நைபால் -கடிதங்கள்

VS_Naipaul_650

 

அஞ்சலி – வி.எஸ்.நைபால்

அன்புள்ள ஜெ

 

வி.எஸ்.நைபால் பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். இருபதாண்டுகளுக்கு முன்பு நீங்கள் அவரைப்பற்றி மிக எதிர்மறையாக எழுதியவற்றையும் வாசித்திருக்கிறேன். அவருடைய பழைய எதிரிகள் பலர் இன்றைக்கு அவரைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர் கடைசி காலத்தில் அடித்த யூடர்ன். முஸ்லீம்களை அவர் கடுமையாக விமர்சனம் செய்தபோது வலதுசாரிகளுக்குப் பிரியமானவராக ஆனார். ஆனால் அதுவரை அவரை தூக்கிக்கொண்டிருந்த நம்மூர் இடதுசாரிகள் அவரை வெறுக்க ஆரம்பித்தார்கள். வி.எஸ்.நைபாலுக்கு இந்தியாவைப்பார்க்கும் கண் கிடையாது என்று நீங்கள் முன்பு எழுதினீர்கள். இன்றைக்கு உங்கள் கருத்து மாறுபடுவதற்கான காரணம் என்ன?

 

ரவிச்சந்திரன்

 

அன்புள்ள ரவி

 

என் கருத்தை பெரும்பாலும் மாற்றிக்கொள்ளாமல்தான் எழுதியிருக்கிறேன். நைபால் இந்தியா பற்றிச் சொன்னவை மேலோட்டமான பயணியின் குறிப்புகள். அத்தகைய மேலோட்டமான பார்வையில் சில அரிய செய்திகள் தென்படும். இங்குள்ளோர் பார்க்காதவையும் வெளிப்படும். ஆனால் அவை இலக்கியத்திற்கு இரண்டாம்நிலையே. அவற்றின் அடிப்படையில்தான் இங்கே அவர் பேசப்பட்டார். அவற்றை நான் என் இந்திய அனுபவத்தின் அடிப்படையில் நிராகரிக்கிறேன். அவருடைய நாவலின் கதாபாத்திரச்சித்தரிப்பு நன்று. இன்றும் எனக்கு அதே அபிப்பிராயமே

 

ஆனால் நான் அமெரிக்கா, ஐரோப்பாவில் நெடுநாட்கள் பயணம்செய்யும்தோறும் எனக்கு நைபால் அளித்த பழைய ஒவ்வாமை குறைந்துவருகிறது. இந்தியாவின் பொது உளவியலில் உள்ள சிறுமையும் ஒழுங்கின்மையும் மேலும் மேலும் உறுத்துகிறது. தனிநபர்களாக self esteem  எனும் உணர்வு அற்றவர்கள் நாம். ஒரு போலீஸ் நம்மை அதட்டினால் கூசுவதில்லை. அவர் அதட்டிவிடுவார் என அஞ்சி சட்டத்தை மதிப்பதுமில்லை. முடிந்தவரை குறுக்குப்பாதையில் நுழைகிறோம். முட்டி மோதுகிறோம். களவாக ஒன்றைச் செய்ய தயங்குவதே இல்லை

 

இன்னொன்று நம்மால் நிறுவனங்களை முறையாக நடத்த முடிவதில்லை. அனைத்து ஒழுங்குகளையும் அனைவருமே மீற முயலும் நாட்டில் , அதை ஒரு வகையான சுதந்திரமாக புரிந்துகொண்டவர்களின் நாட்டில், அமைப்புகள் சிதைவது இயல்பே. அத்தனை  பொது இடங்களும் ஒருங்குகூடல்களும் இங்கே  ‘கண்டபடி’த்தான் நிகழ்கின்றன. இதிலிருந்தே நம்முடைய பொதுவான குணங்களாக பிறர் சுட்டிக்காட்டும் பொதுவெளியில் வெளிப்படும் கடுமை, கூச்சலிடும் தன்மை, கும்பல்மனப்பான்மை,மிகையுணர்ச்சிகள் போன்றவை ஓங்கி வளர்கின்றன. ஐரோப்பாவும் அமெரிக்காவும், ஏன் மலேசியாவும் சிங்கப்பூரும்கூட நம் இச்ச்சிறுமைகளை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. இந்தியா பற்றி எண்ணும்போதெல்லாம் அவற்றையும் சேர்த்தே எண்ண வைக்கின்றன.

 

இங்கே பேசிக்கொண்டு சென்றபோது அருண்மொழி சொன்னாள், நீ வெளிநாடு வரும்போதெல்லாம் நைபால் பேச்சில் வந்துவிடுகிறார். நீயும் நைபால் ஆகிக்கொண்டிருக்கிறாய் என. ஓரளவு அது உண்மை. வயதாவதுதான் காரணம் என பிற நண்பர்கள் சொன்னார்கள். இருக்கலாம்

 

ஜெ

 

ஜெ,

 

வி.எஸ்.நைபால் பற்றி எழுதியிருந்தீர்கள். நாய்பால் என சிலர் எழுதுவதை வாசித்தேன். எது சரியான உச்சரிப்பு?

