நடையின் எளிமை- கடிதம்

sujatha

 

நடையின் எளிமை

சார்

 

வணக்கம்.

 

‘நடையின் எளிமை’ கட்டுரை வாசித்தேன். அது குறித்து சில கருத்துகளை சொல்லத் தோன்றுகிறது.

 

எளிய வார்த்தைகளால் இலக்கியம் சொல்லப்படும் வேண்டும் என்பதே சற்று நெருடலாக தோன்றுகிறது.  பொதுவாக,  ஒன்றை சொல்லி பிறவற்றின் மீதான மனத்திறப்பை உண்டாக்கும் இலக்கியத்திற்கு, வார்த்தை நுட்பம்தேவையாகதானிருக்கிறது.  வார்த்தை நுட்பங்கள் படைப்பின் தரத்தோடு சம்பந்தப்பட்டவை.  அவை  படைப்பின் உத்திக்கான அழகியலை  எடுத்தியம்புகிறது.

 

முன்பெல்லாம் தங்கள் படைப்புகளை வாசிக்கும்போது,  நீங்கள் உருவாக்கும் கலைச்சொற்கள் ஆரம்பக்கட்ட வாசகர்களை விலக்கி விடுமே என்று கூட எண்ணியிருக்கிறேன்.   ஆனால் அதன் முக்கியத்துவம் இன்று புரிகிறது.  கற்பிதம் செய்யப்பட்ட வாழ்விற்குள்ளிருந்து கருப்பொருளை எடுத்தாளுவதை விட, கனவுகளை, அது காட்டும் நினைத்தே பார்த்திராத மனதின் நுட்பங்களை, மனம் செல்லும் வழியோடு பின்தொடரும்போது,  படைப்பு,  சுற்றிக் கொண்டிருக்கும்  நுாற்று சொச்சம் சொற்ப வார்த்தைகளிலிருந்து விலகி, மொழியின் ஆழத்திலிருந்து தனக்கானதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

 

மஞ்சுக்குட்டி  என்ற என்னுடைய கதையொன்று… மூன்று வருடங்களுக்கு முன் எழுதியது. (இப்போது எழுதியிருந்தால் அதன் மொழியில் நிச்சயம் வேறுபாடிருக்கும். அது வேறு விஷயம்).   அதன் இறுதி வரிகளில்  “இந்த இரண்டு நாட்களுக்கு எங்கு தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய சிந்தனையாக இருந்தது.“ என்று முடித்திருப்பேன். இப்போது வாசிக்கும்போது “சிந்தனை“ என்பது அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தாத வார்த்தையாக தோன்றுகிறது. “யோசனையாக..“ என்று எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.

 

உங்கள் தளத்தின் மற்றெல்லாக் கட்டுரையையும் போல, இதுவும் எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான கட்டுரைதான்.

 

 

 

அன்புடன்

கலைச்செல்வி.

 

 

அன்புள்ள ஜெ

 

 

நடையின் எளிமை பற்றிய கட்டுரை அருமை. ஏனென்றால் இந்தக்கட்டுரையிலுள்ள விஷயங்களை வாசிக்க ஆரம்பிக்கும் என் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. பொதுவாகவே நம்மவர்களுக்கு நீண்ட புத்தகங்களை வாசித்துப்பழக்கமில்லை. அடிக்கோடிட்டு பத்திகளாக வாசிப்பதே பழக்கம். கல்விநிலையங்களில் அதைத்தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆகவே புத்தகமென்றாலே மிரள்கிறார்கள். எளிமையான நூல்களைத்தான் தேடிச்செல்கிறார்கள். கொஞ்சம் எளிமையான நூல்களை வாசித்ததுமே தங்களை வாசகர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

 

இவர்கள் கொஞ்சமேனும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அடைப்பது இதைப்போல எதையுமே எளிமையாகச் சொல்லலாம், சுருக்கமாகச் சொல்லத்தெரியாதவன்தான் நீளமாக எழுதுகிறான், கடினமான மொழிகொண்ட படைப்புக்கள் போலியானவை என்றெல்லாம் சிலர் எழுதிக்கொண்டிருக்கும் ஒற்றைவரிகள். இவர்கள் தாங்கள் வாசிப்பதே நல்ல முழுமையான வாசிப்பு, மேற்கொண்டு வாசிக்கவே வேண்டாம் என்றும் நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அனைத்துக்கும் சரியான பதிலாக அக்கட்டுரை இருந்தது

 

செந்தில்குமார்

 

ஜெ

 

இப்போது உங்களுக்கு ஆல்டைம் பேவரைட் எழுத்தாளர் எவர் என்று சமூக ஊடகங்களில் ஒரு பேச்சு ஓடியது. மிகப்பெரும்பாலானவர்களுக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா. சமீபத்தில் மனம் சோர்வடைந்த சந்தர்ப்பம். நம்மவர்களின் வாசிப்பு இப்போதும் கணேஷ் வசந்த் லெவலில்தான் இருக்கிறது. ‘அவன் தீக்குச்சி கிழித்ததுபோல சிரித்தாள்’ என்றெல்லாம் வாசித்து மகிழ்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பள்ளி கல்லூரி வகுப்புக்குமேல் எதையுமே வாசிக்கவில்லை. அந்த வாசிப்பிலிருந்து மேலே செல்லவுமில்லை. அந்த பழைய புத்தகவாசிப்பையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதையே திருப்பி வாசிக்கிறார்கள். அந்த தேக்கநிலையை கடப்பவர்கள் சிலர்தான். அப்படிக் கடப்பவர்களுக்கு தேவையான கருத்துக்கள் இக்கட்டுரையில் உள்ளன

 

எஸ்.சுதாகர்

முந்தைய கட்டுரைஅலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை
அடுத்த கட்டுரைஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி