபவர்கள் எவருமில்லை.இந்துமதத்தைக் காப்பாற்றவேண்டியது இவர்களிடமிருந்துதான்.

இந்துமதம் எவருக்கும் சொந்தமான நிறுவனம் அல்ல. இறுகிப்போன நம்பிக்கைகளின் தொகுப்பும் அல்ல. அது மூவாயிரமாண்டுகளாக இந்த மண்ணில் உருவான ஒரு மாபெரும் மெய்த்தேடல். படிமப்பெருவெளி. அதன்மேல் மானுடகுலம் அனைத்துக்கும் உரிமை உண்டு. அந்த மெய்யியலை தன் தேடலுக்கு வழிகாட்டியாகக் கொள்ள, அப்படிமங்களை தனக்கான அழகியல் கருவியாகக்கொள்ள, பூமியில் வாழும் எவருக்கும் உரிமை உண்டு. அதன்மேல் தங்களுக்கு ஏதோ அதிகாரம் உண்டு என்று நினைக்கும் இந்த கூட்டத்திடம் அவ்வதிகாரத்தைக் கொடுப்பதைப்போல தற்கொலைத்தனம் வேறில்லை. ஆகவே அவர்களின் எதிர்ப்பையே முதலில் கண்டிக்கவேண்டியிருக்கிறது.

இதையே கிறிஸ்தவ மதம்சார்ந்தும் சொல்வேன். நான் கிறிஸ்தவன் அல்ல. ஆனால் கிறிஸ்துவை கதைநாயகனாக்கி பல கதைகளை எழுதியிருக்கிறேன். இன்னமும் கூட எழுதுவேன். ஏதேனும் கிறிஸ்தவர் அதன்பொருட்டு என் மேல் கண்டனம் தெரிவித்தால் அதற்கு நான் எவ்வகையிலும் ஆட்பட முடியாது என்பதே என் பதிலாக இருக்கும். நாம் இன்று காணும் கிறிஸ்தவ ஆன்மிகம் மத அமைப்புக்களால் உருவாக்கப்பட்டது அல்ல, தல்ஸ்தோய் முதலான பேரிலக்கிவாதிகளால் எழுதி உருவாக்கப்பட்டது. அந்த உரிமையை எனக்கு மறுத்து வெறிகொண்ட குறுங்குழுவாக கிறிஸ்தவம் மாறுமென்றால் அதனுடன் எனக்குப் பேச ஏதுமில்லை. இஸ்லாம் இன்று அப்படிப்பட்ட ஒரு மூடுண்ட குறுங்குழு. அவ்வாறு ஒரு குறுங்குழுவாக இந்துமதத்தை மாற்ற முடியாது என்பதே ஓர் இந்துவாக என் நிலைபாடு.

மனுஷயபுத்திரன் இந்து மெய்யியல் மரபிலுள்ள தேவி என்னும் படிமத்தை எடுத்துக்கொண்டு கவிதையை எழுதியிருக்கிறார். எவ்வகையிலும் இந்து மெய்யியலைச் சிறுமைசெய்வதாக அது இல்லை. அத்தகைய நூற்றுக்கணக்கான கவிதைகள் பக்திமரபுக்குள்ளேயே எழுதப்பட்டுவிட்டன. இங்கே எதிர்ப்பவர்களின் பிரச்சினை அதை எழுதியவர் மனுஷ்யபுத்திரன் என்பது மட்டுமே. அவருடைய இஸ்லாமியப்பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்வதனூடாக அவர்கள் அதையே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த அதிகாரத்தை நாம் இக்கும்பலுக்கு அளிப்போம் என்றால் நாளை இதை இவர்கள் அனைவருக்கும் நிபந்தனையாக்குவார்கள். இந்துமெய்யியலின் வலம் இடம் தெரியாத இக்கும்பலிடம் நாம் அனைவரும் சென்று அனுமதிகோரி நிற்கவேண்டியிருக்கும். அதுவே இந்துமதத்தின் அழிவாக இருக்கும்.

