பாபு நந்தன்கோடு

இணையத்தில் பழைய மலையாளப்பாட்டுகளுக்காக தேடிக்கொண்டிருந்தபோது நினைவில் மறைந்த ஒரு பாடலை கேட்டேன், இல்லை கண்டேன். ஸ்வப்னம் படத்துக்காக சலீல் சௌதிரி இசையமைத்து வாணி ஜெயராம்பாடிய பாடல். கறுப்புவெள்ளை சித்தரிப்பு. நந்திதா போஸ் என் இளமையில் நினைவில் இருந்த முகம். வங்க புதிய அலைப் படங்களின் நாயகி. அக்காலத்தில் நல்ல இயக்குநர்கள் பலருக்கும் அவர்தான் பிரிய முகம்..

பாடலின் தொடக்கமே சட்டென்று வசீகரித்தது. நந்திதா மிக இயல்பாக பாடுகிறார். கைகளின் அசைவில் அவருடைய இனிய பதற்றம் தெரிகிறது. உடலசைவில் இயல்பாக வந்துகூடும் தாளம். இப்படி ஒரு இயல்பான சித்தரிப்பை 1972ல் நாம் எதிர்பார்க்கவே முடியாது. நான் எழுபதுகளின் பாடல்களாக பார்த்துக்கொண்டு வந்தமையால் அந்த வேறுபாடு முகத்திலறைந்தது.

பாடல் முன்னகர முன்னகர ஆச்சரியம். நந்திதா மேடையில் பாடுவதில் இருந்து அவருடைய அந்தரங்க கனவுக்குள் போகிறது சித்தரிப்பு. அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் இரு அண்மைக்காட்சி வெட்டுகள். அதன்பின் அந்த ஆலமரம் சர்ரியலிஸ பாணியில் மிகுஅண்மைக் காட்சியில் அபாரமாக திரும்புகிறது நிழலும் இருளுமாக. கனவேதான். பாடல் முழுக்க அவர் அலையும் கன்வுச்சித்தரிப்புகளில் கோணங்களும் காமிரா நகர்வுகளும் வெட்டுகளும் மிக தேர்ந்த ஒரு இயக்குநரை எனக்குக் காட்டின.

சௌரயூதத்தில் விடர்ந்த ஒரு
கல்யாண சௌகந்திகமாணு ஈ பூமி- அதில்
சௌவர்ண பராகமாணு ஓமலே நீ – அதில்
சௌரஃபமாணென்றே ஸ்வப்னம்

[பால்வீதியில் விரிந்த ஒரு கல்யாணாசௌகந்திக மலர் இந்த பூமி. அதில் ஒரு வண்ணத்துப்பூச்சி நீ அன்பே. அதன் நறுமணம் என் கனவு…]

மூன்று வருடம் முன்பு, பாலாவுடன் அறிமுகமாவதற்கு முன்பு, இந்த பாடலை பார்த்திருந்தால் கவரப்பட்டிருப்பேன், ஆனால் ஏனென்று தெரிந்திருக்காது. இன்று எனக்கு திரைமொழியை கூர்ந்து கவனிக்கும் கண் உண்டு. அதனாலேயே திரைப்படம் பற்றி போகிறபோக்கில் கருத்து தெரிவிக்க அஞ்சுகிறேன். எந்தப்படமாக இருந்தாலும் அது தோல்வியடைவதை நான் விரும்பவில்லை. திரைப்படம் ஒவ்வொரு அணுவிலும் குருதி சிந்தி எடுக்கப்படுகிறது. குறிப்பாக சிறிய தனிநபர் முயற்சிகள். இந்தப்பாடலின் திரைமொழி என்னை வியக்கச்செய்தது.

இந்தப்பாடலின் திரைமொழி இன்றுகூட தமிழிலோ மலையாளத்திலோ சாதாரணமல்ல. மிக முதிர்ச்சியான, மிக நுட்பமான கலைஞனால் உருவாக்கப்பட்டது. இசைக்க்கேற்ப இதன் அத்தனை அசைவுகளும் காமிரா நகர்வுகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. காட்சிக்குள் என்ன வரவேண்டும், அதன் உளவிளைவு என்ன என்பதை நன்கறிந்த, தன்னம்பிக்கை மிக்க இயக்குநர்.

