திரிச்சூர் நாடகவிழா 2

என் வாழ்க்கையின் மறக்கமுடியாத மாபெரும் நாடக அனுபவங்களில் ஒன்று டிசம்பர் 26 அன்று நான் கண்ட பாகிஸ்தானி நாடகமான ”புல்லாஹ்” புகழ்பெற்ற பாகிஸ்தானி நாடக ஆசிரியரான சாஹித் நதீம் எழுதி பாகிஸ்தானின் முதல்தர நாடக இயக்குநரான  மதீஹா கௌர் இயக்கிய இசைநாடகம் இது. அரங்க அனுபவம் என்றால் இதுதான். நாடகமென்பது எத்தனை மகத்தான கலை என்று காட்டுவது இந்நாடகம்.

பதினேழாம் நூற்றாண்டில் பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த புல்லாஹ் ஷா பாகிஸ்தானிலும் இந்திய பஞ்சாபிலும் பெரும்புகழ்பெற்ற சூபி ஞானி, கவிஞர். அவரது கவிதைகள் பஞ்சாபில் பெரும் மக்கள் இயக்கமாக வடிவெடுத்தவை.அவரது வாழ்க்கையைச் சொல்லும் நாடகம் என்று சுருக்கமாக இந்த நாடகத்தை சொல்லலாம். இரு தளங்கள் கொண்டது இந்தப்பெரும் படைப்பு. ஒருபக்கம் புல்லாஹ் ஷாவின் ஞானத்தேடல்,அதற்கான அவரது துயரங்கள். மறுபக்கம் அவரது ஞானவெளியைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்லாமிய சமூகத்தின், மதஅரசாங்கத்தின், இஸ்லாமிய மதகுருக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம். இருமுனைகளிலும் தனக்கு ஏற்படும் தடைகளையே ஆன்மீகப் பயணத்துக்கான அறைகூவல்களாகக் கொண்டு கடந்துசெல்கிறார் புல்லாஹ் ஷா.

 

ஷாகித் நதீம்

 

தன் குருநாதராகிய ஷா இனாயத் அவர்களிடமிருந்து  இஸ்லாமிய அடிபப்டைகளைக் கற்றுத்தேர்கிறார் புல்லாஹ் ஷா. தெய்வீகமான ஞானத்தால் அவர்கள் பிணைக்கப்படுகிறார்கள். ஆனால் தன் சீடன் உக்கிரமான அக உந்துதலினால் அடித்துச்செல்லப்படுவதைக் காண்கிறார் குரு. அவர் அச்சப்படுகிறார். எச்சரிக்கிறார். ஒருகட்டத்தில் சீடனை நிராகரிக்கவும் முயல்கிறார். ஆனால் அவருள் ஒளிரும் ஞானத்தேடல்கொண்ட மனம் ஒரு கட்டத்தில் சீடனையே தன் குருவாக அடையாளம் காண்கிறது. நாடகத்தில் மாலையொளியில் சுடரும் மலைமுடிமோல எழுந்து நிற்கும் தருணம் இது. குருசீட உறவில் பல தளங்கள் உணர்ச்சிகரமாக நாடகத்தில் நிகழ்கின்றன.

இஸ்லாமிய மத அமைப்பு ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வதில்லை. மசூதி தொழுகை விலக்குகள் என்ற அடிப்படையிலேயே சிந்திக்கப் பழகிய அது பெரும் களியாட்டமாக இருக்கும் புல்லாஹ் ஷாவின் ஆன்மீக உன்மத்தத்தை ஒருவகை மீறலாக மட்டுமே காண்கிறது. அவருக்கும் அவரது சிஷ்யையான முறாதி பேகத்துக்குமான உறவை அது ஐயப்படுகிறது. ஆனால் கடைசிக்கணம் வரை அவள் அவருடன் இருக்கிறாள்.

இஸ்லாமிய விசாரணைக்கு உட்பட்டு கொல்லப்படும்  பந்தா சிங் பைராகி முதலில் புல்லாஹ் ஷாவை இஸ்லாமிய எதிரியாகவே எண்ணுகிறார். அவரிடம் ”நான் இந்து இல்லை நான் இஸ்லாம் இல்லை நான் சீக்கியனும் இல்லை, அல்லாவின் அடிமை” என்று தன்னை முன்வைக்கிறார் புல்லாஹ். பந்தா சிங் ஒரு கட்டத்தில் அவர் ஒரு ஞானி என்று புரிந்துகொள்கிறார். பந்தா சிங் கொல்லப்படுகிறார். அவருடைய நண்பர் என்று புல்லாஹ் ஷா மதத்தலைமையால் குற்றம் சாட்டப்படுகிறார். கடைசியில் அவரும் மதவாதிகளால் கொல்லப்படுகிறார்.

