என் ஆரம்பகால வாசிப்புகளில் அதிகமும் பிரிட்டிஷ் நாவல்கள். என் அம்மாவுக்கு அவை பிரியமானவை. மேலும் குமரிமாவட்டத்தில் அவை எளிதாகக் கிடைக்கும். எங்கள் ஆசிரியர்களும் அவற்றைத்தான் பெரிதாகச் சொல்வார்கள். கல்லூரியில் எனக்கு ஆங்கிலம் கற்பித்தவர்கள் அமெரிக்காவில் இலக்கியம் முளைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்பியவர்கள். ஏனென்றால் அவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்களிடம் படித்தவர்கள்.
ருஷ்யப்பெருநாவல்களில் பின்னர் நான் கண்டுணர்ந்த ஆன்மிகச் சிக்கல்கள், அடிப்படைக் கேள்விகள் எதையும் பிரித்தானிய நாவல்களில் கண்டடைந்ததில்லை. ஆகவே டிக்கன்ஸ் உட்பட எவருமே என்னை நெடுங்காலம் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அவற்றின் புறவர்ணனைகளை மட்டுமே இப்போது நினைவுறுகிறேன். இரு விதிவிலக்குகள் மேரி கெரெல்லியும், ஜார்ஜ் எலியட்டும். இருவருமே பெண் எழுத்தாளர்கள்.
மேரி கொரெல்லி [Marie Corelli ]யின் இயற்பெயர் மேரி மாக்கே. 1855ல் லண்டனில் ஸ்காட்லாந்து கவிஞரான டாக்டர் சார்லஸ் மாக்கேக்கு அவருடைய வேலைக்காரியான எலிசபெத் மில்ஸிடம் அங்கீகரிக்கப்படாத மகளாகப்பிறந்தார். இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதில் வெற்றிபெறாமல் எழுத ஆரம்பித்தார். மேரி கொரெல்லி என பெயர் சூட்டிக்கொண்டார். 1886ல் தன் முதல் நாவலை வெளியிட்டார். மேரி கொரெல்லி தன் புனைவுகளால் பெரும்புகழ்பெற்றார். ஆனால் அக்கால விமர்சகர்களால் ‘மிகையுணர்ச்சி நிறைந்த போலி எழுத்து’ என அவை நிராகரிக்கப்பட்டன. “எட்கார் ஆலன்போவின் கற்பனையும் குய்தாவின் நடையழகும் கொண்டவர், ஆனால் மனநிலை ஒரு தாதியுடையது” என அக்கால விமர்சகர் ஒருவர் எழுதினார்
அந்த வெறுப்புக்கு முக்கியமான காரணம் மேரி கொரெல்லியின் வாழ்க்கை. அவர் மணம் புரிந்துகொள்ளவில்லை. தன் தந்தையின் இல்லப்பணிப்பெண்ணாக இருந்த பெர்த்தா வ்யெர் [Bertha Vyver] ருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுடையது ஒருபாலுறவாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் மேரிக்கு ஓவியரான ஜோசஃப் செவெர்னுடன் ஆழ்ந்த உறவு இருந்திருக்கிறது. பதினொரு ஆண்டுகள் அவருக்கு தொடர்ச்சியாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் மணமானவரான செவெர்ன் அந்த உறவை பெரிதாகக் கருதவில்லை.
மேரியின் ஆர்வங்கள் குழப்பமானவை. பதினேழாம் நூற்றாண்டு கட்டிடங்களை மீட்டமைப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அக்காலத்தில் பிரபலமாக இருந்த Fraternitas Rosae Crucis போன்ற கிறித்தவ குறுங்குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.பழங்கால ஞானவாத கிறித்தவ மரபின் நீட்சியான தன்வதைக்குழுக்கள் இவை. இன்று பிரபலமாக உள்ள பெந்தேகொஸ்தே சபைகளைப்போல. அதேசமயம் மாற்றுச்சிந்தனையாளரான ஜான் ரஸ்கின் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். 1924ல் மறைந்தார். மேரி கொரெல்லி இறந்த பின் பெர்த்தா மேரியைப்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
மேரி கொரெல்லி ஒதுங்கிப்போகும் இயல்பு கொண்டிருந்தார். மார்க் ட்வைன் உட்பட அன்றைய பல எழுத்தாளர்கள் மேரியைப்பற்றிய எதிர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். முதல் உலகப்போரில் உணவைப் பதுக்கிவைத்தார் என்னும் குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தமையால் பெரும்பான்மையானவர்களால் வெறுக்கப்பட்டார். இறப்புக்கு பின்னர் அவர் அனேகமாக நினைவுகூரப்படவே இல்லை.
