இந்திய உளநிலை -கடிதங்கள்

imageproxy

நைபால் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

நைபால்-கடிதங்கள்” உங்கள் பதில் வாசித்தேன்.

 

//”இந்தியாவின் பொது உளவியலில் உள்ள சிறுமையும் ஒழுங்கின்மையும் மேலும் மேலும் உறுத்துகிறது. தனிநபர்களாக self esteem  எனும் உணர்வு அற்றவர்கள் நாம்.

ஒரு போலீஸ் நம்மை அதட்டினால் கூசுவதில்லை. அவர் அதட்டிவிடுவார் என அஞ்சி சட்டத்தை மதிப்பதுமில்லை.

முடிந்தவரை குறுக்குப்பாதையில் நுழைகிறோம். முட்டி மோதுகிறோம். களவாக ஒன்றைச் செய்ய தயங்குவதே இல்லை

 

 

இந்தியாவில் என்று மட்டுமில்லை – எங்கு சென்றாலும் நம்மவர்களின் இயல்பே இதுதான்.

 

இவர்களையே கடந்த ஒன்றரையாண்டு அமெரிக்க வாழ்க்கையில் சந்தித்து வருகிறேன்.

 

இந்த சிறுமையும் ஒழுங்கின்மையும்  சுயமரியாதையின்மையும், களவும், குறுக்குவழிக்கான அலைச்சலும்  – இங்குள்ள பெரும்பாலானான (படித்த, நன்கு சம்பாதிக்கக்கூடிய) நம்மவர்களிடம்  இயல்பாக காணக்கிடைப்பது தான். இவர்களில் சிலர் ஆண்டுக்கணக்கில் இங்கிருப்பவர்கள்.  ஆனால் இவைகளை ஒரு புத்திசாலித்தனம் / சாமர்த்தியம் என்றே பெருமைகொள்கிறார்கள்.

 

சில எடுத்துக்காட்டுகள்.

 

  1. இங்கு நகரப் பேருந்துகளில் / ரயிலில் பயணிக்க கைப்பேசிApp வழியாக பயணச்சீட்டு வாங்கலாம். பயணம் தொடங்குவதற்கு முன் அதை  Activate செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட சீட்டு அந்த நாள் முழுமைக்கும் செல்லும். நம்மவர்கள்  ஒரு பயணச்சீட்டு வாங்குவார்கள் ஆனால் அதை Activate செய்யமாட்டார்கள் – வாரக்கணக்கில் – மாதக்கணக்கில் – பரிசோதிப்பவர் வந்தாலொழிய. ஒரே சீட்டு – 2.5 டாலர் – ஒரு மாதப் பயணம். ஏறும்பொழுது ஓட்டுனரிடம் 2 நொடிகளுக்கும் குறைவாகக் காட்டிவிட்டு உள்ளே விரைய வேண்டும்.

 

Activate செய்யப்படாத சீட்டைச் சுற்றி சாம்பல் வண்ணமும்,  செய்யப்பட்ட சரியான சீட்டைச் சுற்றி பச்சை வண்ணமும் இருக்குமாறு App இல் ஒரு சிறு மாற்றம் செய்தார்கள். தகவல்களைப் படித்து சோதிக்கத் தேவையின்றி இவ்வண்ணங்களைக் கொண்டு எளிதாகப் பிரித்து விடுவார் ஓட்டுனர். “எப்படின்னு தெரியல, இப்பெல்லாம் கரெக்டா புடிச்சுர்ராங்க” என்று இரண்டு மூன்று நாள் புலம்பல். ஆனால் இச்சிறு மாற்றத்தை கவனிக்கும் திறன் இல்லை. ஆனால் தெரிந்தவுடன் மூளை சுறுசுறுப்பாகிவிடும். அதே போல் ஒரே சீட்டு – ஒருமுறை Activate – ஒரு screen shot – அதையே ஒரு மாதம் காட்ட வேண்டியது.

