தீட்டு, சபரிமலை -கடிதங்கள்

sabari malai

தீட்டு,சபரிமலை, மதம்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

‘தீட்டு, சபரிமலை,மதம்’  படித்தேன். என்  பதின் வயதில்  தொடங்கி இன்று ஐம்பதை கடந்து  நிற்கும் நான்,  தொடர்ந்து  மதம்- கடவுள்  பற்றிய  கருத்துக்களை, விவாதங்களை,  பிரச்சாரங்களை  ஆர்வத்துடன்  படித்தும்,  அவதானித்தும்,  எனக்கென்று  ஒரு புரிதலை  உருவாக்கி  வைத்திருக்கிறேன்.   உங்கள் கட்டுரை ஒருபுதிய  புரிதலை,  வெளிச்சத்தை  உண்டாக்கியது .   தொல்குடிகளின்  நம்பிக்கைகளும்,  சடங்குகளும் தான்  கால மாற்றத்திற்கேற்ப  இன்றைய  வழிபாட்டு முறையை  அடைந்து இருக்கிறது  என்பதை புரிந்து  கொள்ளமுடிகிறது.   ஆனால், இந்த மதம்  பற்றிய  புரிதல்கள்  இந்து மத  நம்பிக்கையாளர்களுக்கு  உள்ளதா? எதிர்ப்பாளர்கள்  எப்படி தவறான அர்த்தத்தில்  புரிந்து  கொண்டு செயல்படுகிறார்களாலோ,  அதேபோல், இவர்களும் மதம் பற்றி  தெளிவான அறிவோ, புரிதல்களோ  இன்றி  வெறும்  முரட்டுத்தனமான  நம்பிக்கைகள் கொண்டு எதிர் வினையாற்றுகிறார்கள் என்று நினைக்கிறன்.

அன்புடன்,

டி. சங்கர்,

 

 

அன்புள்ள சங்கர்,

 

இந்துமதத்தின் இன்றைய பிரச்சினையே அதை முறையாகக் கற்றுக்கொடுக்க, கற்றுக்கொள்ள வழிகள் இல்லை என்பதுதான். அதை வெறும் நம்பிக்கையாக வழிபாட்டுப்பழக்கமாகவே நம்மவர் பெற்றுக்கொள்கிறார்கள். அரைகுறை அறிவுடைய மேடைப்பேச்சாளர்கள், வாட்ஸப் வதந்திகள் வழியாக மேலும் கொஞ்சம் தெரிந்துகொள்கிறார்கள். அதன் கலை, தத்துவம், மரபு ஆகியவை முறையாக எங்கும் பேசப்படுவதே இல்லை. அதற்கான அமைப்புகள் பெரும்பாலும் தேங்கிவிட்டன. மதத்தை வரலாற்றுணர்வுடன் அறிவதைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை . உண்மையில் இந்தவகையான பேச்சுக்கள் இந்துக்கள் இந்துமதத்தைப்பற்றி அறிவதற்கே பெரும்பாலும் தேவையாகின்றன

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

தீட்டு, ஆலயநுழைவு பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். இன்றைய சூழலில் இரண்டுவகையினர் மட்டுமே மதத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மதம் என்பதே மூடநம்பிக்கை, அது அழியவேண்டும் என்று ஒரு சாரார். மதத்தில் எல்லா ஞானமும் இருக்கிறது அதை மாற்றவே கூடாது என்று இன்னொரு சாரார். மதத்தை  வரலாற்று அறிவுடன் விமர்சன பூர்வமாக அறிவதற்குத்தான் இங்கே இடமில்லாமல் இருக்கிறது.

 

செல்வராஜ்

 

 

அன்புள்ள செல்வராஜ்,

 

இந்து மத்த்தை இந்திய வரலாற்றுடன், இந்திய சமூக உருவாக்கத்துடன் இணைத்துத்தான் புரிந்துகொள்ள முடியும். இந்திய சமூகம் உருவாகி வந்த நெடுங்காலப் பரிணாமத்தின் கருத்தியல் வடிவமே இந்துமதம். அதன் தத்துவ வெற்றிகளும் சரி, அதன் எதிர்மறைக்கூறுகளும் சரி இந்தப் பகைப்புலத்திலேயே பொருள்படுகின்றன. தமிழகத்தில் அறிவார்ந்த அடிப்படை இல்லாத பரப்பியக்கமான திராவிட இயக்கம் அதை அறிவுபூர்வமாக ஆராய்வதை எல்லா வகையிலும் தடுத்துவிட்டது.

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனின் இருநாவல்கள்- சுபஸ்ரீ