கிறித்தவ இசைப்பாடல்கள் -கடிதம்

abira

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

அன்புள்ள ஜெயமோகன்

கிறிஸ்தவ பாடலாசிரியர்கள் கட்டுரையை மறுபடியும் படித்து மகிழ்ந்தேன்.  பேராசிரியர் ஜான்சன் அவர்களின் புத்தகத்தை படித்தபோது எழுந்த எண்ணமே மறுபடியும் வந்தது.  எத்தனை கிறிஸ்தவர்கள் இவற்றை வாசித்திருப்பார்கள் என்பதே அது .   தாங்கள் எழுதியபடி விவிலியத்திற்கு அடுத்து கிறிஸ்தவ பாடல்கள் இலக்கிய மற்றும்  இசைச்சிறப்பு கொண்டவை.  ஆனால்  இந்தத் தலைமுறை கிறிஸ்தவர்களில்  பலர் கீர்த்தனை பாடல்களின்மகத்துவத்தை அறியாதவர்கள்.  ஞாயிறு ஆலய வழிபாடுகளில் ஒரே ஒரு பாடல் மட்டுமே காணிக்கை சேகரிக்கும்போது பாடப்படுகிறது. அதிலும் தற்போது தொகுக்கப்பட்டுள்ள 336 பாடல்களில் வெறும் 20 பாடல்களே திரும்பத் திரும்ப பாடப்படுகின்றன.  அவையும் பெரும்பாலும் அவற்றின் சொந்த ராகங்களில் அல்லாமல் மேற்கத்திய இசையின் தாக்கத்தோடு பாடப்படுகின்றன.  வரும்  தலைமுறையினர் இப்பெருஞ்செல்வத்தை முற்றிலும் இழந்து விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.

கிறிஸ்தவ இலக்கிய சங்கம் பதிப்பித்துள்ள கீர்த்தனை பாடல்கள் தொகுப்பின் முதல் பாடல் எச். ஏ. கிருஷ்ணபிள்ளை எழுதிய ‘சத்தாய் நிஷ்களமாய்’ என்று தொடங்கும் பாடல். இது ‘பொன்னார் மேனியனே’ என்று தொடங்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் போன்றே ஒலிக்கும். இதைத் தொடர்ந்து கடவுள் துதி, கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல், மனித வாழ்வின் எல்லா சூழ்நிலைகள், திருநாட்கள் குறித்த பாடல்களை கொண்டு கடைசியில் இந்திய நாட்டிற்கான வேண்டுதலோடு முடிகிறது.  இப்பாடல்களுக்கு ஒப்பான இலக்கிய, பக்தி சிறப்புடைய பாடல்கள்  கடந்த ஐமபது ஆண்டுகளில் வெகு சிலவே எழுதப்பட்டுள்ளன.  தமிழ் கிறிஸ்தவர்கள் இப்பாடலாசிரியர்களை என்றும் நன்றியோடு நினைக்கவேண்டும்.

மதம் மாறிய தமிழ் கிறிஸ்தவர்கள் பெற்றவை நிறைய என்றாலும் இழந்தவையும் கணிசமானவை. அதில் முக்கியமானது தங்கள் சொந்த பண்பாட்டிலிருந்து அந்நியப்படுதல். அவர்களை தங்கள் மண்ணோடு பிணைக்கும் வேர் கீர்த்தனை பாடல்கள் மட்டுமே. அடுத்து கிறிஸ்தவர்கள் தங்கள் இந்து சகோதர சகோதரிகளின் மத நம்பிக்கையை சமநிலையோடு அணுக இப்பாடல்கள் சிறந்த வழி. ‘சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி’ (ல. பொன்னுசாமி) என்னும் வரியில் சிவனும் கிறிஸ்துவும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள் . எல்லோரும் பாடி இன்புறலாம்.

நீங்கள் அறிந்ததையே எழுதினாலும், எழுதியபின் நிறைவாக இருக்கிறது.

அன்புடன்
ஏ. நிக்கோடிமஸ்

 

அன்புள்ள நிக்கோடிமஸ்,

 

ஜான்சன் அவர்கள் கிறித்தவ காப்பியங்களைப்பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். அவற்றிலுள்ள இந்திய –தமிழ் பண்பாட்டு அம்சங்கள் முக்கியமானவை. மதமாற்றம் பண்பாட்டுத் துண்டிப்பாக அமையவேண்டும் என்பதில்லை. பண்பாட்டு உரையாடலாக அமையும்போதே உண்மையான மத நல்லிணக்கம் அமைகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்துமதமும், பௌத்தமும் சென்றபோது அங்கிருந்த பண்பாட்டுக்கூறுகளை உள்வாங்கி தங்களை உருமாற்றிக்கொண்டு தனியானதோர் பண்பாட்டுவெளியாக தங்களை தகவமைத்துக்கொண்டன. அதற்குச் சிறந்த உதாரணம் ஆங்கொர்வாட் [கம்போடியா] பரம்பனான் [இந்தோனேசியா] ஆலயங்கள்.

பேரா ஜேசுதாஸன் கிறித்தவக் கீர்த்தனைகளில் தேர்ச்சியும் ஆர்வமும் கொண்டவராக இருந்தார். அவரே நல்ல கீர்த்தனைகளை எழுதியிருக்கிறார். இன்று அழியாது பேணவேண்டிய ஒரு மரபு அது

 

ஜெ
சில கிறித்தவப்பாடல்கள்
ஐயையா, நான் வந்தேன்
கேட்கப்படுகின்றனவா பிரார்த்தனைகள்?
கிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்
கிறிஸ்தவ இசைப்பாடல்கள்- கடிதம்
தமிழில் சிறுபான்மை இலக்கியம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதையின் சொற்கள்
அடுத்த கட்டுரைபித்து – மூன்று கவிதைகள்