கார்மில்லா
அச்சம் என்பது….
அன்புள்ள ஜெ,
கார்மில்லாவுக்கு முன்னோடியாகக் கருதப்படும் Samuel Taylor Coleridge எழுதிய Christabel என்ற கவிதை:
https://en.m.wikipedia.org/wiki/Christabel_(poem)
https://www.poetryfoundation.org/poems/43971/christabel
சுசித்ரா
அன்புள்ள ஜெ
அச்சம் என்பது ஒரு முக்கியமான கட்டுரை. அது புனைவிலக்கியத்தின் சில அடிப்படைகளைத் தொட்டுச் செல்கிறது. புனைவு என்பதை யதார்த்தம் என்று நினைப்பவர்கள் இப்படி நடக்குமா என்ற கேள்வியின் அடிப்படையிலேயே வாசிக்கிறார்கள். யதார்த்தம் என்று புனைவு சொல்வதுகூட ஒருவகையான புனைவுதான் என்று தெரிந்த வாசகன் எந்த புனைவும் எதற்காகச் செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பிக்கொள்வான். அப்போது அவனுக்கே தெரியும் புனைவு என்பது கவித்துவம், தத்துவம் ஆகிய இரண்டுக்காகத்தான் என்று. அதை அடைந்துவிட்டால் எப்படி எது எழுதினாலும் அது இலக்கியமே. ஆகவேதான் பேய்க்கதை திரில்லர் எல்லாமே இலக்கியம்தான், அவை அந்த உச்சத்தை அடைந்தாகவேண்டும்
நீங்கள் குறிப்பிட்டபின்புதான் நான் கார்மில்லா வாசித்தேன். அற்புதமான கதை. மிக மென்மையான அச்சமூட்டும் படைப்பு அது
சந்திரசேகரன்
கார்மில்லா ஒரு முக்கியமான கதை. அதை இலக்கியம் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் கிடையாது. ஏனென்றால் பயம் என்பது ஒரு அடிப்படையான மானுட உணர்ச்சி. ஆனால் ஏன் பயம் ஏற்படுகிறது? எல்லா பயமும் ஒன்றா? எதிர்பாராத ஒன்று நடக்கும்போதோ நடக்கும் என்று நாம் நினைக்கும்போதோ வரும் பயம் சாதாரணமானது. ஆனால் நமக்குத் தெரியாத பிரம்மாண்டம் ஒன்றைக் காணும்போது வரும் பயம் ஆழமானது. அதுதான் கிளாஸிக்கலான கதைகாளில் உள்ளது
சாரங்கன்