நடையின் எளிமை

sujatha

அன்புள்ள ஜெ..

சிறுகதை எழுதுவது குறித்து அவ்வப்போது சுஜாதா டிப்ஸ் கொடுப்பார்… எளிமையாக எழுதுங்கள் என்பது அவரது முக்கியமான அறிவுரை… -எண்ணியவண்ணமே நடந்தது.. நல்கினான்… என்றெல்லாம் எழுதாமல் நினைத்தபடி நடந்தது கொடுத்தான் என எழுதுஙகள் என்பார்…

மிகப்பெரிய ஒரு ரகசியத்தை தெரிந்து கொண்டது போல இருந்தது.. எளிய எழுத்து என்பது எங்களுக்கெல்லாம் தாரக மந்திரம் ஆயிற்று… கடினமான மொழியில் எழுதும் இலக்கியவாதிகளின் எழுத்து கேலிக்குரியதாக தோன்றியது…

ஆனால் போக போக புதிய சொற்களின் தேவை புரிந்தது.. அருந்து பருகு மண்டு மாந்து என்ற அனைத்து சொற்களுமே குடிப்பது என்பதை சுட்டினாலும் நுட்பமான வேறுபாடுகள் உண்டு.. ஆனால் நாம் பயன்படுத்துவது குடிப்பது என்ற சொல்லை மட்டுமே.. காரணம் மற்ற சொற்கள் புரியாது…

ஆனால் ஆங்கிலத்தில் அப்படி இல்லை.. புரிகிறது புரியவில்லை என்பதைப் பற்றி கவலைப்படாமல் துல்லியமாக மட்டுமே எழுதுகிறார்கள்.. புரியவில்லை என்றால் நாம்தான் அகராதியை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்…

ஆனால் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக எளிய ஆங்கில வடிவில் சில சொற்களை மட்டுமே பயன்படுத்தி சில நாவல்களை மறு ஆக்கம் செய்கிறார்கள்.. பள்ளிமாணவர்களுக்கு இது பயன்படும்

அப்படி பார்த்தால் வெகு ஜன தமிழ் எழுத்து என்பது பள்ளி மாணவர்களுக்கான தமிழ் என்ற அளவில்தான் செயல்படுகிறது… சில நூறு வார்த்தைகளுக்குள்தான் நம் தகவல் தொடர்பு நடக்கிறது.. பத்தாண்டுகளுக்கு முன் இருந்த வார்த்தைகள் இன்று இருப்பதில்லை

தமிழ் உயிர்ப்புடன் இருப்பது இலககியத்தில் மட்டும்தான்.. தமிழை காப்பாற்ற வேண்டும் என்பது இலக்கியவாதிகளின் இலக்காக இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அவர்களது வாசிப்பு ஒரு விஷயத்தை சரியாக சொல்ல வேண்டிய அக்கறை ஆகியவற்றால் பல்வேறு தமிழ் சொற்களை ( வெகு ஜன பயன்பாட்டில இல்லாதவற்றை ) பயன்படுத்துகிறார்கள்.. தமிழ் சொல் வளத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு உங்கள எழுத்துகளை படிப்பவர்களை அறிவேன்

ஆனால் வெகுஜன எழுத்தில் தமிழ் சில நூறுசொற்களுக்குள் சுருஙகி இருக்கிறது…தெரிந்தோ தெரியாமலோ இதற்கு சுஜாதாதான் காரணமோ என்று தோன்றுகிறது

அன்புடன்
பிச்சைக்காரன்

pupi

அன்புள்ள பிச்சைக்காரன்,

சிற்றிதழ்சார்ந்த இலக்கியச் சூழலில் மிகவிரிவாக முன்னரே பேசப்பட்டுவிட்ட விஷயம்தான் இது. இதை அடுத்தடுத்த தலைமுறையினருக்காக மீண்டும் மீண்டும் பேசவேண்டியிருக்கிறது என நினைக்கிறேன்.