இன்று காட்சியமைப்புகளின் ஒருமையை நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். சிலரைத்தவிர பிறர் பாடல்காட்சிகளை தூண்டுதுண்டாக அவ்வப்போது தோன்றியதுபோலத்தான் எடுக்கிறார்கள். படத்தொகுப்பாளர்தான் பாடலின் காட்சிக்கோர்வைதை தீர்மானிக்கிறார். இந்தப்பாடலின் காட்சிவடிவம் இயக்குநரால் முழுமையாக திட்டமிடப்பட்டிருக்கிறது.

உதாரணமாக மேடையில் பாடும் பெண் கண்மூடினால் அவள் மட்டும் காணும் அகக்காட்சியாக அவளில்லாமல் நிலம் மட்டும் நீள்கிறது. பின் அதற்குள் அவள் செல்கிறாள். பாடலின் வரியின் பொருளுக்கு இயக்குநர் அளிக்கும் காட்சி விளக்கம் அது.

ஒவ்வொருமுறையும் ஒரு மரமோ செடிகளோ காமிராமுன் எழுந்து நிற்க அதற்கு அப்பால்தான் அவளை அவள் காண்கிறாள். சாதாரணமாக கண்ணால் காணும் கோணத்தில் அவள் இல்லை. மரம் அல்லது செடிகளுக்கு பின்னால் நாம் நின்றுகொண்டு அவளைப்பார்ப்பதுபோன்று காட்சி அமைக்கபப்ட்டிருக்கிறது. பார்ப்பதும் அவள்தான் என்பதனால்.

எத்தனை சொல்ல இருக்கிறது. இன்று கூட பாடலைக் கேட்கும் கும்பலை திரையில் காட்டினால் பாதிப்பேர் ஈடுபாடே இல்லாமல் செயற்கையாக இருப்பார்கள். சிலர் மிகையாக நடிப்பார்கள். இந்தப்பாடலில் கூட்டத்தின் கண்கள் பாடலில் மயங்கி தெரிகின்றன. நிலக்காட்சி விரியும்போது காமிராவை தோளில் தூக்கிக்கொண்டு சென்று எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிர்வே இல்லை.

யார் இயக்கியபடம் ? இந்தப்பாடலை நான் திரைப்படத்தில் கண்டிருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கையில் குழித்துறைக்கு நானும் ராதாகிருஷ்ணனும் தப்பிச்சென்று பார்த்தோம்.நாங்கள் பார்க்கச்சென்ற படம் நீக்கப்பட்டு வியாழக்கிழமைக்காக மட்டும் இந்தப்படம் போடப்பட்டது. ராதாகிருஷ்ணன் வசைபாடி கொண்டே இருந்தான். கரும்பு வாங்கி மென்று துப்பியபடி நாங்கள் அதை கிண்டல்செய்தபடியே பார்த்தோம். ஒரு இருபது பேர். இடைவேளைக்குப்பின் பத்துபேர்.

படம் எனக்கும் பிடிக்கவில்லை. மொத்தத்தில் என்ன ஏது என்று புரியவே இல்லை. அக்கால கதாநாயகர்களில் ஒருவராகிய சுதீர் நடித்திருந்தார். சுதீரை எங்களுக்கு பிடிக்கும் . ஆண்மையானவர். ஆனால் இந்தப்படத்தில் அவர் சண்டையே போடவில்லை. ஆனாலும் என் மன ஆழத்தில் எங்கோ படம் பதிந்திருக்கிறது. இல்லையேல் இத்தனை காலம் கழித்தும் மூளை மின்னியிருக்காது.