 

மாலைகளில், ஓட்டுனரிடம் பணம் செலுத்தி வாங்கும் பலரிடம் – வீட்டிற்குத்தான் செல்கிறீர்கள் எனில் சீட்டு வேண்டாம் என்று அவரே மறுத்து இலவசப் பயணம் அளித்ததைக் கண்டிருக்கிறேன். இவர்களிடம்தான் நாம் இப்படி நடந்துகொள்கிறோம்.

 

  1. இங்குள்ளMultiplex Cinema Mallகளில் டிக்கெட் பரிசோதிக்கும் இடம் நுழைவாயிலிலேயே இருக்கிறது. அங்கேயே நமது அரங்கு எண் சொல்லி உள்ளே அனுப்பிவிடுகிறார்கள். எந்த அரங்க வாயிலிலும் சோதனை கிடையாது. போதாதா நமக்கு. இந்திய மொழித் திரைப்படங்களுக்கு விலை அதிகம் –  எனவே ஏதாவது ஒரு விலை மலிவான ஆங்கில படத்திற்கு டிக்கெட் எடுக்க வேண்டியது – உள்ளே நுழைந்தவுடன் விரும்பிய அரங்கிற்குள் நுழையவேண்டியது. இன்னும் சிலர் அந்தப் படம் முடிந்தவுடன், அடுத்ததடுத்த அரங்கிற்குள்ளும் நுழைந்து கொள்கிறார்கள். சிறு வெட்கமோ தயக்கமோ கிடையவே கிடையாது.

 

  1. SSN, ஓட்டுனர் உரிமம், வருமான வரி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் ஆவணங்களை முழுமையாகப் பரிசோதிக்கிறார்கள். சிறு விடுபடலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. என்ன ஆவணங்கள் தேவை என்ற முன்னறிவிப்பு,முன்பதிவு வசதி எல்லாம் உண்டு. எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், வேலை உடனே முடிந்துவிடுகிறது. யாரையும் “கவனிக்க”வோ காவடி தூக்கவோ வேண்டாம். ஆனால் நம்மவர்களுக்கு இந்த பெரிய வரிசையும், மெதுவாக வேலை செய்யும் முறையும், எல்லாவற்றையும் சரிபார்ப்பதும் எண்ணவே முடியாத சலிப்பைத் தருகிறது. வேறு (குறுக்கு) வழிகளே இல்லாமைவேறு கடும் எரிச்சல் கிளப்புகிறது.“இதுவே நம்மூரா இருந்தா 2000 கொடுத்தா வீட்டுக்கே வந்து கொடுத்துட்டு போவாங்க” என்ற பொருமல் வேறு. இவர்களே தான் பிறிதொரு சமயத்தில் இந்தியாவின் ஊழலை குறைகூறுகிறார்கள்.

 

  1. தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு – நாம் வாங்கிய எந்தப் பொருளையும் குறிப்பிட்டக் காலத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு பணம் திரும்பப் பெறலாம் என்ற ஒரு வசதி இங்கே உண்டு. அதை நம்மவர்கள் உபயோகிக்கும் முறை மயிர்கூர்செரிய வைக்கும். தான் வாங்கும் எல்லாப் பொருட்களுக்கும் திரும்பத்தரும் கடைசி தேதி எதுவென்றுகுறித்துக்கொண்டு – Reminder வைத்துக் கொண்டு – அதைக் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் அதே பொருளைப் புதிதாக எடுத்துக்கொண்டு வரும் ஒரு “சாமர்த்தியசாலி” எங்கள் அலுவலகத்தில் உண்டு.

 

  1. அலுவலகம் அளிக்கும் மதிய உணவிற்கு சென்றால் இரவுணவுக்கும் பார்சல் செய்துகொள்வது, அடுத்தவேளை உணவு என்பது இன்னும் ஓராண்டு கழித்து தான் என்பது போல் உண்பது என்பது போல இன்னும் பல.