இலக்கியத்தின் விரிவையும் அதன் சாத்தியங்களையும் அறியாத புதியவாசகன் இயல்பாக நான்கு முன்முடிவுகளைக் கொண்டு உள்ளே நுழைகிறான். வெளியே உள்ள இலக்கியமல்லாத வாசிப்புகளில் இருந்து அவன் அடைபவை அவை. அவற்றை எளிமை, நேரடித்தன்மை, உலகியல்தன்மை, பரபரப்பு என்னும் இயல்புகளாக வரையறைசெய்துகொள்ளலாம். இலக்கியம் இந்நான்குக்கும் அப்பாற்பட்டது

இலக்கியம் வாசிக்கப்புகும் ஆரம்ப வாசகன் செய்திகள், வணிக இலக்கியம், சினிமா ஆகியவற்றினூடாகவே அங்கே வந்துசேர்கிறான். செய்திகள் எப்போதுமே எளிமையான நேரடி மொழியில் அமைந்தவை. அங்கே பொருள்மயக்கங்களுக்கு இடமில்லை. தெளிவாக அமையும்தோறும் செய்திமொழி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆகவே குறைந்த அளவுக்குச் சொற்களில் நேரடியான சிறிய சொற்றொடர்களை அமைப்பதே அங்கே தேவையானது. அவ்வாறான ஒரு பொதுநடை ஒரு சூழலில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருக்கும்

இலக்கியம் என்பது செய்திகளால் உருவாக்கப்படும் அந்தப் பொதுநடைக்கு எதிரான ஒன்றாகவே இருக்கமுடியும். ஏனென்றால் அந்தப் பொதுநடையால் சொல்லப்படமுடியாதவற்றைச் சொல்வதே இலக்கியத்தின் முதன்மை நோக்கம். பொதுப்பார்வையால் மறைக்கப்படுவனவற்றை நோக்கியே எப்போதும் இலக்கியம் செல்கிறது. ஆகவே எந்த அளவுக்குச் செய்திநடையில் இருந்து விலகுகிறதோ அந்த அளவுக்கு இலக்கியநடை அழகும் செறிவும் கொள்கிறது. இலக்கியவாதியை அளக்கும் அளவுகோலே அவன் நடை பொதுநடையிலிருந்து எந்த அளவுக்கு வேறுபடுகிறது என்பதுதான்

பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் வழிமுறைகளில் முதன்மையானது. ஒன்றைச் சொல்லி இன்னொன்றை வாசகன் ஊகிக்க விடுவதே அதன் வழிமுறை. எந்த அளவுக்கு பொருள்மயக்கம் கொள்கிறதோ அந்த அளவுக்கு இலக்கியநடை ஆழமானதாக ஆகிறது. நவீன இலக்கிய விமர்சனம் இதை பன்முகப்பொருள்கொள்ளும்தன்மை என வரையறை செய்யும். அவ்வகையிலும் அது செய்திநடைக்கு நேர் எதிரானதாகவே இருக்கமுடியும்

சுருக்கம் என்பது செய்திக்குரிய அடிப்படை இயல்பு. அக்காரணத்தாலேயே அது இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியத்தின் அடிப்படை நோக்கமே . விரித்துரைப்பதுதான். சொல்லப்படாதனவற்றை, உணரப்படவேண்டியவற்றை நோக்கிச் செல்வதே இலக்கியம். விரித்து விரித்து உரைத்து அதற்கும் அப்பால் சிலவற்றை குறிப்புணர்த்தி அமைவதே அதன் வழி. உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகளை வாசித்தவர்கள் விரிவு என்பது ஓர் அடிப்படை இலக்கியக்குணம் என உணரமுடியும். ஆகவே செய்தியின் சுருக்கத்தை இலக்கியத்தில் எதிர்பார்ப்பதென்பது இலக்கியத்தை நிராகரிப்பதேயாகும்

செய்தி அவசர வாசிப்புக்குரியது. ஏற்கனவே அறிந்தவற்றுக்கு நீட்சியாகவே செய்திவாசகன் புதியசெய்தியை வாசிக்கிறான். அடிப்படையான தகவல்கள் தவிர எதுவும் அவன் கவனத்தில் நிலைப்பதில்லை. ஆகவே செய்திகளை தேய்வழக்குகளுடன் அமைப்பார்கள். தெரிந்த செய்திகளை கோடிகாட்டி புதியவற்றைச் சொல்வார்கள். நேர்மாறாக இலக்கியம் என்பது அதற்கென உள்ளத்தையும் பொழுதையும் அளிக்கும் வாசகனுக்குரியது. ஒன்றுக்குமேற்பட்ட வாசிப்புகளை அளிக்கும் எண்ணம் கொண்டவனுக்காக எழுதப்படுவது. அதன் எல்லா வரிகளும் முக்கியமானவை.