முன்பு எம்.எஃப்.ஹூசேன், எம்.எம்.பஷீர் ஆகியோர் இதேபோல இந்து குறியீடுகளைப் பயன்படுத்தியபோது வந்த எதிர்ப்பைப்பற்றி நான் என்ன சொன்னேனோ அதையே இங்கும் சொல்கிறேன். கலைஞனின் வெளிப்பாட்டுரிமை என்பது இந்தநாட்டின் நீண்ட மரபிலிருந்து உருவானது. இந்த தேசத்தை உருவாக்கிய முன்னோடிகளால் அளிக்கப்பட்டது. அதை எந்த கும்பலும் மிரட்டல்மூலம் தடுப்பதை ஏற்கவியலாது.இந்து மதத்தின் கருத்துக்களையும் படிமங்களையும் இலக்கியத்தின் கருப்பொருளாக்குவதற்கோ விவாதிப்பதற்கோ மறுப்பதற்கோ அனைவருக்கும் உரிமை உண்டு. நான் இந்துமதத்தை நம்புகிறேன், ஆகவே நான் பார்க்கும் கோணத்திலேயே அனைவரும் இந்துமதத்தை அணுகவேண்டும், இல்லையேல் மனம் புண்படுவேன் என்று ஒருவர் சொல்வாரென்றால் அவர் வாழ்வது இந்நூற்றாண்டில் அல்ல.

மனுஷ்யபுத்திரன் கவிதைமேல் ஒருவருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாகாதா? கண்டிப்பாக இருக்கலாம். அதை கடுமையாக மறுத்து, நார்நாராகக் கிழித்து எழுதிக்குவிக்கலாம். ஆனால் இங்கே செய்யப்படுவது எழுத்தாளனின் படைப்பை படிப்புவாசனை இல்லாத கும்பல்முன் எடுத்துப்போடுவது. அவன் மேல் தனிப்பட்ட வன்மத்தைக் கக்குவது. அவனுடைய எண்ணை கொடுத்து அதில் அழைத்து வசைபாடுங்கள் என அறைகூவுவது என்பதெல்லாம் இழிவின் உச்சம். நான் நம்பும் இந்துப்பண்பாட்டில் இத்தகைய கீழ்மைகளுக்கு இடமில்லை.

*

ஆனால் மனுஷ்யபுத்திரன் விஷயத்தில் மட்டும் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஒன்று, மனுஷ்யபுத்திரன் வெறும் கவிஞர் அல்ல. ஓர் அரசியல்கட்சியின் பேச்சாளர். அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் அக்கட்சியின் அரசியல் சார்ந்தவை. அவற்றை முன்வைக்கும் அவருடைய சுதந்திரத்தை அக்கட்சிதான் காக்கவேண்டுமே ஒழிய எழுத்தாளர்கள் அல்ல. அவர் தி.மு.க மேடையில் சொல்லும் ஒவ்வொரு கருத்தையும் தமிழ் இலக்கியவாதிகள் பின்னின்று காக்கவேண்டும் என்றால் அது இயல்வதல்ல. சென்றகாலத்திலும் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்கள் அவர்கள் சொன்ன கருத்துக்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள். அது வெறும் தெருமுனை அரசியல். அதில் இலக்கியவாதி செய்வதற்கேதுமில்லை. தி.மு.கவுக்காக கருத்தைச் சொல்லிவிட்டு இலக்கியவாதிகளிடம் மனுஷ்யபுத்திரன் ஆதரவு கோருவது எவ்வகையிலும் முறையல்ல. அதையும் ஓர் அரசியல்நடவடிக்கையாக மட்டுமே பார்க்கமுடியும். அதில் இலக்கியவாதிகள் பங்கெடுக்கவியலாது.

இரண்டாவதாக, எம்..எஃப்.ஹூசேய்ன் போலவோ எம்.எம்.பஷீர் போலவோ இந்து மெய்யியல் மீதோ, இந்து மரபு மீதோ மதிப்புகொண்டவர் என மனுஷ்யபுத்திரன் தன்னைச் சொல்லிக்கொள்ளமுடியுமா? இந்துமதத்தை அழிப்பதே முதல்நோக்கம் என்று முழங்கும் திராவிடர் கழக மேடைகளில் பேசுபவர் அவர். இந்துமதம் உலகின் மிகமோசமான ஒரு கொள்கை, கொடியநஞ்சு என நினைக்கும் தரப்பைச் சேர்ந்தவர் என தன்னை முன்வைப்பவர் அவர்.

