அன்புநிறை ஜெ,
22/07/18 – ஸியாம் ரீப்பில் மதிய உணவுக்குப் பிறகு ‘அங்கோர் தாம்’ வளாகத்துள் அமைந்த பாயோன் (Bayon) சென்றோம்.
கிபி 1181ல் அரியணை அமர்ந்த ஏழாம் ஜயவர்மனுடைய காலம் அங்கோர் வரலாற்றில் மிக உயிர்ப்பான காலகட்டம் எனலாம். கிபி 1113களில் ஆட்சி செய்த இரண்டாம் சூர்யவர்மனது காலகட்டத்தில் வைணவம் அரசமதமாக இருந்திருக்கிறது. அங்கோர் வாட் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. சூர்யவர்மன் அண்டை நாடுகளான சம்பா மற்றும் லாவோ மீது படையெடுப்புகள் நிகழ்த்தியிருக்கிறான். ‘அங்கோர் வாட்’ கட்டப்பட்ட காலம் க்மெர் வரலாற்றில் உச்சம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் அதன் பிறகு கிபி 1177ல் சாம் வீரர்கள் படை கொண்டு வந்து அங்கோரைக் கைப்பற்றியிருக்கிறார்கள். நான்கு வருடங்களுக்குப் பிறகு ஏழாம் ஜெயவர்மன் மீண்டும் க்மெர் கொடியைப் பறக்க விட்டு அரியணை ஏறியிருக்கிறான். இவனது காலத்திலேயே எண்ணிறந்த பேராலயங்களும் புத்த மடாலயங்களும் எழுந்திருக்கின்றன. பௌத்தமும் இந்து மதமும் ஒருங்கே தழைத்திருக்கின்றன.
அவனது காலகட்டத்தில் தலைநகரென ‘அங்கோர் தாம்’ எழுப்பப்பட்டிருக்கிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க ‘தா ஃப்ரோம்’, ‘பாயோன்’, ‘ப்ரே கான்’ ஆலயங்கள் எழுந்திருக்கின்றன. ‘அங்கோர் தாம்’ நாற்திசையிலும் மூன்று கி.மீ நீளமுள்ள மதில் சூழ சதுரவடிவான (ஒன்பது சதுர கி.மீ பரப்பளவிலான) வளாகம். சுற்றிலும் நாற்திசையிலும் அகழி, திசைக்கொன்றென வாயில்கள்.
அங்கோர் தாம் வாயிலை ஒவ்வொரு முறை அணுகியதும் வேற்றுலகக் காட்சியனுபவம். காற்றில் பசுமை அலையடிக்க, காணும்போதெல்லாம் அப்போதுதான் சிறு மழையில் நனைந்ததான பாவனையில் கானகத்துள் செல்லும் சாலை. வழியில் இருபுறமும் இரவில் மண்ணோடு பேசிய ரகசியங்களை ஒளித்துவிட்டு பகல் நிமிர்வைக் காட்ட முயலும் மூங்கில்கள். கடந்து செல்லும் டுக்டுக்-களில் வெளிநாட்டு முகங்கள். நிறைகுடமென கொழுத்த இளநீர் குலைகள் மற்றும் பெயரறியாத பழங்கள் விற்கும் சிறு கடைகள். சட்டென்று தொலைவிலிருந்து விரைவாக இருகரம் நீட்டி அணுகி வரும் உயர்ந்த நுழைவுக் கோபுரம். கரமென நீண்டிருப்பது, ஒருபுறம் 54 தேவர்களின் நிரை, மறுபுறம் 54 அசுரர்களின் வரிசை, பாற்கடல் கடைந்து கொண்டிருக்கிறார்கள். சாந்தமான புன்னகை தவழும் தேவர்கள் ஒன்றே போலிருக்க, தெறித்த விழிகளும் நெறித்த புருவங்களுமாய் அசுரர் முகங்களில் அத்தனை பாவனைகள்.
தலைக்குமேலே எழுந்து நிற்கும் நுழைவுவாயில் கோபுரத்தில் நோக்கறியா முகங்கள் திசைநோக்கி தன்னுள் திளைத்திருக்கின்றன. இம்முகங்களும் இங்குள்ள ஏனைய சிற்பங்களும் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டவை அன்று. பல்வேறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றென அடுக்கி உருவாக்கப்பட்டவை. அதனாலேயே ஒவ்வொரு முகங்களும் பல உணர்வுகளால் ஆனதாய் தோன்றுகிறது. எந்நேரமும் அவை அசைந்து ஏதோ பேசி விடக்கூடுமென தோன்றியது. அம்முககோபுரத்தை இருபுறமும் தாங்கும் யானைகளின் சிற்பங்கள் துதி நிலம் தொட நிற்கின்றன. உயரத்தினாலேயே குறுகலாகத் தோன்றும் வாயில். உள்நுழைந்து மறுபுறம் நீளும் சாலை இன்றிலிருந்து வேறு காலத்திற்குள் நுழைகிறது. நீள்சாலையை இருபுறமும் ஒரே கோடாக உச்சிவரை கிளைகளேயின்றி உயர்ந்து நிற்கும் மரங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. முன்னோக்கி விரையும் பயணத்தில் பின்னோக்கி விரைகிறது காலம். நாற்புற மதிலும் வாசுகியென தேவாசுரர்களால் இழுபட புவி ஆழத்தினின்று புடைத்தெழுந்தது போல அங்கோர் தாம்-இன் மையத்தில் எழுந்திருந்தது ஜெயகிரி என்றழைக்கபட்ட பாயோன். ஒன்றுள் ஒன்றென மூன்றடுக்குகளால் ஆன ஆலயம்.