தன்னைப்புரிந்துகொள்ளும் சில சீடர்களுடன் புல்லாஹ் ஷா தன்னை எதிர்நோக்கும் உலகியல் சவால்களை தாண்டிச்செல்கிறார். உக்கிரமான ஆன்மீக எழுச்சியை கவிதைகளாக வெளியிடுகிறார். ஆடிப்பாடுகிறார். மெல்ல மெல்ல அவர் மறைவதாக காட்டுகிறது நாடகம். சீடர்கள் அவரது கபரை கொண்டு செல்கிறார்கள். பின்னர் ஒளிரும் விளக்குகள் எரியும் தர்காவில் புல்லாஹ் ஷாவின் கபர் அலங்காரப்போர்வையால் போர்த்தப்பட்டு காட்சிதரும் இடத்தில் நாடகம் முடிகிறது. நடிகர்கள் அனைவரும் அதை வணங்கியபடி ஒவ்வொருவராக முன்னால் வந்து அரங்கை வணங்குகிறார்கள்.

இந்நாடகத்தின் அரங்க அமைப்பு, ஒளியமைப்பு, நடிப்பு, இசை, பாடல்,நடனம், வசன உச்சரிப்பு என ஒரு இம்மி கூட எங்கும் பிசிறு தென்படவில்லை. ஒரு கணம் கூட அரங்கில் இரூந்து கண்ணை விலக்க முடியாது. இந்நாடகத்தின் முக்கியமான அம்சம் பாடல். இந்துஸ்தானி காவாலி பாணியில் அமைந்த பாடல் மிக விஸ்தாரமான ராக ஆலாபனைகள் கொண்டது. ஐந்துபேர் கொண்ட பாடகர் குழு மேடைக்கு வலப்பக்கம் ஓரமாக அமர்ந்திருந்தது. அவர்களின் பாடல்கள் அரங்கை ஒரு மாயக்கனவுக்குள் வைத்திருந்தன. மியான் ஷரியார் இசையமைத்த பாடல்களை வகார் அலி குழுவினர் பாடுவதைக் கேட்டது ஒரு அபூர்வமான தனி அனுபவம். நாடகத் தருணத்துக்கு ஏற்ப அரண்மனை மசூதி வெட்டவெளி என்றெல்லாம் வேறுபட்ட இடங்களை உருவாக்கின விளக்கொளிகள்.

மையக்கதாபாத்திரமாக நடித்த சர்·பராஸ் அன்ஸாரி ஒரு மேதை. பேரழகன். புல்லாஹ் ஷாவின் அந்த ஞானப்புன்னகையை கண்களில் இருந்து அழிக்க முடியவில்லை. மிகச்சிறந்த பாடகர் அன்ஸாரி. முதல்தர இந்துஸ்தானி பாடகரின் குரல்வளமும் கற்பனைவீச்சும் கொண்டவர் என்றார்கள். புல்லாஹ் ஷாவின் அனைத்து பாடல்களையும் அவரே பாடினார். பாடகர் குழு ஊடே புகுந்து பொங்கிக்கொப்பளித்தது. ஒவ்வொருதருணத்திலும் அவரது நடிப்பு உச்சத்த்தில் இருந்து மேலும் உச்சத்தை நோக்கி நகர்ந்தது. மறுநாள் மலையாளத்தின் பெரும் நடிகர்களெல்லாம்  அவரை நடிப்பின் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடுவதைக் கண்டேன்.

ஒரு சூ·பி ஞானியின் ஆனந்த நடனத்தை மேடையில் காட்டுவது எளியசெயலல்ல. நடனமாகவும் இருக்கவேண்டும் , மெய்மறந்து கட்டற்று பீரிடுவதாகவும் இருக்க வேண்டும். அன்ஸாரி கண்முன் நிகழ்ந்துகொண்டே இருந்தார். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அப்படித்தான் ஆடியிருப்பார். பீர்முகது ஒலியுல்லா அப்படித்தான் பாடியிருப்பார்.   ஒரு மாபெரும் கலைஞனை காணும் பேறு என்பது எளிய விஷயமல்ல. இந்த விழா இதற்காகவே நிறைவுகொள்கிறது. பஞ்சாபில் இந்நாடகம் நடந்தபோது கூட்டம் கூட்டமாகச் சென்று அவரது காலில் விழுந்தார்கள் என்றார்கள். ஆம், நானும்கூட பல முறை அந்தப்பாதங்களில் மானசீகமாக வணங்கி எழுந்தேன்.

