தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க
கூப்பிடுதூரத்துத் தெய்வங்கள்.
அன்புள்ள ஜெ
யட்சி பற்றி படிக்கும்போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வராமல் இல்லை.
பாலகுமாரன் ஒருமுறை மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் வரலாற்றை மிகுந்த வர்ண்ணனையோடு எழுதியிருந்தார். அவள் ஊரின் காவல் தெய்வம் நாம் அனைவரும் மயிலாப்பூரில் முதலில் வணங்கவேண்டியது அவளைத்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
அன்று இரவு கனவு வந்தது, அம்மன் சன்னல் வழியாக என் அறைக்குள் நுழைந்தது போல். மறுநாள் காய்ச்சல் வேறு. அடுத்த சனிக்கிழமையே மயிலாப்பூர் ஓடினேன், முண்டாக்கண்ணியை தரிசித்துவிட்டுத்தான் திரும்பினேன். மனதில் அவ்வளவு நிம்மதி.
திருமணம் ஆனதும் மனைவியிடமும் இதை சொல்லி அவளையும் அழைத்துச்சென்றேன்.
எங்கெங்கு காணினும் சக்தியே..
பதிவுக்கு நன்றி
அன்புடன்
பகவதி
அன்புள்ள ஜெ
கூப்பிடுதூரத்து தெய்வங்கள் வாசித்தேன். ஏற்கனவே இக்கதைகளை ஜன்னல் இதழில் வாசித்திருந்தேன். மீண்டும் நூலை அமேசானில் தரவிறக்கியும் வாசித்தேன். என்னைப்பொறுத்தவரை இந்த புத்தகம் நானே என்னை மறுகண்டுபிடிப்பு செய்த நூல். எனக்கு சின்ன வயதுமுதலே நாட்டுப்புறத்தெய்வங்கள் குலதெய்வங்களைப்பற்றி இகழ்ச்சியான அபிப்பிராயம்தான். அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று ஒற்றைவரியில் எனக்குக் கற்பிக்கப்பட்டது. அப்படிக் கற்பித்தவர்கள் வெளிநாட்டு மதநம்பிக்கைகளை அதைவிட மூர்க்கமாக நம்பியவர்கள். இன்னும் சொல்லப்போனால் மாடனையும் முத்தாலம்மனையும் விரட்டிவிட்டால்தான் சிலுவையை கையில் தரமுடியும் என்று நினைத்தவர்கள். அவர்களின் கையாட்களாகச் செயல்பட்டவர்கள் பகுத்தறிவாளர்கள். அவர்கள் நினைத்தது 90 சதவீதம் நடந்தது. என் குடும்பத்தில் பாதிக்கும் மேலானவர்கள் இன்றைக்கு கிறித்தவர்கள். பலர் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள். எங்கே பார்த்தாலும் பிசாசு சாத்தான் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மாடசாமியும் முத்தாலம்மனும் மூடநம்பிக்கைகள் என்பார்கள்.
நான் என்னுடைய குலதெய்வ வழிபாட்டையும் என் முப்பாட்டன் தெய்வங்களையும் இன்றைய நவீன பார்வையில் புரிந்துகொள்வதற்கு உதவியது இந்த ஒரு புத்தகம்தான். எனக்கு உங்கள்மேல் நிறைய கருத்துவேறுபாடுண்டு. நான் பிறப்பால் திமுக காரன். இன்றைக்கு நான் தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன் ஆனாலும் இந்த நூலுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கைக்கொண்டவர்கள், இந்த மண் மேல் பெருமிதம் கொண்டவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது
எஸ்.ராஜேந்திரன்