இணையத்தில் தேடினேன். படத்தை இயக்கியவர் பாபு நந்தன்கோடு. நள்ளிரவில் ஒருவகையான படபடப்பு எனக்கேற்பட்டது. அதற்கொரு காரணம் உண்டு. நான் அவரைப்பற்றி தேடினேன். தமிழில் இணையத்தில் அவரைப்பற்றி எதுவுமே இல்லை. மலையாளத்தில் கூட அனேகமாக எதுவுமே இல்லை என்பது ஆச்சரியம். பல கோணங்களில் தேடி சில அடிப்படை தகவல்களை தேடி எடுத்தேன்.

ஸ்வப்னம் என்ற இந்தப்படம் பாபு நந்தங்கோடு இயக்கி 1973ல் வெளியாகியது. மது,சுதீர், திக்குறிச்சி சுகுமாரன் நாயர், நந்திதா போஸ் நடித்தது. சலீல் சௌதுரி அவரது மிகச்சிறந்த ஐந்து பாடல்களை இந்தப்படத்துக்காக போட்டிருக்கிறார். இன்றும் அவை மலையாள மெல்லிசையின் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன. ஓ.என்.வி.குறுப்பு பாடல்களை எழுதியிருக்கிறார் -பாலமுரளி என்ற பேரில்.

மலையாள இலக்கிய உலகின் முன்னோடியான பெரும்படைப்பாளி பி.கேசவதேவ். அவரது ஸ்வப்னம் என்ற நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம் இது. ஓடயில்நிந்நு, ரௌடி போன்ற பல புகழ்பெற்ற நாவல்கள் முன்னரே திரைப்படமாகியுள்ளன. இவரது சிறந்த நாவலான அண்டை வீட்டார்[அயல்கார்] தமிழில் வெளிவந்துள்ளது. என்னுடைய ‘கண்ணீரை பின் தொடர்தல்’ நூலில் நான் அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

1

சரிதா ஃபிலிம்ஸ் தயாரிப்பு. இப்போது ஒரு சிறு ஆர்வமூட்டும் தகவல் சேர்ந்துகொண்டது. இதன் தயாரிப்பாளர் சிவன். சிவன் புகழ்பெற்ற புகைப்பட நிபுணர். பல சர்வதேச விருதுக்களை பெற்றவர். ஃபிலிம் டிவிஷனுக்காக இருபதுக்கும் மேற்பட்ட ஆவணபப்டங்களையும் குறும்படங்களையும் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்த முதல் படம் ஸ்வப்னம்.

சிவன் ஸ்வப்னத்தின் வெற்றியால் உந்தப்பட்டு மேலும் இரு படங்களை தயாரித்து அவரே இயக்கினார். அவரது அடுத்தபடம் 1980ல் வெளிவந்த யாகம். கெ.எஸ்.நம்பூதிரி எழுதி சிவன் இயக்கிய இந்தப்படத்தில் பாபு நந்தங்கோடு நடித்திருந்தார். 1991ல் அபயம் என்ற படத்தை சிவன் இயக்கினார். சிவனின் மைந்தர்கள் இன்று திரைத்துறையில் முக்கியமானவர்கள். சந்தோஷ் சிவன், சங்கீத் சிவன் இருவரும். அபயம் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளர்.

ஸ்வப்னம் படத்துக்கு திரைக்கதையை அன்றைய பிரபல திரை எழுத்தாளரும் நாடக் ஆசிரியருமான தோப்பில் பாசி எழுதியிருந்தார். ஒளிப்பதிவு யார்? ஆவலுடன் பார்த்தபோது நிறைவாக இருந்தது. நான் ஊகித்தது சரிதான், அசோக்குமார்.

பாபு நந்தன்கோடு பூனா திரைப்பள்ளி மாணவர் என்று தெரிகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள நந்தன்கோடு பகுதியில் பிறந்தவர். மலையாள திரையுலகில் ஓர் திரைக்கதையாசிரியராகவே பாபு நுழைந்திருக்கிறார். 1970ல் என் சங்கரன்நாயர் இயக்கிய மதுவிது என்ற படத்துக்கு அவர் கதை,திரைக்கதை எழுதியிருக்கிறார். அதுவே அவரது திரைப்பட நுழைவு என்று தோன்றுகிறது.