நாடக ஆசிரியரான சாஹித் நதீம் பாகிஸ்தானின் ஆகச்சிறந்த நாடக ஆசிரியர் என்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களும் பல தொலைக்காட்சித்தொடர்களும் திரைக்கதைகளும் எழுதியிருக்கிறார். சர்வதேச விருதுகள் பல பெற்றிருக்கிறார். பாகிஸ்தானியக் காஷ்மீரில் சோபோர் என்ற ஊரில் 1947ல் பிறந்தார்.பாகிஸ்தானிய ராணுவ ஆட்சிக்கும் மத அடிப்படைவாதத்துக்கும் எதிராகப்போராடி  1969, 1970, 1978ல் மீண்டும் மீண்டும் சிறைசென்றவர் நதீம்.

நாடக இயக்குநரான மதீஹா கௌர் பாகிஸ்தானில் லாகூரில் பிறந்தவர். அஜோகா தியேட்டருக்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியவர் அவர். பெண்ணுரிமைக்காக போராடி வருபவர். சர்வதேச விருதுகள் பெற்றவர். பாகிஸ்தானின் முக்கியமான நாடக நிறுவனமான அஜோகா தியேட்டர் மத அடிபப்டைவாதத்துக்கு எதிராக செயல்படும் முக்கியமான கலைக்குழு.

பாகிஸ்தானிய நாடகக்குழு மேடைக்கு வரும்போது பாரதிய ஜனதா கட்சியினரின் சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. பாகிஸ்தானிய’நாடகக்குழுவுக்கு நல்வரவு. ஆனால் குண்டுவெடிப்புகளைக் கண்டிக்கிறோம்” என்று ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டது. மேடையில் நன்றி தெரிவிக்கும்போது மதீஹா மிக வெளிப்படையாகப் பேசினார். இரு நாட்டின் எளிய மக்கள் குண்டுவைப்பவர்கள் அல்ல. போரிடுபவர்களும் அல்ல. பண்பாட்டின் மூலமும் மானுட அன்பின் மூலமும் ஒன்றுசேர்க்கப்பட்டவர்கள் அவர்கள். அரங்கில் நாடகத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பு காட்டுவது அதையே. அதிகாரச்சதுரங்கமாடும் மத அடிபப்டைவாதத்தின் காய்களாக மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அந்த எல்லைகளை மீறி நாம் கைகோர்க்க முடியும் என்றார்.

மறுநாள் கருத்தரங்கில் பேசிய மதீஹா எவ்விதமான தடைகளும் இல்லாமல் பேசினார். உலகம் முழுக்க பரவிய இஸ்லாம் அங்குள்ள பண்பாடுகளுடன் கலந்து வளர்ந்தது. அவ்வாறு அதற்கு பற்பல தேசிய தனித்தன்மைகள் உருவாயின. சிறப்பான அழகியல் உருவாயிற்று. மேலான ஆன்மீகம் உருவாயிற்று. பஞ்சாபுக்கு அப்படிப்பட்ட ஒரு பெரும் அழகியல், ஆன்மீக மரபு உண்டு.

ஆனால் எழுபதுகள் முதல் பாகிஸ்தானில் பரவிய தேவ்பந்த் மத்ரஸாக்கள் மூலமும் ஜமா அத் எ இஸ்லாமி போன்ற மதவெறி அமைப்புகள் மூலமும் அரேபிய ஒற்றைக்கலாச்சாரமே இஸ்லாமின் சாரம் என்ற பிரச்சாரம் பெரும் வன்முறை மூலம் வளார்த்தெடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடிப்படைவாதிகளை தூண்டிவிட்ட அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அந்த நச்சு பாகிஸ்தானில் பரவ வழிவகுத்தன. கோடிகள் கொட்டி பெரும் பிரச்சாரம் நடைபெற்றது. இன்றைய பாகிஸ்தான் அந்த மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கி அழிந்துகொண்டிருக்கும் ஒரு தேசம்.

புல்லாஹ் ஷா அரபு தேசியவாதத்தை முன்வைக்கும் அடிப்படைவாத இஸ்லாமுக்கு எதிரான பஞ்சாபியப் பண்பாட்டின் குரல். பெண்களை, சிறுபான்மையினரை ஒடுக்கும் மத அடக்குமுறைக்கு எதிரான கலகம். மதவெறிக்கு எதிரான மானுடநீதியின் அறைகூவல். ஆகவேதான் இது கலை என்பதுடன் ஒரு போராட்டமாகவும் அமைகிறது என்றார் மதீஹா.