செய்திவாசகனே நேரடியாக வணிக எழுத்துக்குச் செல்கிறான். ஆகவே வணிக எழுத்தின் நடை பெரும்பாலும் செய்திநடையிலிருந்து உருவானதாகவே இருக்கும். எளிமை,நேரடித்தன்மை, சுருக்கம் ஆகியவை அதன் இயல்பாக இருக்கும். அதில் பழகிய வாசகன் இலக்கியப்படைப்புகளிலும் அதை எதிர்பார்ப்பான். அது இலக்கியத்திலிருந்தே அவனை விலக்கிவைக்கும் ஒரு பெரிய தடையாக ஆகிவிடும்

ஏராளமான சொற்கள் ஏன் இலக்கியத்திற்குத் தேவையாகின்றன? அது சொல்லவும் உணர்த்தவும் முயல்பவை முடிவிலாதவை என்பதனால்.ஒரு சூழலுக்கூரிய சொல் இன்னொரு சூழலுக்குப் பொருந்தாது என்பதனால். ஒர் ஒலியமைவு கொண்ட சொல்லை அதற்குரிய தருணத்தில் மட்டுமே கையாளமுடியும் என்பதனால். சொல்லிலேயே காட்சியும், ஓசையும் உள்ளது. குடித்தான் என்பது அருந்தினான் என்பதும் ஒன்றல்ல. குடிப்பதில் உள்ள வல்லின ஓசை அதை விரைவான செயலாக ஆக்குகிறது. அருந்தினான் என்னும்போதே மெல்லமெல்ல குடிக்கும் காட்சி கண்ணெதிரே எழுகிறது. இலக்கியத்திற்கு மொழியிலுள்ள மொத்தச் சொற்களும் போதாது.

அந்த தடையை உருவாக்குபவை சுஜாதா போன்றவர்களால் உருவாக்கப்பட்டு சுற்றிவரும் ஒற்றைவரிகள். ’நல்ல இலக்கியம் சுருக்கமானது’ ‘ஒருபக்கத்தில் சொல்லமுடியாததை நூறுபக்கத்திலே சொல்லமுடியாது’ ’நல்ல நடை எளிமையானதாக இருக்கும்’ என்பதுபோன்ற வரிகள் இலக்கியமென்றால் என்ன என்று அறியாதவர்களால் மட்டுமே சொல்லப்படுவன. இவ்வரிகளை ஏற்றால் உலக இலக்கியத்தின் மாபெரும்படைப்புகள் பெரும்பாலானவற்றை நாம் துறக்கவேண்டியிருக்கும் என வாசிப்பவர்கள் அறிவார்கள்.

நேரடித்தன்மை இலக்கியத்தின் இயல்பே அல்ல. நேரடியாகச் சொல்லிவிடமுடியாதனவற்றைச் சொல்லும்பொருட்டே இலக்கியம் எழுதப்படுகிறது. அதன் உத்திகள், நுட்பங்கள், அழகியல் அனைத்துமே அதன்பொருட்டு உருவாகி வந்தவைதான். ‘சொல்லவந்ததை சொல்லிவிடுவதே இலக்கியம்’ என இங்கே அவ்வப்போது அரைவேக்காட்டுக் குரல்கள் எழுவதுண்டு. இலக்கியம் சொல்லவருவதில்லை, உணர்த்தவருகிறது என்பதே அதற்கான மறுமொழி.

இதேபோன்ற இன்னொரு முன்முடிவு அன்றாட வாழ்க்கை சார்ந்ததும், நாம் அனைவரும் அறிந்ததுமான யதார்த்தத்தை இலக்கியத்தில் தேடுவது. செய்திகளில் இருந்து உருவாகி வணிக இலக்கியம் வழியாக இலக்கிய வாசிப்பில் புகும் பிழைமனநிலை இது. இலக்கியம் பேசுவது வாழ்க்கையை மட்டும் அல்ல. கனவுகளையும் இலட்சியங்களையும்கூடத்தான். மானுட மனத்தின் அச்சங்கள், ஐயங்கள், குழப்பங்கள் ஆகியவற்றையும்தான். உளத்திரிபுநிலைகள், ஆழ்ந்த சிடுக்குகள் ஆகியவையும் அதன் பேசுபொருட்களே. தத்துவம், வரலாறு, அறிவியல்,மெய்யியல் என அதன் தேடல்கள் விரிவானவை.

அன்றாட, புறவயமான , உலகியல் வாழ்க்கை என்பது இலக்கியத்தின் பேசுபொருளில் மிகச்சிறிய ஒரு பகுதி மட்டும்தான். அதை மட்டுமே நாம் அறிவோம் என்பதனால் அதை மட்டுமே வாசிக்க விரும்புவதைப்போல இலக்கியத்தை சிறுமைசெய்வது வேறில்லை. இலக்கியத்திற்கு அன்றாட யதார்த்தம் ஒரு தேவையே அல்ல.