 

எம்.சூர்யா

 

அன்புள்ள சூரியா

 

இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். எந்த மொழியானாலும் உச்சரிப்பை அப்படியே எழுத முடியாது. எழுத்துவடிவுக்கும் ஒலிவடிவுக்குமான உறவு என்பது ஒருவகை சமூகப்புரிதல் மட்டுமே. ஆகவேதான் to  என்றால் டு என்றும் go என்றால் கோ என்றும் நாம் வாசிக்கிறோம். பெயர்களைப்பொறுத்தவரை ஒவ்வொரு மொழிக்கும் அவர்களுக்கான உச்சரிப்பு முறை உண்டு. அதை இன்னொரு மொழியில் சரியாக எழுதிவிட முடியாது. அதற்கான எழுத்துக்களே இருக்காது. இருந்தாலும்கூட காதால் கேட்காமல் எழுதிவிடமுடியாது. சிலமொழிகளில் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே அவர்களுக்கே உரிய பெரும் வேறுபாடு இருக்கும். ஸ்பானிஷ் மொழியில் Jose  என்பதை யோஸே என்பார்கள். ஆனால் ஸ்பானிஷ் பேசும் பிற ஐரோப்பியர் ஜோஸ் என்றே சொல்வார்கள். தெற்கு ஐரோப்பிய மொழிகளில் J என்னும் உச்சரிப்பு y என மருவியிருப்பதைக் காணலாம். ஐரோப்பாவினூடாகச் சென்றால் ஒவ்வொரு பெயருக்கும் பல உச்சரிப்புகள் இயல்பாக இருப்பதும் தெரிகிறது.

 

உதாரணமாக இரண்டுநாள் முன் ம்யூனிச் நகரில் இருந்தேன். இதை மியூனிக் என்றும் சொல்கிறார்கள். சரியாக சொல்லவேண்டுமென்றால் ம்யூனிச்க்ஹ் எனவேண்டும் என்றார் உள்ளூரில் வாழும் நண்பர். அந்த உச்சரிப்பே வேறுமொழியில் இல்லை. ஜெர்மனிக்குள் மரபாக வாழ்பவர்களே இரண்டு முறையிலும் சொல்கிறார்கள். ஆனால் எங்காவது மியூனிச்  என எழுதுங்கள். [தமிழில் முதலெழுத்து ஒற்று வராது]ஓர் உள்ளூர் அறிஞர் வந்து அது ம்யூனிக் என திருத்துவார். இந்த உச்சரிப்புத் திருத்தும் பழக்கம் ஒரு வகையான போலி மேட்டிமைத்தனம், அறிவார்ந்த தகுதியின்மயின் வெளிப்பாடு மட்டுமே. பெயர்கள் மொழிகளுக்கிடையே செல்லும் நெறிகளை அறிந்த எவரும் இதையெல்லாம் பெரிதாகப் பேசமாட்டார்கள். உலகத்திலுள்ள அனைத்துப் பெயர்களையும் அந்தந்த மொழி உச்சரிப்புடன் ஒருமொழியிலுள்ளவர்கள் பேசுவது இயல்வதே அல்ல. மொழி அனுமதிக்கும் அளவுக்கு அந்த பெயர்களைச் சொல்ல முயலலாம், அவ்வளவுதான்.

 

ஐரோப்பாவில் எல்லா கீழைநாட்டுப் பெயர்களும் ஐரோப்பிய உச்சரிப்புக்கு ஏற்ப ஒலிமாற்றமும் எழுத்துமாற்றமும் செய்யப்பட்டே புழங்குகின்றன. ஏனென்றால் சொல் என்பது பொதுவான ஏற்பினூடாக பொருள் கொள்வது. ஜப்பானிய, சீன உச்சரிப்புகளை ஐரோப்பிய மொழியில் எழுதிவிடமுடியாது. அதை அவர்கள் அறிவார்கள். இங்கே எவரும் உச்சரிப்பைச் சீரமைக்க முயன்றுகொண்டே இருப்பதில்லை, அதை ஒர் அறிவுச்செயல்பாடாக எண்ணுவதுமில்லை

 

வி.எஸ்.நைபால் என்பதே தமிழுக்குச் சரி. அதனால் பெரிய அளவிலான ஒலிமாறுபாடு எதுவும் உருவாவதுமில்லை. நாய்பால் என்னும்போது தமிழின் வாசிப்புமுறைக்கு மிகத் தவறான புரிதல் உருவாகிறது. சொற்கள் விழிகளுக்குத்தான் முதலில் வந்துசேர்கின்றன. அதன்பின்னரே உளச்செவியில் ஒலியாகின்றன.

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 77
அடுத்த கட்டுரைஎழுக!