காவேரி – வெள்ளமும் வறட்சியும்

Tamil-image

அன்பின் ஜெயமோகன்,

காவிரி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆனால் காவிரி டெல்டாவின் பெரும்பாலான குளங்கள் இன்னும் நிரம்பாமல் இருக்கின்றன. இன்னும் பல பகுதிகளுக்குக் காவிரி நீர் சென்று சேரவில்லை என்பதே கள நிலவரம். ஆற்றின் மீதும் ஆற்று நீரின் மீதும் நீர் மேலாண்மை மீதும் மிகப் பெரும் அலட்சியம் இம்முறை காட்டப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவின் நீர் மேலாண்மை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. சோழர்கள் தங்கள் தொலைநோக்கால் உருவாக்கிய மாபெரும் பொறியியல் அற்புதம். நிலத்தடி நீரை பூமியின் மேல்மட்டத்திலிருந்து சில அடி ஆழங்களில் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறை.

இந்த ஆண்டு ஏரி, குளங்களில் மேல்மட்டத்திலிருந்து மூன்று அடி ஆழம் வரை உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் தூர் வாரி விவசாய நிலங்களில் இட்டுக் கொள்ளலாம் என மாநில அரசாங்கம் அனுமதி அளித்தது. டெல்டாவில் ஒவ்வொரு குளமும் ஆற்றுநீரைக் கால்வாய்கள் மூலம் பெற்று நிரம்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மலைப்பகுதிகளிலிருந்து மண்ணை அரித்துக் கொண்டு வரும் ஆற்று நீர் குளங்களில் நிரம்பி மண் துகள்கள் அடியில் படிந்து பின்னர்த் தெளியும். பல ஆண்டுகள் இவ்வாறு படிந்தால் குளத்தின் மேற்பரப்பில் படிந்திருக்கும் களிமண் ஈரத்தில் இறுகிக் குளத்து நீரை பூமிக்கு அடியில் செல்ல அனுமதிக்காது. அவ்வாறு படிந்த வண்டல் மண்ணை மட்டுமே சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நீக்க வேண்டும். குளங்களைத் தூர்வாரிக் கொள்ள என்று ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி தூர்வாரப் பயன்படுத்தப்பட்டதாய்க் கணக்கு காட்டப்பட்டு அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் பங்கு பிரித்துக் கொள்ளப்படும். இந்த ஆண்டு மேலதிக மோசடியாக வண்டல் மண் எடுக்க அனுமதி என்ற பெயரில் அரசியல்வாதிகள் மேல்மட்டத்தில் இருந்த வண்டலை எடுத்ததுடன் அதன் கீழ் இருக்கும் சவுட்டு மணலை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் எடுத்து வணிக நோக்கத்தில் கட்டுமானத் தேவைக்கு Filling Sand ஆக டிப்பர் மூலம் விற்பனை செய்தனர். அனுமதிக்கப்பட்ட மூன்று அடியைத் தாண்டி ஆறு அடி முதல் பத்து அடி வரை சென்று சவுட்டுமணலை எடுத்து விற்றுள்ளனர். அவ்வாறு எடுக்கப்பட்ட சவுட்டுமணல் அளவில் சிறிய குளம் என்றால் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் நடுத்தரமான குளங்கள் எனில்  இருபது லட்ச ரூபாய்க்கும் பெரிய குளங்கள் எனில் ஐம்பது லட்ச ரூபாய் வரைக்கும் விற்பனை நடந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அவற்றில் விற்கப்பட்டிருக்கும் சவுட்டுமணலின் மதிப்பு இருநூறு கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கும். இது ஒரு குறைந்தபட்ச கணக்கீடு. உள்ள நிலை இதை விடப் பல மடங்கு அதிகமாகவே இருக்கக் கூடும்.

ஊருக்காகக் குளம் வெட்டுவதை ஒரு புண்ணியச் செயல்பாடாக நினைத்த ஒரு நாட்டில் குளங்களின் ஆன்மாவைச் சிதைக்கும் இந்த அழிவுச் செயல் நிகழ்ந்துள்ளது. ஒரு குளம் வெட்டப்படும் போது, குளம் வெட்டும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மரபான பல தெரிவு முறைகள் உள்ளன. அக்குளத்தின் நீர் ஊர்மக்களுக்கு உச்சபட்சமான அளவில் பலவிதங்களிலும் பயன்பட வேண்டும் என்ற உணர்வுடன் குளங்களை உருவாக்கியிருப்பர். நிலத்தடி நீரை மேல்மட்டத்திலேயே பராமரிக்க இந்தச் சவுட்டுமணலே காரணம். இவை நீர் உறிஞ்சிகளாய்ச் செயல்பட்டுத் தண்ணீரைத் தன் ஆழத்தில் தக்க வைத்துக் கொள்ளும். அந்த மணல்பரப்பே குளங்களின் ஜீவன். நூற்றாண்டுகளாய் தங்கள் உயிர்ப்பைத் தக்க வைத்துக் கொண்ட குளங்கள் இந்த ஒரே ஆண்டில் சாகடிக்கப்பட்டுள்ளன.

காவிரியில் வரும் நீரைப் பயன்படுத்துவதற்காக ஆயத்தமாயிருந்திருக்க வேண்டிய அரசுத் துறைகள் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் இருந்தன. பல கால்வாய்களுக்குத் தண்ணீர் வரவில்லை. சில கிளை நதிகளிலேயே காவிரி நீர் பாயவில்லை. தண்ணீர் முழுதும் கடலில் சென்று கலந்து கொண்டிருந்தது.

காவிரிக்காகப் பல ஆண்டுகள் நடக்கும் நீதிமன்ற வழக்கின் நோக்கம் என்ன? காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்பது தானே? நீர் சேமிக்கப்படாமல் – நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தாமல் – விவசாயத்துக்குப் பயன்படாமல் – கடலில் கலக்கும் என்றால் அதன் பயன்தான் என்ன? மத்தியப்பிரதேசத்தில் பல கிராமங்களில் வெறும் பத்துக் குடும்பங்கள் பாலிதீன் ஷீட்டைப் பத்தடிக்கு பத்தடி பரப்புள்ள  வீட்டின் கூரையாகக் கொண்டு வற்றிய உடலுடன் சோளம் பயிரிட்டு வாழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆற்றுப் பாசனத்திற்கோ கால்வாய்ப் பாசனத்திற்கோ வாய்ப்பே இல்லாத நிலப்பரப்புகள்தான் இந்திய மண்ணில் நிரம்பியிருக்கின்றன.

காவிரி டெல்டாவில் காவிரி நீரும் வடகிழக்குப் பருவமழையால் பெறப்படும் மழைநீரும் இருக்கும் நீர்நிலைகளில் முறையாகச் சேமிக்கப்படுவதும் நிலத்தடி நீர் மேல்மட்டத்தில் பராமரிக்கப்படுவதும் துல்லியமான நீர் மேலாண்மையுமே இப்பகுதியின் முன்னேற்றத்துக்கு இப்போது தேவைப்படுவது. அரசியல் கூச்சல்கள் பயனற்றவை; அழிவை உருவாக்குபவை.

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் -கடிதம்
அடுத்த கட்டுரைநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?