எழுக!

pra

இனிய ஜெயம் ,

எங்கள் கூட்டுக்குடும்ப வாழ்வில் ஏகப்பட்ட உருப்படிகள் .வந்து சேரும் புது உருப்படிகளில் ஏதும் ஒன்றுக்கு எப்படியேனும் ஒரு எழுத்தாளர் பெயரை சூட்டிவிட வேண்டும் என்பது எனது ரகசிய வேட்கையாக இருந்தது .நாளும் வந்தது . ஜெயகாந்தன் எனும் பெயரை கேட்டத்தும் தங்கை நிஷ்டூரமாக முறைத்தாள் . அவளுக்கும் எழுத்தாளர் உலகுக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது .அவளையே ஜெயகாந்தன் எனும் பெயர் ஊடுருவி இருக்கிறது என்றால் என்னே எழுத்தாளரின் வலிமை .

”நீ புள்ள பெத்து அந்த பேர உன் புள்ளைக்கு வை போ . போ என் புள்ளைக்கு நானே நல்ல பேர் போட்டுக்குறேன் ”என்றுவிட்டாள் .  அவள் என் மருமகனுக்கு இட்ட பெயர் பிரபஞ்சன் .[அவள் ஆத்துக்காரர் பிசிக்ஸ் ப்ரொபஸர் ]. பெயர் சூட்டு விழாவில் பிரபஞ்சனின் நூல் ஒன்றை அவளுக்கு காட்டி இதுவும் ஜெயகாந்தனுக்கு இணையான பெயர்தான் .இவரும் ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்தான் என்றேன் சிரித்தபடி .

ஆம் ஏதோ ஒரு அம்சத்தில் பிரபஞ்சன் எனக்கு ஜெயகாந்தனின் பிரதிபலிப்பாகவே தெரிந்தார் .  பிரபஞ்சனின் பழைய புகைப்படம் ஒன்றினில் ,சுருள் கேசம் புரள ,தடித்த வாட்ச் அணிந்த இடது கை நாடியை தாங்க ,முறுக்கிய மீசையுடன் ஜெயகாந்தன் போலவே தோற்றத்தில் இருந்தார் . இறுதியாக கடலூர் ஆம்பல் இலக்கிய கூடலின் சிறப்பு விருந்தினராக அவரை சந்தித்தபோது மேடையில் முதல் சொல்லாக அவர் பேசத் துவங்கியதே ஜெயகாந்தன் குறித்துத்தான் .”என் வாழ்வில் நிகழ்ந்த தவிர்க்க இயலா விபத்து என்பது .நான் என்னை எல்லா விதத்திலும் ஜெயகாந்தன் போன்றவன் என எண்ணிக்கொண்டது. அப்படி இல்லை நீ பிரபஞ்சன் என முன்பே தெரிந்திருந்தால் நிறைய விஷயங்களில் இருந்து தப்பித்து வெளியே சென்றிருப்பேன் ” என பெருஞ்சிரிப்போடு தனது உரையை துவங்கினார் .

வாசிக்கத்துவங்கிய துவங்கிய நாட்களில் ஜெயகாந்தன் அளவுக்கே அவரது கருத்துக்கள் வழியே என்னை வசீகரித்தவர் .  இப்போதும் புதுவைக்கு புதிதாக வருகை தரும் நண்பர்களை ,அவரது இன்பக்கேணி கதையை உணர்ச்சிகரமாக நாடகீயமாக விவரித்த படி ,கதை முடிகையில் நண்பர்கள் ஆயி மண்டபம் முன்னிலையில் நிற்க வைத்து அவர்களை புல்லரிக்க வைப்பது எனது வழமைகளில் ஒன்று .