 

நேராகவே இருக்கும்போதிலும், வரிசையில் இவர்களுக்குப்பின் சென்று ஓட்டுனரையோ – அரசு அலுவலரையோ – கடை பணியாளரையோ நேர் பார்வை பார்க்க கூசத்தான் செய்கிறது. இத்தனைக்கும் உங்களைவிட இருபது வயது இளையவன் தான் நான். மீதிக்காலத்தை நினைத்து அச்சமாகவேயுள்ளது.

 

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி

டாலஸ்

 

அன்புள்ள மூர்த்தி

 

அமெரிக்காவில் இந்தியர்கள் விமானநிலைய வரிசையில் ஊடுபுகுவதை, முண்டியடிப்பதைக் கண்டிருக்கிறேன். விமானத்தில் ஒயின் தேவையில்லை என்று சொன்ன என்னிடம்  “வாங்கி எனக்குக் கொடு” என்று அனத்த ஆரம்பிப்பார்கள். இது இந்தியாவிலிருந்து கிளம்பும்போதே ஆரம்பமாகிவிடும்

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

 

நைபால் பற்றிய கட்டுரையில் இந்தியர்களின் பொதுக்குணம் பற்றி சொல்லியிருந்தீர்கள். மிகமுக்கியமான அம்சம் தூய்மையைப் பற்றிய அலட்சியம். சின்ன வயதிலேயே தூய்மைசெய்வது என்பது இழிவான பணி என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள். ஆகவே எங்கும் எதிலும் தூய்மைசெய்வது நம்மவர் வழக்கமே இல்லை. குறிப்பாக வடஇந்தியாவில் உள்ளவர்கள் இதில் உச்சகட்ட நம்பிக்கை கொண்டவர்கள். எங்கும் துப்புவார்கள். எங்கும் குப்பை வீசுவார்கள். நான் வேலைசெய்யும் இடங்களில் இதைக்கேட்டேன். “அதெல்லாம் குப்பை பொறுக்குபவர்கள் தூய்மை செய்துகொள்வார்கள்” என அலட்சியமாகப் பதில் சொன்னார்கள். இந்த்யாவில் கிராமங்களில் இருக்கும் அளவுக்கு குப்பை மலை இன்றைக்கு உலகில் எந்த நாட்டிலும் இல்லை. நம்மைவிடப் பரிதாபமான பொருளியல் கொண்ட பர்மாகூட பொது இடங்களில் இந்தக்குப்பை இல்லை.

 

ஆர். ராஜேந்திரன்

 

 

அன்புள்ள ராஜேந்திரன்,

 

இந்த மனநிலைக்கு எதிரான பயிற்சியைத்தான் காந்தி தன் அரசியல்நுழைவின் முதல்நடவடிக்கையாகக் கொண்டார். நாறிக்கொண்டிருந்த காங்கிரஸ் மாநாட்டுக் கழிப்பறைகளை தூய்மைசெய்ய முற்பட்டதே அவருடைய முதல்அரசியல் நடவடிக்கை. காந்தியக் கல்விமுறை இருந்த கல்விநிலைகளில் தூய்மைசெய்தலை ஒருவகை கல்வியாகவே கற்பித்தனர். அதற்கு எதிராக தங்கள் பிள்ளைகளை போர்டிங் பள்ளிகளுக்குக் கொண்டுசென்றார்கள் நம்மூர் செல்வந்தர்கள். இன்று இந்தியா முழுக்க எங்கும் அக்கல்வி இல்லை. அதைக் கற்பிப்பது பிள்ளைகளை அவமதிப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்திலேயே மாணவர்களிடம் வகுப்பைத் தூய்மைசெய்யச் சொன்ன ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரின் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் மேலதிகாரிகளால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். [தலித் மாணவர்களை மட்டும் தூய்மைசெய்யச்சொல்லி அந்தக் கல்விக்கு மேலதிக ‘வண்ணம்’ சேர்ப்பவர்களும் உண்டு]

 

ஜெயமோகன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – ‘திசைதேர் வெள்ளம்’
அடுத்த கட்டுரைஅமெரிக்கக் கவிமாநாடு