அன்புள்ள ஜெ.,
இலக்கியத்திற்காக தனி தொலைக்காட்சி “சானல்” சாத்தியமா? எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா?
அன்புள்ள,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள கிருஷ்ணன்
இலக்கியத்துக்கான தொலைக்காட்சிச் சானல் சாத்தியமே – யூ டியூபில். மற்ற சானல்கள் பெரும்பாலானவை இன்று நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன,, சினிமாவுக்காகவே நடத்தப்படுவன உட்பட. ஏனென்றால் அவற்றுக்குத்தேவையான அலுவலகம், ஊழியர்கள், பிற தொழில்நுட்ப அமைப்புகள் செலவேறியவை. மறுபக்கம் தொலைக்காட்சிகளுக்கான விளம்பர வருவாய் குறைந்தபடியே செல்கிறது. இணையம் வழியான தொடர்புகளும் விற்பனையும் பெருகிவரும் சூழலில் இணையவழி விளம்பரமே இன்று பெரும்பாலான நிறுவனங்களால் விரும்பப் படுகிறது [என்னிடம் ஒரு விளம்பர நிறுவன நிபுணர் சொன்னது. தொலைக்காட்சி விளம்பரம் ஹெலிகாப்டரில் இருந்து துண்டுப்பிரசுரங்களை வீசுவது. இணையவழி விளம்பரம் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி கையில் கொடுப்பது]
ஆனால் யூடியூப் சானலாக ஆரம்பித்து, செலவே இல்லாமல் இன்று தொலைக்காட்சிகளை நடத்தலாம். தன்னார்வர்கள் உழைக்கவேண்டும். செய்திகள் தொடர்ந்து வர அவர்கள் ஒரு பெரிய குழுவாக இயங்கவேண்டும். இப்போதே ஸ்ருதிடிவி அப்படித்தான் நடைபெறுகிறது. ஆனால் அது நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்கிறது.
ஆனால் தீவிர இலக்கியம் பேசப்படுமென்றால் பெரிய அளவில் விளம்பரம் வராது . ஆகவே செலவில்லாமல் நடத்தினாலொழிய தொடர்ந்து நடத்தமுடியாது . அந்த தொலைக்காட்சியை ‘அனைவருக்கும் உரியதாக’ ஆக்கினால் விளம்பரம் வரும் என நினைத்து தரத்தை இறக்கினால் அந்த சேனலின் தனித்தேவையே அடிபட்டுப்போகும். அது அர்த்தமில்லாத முயற்சியாக ஆகும்.
இன்றைய இணைய ஊடகங்களின் பெரிய சவால் இது. ‘எல்லா தரப்புக்கும் பொதுவான’ ஊடகம் என்றால் ஒரு போலியான தரப்படுத்தல் அதில் வந்துசேரும். உள்ளடக்கத் தெரிவே இருக்காது. காலப்போக்கில் எல்லா குப்பைகளும் மலைமலையாகச் சேர்ந்து புறநகர் குப்பைமேடு போல ஆகிவிட்டிருக்கும் அது. அதன்பின் வாசகர்கள் இருக்கமாட்டார்கள். வாசகர்கள் தேடுவது தெரிவுசெய்யப்பட்டு தொடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை
இந்த காலகட்டம் தரவுகளின் பெருங்குவியலால் ஆனது. ஏராளமான செய்திகள் என்பதற்கு நடைமுறையில் செய்தியே இல்லை என்றுதான் பொருள். இன்று தேர்வுசெய்து தொகுக்கப்பட்ட செய்திகளே தேவை. அதாவது செய்திகள் தொடுக்கப்பட்டு ஒரு ‘பிரதி’ ஆக ஆகிவிட்டிருக்கவேண்டும். எந்தத் தரப்பாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதற்கு கறாரான ஆசிரியர்குழு ஒன்று தேவை. தெளிவான இலக்கியநோக்குடன் இயங்கும் சேனல் மட்டுமே வாசகர்களின் நம்பிக்கையைப் பெறமுடியும்
ஜெ