1972ல் அவர் எடுத்த முதல் திரைப்படம் ‘தாகம்’. இதை அவர் ஏனோ தமிழில் எடுத்தார். முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், நந்திதா போஸ் நடித்த இந்த திரைப்படம் தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படுகிறது. இது திரையரங்குகளில் வெளியானதா என்று தெரியவில்லை. இன்றும் அடையாறு திரைப்பட கல்லூரியில் மாணவர்களுக்கு பாடமாக காட்டப்படும் படங்களில் ஒன்று. தாகம் படத்தில் பாபு நந்தன்கோடுக்கு உதவி இயக்குநராக பாரதிராஜா பணியாற்றினார் என்கிறார்கள்.

தாகம் திரைப்பள்ளி மாணவர்கள் பலர் பங்களிப்பாற்றி எடுத்தபடம் என்று சொல்லப்படுகிறது. 1972ல் எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரனும் சிவாஜியின் வசந்தமாளிகையும் மாபெரும் வெற்றிப்படங்களாக வந்து தமிழகத்தைக் கலக்கின. எம்ஜிஆர் ரிக்‌ஷாக்காரனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அந்தச் சூழலில் எதை நம்பி தாகம் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஊடகங்களின் கவனத்தை கொஞ்சம்கூட தாகம் கவரவில்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றாசிரியர்களும் அதை கவனிக்கவில்லை. சிற்றிதழ்களில் சில குறிப்புகள் வந்துள்ளன அவ்வளவுதான்.

தாகம் படத்தை 1984 ல் நான் பார்த்திருக்கிறேன். அடூர் கோபாலகிருஷ்ணன் முன்பொறுப்பில் தன் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து திருவனந்தபுரத்தில் நடத்திவந்த சூரியா திரைப்படக் கழகம் அதை திரையிட்டது. ஆனால் அன்று சினிமா என் ஆர்வத்துக்குரியதாக இருக்கவில்லை. நான் அதை மேலோட்டமாகவே பார்த்தேன். சிலகாட்சிகள் நினைவில் நிழலாடுகின்றன, அவ்வளவுதான். திரைப்படங்களைப்பற்றி எழுதித்தள்ளும் நம் விமர்சகர்கள் எவரும் பாபு நந்தங்கோடு பற்றியோ தாகம் பற்றியோ ஏதும் எழுதியதாக தெரியவில்லை.

பாபு நந்தங்கோடு மலையாளத்தில் அடுத்த வருடமே ’ஸ்வப்னம்’ எடுத்து பரபரப்பாக பேசப்பட்டார். இந்தப்படம் ஒரு குறிப்பிடத்தக்க வணிக வெற்றியும்கூட. அதற்கு பாடல்கள்தான் காரணம் என்று சிலர் சொல்வதுண்டு. காரணம் அன்றைய மலையாள திரை ரசிகனின் ரசனையின் தலைக்குமேலே சென்ற படம் அது. காட்சியமைப்புகளிலும் திரைக்கதையிலும் பலவகையான புதிய பாய்ச்சல்கள் சோதனைசெய்யப்பட்டிருந்தன.

பாபு நந்தன்கோடின் அடுத்தபடம் 1974ல் வெளிவந்த யௌவனம். அது பரிதாபகரமான தோல்வி அடைந்தது. கரு அளவிலும் செய்நேர்த்தி அளவிலும் அது துணிச்சலான படம் என்று விமர்சகர்கள் இன்று சொல்கிறார்கள். யௌவனம் திரையரங்கை விட்டு வெளியேறிய வேகம் பாபு நந்தன்கோட்டை யோசிக்கச் செய்திருக்க வேண்டும். ஒரு முக்கியமான வழியை அவர் சோதனை செய்து பார்த்தார். பிரெஞ்சு புதிய அலை படங்கள் கண்டுபிடித்த வழி. யதார்த்தமான கதை, மென்மையான நடிப்பு, புத்தம்புதிய காட்சிமொழியுடன் காமத்தையும் கலந்துகொள்வது! 1975ல் வெளிவந்த ’பார்ய இல்லாத ராத்ரி’ அத்தகைய படம்