அத்துடன் இந்துமத வழிபாடுகள் அனைத்தும் ஷிர்க் என்னும் இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவம் என்று நம்பும் இஸ்லாமிய மத அடிப்படைவாதியான ஜவஹருல்லா போன்றவர்களை தன் மேடைகளில் ஏற்றி தன் தரப்பினராக வெளிப்படையாக முன்வைத்தவர் அவர். அவரை இஸ்லாமிய அடையாளத்துடன் அவருடைய எதிர்த்தரப்பினர் பார்ப்பதற்கு வழியமைத்தவர் அவரே அல்லவா?

மனுஷ்யபுத்திரனுக்கு வரும் கீழ்த்தரமான வசைகளை புரிந்துகொள்ளமுடிகிறது, நான் மு.கருணாநிதி அவர்கள் நல்ல படைப்பாளி அல்ல என்ற கருத்தைச் சொன்னமைக்காக இதைப்போலவே கீழ்மையான சொற்களால் மாதக்கணக்கில் வசைபாடப்பட்டேன். மு.க அவர்களாலேயே மிரட்டல் கவிதை எழுதி எச்சரிக்கவும் பட்டேன். இது இங்கே வளர்க்கப்பட்டுள்ள சூழல். எவரும் விதிவிலக்கல்ல இதற்கு. தனிமனிதர்களாக, அமைப்புசாராமல் நின்றிருக்கும் எழுத்தாளர்கள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள். இந்த விஷயத்தில் அமைதிகாப்பதே சாதாரண எழுத்தாளர் இங்கே செய்யவேண்டியது. இங்குள்ள கும்பல்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் திராணி எந்த எழுத்தாளனுக்கு உண்டு? இந்த விவாதத்தால் மனுஷ்யபுத்திரனுக்கு அரசியல் லாபம் கிடைக்கலாம், அவருக்காக பேசும் எழுத்தாளன் அடைவது என்ன?

தொடர்ச்சியாக இந்துமதம் சார்ந்த வழிபாட்டுமுறைகள், இந்து அடையாளங்கள் மட்டும் குறிவைத்து சிறுமைப்படுத்தப்படும் சூழலில் இருந்து எழும் எதிர்வினை இது என மனுஷ்யபுத்திரன் புரிந்துகொள்ள மாட்டார் என்றாலும் அவருக்காகப் பேசுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எத்தனை காலமாக இந்துமதம்மீதும், இந்து மெய்யியல்மீதும்  கீழ்த்தர வசைபாடல் இங்கே நிகழ்கிறது. அதைச்செய்பவர்கள் மாற்றுமதங்களின் வெறியர்களுடன் கைகோப்பதற்குத் தயங்குவதுமில்லை. மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக எழும் குரல்களிலேயே இந்துமதம் மேல் எத்தனை வசைகள், எத்தனை சிறுமைப்படுத்தல்கள். எத்தனை சாதியக்காழ்ப்பு. இதேபோல இவர்கள் பேசும் தரப்பை, இவர்களின் தலைமையை இழிவுசெய்து வசைபாடினால் இவர்கள் அதை ஒரு கருத்துத்தரப்பு என்று ஏற்பார்களா? ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் திரட்டி எடுத்த இந்த மூர்க்கம்தான் மறுபக்கம் எதிர்மூர்க்கமாக இன்று திரண்டுள்ளது. அது எவராலும் இன்று தவிர்க்கப்படக்கூடியது அல்ல, அதற்கு ஒரு மக்கள்பின்புலம் இன்று உருவாகியுள்ளது. ஆகவேதான் அதை திரும்பத்திரும்பச் செய்கிறார்கள். இவ்விஷயத்தில் திமுகவின் அதிகாரபூர்வ மௌனம் காட்டுவதும் அதைத்தான்.

மரபின் மூடநம்பிக்கைகளை, அதன் பழமைவாதத்தை, ஏன் மரபையே எதிர்க்கும் உரிமை எவருக்கும் உண்டு. முழுமையாக நிராகரிப்பதுகூட ஜனநாயகபூர்வமானதுதான். இந்துமதத்திற்குள்ளேயே கூட எல்லாவகையான எதிர்ப்புகளுக்கும் இடம் உண்டு. உண்மையில் ஒரு நவீன சமூகத்தில் மரபுக்கு எதிரான எதிர்ப்பு எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும். பகுத்தறிவுசார்ந்த விமர்சனம் எப்போதும் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எதிர்நிலையாக நின்றிருக்கவேண்டும். இல்லையேல் மதம் அமைப்பாகவும் ஆன்மிகம் வெற்றுநம்பிக்கையாகவும் சீரழியும். ஆனால் அவை தர்க்கபூர்வமாக, நல்ல நோக்கத்துடன் முன்வைக்கப்படவேண்டும் வசைபாடுதலுக்கும் சிறுமைப்படுத்தல்களும் நேர் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கும்.