ஜார்ஜ் எலியட் என்ற ஆண் பெயரில் எழுதிய மேரி ஆன் ஈவன்ஸ் வார்விக்ஷயரில் ராபர்ட் ஈவன்ஸுக்கும் கிறிஸ்டினா ஈவன்ஸுக்கும் மகளாக பிறந்தார். செல்வச்செழிப்புள்ள குடியில் பிறந்து உயர்கல்வியை அடைந்தாவர் ஜார்ஜ் எலியட். மேரி ஈவன்ஸ் மிக அழகற்ற தோற்றம் கொண்டிருந்தார் என்றும், ஆகவே அவருக்கு மணம் நிகழ வாய்ப்பில்லை என கருதிய தந்தை அவருக்கு அன்றைய சூழலில் பெண்களுக்கு அரிதானதும் செலவேறியதுமான கல்வியை அளித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இளமையிலேயே ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர், லுட்விக் ஃபாயர்பாக் ஆகியோருடன் பழகி உரையாடும் வாய்ப்பு அமைந்தது. ஆகவே அவருடைய மரபான கிறித்தவ நம்பிக்கை உடைந்தது. டேவிட் ஸ்டிராஸின் The Life of Jesus ஐ அவர் மொழியாக்கம் செய்தார். அதுதான் அவருடைய முதல் இலக்கிய முயற்சி. அதன்பின் ஃபாயர்பாகின் The Essence of Christianity யை மொழியாக்கம் செய்தார். அவருடைய மதமறுப்பு தந்தையை சினம் கொள்ளச்செய்தது. தந்தையின் இறப்புக்குப்பின் அவர் சுவிட்சர்லாந்துக்குச் சென்று அங்கே தங்கினார். 1850ல் லண்டன் திரும்பிய மேரி அன்றைய இடதுசாரி இதழான Westminster Review வின் இணையாசிரியராகப் பணியாற்றினார்.
மேரி இலக்கியப் படைப்பாளியாகவும் அரசியல் விமர்சகராகவும் தொடர்ச்சியாகச் செயலாற்றியவர். அவருடைய முதல்நாவல் Adam Bede 1859 ல் வெளிவந்தது. அவருடைய Middlemarch முதன்மையான ஆக்கம் எனப்படுகிறது. பரவலாக படிக்கப்படுவது Silas Marner. நான் சிலாஸ் மார்னர் நாவலை கல்லூரி முதலாண்டு படிக்கையில் வாசித்தேன். பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர் என்னும் எண்ணம் உருவாகியது, அது இன்றுவரை மாறவில்லை.
மேரி சுதந்திரமான பல பாலுறவுகள் கொண்டிருந்தார். வெஸ்ட்மினிஸ்டர் ரெவ்யூவின் ஆசிரியர் ஜான் சாப்மான், தத்துவ ஆசிரியரான ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் ஆகியோருடனான உறவும் அவற்றில் அடங்கும். பின்னர் தத்துவவாதியான ஜார்ஜ் ஹென்றி லூயிஸுடன் [George Henry Lewes] அவருக்கு உறவு ஏற்பட்டது. ஜார்ஜ் லூயிஸ் ஏற்கனவே மணமானவர், ஆகவே அவ்வுறவு சட்டவிரோத உறவாகவே நீடித்தது. 1880ல் மேரி தன்னைவிட இருபது வயது குறைவானவரான ஜான் கிராஸை மணந்தார். அவருடன் வெனிஸ் சென்றபோது ஜான் கிராஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பிழைத்துக்கொண்டார். அவ்வாண்டே தொண்டைத் தொற்றுநோயால் மேரி இறந்தார்.
மேரி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் புதைக்கப்படவில்லை. அவர் கிறித்தவ நம்பிக்கைகளை மறுத்தமையாலும் முறைகேடான பாலுறவுகள் கொண்டிருந்தமையாலும் அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய உடல் ஹைகேட் சிமித்தேரிக்குக் கொண்டுசென்று அடக்கம் செய்யப்பட்டது. அக்காலத்தில் பொதுவாக மதமறுப்பாளர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள். கார்ல் மார்க்ஸின் கல்லறையும் அங்குதான் உள்ளது.