ஆனால் அதுவும் தோல்வி அடைந்தது. காரணம், அன்று திரை ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். குடும்பங்களாக படம் பார்க்க வரக்கூடியவர்கள்தான் அதிகம். அவர்கள் அந்தப்படத்தை பயந்து ஒதுக்கினார்கள். ஆனால் பாபு நந்தன்கோட்டின் வழியை அவரைத் தொடர்ந்து வந்த மலையாள யதார்த்த சினிமா முன்னோடிகள் கண்டுகொண்டார்கள். பரதன், பத்மராஜன், ஐ.வி.சசி போன்றவர்கள் காமத்தை அழகாக காட்டும் புதிய அலைப்படங்கள் மூலம் மலையாள சினிமாவை தலைகீழாக மாற்றிக்காட்டினார்கள்.

பாபு நந்தன்கோடு மீண்டும் தன் பழைய பாணிக்குச் சென்று அடுத்த படத்தை எடுத்தார். ’சத்யத்திண்டே நிழலில்’. சுதீருக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது பெற்றுத்தந்தது அந்தப்படம். ஆனால் வணிக ரீதியாக தோல்வி.

1976ல் பாபு நந்தன்கோடு இயக்கிய மான்ச வீண அவருடைய மிகச்சிறந்த படம். ஸ்வப்னம் படத்தின் தளத்தைச் சேர்ந்தது. அதுவும் வணிக வெற்றி பெறவில்லை. கடைசியாக 1977ல் மீண்டும் ஒரு அகத்துறை படம் ‘காமபர்வம். அதுவும் தோல்வி. அதன்பின் பாபு நந்தன்கோடு திரையுலகில் நீடிக்க முடியவில்லை. திரையுலகில் இருந்து விலகினாலும் தொடர்ந்து முயன்றுகொண்டேதான் இருந்தார். 1980ல் சிவனின் படத்தில் நடிகராக வந்ததே அவரது கடைசி திரைத்தொடர்பு என நினைக்கிறேன்.

என் அக்கால நாயகராகிய சுதீரை நான் 1986ல் காசர்கோட்டில் வேலைபார்க்கையில் கஃபீயா ஓட்டலில் பார்த்தேன். அவர் என்றே தெரியவில்லை. அப்துல் காதர் என்பது அவரது பெயர். எழுபதுகளின் சூப்பர் ஸ்டார் அந்தபெயரையும் பட்டத்தையும் அடையாளத்தையும் துறந்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். 2004ல் இறந்தார்.

பாபுவின் தோல்வி முன்னோடியின் தோல்வி. அவர் அக்காலகட்டத்திற்கு கொஞ்சம் முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். மலையாளத்தில் அன்று இருந்த படங்கள் இலக்கியத்தை அப்படியே திரைவடிவுக்குள் கொண்டு வரக்கூடியவை. நாடகத்தன்மை மிக்கவை. பெரும்பாலும் தோப்பில்பாசி, கெ.தாமோதரன் போன்ற நாடக ஆசிரியர்களால் திரைக்கதை எழுதப்பட்டவை. பாபு நந்தன்கோடு காட்சிகள்மூலம் கதை சொல்ல முயன்றார். நாடக உச்சங்களை தவிர்த்தார். சினிமாவை ஐரோப்பிய புதியஅலை சினிமாக்களை நோக்கிக் கொண்டுசெல்ல முயன்றார்.