கடைசியாக மனுஷ்யபுத்திரனின் அந்தக் கவிதை. கவிதை என்பது கொஞ்சம் நுட்பமான விஷயங்களுக்குரியது. அன்றாட அரசியலின் செயற்கையான உணர்ச்சிகளுக்காக படிமங்களையும் சொற்களையும் பயன்படுத்துவது கவிதையைக் கொல்வதுதான்.  இத்தகைய சூழலில் அக்கவிதையின் இலக்கியத்தன்மை பற்றி பேசலாமா என்று கேட்கலாம். கண்டிப்பாகப் பேசவேண்டும். இத்தகைய மலினமான விவாதங்கள் வழியாக அந்த நாலாந்தர ஜோடனைக் கவிதை ஓர் இலக்கிய அடையாளமாக ஆகிவிடக்கூடும். அதை அடையாளம் காட்டுவது இலக்கியவிமர்சகனின் கடமை.

மனுஷ்யபுத்திரன் தன்  இயல்பான அகவெளிப்பாட்டுக்கு இந்துமதக் குறியீடுகளைப் பயன்படுத்தியமையால் இந்த எதிர்ப்பு வரவில்லை என்பதை நினைவுகொள்ளவேண்டும். அவர் அதை ஓரு முச்சந்தி அரசியலின் பகுதியாகவே கையாள்கிறார். அதற்குத்தான் முச்சந்தி எதிர்ப்பு உருவாகிறது. சமீபத்தைய அரசியல்கவிதைகளினூடாக அவர் தன்னுள் இருக்கும் எஞ்சிய கவித்துவத்தை கூறுபோட்டு விற்பதுபோலத் தோன்றுகிறது. உச்சகட்டமாக இதற்கு விலையாக அவர் எதிர்பார்ப்பது என்ன? ஒரு பதவியா?

உண்மையில் இன்றுபோல சிக்கலான ஒரு நிலை முன்பெப்போதும் வந்தததில்லை . ஒருபக்கம் இங்கே பகுத்தறிவுவாதிகள் மாற்றுமதவெறியர்களுடன் கைகோத்தபடி இந்துமதம் அழியவேண்டுமென கூக்குரலிடுகிறார்கள்.  மறுபக்கம் மதக்காவலர்களாக அரசியல்வாதிகள் வந்து நின்று கீழ்த்தரக் காழ்ப்பைக் கொட்டுகிறார்கள்.இன்று கருத்துச் சொல்பவர் தன்னை எங்கே அடையாளம் காட்டிக்கொள்கிறார் என்பது முக்கியமானது. புனைவிலக்கியவாதி இத்தகைய தரப்புகளுக்கு அப்பால் நின்று, தனியனாக, தன் குரலை முன்வைத்தாகவேண்டும். அப்போதுதான் அது படைப்பாளியின் கருத்துச்சுதந்திரம் ஆகும்.

மதத்தை அரசியல்தரப்பாக அன்றி மெய்தேடலின் பாதையாக, பண்பாட்டு வெளியாகக் காண்பவர்கள் இவ்விரு சாராரின்  நடுவே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குரலெழுப்பினால் இருசாராராலும் வசைபாடப்படுவதே அவர்களுக்கு மிஞ்சும். ஆனாலும் அவர்களின் குரலும் எழுந்தாகவேண்டும். ஏனென்றால் இத்தகைய இறுக்கம் அறுதியாக  கருத்தியல்செயல்பாடுகளுக்கும் ஆன்மிகமானத் தேடலுக்கும்தான் ஊறுவிளைவிக்கும்.

இரு எல்லைகள்

பஷீரும் ராமாயணமும்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

இந்துத்துவம் காந்தி

எம் எஃப் ஹூசேய்ன்

ஹூசேய்ன் கடிதங்கள்

காதலர் தினமும் தாலிபானியமும்

தேவியர் உடல்கள்

முந்தைய கட்டுரைதமிழும் ராஜ் கௌதமனும்
அடுத்த கட்டுரைகும்பமுனி யார்?