ராஜராஜசோழன் சார்ந்த அவரது பார்வை ,சங்க இலக்கியம் சார்ந்து அவரது நோக்கு என அவருடன் பேச கேட்க எனக்கு நிறைய கேள்விகள் இருந்தாலும் ,எப்போதும் என்னுடன் தொடரும் தயக்கம் ,அவரை சந்திக்கும்போதெல்லாம் வெறுமே அவரை வேடிக்கை பார்த்திருந்துவிட்டு திரும்ப வைத்து விடும் . அதே தயக்கமே அன்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாசலிலிருந்தும் என்னை திரும்ப வைத்தது . முதுமை ,தளர்வு ,நலிவு எல்லாம் இந்த உடலுக்கு சகஜம் எழுத்தாளன் இவகைகளை கடந்தவன்.  பேச வேண்டிய தருணங்களை விட்டு விட்டு இப்போது அவரை சந்தித்து என்ன செய்ய போகிறேன் என்றொரு தயக்கம் .

பொதுவாக பிரபஞ்சன் மருத்துவமனை செல்வார் .மறுவாரமே நண்பர்கள் எழுத்தாளர்கள் புடை சூழ ஏதேனும் மேடையில் காட்சி தருவார் .இம்முறையும் அதுவே நிகழும் என எண்ணி இருந்தேன் . ஆனால் இம்முறை அவரது நுரையீரல் தொற்று அவருக்கு மிகுந்த இடர் அளித்து விட்டது .ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் . அவரை பார்க்கப்போகிறேன் என நண்பர்களுக்கு தெரிவித்திருந்தேன் . மணிமாறன் பர்மிஷன் போட்டு விட்டு ,ஹரிகிரிஷ்ணனுடன் இணைந்து வந்தார் .மயிலாடுதுறை வந்து இணைந்து கொண்டார் .திருமா வளவன் அவரது பைக்கில் மருத்துவமனை வாசலுக்கே வந்து சேர்ந்தார் .

பிரபஞ்சனின் நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் ,அவரது மருத்துவ சிருஷைகளுக்கு தொல்லை தராமல் மிக சரியாக பதினைந்து நிமிடம் அவருடன் பகிர்ந்து கொண்டோம் .  முகத்தில் தளர்வோ ,குரலில் நலிவோ இன்றி புன்னகையுடன் எங்களை வரவேற்றார் .நண்பரை காபி போட சொல்லி எங்களை உபசரிக்க முயன்றதை நாங்கள் மென்மையாக மறுத்தோம் .ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டோம் .

பிரபு பிரபஞ்சனின் கண்ணீரால் காப்போம் நாவலிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் சார்ந்து பேசினார் .

”நீண்ட நாள் வாசகர் போலயே …ரொம்ப சந்தோஷமா இருக்கு …இப்போ அந்த கதை பத்தி பேசுனது ” என்றார் பிரபஞ்சன் .

அந்த நாவலில் இருந்து முன்னகர்ந்து ஹரி புதுவை வரலாறு சார்ந்து சில கேள்விகள் கேட்டார் . உத்வேகமாக பேசத்துவங்கிய பிரபஞ்சன் குறிப்பிட்ட பெயர் நினைவில் எழாமல் சிறிது நேரம் மௌனம் காத்தார் .

”ரெண்டு மணி நேரத்துக்கு மேல பேசுறத்துக்கு இருக்கு .பாருங்க ஆரம்பிக்க முடியல .இன்னொருநாள் இது பத்தி பேசலாம் ” என்றார் .

”சீக்கிரம் எழுந்து வந்து ஏதாவது இலக்கிய சண்டை போடுங்க சார் ” என்றேன் .

”சண்டை ”… புன்னகைத்தவர் ”அது சண்டை இல்லை .மறுப்பது .உங்கள் தர்ப்பை முன்வைத்து பெரும்பான்மையான பொதுப்பார்வை கொண்ட தரப்பை மறுப்பது . மறுப்பது எனக்கு ரொம்ம்ப பிடிக்கும் .மறுப்பவன்தானே எழுத்தாளன் .  மறுப்பு ….மறுப்பு …மறுப்பு ….” தனக்கு தானே என மும்முறை சொல்லிக்கொண்டவர் . இயல்பாக என் கையில் இருந்த அவருக்கான ப்ரோட்டீன் பௌடர் போத்தலை வாங்கி என்னதிது என்றார் . உண்ணும் முறையை கேட்டு உதவியாளர் வசம் அளித்தார் .

