நெருக்கடிநிலையும் நவீன இலக்கியமும்

INDRU

அன்புள்ள ஜெ

என் நண்பர்களின் குழுவில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. நவீன இலக்கியவாதிகள் எவருமே நெருக்கடிநிலைக் காலம் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நண்பர் ஒருவர் வாதிட்டார். நெருக்கடிநிலை பற்றிய நல்ல கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளனவா? அவை யாவை?

அருண்

jaya-jaya-sangkara-10004129-800x800

அன்புள்ள அருண்,

நெருக்கடிநிலை போன்ற அரசியல் நிகழ்ச்சிகளை ‘ஆவணப்படுத்துவது’ இலக்கியத்தின் வேலை அல்ல. அது அரசியல்வாதிகள், இதழாளர்களின் பணி. பொதுவாக இலக்கியத்தில் இத்தகைய புறச்சூழல்கள் இரண்டு வகையிலேயே வெளிப்படுவது வழக்கம். ஒன்று, அச்சூழல் உருவாக்கும் அகநெருக்கடி மற்றும் மெய்யியல் சிக்கல்கள் சார்ந்து. இன்னொன்று, நீண்டகால அளவில் அச்சூழல் உருவாக்கும் வினாக்கள் சார்ந்து. பலசமயம் நெருக்கடிநிலை போன்ற அரசியல்சூழல்கள் ஓய்ந்து பலரும் மறந்து விட்டபின்னர் அவை இலக்கியவெளிப்பாடு கொள்ளும்.

தமிழில் நெருக்கடிநிலையின் அறநெருக்கடிகள், மெய்யியல் சிக்கல்கள் நவீன இலக்கியத்தில் மட்டுமே வெளிப்பட்டுள்ளன. தமிழ் அரசியலாளர்கள் மிகச்சீக்கிரத்திலேயே அதை மறந்து கடந்தனர். அவர்கள் இந்திராகாந்தியுடன் கைகோத்துக்கொண்டமையால் அது தேவையாக ஆகியது. நெருக்கடிநிலை குறித்த அரசியலாளர்களின் நினைவுக்குறிப்புகள் என தமிழில் குறிப்பிடும்படி ஏதுமில்லை. நெருக்கடிநிலை குறித்த இதழியலாளர்களின் ஆவணப்படுத்தல் என அனேகமாக ஏதுமில்லை.

தொண்ணூறுகள் வரை நவீன இலக்கியம் என்பது தமிழில் ஆண்டுக்கு மொத்தமே ஐநூறு பக்கங்கள் அளவுக்குத்தான்.  மும்மாத வெளியீடான எண்பதுபக்கச் சிற்றிதழ்கள் நாலைந்து. ஆண்டுக்கு இரண்டு நாவல்கள் வந்தால் அது வியப்புக்குரியது. அந்த எல்லைக்குள் நவீனத் தமிழிலக்கியம் ஒப்பீட்டளவில்  நெருக்கடிநிலை பற்றி மிகுதியாகவே பேசியிருக்கிறது.

நவீன இலக்கியத்தில் நெருக்கடிநிலைக் காலகட்டத்தின் நேரடியான பதிவு என அறிவித்துக்கொண்டு வெளியான முக்கியமான ஆக்கம் என அசோகமித்திரனின் ’இன்று’ நாவலைத்தான் சொல்லவேண்டும்.  ‘மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் நிரந்தரமாக வேட்டையாடப்படவேண்டும்போலும்’ என்னும் வரியில் முனைகொள்ளும் அப்படைப்பு நெருக்கடிநிலையின் அறச்சிக்கலை பல கோணங்களில் நுணுக்கமாகப் பேசியது. நெருக்கடிநிலை குறித்து இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் அதுவே முதன்மையானது. அவருடைய ‘காத்திருத்தல்’ நெருக்கடி நிலை விலகிய போது உருவான இன்னொரு அறச்சிக்கலின் ஆவணம். அசோகமித்திரனின் பல கதைகளில் நெருக்கடி நிலைக்காலத்தின் வெவ்வேறுவகையான சித்திரங்கள் உள்ளன

நெருக்கடி நிலைக்காலகட்டத்தை நிலைக்களமாகக் கொண்டு மிக விரிவாக அச்சூழலின் அரசியல் மோதல்களை, சமூக மாற்றங்களைச் சித்தரித்த மாபெரும் நாவல் பொன்னீலனின் புதிய தரிசனங்கள். அதன் கலைக்குறைபாடுகள் ஒருபக்கம் இருந்தாலும் இடதுசாரிப்பார்வையில் நெருக்கடி நிலையைச் சித்தரிப்பது என்பதனால் முக்கியமானது அது. நெருக்கடிநிலையைச் சித்தரித்த இந்திய நாவல்களில் அதுவே மிகப்பெரியது. டி.செல்வராஜின் மூலதனம் நாவலும் இடதுசாரி பார்வைகொண்ட ஆக்கம்.

முற்றிலும் வேறுகோணத்தில் நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரித்த நாவல் ஜெயகாந்தனின் ஜெயஜெயசங்கர. அக்காலகட்டத்தின் ஒடுக்குமுறைக்கும் அதை எதிர்த்த ஒர் இளைய தலைமுறைக்கும் அதற்கு முன்னால் எங்கோ நின்றுவிட்ட ஒரு பழந்தலைமுறைக்கும் நடுவே ஒரு இலட்சியவாத இணைப்பை உருவாக்கும் கனவை முன்வைத்த ஆக்கம் அது.

இலக்கியத்தின் அழகியல் இத்தகைய அரசியல்சூழல்களை உருவகமாக்கி மேலும் கூர்மைப்படுத்திக்கொள்ளும் இயல்புகொண்ட்து.  நெருக்கடிநிலை குறித்த விமர்சனம் வெளிப்படும் கதைகளில் முக்கியமானது சுந்தர ராமசாமியின் கொந்தளிப்பு. ஆத்மாநாம், காளி-தாஸ் போன்ற பல கவிஞர்களின் கவிதைகளில் அக்காலகட்டத்தின் எதிர்ப்பும் சோர்வும் வெளிப்பட்டுள்ளது இந்திரா பார்த்தசாரதி, ஜெயந்தன் ,மாலன் என பலர் நெருக்கடிநிலை மீதான எதிர்வினைகளை எழுதியிருக்கிறார்கள்.

நெருக்கடி நிலையை தமிழகம் எதிர்கொண்டமையின் வெவ்வேறு கோணங்களை, அன்றைய உளநிலைகளை, அது உருவாக்கிய அறச்சிக்கல்களை, மெய்யியல் வினாக்களை அறிய விழையும் வாசகன் நவினத்தமிழிலக்கியத்தில் உள்ள பதிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளமுடியும். அவற்றைத் தொகுத்து மட்டுமே தன் கருத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

ஜெ

அசோகமித்திரனின் ‘இன்று’

முந்தைய கட்டுரைகரடி- ஒலிவடிவில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 77