அவரது குழப்பங்களும் தடுமாற்றங்களும் இதிலிருந்து வந்தவைதான். வணிகரீதியாக நின்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாபு நந்தன்கோடு அன்றைய ரசனைக்குரிய படத்தை எடுக்க முடியாமல் தவித்தார். பாபு நந்தன்கோடு பின்னர் சினிமாவில் ஈடுபடுவது அவரது நண்பர் சிவன் இயக்கிய யாகம் படத்தில் நடிகராக. அதில் அவர் பெரிதாக கவனம் பெறவில்லை. சில வருடங்களிலேயே அவர் மறக்கப்பட்டார். மலையாள திரைவரலாற்றாசிரியர்கள்கூட அவரைப்பற்றி அதிகமாகபேசியதாக தெரியவில்லை.

பாபு நந்தங்கோடு திரையில் இருக்கும்போதே 1972ல் அடூர் கோபாலகிருஷ்ணனின் சுயம்வரம் படம் வெளிவந்து மலையாளக் கலைப்பட மரபை தொடங்கி வைத்தது. அரவிந்தனின் உத்தராயணம் 1974ல் வந்ததும் அந்த அலை சர்வதேசக் கவனம் பெற ஆரம்பித்தது. இந்தக் கலைப்படங்கள் மேலைநாட்டு திரைவிழாக்கள் அளிக்கும் நிதியில் நிலைநிற்க கற்றுக்கொண்டன.

ஆனால் பாபு நந்தன்கோடு உத்தேசித்தது நடுவாந்தர சினிமா . அதை மக்கள் பார்த்தாகவேண்டும். 1975ல் பரதனின் பிரயாணம் வெளிவந்தது. 1975ல் ஐ.வி.சசியின் உத்சவம். அவை நடுவாந்தர சினிமாவின் அலையை உருவாக்கின. பாபு நந்தன்கோடு அந்த அலையை உருவாக்கி அந்த அலையாலேயே மறைக்கப்பட்டவராக ஆனார். வரலாற்றின் இயல்பான குரூரமான நகைச்சுவை.

ஆனால் வருத்தமாக இருந்தது. பாபுவின் ஒரு புகைப்படத்தைக்கூட இணையத்தில் என்னால் தேடி எடுக்க முடியவில்லை. அவரைப்பற்றி ஒரு விக்கிபீடியா பதிவுகூட இல்லை. பாபு இப்போது உயிருடன் இல்லை என ஊகிக்கிறேன். எந்த தகவலும் இல்லை. கேரள அரசின் விருதுப்பட்டியலில் அவரது பெயர் இருக்கிறது. ஸ்வப்னம் 1973ல் நான்கு விருதுகளைப் பெறிருக்கிறது. ஆனால் பாபு சிறந்த இயக்குநருக்கான விருதை பெறவேயில்லை. தேசியகவனமும் பெறவில்லை.

பாபு நந்தன்கோடின் படங்களை மீண்டும் இப்போது பார்த்துவிட்டு எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டேன். இணையத்திலேயே சில படங்கள் உள்ளன. சிலபடங்களை தேடி பெற முடியும். பாபு நந்தன்கோடு இப்படி சுவடில்லாமல் சென்றுவிட்டது என்னை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. கிட்டத்தட்ட விரபத்ரபிள்ளையை கண்டடைந்த அருணாச்சலத்தைப்போல [பின் தொடரும் நிழலின் குரல்].

அருணாச்சலம் ஏன் வீரபத்ர பிள்ளை சுவடின்றி போவதை எண்ணி நடுங்குகிறான் என்றால் அது அவனுக்கும் சாத்தியமான விதி என்பதனால்தான். கலைஞனும் இலட்சியவாதியும் கோருவது ஒன்றையே, வரலாற்றில் ஓர் இடம். அது மறுக்கப்படும்போது அவன் வாழ்ந்ததே பொருளற்றது என்று ஆகிவிடுகிறது. கலையும் இலட்சியவாதமும் பொருளற்றவை என்றாகின்றன. ஒரு கலைஞன் அவன் கலையை உருவாக்கும்போது கொள்ளும் கனவை, மன எழுச்சியை என்னால் உணர முடிகிறது.