”சிரமமாத்தான் இருக்கும் .இப்போ புத்தகம் வாசிக்க முடியுதா சார்” என்றேன். அவர்  வலது கை மோதிர விரலாலும் கட்டை விரலாலும் உதட்டு விளிம்பு கோடுகளை ,மேல் கீழாக வருடியபடி  ”நான் வாசிச்சு பிறகுதான் இந்த புத்தகமெல்லாம் அச்சுக்கே போச்சி .அப்டின்னு சொல்றத்துக்கு இப்பவும் சில புத்தகங்கள் இருக்கு …..படிக்கணும் ” என்றபடி புன்னகைத்தார் .

நான் இந்த வருட விஷ்ணுபுர விருது எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு என்பதை தெரிவித்தேன் .”நல்ல தேர்வு .அழைப்பிதழ் குடுங்க ,நேரமாகும் உடலும் ஒத்துழைக்கும் அப்டின்னு நம்புறேன் .வரேன் ” என்றார் . கைகுலுக்கி விடை பெற்றோம் . விடை பெறுகையில் அவரை கண்ட மேடை ஒன்று நினைவில் எழுந்தது .

சோட்டா அரசியல்வாதி பங்கு பெறும் ஒரு இலக்கிய நிகழ்ச்சி .பிரபஞ்சன்தான் சிறப்பு அழைப்பாளர் . பிரபஞ்சன் அவரது வழக்கப்படி இறுதியாக அவர் பேசுவதற்கு முன்பு  அவரது வழமை போல இறுதியாக மேடைக்கு என்ட்ரி கொடுத்தார் .வேறு வழி இன்றி அந்த அரசியல்வாதி எழுந்து வணங்க வேண்டியது ஆகிவிட்டது .  அவர் முடிவு செய்தார் தான் பேசும்போது ப்ரபஞ்சனை மட்டம் தட்டுவது .இறுதியாக பிரபஞ்சன் பேசிக்கொண்டிருக்கும் போது தொண்டர்களுடன் வெளியேறி ,கூட்டத்தை பிரபஞ்சனை சீண்டுவது என .

அரசியல்வாதி பேசும்போது சொன்னார் ”பத்திரிக்கையை பார்த்தீர்களா எல்லோருக்கும் கீழே இருக்கிறது உங்கள் பெயர் .எல்லாவற்றுக்கும் மேலே முதலில் இருக்கிறது எனது பெயர் ” உடன்பிறப்புகளின் கைதட்டில் அரங்கம் அதிர்ந்தது . பிரபஞ்சன் நேரடியாக பேச்சை துவங்கினார் ”எழுத்தாளர்கள் எல்லோருக்கும் கீழேதான் இருக்க வேண்டும் .அவன் இன்றி ஒரு சமூகம் எழுந்து நிற்க முடியாது  ஏனென்றால் அவன் பூமி . அகழ்வாரை தாங்கும் நிலம் அவன் . அது அவனது பொறை . பூமி தனது பொறையை தவிர்த்தால் என்ன ஆகும் ? மாட மாளிகைகளும் ,மாமனிதர்களும் சருகென உதிர்வார்கள் .மாறாக பூமி அப்படியேதான் இருக்கும் . எப்படி உங்களுக்கு முன்பு இருந்ததோ அவ்வாறே உங்களுக்கு பின்னும் இருக்கும் ”.  பின்வரிசையில் இருந்த நான் எழுந்து நின்று கூச்சலிட்டு கைதட்டினேன் .

காலம் தனது இரக்கமற்ற நியதி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கிக்கொண்டு இருக்கிறது .மேடையில் நிற்கும் எழுத்தாளன் எனும் ஆளுமை என்ற ஒன்றே இனி கிடையாதோ என தோன்றுகிறது .கைகுலுக்கி விடை பெறுகையில் சொன்னேன் .”வாங்க சார் அடுத்த மேடைல சிந்திப்போம் ”

”கண்டிப்பா ” என்றபடி புன்னகையுடன் விடை கொடுத்தார் பிரபஞ்சன் .

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைநைபால் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகூப்பிடுதூரத்துத் தெய்வங்கள்.