இருபெண்கள். இருவருமே வாழ்ந்தகாலத்தில் வெறுக்கப்பட்டார்கள். ஒருவகையான திமிருடன் எதிர்த்து நின்றனர். எழுத்தை தங்கள் ஆயுதமாகக் கொண்டனர். இருவருக்குமே மதம் முக்கியமான ஆய்வுப்பொருள். இருவருமே மதத்தை கவித்துவமாகவும் தர்க்கபூர்வமாகவும் நுணுகி நோக்க முயன்றனர். மேரி கொரெல்லி அரசியலற்றவர். ஜார்ஜ் எலியட் அரசியல் நிறைந்தவர். மேரி கொரெல்லி மறக்கப்பட்டார். ஜார்ஜ் எலியட் பிரிட்டிஷ் இலக்கியத்தின் வெற்றிகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறார்
ஹைகேட் சிமித்தேரிக்கு லண்டன் நண்பர்களுடன் சென்றபோது இந்த இரு எழுத்தாளர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். நான் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுள் முதன்மையானவர்களாகக் கருதும் இருவருமே பெண்கள் என்பது ஆச்சரியப்படச் செய்தது. அவர்கள் இருவருக்குமே மதம்சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த தேடல் இருந்தது என்பது அவர்களை எனக்கு அணுக்கமாக ஆக்கியிருக்கலாம். ஆனால் அதற்கும் மேல் ஏதோ ஒப்புமை இருக்கவேண்டும் அந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை. “ஏன் பெண்கள்?” என்று நானே கேட்டுக்கொண்டேன். எனக்குப்பிடித்த இன்னொரு பிரிட்டிஷ் எழுத்தாளரான ஸகி [Saki]யை நினைவுகூர்ந்தேன்.
Hector Hugh Munro என்ற இயற்பெயர் கொண்ட ஸகி இவ்விரு எழுத்தாளர்களுக்கும் சமகாலத்தவர். [1870 -1916] ஸகி அங்கத எழுத்தாளர். பிரிட்டிஷ் பர்மாவில் பிறந்தவர். கல்கத்தா அன்றைய பிரிட்டிஷ் பர்மாவின் தலைநகர். ஸகி பிரிட்டிஷ் இந்தியாவின் காவல்துறை அதிகாரியாக இருந்த சார்லஸ் அகஸ்டஸ் மன்றோவுக்கு மைந்தனாகப்பிறந்தார். 1896ல் லண்டன் திரும்பிய ஹெச்.ஹெச்.மன்றோ ஸகி என்ற பேரில் எழுதலானார்
ஸகி என்ற பெயரில் பெரும்பாலும் அறியப்படாதவராக ஒளிந்துகொண்டு அவர் எழுதியமைக்கு ஒரு காரணம் இருந்தது, அவர் ஒருபாலுறவுப் பழக்கம் கொண்டவர். அன்றைய பிரிட்டிஷ் ‘கனவானுக்கு’ அது மிக வெறுக்கத்தக்கப் பழக்கம். மன்றோ முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காகப் போரிட்டு பிரான்சில் உயிர்துறந்தார். அவருடைய இறப்புக்குப்பின் அவருடைய சகோதரி ஈதெல் அவர் எழுதி வைத்திருந்த சுயசரிதைக் குறிப்புகளை முழுமையாக அழித்து தங்கள் இளமைப்பருவத்தைப் பற்றிய நினைவுகளை நூலாக எழுதினார். பின்னாளில் ஆய்வாளர்கள் அது பெரும்பாலும் கற்பனை என நிராகரித்தார்கள்.
அன்றைய பிரிட்டிஷ் கனவான் என்னும் தோற்றமே எழுத்தாளர்களுக்கு இரும்புச்சட்டையாக ஆகிவிட்டதா? அவர்கள் உணர்வுரீதியாக அத்துமீறவும் ஆன்மிகமாக பித்துகொள்ளவும் அது தடையாக ஆனதா? கனவான் அல்லாமல் இருந்தமையால் ஸக்கி மேலெழுந்தாரா? பெண்கள் என்பதனால், சீமாட்டிகளாக இல்லாமலிருந்தமையால் மேரிகள் தங்களுக்கு அப்பால் செல்ல முடிந்ததா? அவர்கள் ஒடுக்கப்பட்டமையே பெருவழிகளிலிருந்து அவர்களை விலக்கியது. வெறுக்கப்பட்டமையே அழியாதவற்றை நோக்கி அவர்களைச் செலுத்தியது.