இன்னொன்றும் உண்டு. நான் பாபு நந்தன்கோடை நேரில் பார்த்திருக்கிறேன். 1978 ல். எனக்கு அப்போது 16 வயது. ஒரு கட்டுரைப் போட்டியில் நான் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றேன். ’இருபதம்ச திட்டமும் காந்திஜியும்’ தலைப்பு என நினைக்கிறேன். பரிசை அளிக்கவேண்டிய கவர்னர் கன்யாகுமரியில் வந்து தங்கியிருந்தார். அப்போது அவசரநிலை காலகட்டம். கவர்னர் என்பவர் மாநிலத்தின் சர்வாதிகாரி.

அவர் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பரிசை அளிப்பதாக இருந்தது. அவர் அங்கே தாமதமாக வந்து பரபரப்பாக இருந்தார். ஆகவே கன்யாகுமரியில் அவரது விடுதிவாசலில் வைத்து அளிப்பார் என்றார்கள். என் பள்ளியில் இருந்து நாகர்கோயிலைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கூட வந்திருந்தார். நாங்கள் நாகர்கோயில் வந்தோம். கவர்னர் வர தாமதமாகும் நாளை காலை பரிசை கொடுப்பார் என்றார்கள். கடைசியில் அவரது உதவியாளர்தான் பரிசை கொடுத்தார்.

அன்றிரவு கன்யாகுமரி விடுதியில் தங்கினோம். நல்ல உயர்தர விடுதியாகவே கொடுத்தார்கள். நான் அத்தகைய நல்ல அறையில் தங்குவது அதுவே முதல்முறை. பதற்றமாக இருந்தது. வெளியே சென்று சாப்பிட்டோம். நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதும் அதுவே முதலில். வராந்தா வழியாக நடக்கும்போது உடற்கல்வி ஆசிரியர் உணர்ச்சிவசப்பட்டு ‘பாபு….பாபு நந்தன்கோடு’ என்றார். எனக்கு அவரை தெரியவில்லை. ஸ்வப்னம் படத்தின் இயக்குநர் என்றார். பரபரப்புடன் ஓடிச்சென்று ஒருவரிடம் சென்று பேசிவிட்டு திரும்பினார்.

ஆம், பாபு நந்தன்கோடேதான். அவர் ஏதோ படத்துக்கான விவாதத்தில் இருந்தார். உடற்கல்வி ஆசிரியர் என்னிடம் இயக்குநரை பார்க்கிறாயா என்றார். நான் ஆம் என்றேன். இருவரும் அறையருகே சென்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துக்கொண்டு நின்றோம். மெத்தை மேல் சட்டை இல்லாமல் படுத்திருந்த பாபு நந்தன்கோடு கையில் சிகரெட்டுடன் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

கன்யாகுமரியை களமாக்கிய ஒரு படம் அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்தது . ஏற்கனவே 1974ல் கமலஹாசன் நடிக்க எம்.டி.வாசுதேவன்நாயர் இயக்கி கெ.எஸ்.சேதுமாதவன் இயக்கிய கன்யாகுமரி படம் வெளிவந்திருந்தது. நான் அதை பார்த்திருந்தேன். அதை பாபு நிராகரித்து கிண்டல்செய்து பேசிக்கொண்டிருந்தார். அறைக்குள் நாற்காலியில் மிக அழகிய ஒரு பெண். அத்தகைய ஓர் அழகியை நான் முன்னர் நேரில் பார்த்ததில்லை. ஒரு நடுவயதானவர் பணிவுடன் எல்லாவற்றையும் ஆமோதித்துக்கொண்டிருந்தார்

பாபு நந்தன்கோடு திரும்பி என் ஆசிரியரிடம் பேசினார். ஆசிரியர் ஸ்வப்னம் படத்தை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். பேசப்பேச மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு அந்த புகழ்ச்சி எவ்வளவு தேவைப்படுகிறது என்று தெரிந்தது. உற்சாகமாக அவர்கள் எடுக்கப்போகும் படத்தின் கதையை அந்த இளைஞனிடம் சொல்லச் சொன்னார். அவன் கொஞ்சம் தயங்கியபின் சொல்ல ஆரம்பித்தான். அந்த அழகியும் அந்த இளைஞனும் ஒருகணம் கண்களால் சந்தித்து விலகியதாக எனக்குப் பட்டது.

