தண்ணீர்ச் சிறையில் அகப்பட்டிருக்கிறது கேரளம். இந்த மண்ணின் மாறாப் பசுமைக்கு ஆதாரமாக இருப்பவை மாநிலத்தில் ஓடும் 44 நதிகள். இவற்றின் குறுக்காக நீர்த்தேக்கங்களாகவும் அணைகளாவும் கட்டப்பட்டிருப்பவை 42 கட்டுமான்ங்கள். இவை அனைத்தும் இன்று நிரம்பிச் சீறுகின்றன. மழை மூர்க்கமாகக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. வரமே தண்டனையாக மாறிய வேளை .
1924 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிகழும் இயற்கைப் பேரிடர் என்று சொல்லப் படுகிறது. மனித எத்தனங்களை முறியடித்து இயற்கை ஊழித் தாண்டவம் ஆடுகிறது. உயிரும் உடைமைகளும் காணாமற் போயிருக்கின்றன. இயற்கையின் முன்னால் மனித ஆற்றல் கைபிசைந்து நிற்கும் தருணம். ஆனால் மனித மகத்துவம் வெளிப்பட்ட அற்புதத் தருணமும் இதுவே. எல்லாரும் சக மனிதனைக் காப்பாற்ற அவரவரால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பேதங்களைக் கைவிட்டு மனங்களை அரவணைக்கிறார்கள். இந்த மானுட இணக்கம் இயற்கையின் கொந்தளிப்பைத் தணித்து விடும் என்று நம்ப வைக்கிறது. நம்பிக்கையை மூன்று தரப்புகள் மேலும் வலுவாக்குகின்றன.
ஒன்று: அரசு.
வரலாறு காணாத இந்தப் பேரிடரில் பிணராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் அதிவேக நடவடிக்கைகள் போற்றுதலுக்கு உரியவை. மக்களை மதிக்கும் ஓர் அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. நாள்முழுக்கத் தனது அலுவலகத்திலேயே இருந்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியும் சக அமைச்சர்களை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தும் மக்களின் பதற்றத்தைப் போக்குவதற்கான ஆறுதல் மொழிகளைச் சொல்லியும் முதல்வர் பிணராயி செயல்படுகிறார். எல்லா வகையான நிவாரண நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்கிறார். கட்சி வேறுபாடில்லை. குழு மனப்பான்மை யில்லை. சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாக விடாது காப்பாற்ற அயராது உழைக்கிறார் ஒரு முதல்வர். அவருக்குத் தோள்கொடுக்கிறார்கள் அனைவரும். இது எங்கள் அரசு என்று ஒவ்வொருவரும் உரிமையுடன் உணரும் தருணம் எவ்வளவு மகத்தானது.
இரண்டு: ஊடகங்கள்.
பொதுவாகப் பரபரப்பு செய்திகளுக்கு அலையும் ஊடகங்கள் இந்தத் தருணத்தில் நடந்து கொள்ளும் விதம் பாராட்டுக்குரியது. கண்ணீரையும் துக்கத்தையும் மரணத்தையும் மூலதனமாக்கி பார்வையாளர், வாசக எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் கட்டுப்பாட்டுடன் செயல்படுகின்றன. செய்தியைச் செய்தியாக மட்டுமே அளிக்கின்றன. அதுமட்டுமல்ல. தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன. தனித்து விடப்பட்டவர்களையும் வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் மாட்டிக் கொண்டவர்களையும் பற்றித் தகவல்களைப் பரிமாறுகின்றன. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுடன் கைகோர்க்கின்றன. உதவி கோரி வேண்டுகோள் விடுக்கின்றன. நிராதரவாக நிற்பவர்களை அவர்களது உற்றவர்களுடன் தொடர்புகொள்ள வைக்கின்றன. அந்தப் பொறுப்புணர்வு கைகுலுக்கலுக்குரியது.
மூன்று: குடிமைச் சமூகம்.
பிறர்படும் பாடு தன்னுடையது என்று ஒவ்வொருவரும் கசிகிறார்கள். நாங்கள் இருக்கிறோம் என்று அடைக்கலம் அளிக்கிறார்கள். எங்கள் வீட்டில் உணவு தயார் என்று அழைக்கிறார்கள். எங்கள் வீட்டில் வந்து தங்குங்கள் என்று வரவேற்கிறார்கள். நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்று செயலால் காட்டுகிறார்கள்.
இந்த அரசு அமைய நானும் வாக்களித்தேன்; இந்த ஊடகத் துறையில்தான் பணியாற்றினேன்; இந்த மக்கள் மத்தியில்தான் வாழ்கிறேன் என்று மனம் பெருமிதத்தால் விம்முகிறது.
ஆம். மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்.