பாதையில் பதிந்த அடிகள்

pathaiyil-padintha-adikal

அஞ்சலி -ராஜம் கிருஷ்ணன்

அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

ஈராண்டுகளுக்கு முன் தங்களது நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் வாசித்தது முதல், அதில் சிபாரிசு செய்யப்பட்டு இதுவரை வாசிக்காதவற்றை வாசிக்கும் முயற்சியின் வரிசையில் ராஜம் கிருஷ்ணனின் ‘பாதையில் பதிந்த அடிகள்’ நேற்று வாசித்து முடித்தேன்.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை அதிகாரத்தைத் தக்கவைத்து ஆட்சியை நிறுவிட, ஆண்டைகளாய் அது வரை இருந்த, அவ்வப்பகுதியின் நிலஉரிமையும், அதன் வகையில் மிகு செல்வபலமும் அதிகாரபலமும்  தலைமுறைகளாகப் பெற்றிருந்தோரையே மீண்டும் தலைவர்களாக சேர்த்துக்கொண்டது குறித்து கம்போடிய பயணத்தின் போது  குறிப்பிட்டிருந்தீர்கள்.

இந்த நாவலில் வரும் மணலூர் மணியம்மையின் கதையின் களத்தை, பிண்ணனியில் நிகழும் அரசியல் மற்றும் சமூகவியல் மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அந்த சித்திரம் உதவியது.

இல்லையெனில் ஒரு வறண்ட கதை என இதை நான் கடந்திருக்கக்கூடும். இது ஒரு வாழ்க்கைச் சித்திரமென அறியாதே இக்கதையை வாசித்தேன். எனவே ஆரம்பப் பகுதியில் சனாதன தர்மத்தின் அடக்கு முறைகளிலிருந்து வெளியேறி,  விதவை எனும், பெண் எனும் அடையாளங்களை இரவோடிரவாகத் துறந்து, ஆண் போல உடையையும், தோற்றத்தையும் மாற்றி களப்போராட்டங்களில் இறங்கும் மணியம்மை ஒரு மிகு கற்பனை என்று கூடத் தோன்றியது.

வெளிப்பார்வைக்கு அத்தனை கடினமாய்த் தெரியாவிடினும் பெண் என அறியப்படுவதன் சமூக அடையாளங்களைத் துறந்து விடுதல் இன்று கூட அவ்வளவு எளிதல்ல. அப்படியிருக்க எழுபது வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!! எனில் எளிதான பாதை எனில் அதில் பதிந்த அடிகளுக்கு சுவடிருக்காது.

மிகுந்த கள ஆராய்ச்சிகள் செய்து ஒவ்வொரு நூலையும் எழுதுபவர் என்று ராஜம் கிருஷ்ணன் குறித்து வாசித்தேன். அவர் மீதான உங்கள் அஞ்சலிக் குறிப்பை வாசித்தபோது, இவரது வாழ்வின் பாதையில் பதிந்த அடிகளும் ஆழமானவையே எனத் தோன்றுகிறது.

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைதிருட்டுத்தரவிறக்கம், இரவல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஐரோப்பா 8- காலத்தின் விழிமணி