வெளிப்புற சுற்றுப்பாதையின் சுவர்களில் கம்போடியாவின் வரலாற்றை சித்தரிக்கும் பல சிற்ப செதுக்குகள். அரசன் முன் அந்தணர்கள் வேள்விகள் இயற்றுகிறார்கள், பூசைகள் நிகழ்கின்றன. யானைகள் மீதும் குதிரைகளிலும், அரசப்படகுகளிலும், கொற்றக்குடைகள், பதாகைகள், கொடிகள் தாங்கிச் செல்லும் வளமை காலத்து ஊர்வலங்கள். வேற்கம்புகளும், ஈட்டியும், கேடயங்களும் தாங்கிய வீரர்களின் போர்ப் படையெடுப்புச் சித்திரங்கள். சாம்களுக்கும் க்மெர்களுக்கும் டோன்லேப் சாப் மீது நடந்த நீர்வழிப் போர்க்காட்சிகளில் பெரும்படகுகளில் வீரர்கள் செல்கிறார்கள். கீழ்ப்பகுதிகளில் அன்றாட வாழ்வியல் காட்சிகள் – சேவற்சண்டை, கோவில் மற்றும் நதிக்கரை வாழ்வின் காட்சிகள்.
உள்ளே நுழைந்ததும், சித்தம் கரைந்து நிகழ்காலத்துக்கும் அக்கோவில் உயிர்ப்புடன் திகழ்ந்த காலத்துக்குமான எல்லைகள் மறைந்து அம்முகங்களுள் தொலைந்தன. அலையலையென கல்முகங்கள். மொத்தம் ஐம்பத்து நான்கு கோபுரங்கள், அவற்றுள் பல சிதைந்துவிட்டிருக்கின்றன. ஒவ்வொரு கோபுரமும் நான்கு முகங்களாலானது, சிறியவை, பெரியவை, மேலும் பெரியவை என அடுக்குமுககோபுரங்கள் சுழன்று வர மையத்து மேடையில் கூம்பென மேலேறும் பெரிய கோபுரம். மேலே உப்பரிகைகளும் சிறுமாடங்களும் இருந்திருப்பதன் எச்சங்கள் இருக்கின்றன. எந்நேரமும் சரிந்துவிடும் தோற்றத்திலுள்ள மைய கோபுரத்தில் ஏற அனுமதி இல்லை.
இம்முகங்கள் ஜெயவர்மனின் சிலையென அடையாளம் காணப்பட்டிருக்கும் முகத்தோடு ஒத்திருப்பதால் அரசனுடையது என்றும், அவலோகிதேஸ்வரருடையது என்றும் இரு கருத்துகள்.
விளக்கவியலா புன்னகை கொண்ட முகங்கள் அந்தி வெயிலின் நிழல் ஒளி மயக்கங்களில் ‘உன்னுள் ஓடும் எண்ணத்தை அறிவேன்’ என்ற சிரிப்பாய் தோன்றியது. காலத்தின் அழிவில் மிச்சமிருக்கும் நூற்றுக்கணக்கான முகங்கள்
பித்தின் எல்லையைத் தொடும் புன்னகையோடு சூழ்ந்திருந்தன . இன்னும் சற்று நேரம் மாலை இருள் மயங்க நின்றிருந்தால் சற்றே உரக்க அம்முகங்கள் சிரிப்பதைக் கேட்கவும் முடியலாம் என்று தோன்றியது. நிலவு பொழியும் இரவுகளில் அம்முகங்கள் உன்மத்தம் கொண்டு ஒன்றோடு ஒன்று பேசவும் கூடும். அச்சிலைகள் மன்னன் காலத்தும் சிரித்திருக்கும், போல் போட் காலத்து பேரழிவுகளிலும், இன்றே போல உறைந்திருக்கும் அம்முகங்களின் சிரிப்பு. கல்லிலும் காவியத்திலும் வடித்துவிட்டவை காலம் கடந்து நிற்பதாலேயே மானுடனைப் பார்த்து சிரிப்பதற்கான தகுதியை அடைந்து விடுகின்றன போலும்.
அங்கோர் தாம் வளாகத்தின் உள்ளேயேதான் இன்னும் பல முக்கியமான ஆலயங்களும் இருக்கின்றன. எனில் மாலை ஐந்தரை மணிக்கு மேல் எந்தக் கோவிலுள்ளும் அனுமதியில்லை. இருள் கவிந்து அவ்விடத்தின் அமானுடத்தன்மை மேலும் பெருநிழலென எழுந்து கோவில்களை விழுங்கும் வேளை அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிடுகிறார்கள்.
மாலைக் கதிர் மறையும் நேரம் அங்கோர் வாட்டைச் சுற்றி வரும் நீர் அகழியின் ஆள்குறைவான மறுமுனையில் நண்பர்கள் நீரில் இறங்கினார்கள். நூற்றாண்டுகளாய் அங்கு நிகழ்ந்தவற்றின் சாட்சியான கதிரவன் அன்றைய மாலைப் பொழுதின் நீர்விளையாட்டில் தானும் இறங்க சித்தமானான்.
அன்புடன்,
சுபா