இந்த நாடகத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு. இதில் நடித்த நான்குபேர்  அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் நாடகத்தில் நடிக்கும் பெண்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்தியாவர அனுமதி அளிக்கவில்லை. ஆகவே இங்குள்ள நடிகர்கள் தேர்வுசெய்யப்பட்டு நான்குநாள் பயிற்சி அளிக்கப்பட்டு  கூட்டிவரப்பட்டார்கள். அவர்கள் மிகச்சிறப்பாக நடித்தார்கள் — குறிப்பாக முறாதி பேகமாக நடித்த ஸாமியா மும்தாஜ் மற்றும் பந்தா சிங்காக நடித்த சாகிப் சிங் இருவரும் மிகச்சிறப்பாக நடித்தார்கள்.. . முந்தையவர்கள் அமிர்தசரஸ் நாடகப்பள்ளியைச்ஸ்ரீர்ந்தவர்கள். ஒளியமைப்பாளார் பிரவீண் ஜாகி டெல்லி நாடகப்பள்ளியைச் சேர்ந்தவர். அமிர்தசரஸிலும் டெல்லியிலும் நாடகப்பள்ளிகளில் உண்மையிலேயே நாடகம் சொல்லிக்கொடுக்கிறார்கள்! நம்மூர் பாண்டிச்சேரி நாடகப்பள்ளிக்கெல்லாம் கொடுக்கும் பணத்தை நிறுத்தல்செய்து அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம்.

டிசம்பர் 27 ஆம் தேதி மராத்தி நாடகம். ஆத்மஹத்யா. [தற்கொலை]. சதானந்த் பரமானந்த் போர்க்கர் இயக்கி ஸ்ரீவெங்கடேஷ் நாட்ய மந்திர் நடித்த இந்நாடகம் விதர்பா மாகாணத்தில் விவசாயிகள் தற்கொலைசெய்துகொள்வதைப்பற்றியது. சாதாரணமான பிரச்சார நாடகம் இது. விவசாயி நொடித்துப்போகிறார். வட்டிக்குக் கொடுத்தவர்கள் அவரை தற்கொலைக்குத்தூண்டுகிறார்கள். அவர் தற்கொலை செய்துகொள்ள பிரதமரின் நிதி கிடைக்கிறது. அந்தப்பணத்தை அக்குடும்பம் நிராகரிக்கிறது.

மொழி தெரியாததனால் வெறும் வசன மழையாக இருந்த நாடகத்தை ரசிக்க முடியவில்லை. ஆனால் நடிப்பும் வசன உச்சரிப்பும் எல்லாம் பிழையிலாமல் சரளமாக இருந்தன. மராத்தில் ஒரு பிரச்சார நாடகமாக பலமுறை மேடையேறிய படைப்பு இது. மராத்தி நாடகத்தின் வலிமை இந்நாடகத்தில் வெளிப்படவில்லை என்ற விமரிசனம் எழுந்தது.

சிறிய அரங்கில் நடிக்கப்பட்டநாடகங்களில் பயிற்சிக்குறைவான பல நாடகங்கள் இருந்தாலும் பொதுவாக உற்சாகமான ஈடுபாட்டையும் திறமையையும் காணமுடிந்தது. ஜயப்பிரகாஷ் குளூர் இயக்கிய  ”கண்ணாடி” என்ற நாடகம் சிறப்பாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு கிராமத்தில் முஸ்லீம் வணிகன் ஒருவன் ஒரு கண்ணாடியைக் கொண்டுவருகிறான். அதை அவன் மனைவி எடுத்துப்பார்த்து ஏதோ ஒரு பெண்ணின் படம் என்று நினைத்து அவன் மீது ஐயப்படுகிறாள். பின்னர் கண்ணாடி கீழே விழுந்து உடைகிறது. அவர்கள் இணைகிறார்கள். சகஜமான பாவனைகள் மூலம் சிரிப்பையும் நுட்பமான குணச்சித்திர விவரிப்பையும் அளித்தார்கள் இரு நடிகர்களும்.

வைக்கம் முகமது பஷீரின் பிரேம லேகனம் என்ற நாடகத்தை சூர்யா கிருஷ்ணமூர்த்தியும் அவரது துணைவியும் நடித்தார்கள். அதுவும் உற்சாகமான ஒரு பார்வையனுபவத்தை அளித்தது. 

http://www.ektaonline.org/events/shahid/index.htm

http://ajoka.ektaonline.org/

முந்தைய கட்டுரைமத்தகம்:மேலும்கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிரிச்சூர் நாடகவிழா- 3