அன்று பத்தரை மணிக்கு அறைக்கு திரும்பிவிட்டோம். அதற்குள்ளே அறையில் மதுவுக்கான சூழல் அமைந்து விட்டது. நடுவயதானவர் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். பாபு மிகவும் கடுகடுப்பாக திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று பேசினார். அவரது மனைவியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் மொத்தத்தில் பாபுவை உற்சாகமாக பார்த்தமாதிரித்தான் என் ஞாபகம்.

ஆனால் இப்போது தெரிகிறது மிகப்பெரிய ஏமாற்றத்தில், தனிமையில் அவர் இருந்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் இல்லை. அவரால் பின்னர் படங்களே எடுக்க முடியவில்லை. அவர் அப்போது பேசிக்கோண்டிருந்த படத்தை முதல்பட தயாரிப்பாளரே எடுப்பதாகச் சொன்னார், அது சிவன் தானா தெரியவில்லை. நான் பாபுவின் முகத்தை மறக்கவே இல்லை. ஒரு வெற்றியின் உச்சத்தில் இருந்து ஏனென்றே தெரியாமல் சறுக்கிக்கொண்டே இருப்பவர். விதியை ஒவ்வொரு கணமும் கண்ணெதிரே பார்ப்பவர்.

அன்று அவர் தன் விதியுடன் போரிட்டுக்கொண்டிருந்தார் என்று என் உள்ளுணர்வு சொன்னதை நானே பற்பல வருடங்களுக்குப் பின்னர்தான் புரிந்துகொண்டேன். அவரது அக ஆழங்களுக்குள் என்னால் செல்ல முடிந்தது. தன்னை மீறிய கலைப்படைப்பொன்றை ஆக்கிவிட்டு அதன் முன் தன்னைச் சிறியவனாக உணர்ந்து திகைத்து நிற்கும் கலைஞனை என்னுள்ளும் என்னால் காணமுடிகிறது. மீண்டும் அதை நிகழ்த்த அவன் ஏங்குகிறான். மீண்டும் அதை நோக்கிச் செல்வதை அல்லாமல் எதையும் அவனால் செய்யமுடியாதென உணர்கிறான். ஆனால் அதை அவனால் பிரக்ஞைபூர்வமாக செய்துகொள்ள முடியாது.

கலை என்பது அவனில் நிகழ்வது. அவனுடைய இளமையும் அவனுடைய முதுமையும் விசித்திரமாக கலக்கும் புள்ளி அது. அவனுடைய நீதியுணர்வும் அழகுணர்வும் ஒன்றேயாக மாறும் தருணம் அது. அந்த ரசவாதம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டது. கன்னித்தெய்வத்தின் மடியில் அமர்ந்தபடி பாபு அதை நோக்கி எம்ப கண்ணீருடன் தவம்செய்து கொண்டிருந்தார்

பாபுவுடன் இருந்த அந்த இளைஞனை நான் பின்னர் கண்டதில்லை. அந்தப்பெண்ணையும். அவர்களின் கனவுகள் என்ன ஆயின? பாபுவுக்காவது ஒரு ஸ்வப்னம் இருக்கிறது கணக்கில் . அவர்களின் ஸ்வப்னங்கள் திரையை தீண்டவேயில்லையா? கண்ணீரும் காத்திருப்பும் மட்டுமாக எஞ்சினவா?

பாபு எடுக்கவிருந்த, அந்த இளைஞனிடம் விவாதித்திருந்த அந்தக்கதை என்ன? நீங்கள் என் ‘கன்யாகுமரி’ நாவலை இன்னமும் வாசிக்கவில்லையா?

http://www.moovyshoovy.com/watch_malayalam_movie.php?movie=Swapnam 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 3, 2011

***

முந்தைய கட்டுரைபுழங்குதல்
அடுத்த கட்டுரைஅஞ்சலி. ஆர்.பி.சாரதி