சொல்லப்போனால் வரலாறு முழுக்க இலக்கியம் அன்றாட யதார்த்தத்துக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது. அன்றாட யதார்த்தத்தால் தொடமுடியாத இலட்சியங்களை, கனவுகளை, தரிசனங்களை முன்வைக்கவே அது முயன்றுள்ளது. என்றும் அதன் இலக்கு அதுதான். நவீன இலக்கியம் உருவானபோதுதான் அன்றாடவாழ்க்கையையும் இலக்கியத்திற்குள் சொல்லலாம் என்னும் எண்ணம் ஏற்பட்டது. அவ்வாறு சொன்ன இலக்கியவாதிகள் சிலர் உருவாகி வந்தனர். அதன் எல்லைகள் இன்று இலக்கியத்தால் உணரவும் படுகின்றன. அன்றாட வாழ்க்கை மட்டுமேயாக நின்றிருக்கும் நல்ல இலக்கியம் ஒன்று இருக்கவும் முடியாது. அதன் ஒருமுனை அதை மீறிச்சென்றாலொழிய அதற்கு இலக்கியமதிப்பு இல்லை

வணிக எழுத்தில் பழகிய உள்ளங்கள் இலக்கியத்தில் பரபரப்பை, அடுத்தது என்ன எனும் வாசிப்பு விசையை எதிர்பார்க்கும். இலக்கியத்தில் அது இன்றியமையாதது அல்ல. ஏனென்றால் ஒற்றைக் கதையோட்டத்தையும் , எளிமையான கதைமாந்தரையும், நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியையும் உருவாக்கினால் மட்டுமே வாசிப்புவிசை இயல்வதாகும். ஒவ்வொன்றையும் விரிவாக்கிக் கொண்டு செல்லும் இலக்கியத்தின் போக்குக்கு எதிரானது அது. வணிக சினிமா, வணிக புனைவு ஆகியவற்றிலிருந்து பெற்ற அம்முன்முடிவை துறக்காமல் இலக்கியவாசிப்புக்குள் நுழைய முடியாது

இலக்கியம் வாசிப்புவிசை கொண்டிருக்கக் கூடாதென்றில்லை. பல படைப்புகள் அவ்விசை அமைந்தவையே. அதுவும் அவை கொள்ளும் புனைவு உத்தியே. இன்னொன்றை நாம் கவனிக்கலாம். ஓர் இலக்கியப் புனைவுடன் வாசகனாக நாம் உரையாட ஆரம்பித்துவிட்டால் அது நம்மை இழுத்துச்செல்கிறது. எந்தப் பரபரப்பு புனைவை விடவும் அது வாசிப்புவிசை கொண்டதாக உள்ளது

அவ்வப்போது இலக்கிய மதிப்புரைகளில் வரும் வரிகள் நம்மை திசைதிருப்புபவை. ‘ஆற்றொழுக்கான நடை’ ‘ சொல்லவந்ததை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்’ ’பாமரருக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார்’ ’நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது இந்தப்படைப்பு’. இவை இலக்கியப்படைப்பின் இயல்புகளே அல்ல

அதேபோல இங்கே சிறந்த நடை என பாராட்டப்படுபவை பெரும்பாலும் செய்திநடையில் இருந்து உருவான எளிய அன்றாடமொழியால் ஆனவையே. எளிதாக வாசிக்க வைப்பவை என்பதனாலேயே நல்ல நடை என அவை கொண்டாடப்படுகின்றன. நல்ல நடை என்பது எந்த கருத்தையும் கூர்மையாகச் சொல்வதும், எந்த உளநிலையையும் எழுதிக்காட்டிவிடக்கூடியதும், எந்த காட்சியையும் கண்முன் விரித்துவிடும் தகைமை கொண்டதும், எந்தச் சிடுக்கான தருணத்தையும் சந்திக்கும் தன்மைகொண்டதும், எல்லா தருணங்களுக்கும் ஏற்ப தன்னை உருமாற்றிக்கொள்ளக்கூடியதும் ஆகும். தர்க்கம் நடையின் ஓர் அம்சம் மட்டுமே. தர்க்கத்தை திகைக்க வைப்பதும்,அர்த்தமின்மை வரைச் செல்லும் சொற்சிடுக்கும் இலக்கியநடையின் இயல்புகளே.

சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன். மகாமசானம் கதையின் எள்ளல் கொண்ட நடைக்கும் கபாடபுரத்தின் கனவுநடைக்கும் அன்றிரவின் செவ்வியல்நடைக்கும் அவருடைய தமிழ் வளைகிறது. அவரே நம் முன்னுதாரணம்.

ஜெ