ஹைகேட் சிமித்தேரி லண்டனுக்கு வடக்கே உள்ளது. 1839ல் இன்றைய வடிவில் அமைக்கப்பட்டது. அன்று லண்டனின் இறப்பு மிகுந்தபடியே வந்தமையால் ஏழு பெரிய செமித்தேரிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று இது. Magnificent Seven என இவை அழைக்கப்படுகின்றன. புனித ஜேம்ஸுக்குரியது இது.பதினைந்து ஏக்கர் பரப்பு கொண்டது. அடர்ந்த புதர்களும் நிழல்மரங்களும் கொண்ட காடு இது. நாங்கள் சென்றிருந்தபோது எவருமே இல்லை. இறந்தோரின் நினைவிடங்களின் நடுவே எவரென்று அறியாமல் வெற்று எழுத்துக்களென பெயர் தாங்கி நின்றிருந்த நடுகற்களின் நடுவே நடந்தோம்.
எப்போதும் சிமித்தேரிகள் எழுப்பும் விந்தையானதோர் உணர்வை அவ்விடம் அளித்தது. வாழ்க்கை அங்கே இல்லை, ஆனால் ஒருவர் அங்கே நுழைகையில் நினைவுகளினூடாக ஒரு வாழ்க்கை உருகாகி அலைகொள்ளத் தொடங்குகிறது. நடுகற்கள். நீருக்குள் உடல் மறைத்து நுனிவாலை மட்டும் வெளியே காட்டிக்கொண்டிருக்கும் ராட்சத விலங்குபோல இறந்தவர்கள் இறப்புலகில் வாழ்ந்தபடி தங்கள் ஒரு சிறுபகுதியை மட்டும் இவ்வுலகுக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். நினைவுப்பலகைகளில் சீமாட்டிகள், வீரர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள். கணிசமானவை பிரிட்டிஷ் பெயர்கள் அல்ல என்னும் எண்ணம் எழுந்தது.நிறைய ருஷ்ய, ஜெர்மானியப்பெயர்கள் கண்ணில்பட்டன.
ஹைகேட் சிமித்தேரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் முதன்மையான ஆளுமையாக அறியப்பட்டிருப்பவர் கார்ல் மார்க்ஸ். இருபதாம்நூற்றாண்டின் மிகப்பெரிய மதத்தின் நிறுவனர் என்பதனால் ஒவ்வொருநாளும் இங்கே மார்க்ஸியர்கள் வந்து மலர்வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மற்றவர்கள் அவர்களின் நினைவுநாளில் மட்டுமே எண்ணப்படுகிறார்கள். மைக்கேல் ஃபாரடேயின் கல்லறை இங்குதான் உள்ளது. புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளரான டக்ளஸ் ஆடம்ஸ் [சுஜாதாவின் கணிசமான கதைகளின் மூல ஊற்று] இங்குதான் மண்ணிலிருக்கிறார்.
இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள முக்கியமானவர்களின் பட்டியலை பார்த்தபோது எங்கும் ஜார்ஜ் எலியட்டின் பெயரைக் காணமுடியவில்லை. ஆனால் அங்கே சென்றபோது பெரிதாகத் தேடாமலேயே அதைக் கண்டடையமுடிந்தது. கார்ல் மார்க்ஸ் சமாதிக்குச் சென்றபின் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் பெயரைக் கண்டேன். மலர்வைக்கும் எண்ணம் ஏதும் இருக்கவில்லை என்பதனால் கையில் ஏதுமில்லை. அங்கேயே ஒரு காட்டு மலரைப் பறித்து அவர் கல்லறைமேல் வைத்து வணங்கிவிட்டு வந்தேன்.
திரும்பும்போது மீண்டும் ஓர் எண்ணம் எழுந்தது. மலையாளத்தில் தெம்மாடிக்குழி என ஒரு சொல் உண்டு. கத்தோலிக்க தேவாலயத்தால் முறையான நல்லடக்கம் மறுக்கப்படுபவர்களுக்குரியது இது. தேவாலய வளாகத்திலோ அல்லது குடும்பத்தவரின் நிலத்திலோ எந்த சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்படுபவர்களின் கல்லறை. ஹைகேட் சிமித்தேரி லண்டனின் தெம்மாடிக்குழிகளின் இடம். ஐரோப்பாவின் தெம்மாடிக்குழிகளில் இருந்துதான் புதிய யுகம் பிறந்து வந்தது என்று தோன்றியது,