கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ

a

அன்புநிறை ஜெ,
21/07/18 – மேகங்கள் முற்றிலும் விலகாத காலை. கதிர் விழிபடாத சிங்கையின் முற்பகலை மென்மழை நனைத்துக்கொண்டிருந்தது. எதிர்வரும் வாரத்தின் உள்ளடக்கம் விமான நிலையம் நோக்கி விரையும் பயணத்தை மேலும் பரபரப்போடு அழகாக்கியிருந்தது. ஏழு நாட்கள் கம்போடியா பயணம், மனதுக்கு நெருக்கமானவர்களுடன். விமான நிலையத்தில் ஏற்கனவே வந்துவிட்ட உங்களையும், அருணா அக்கா, சைதன்யா, அஜிதன் அவர்களையும் பார்க்க விரைந்து கொண்டிருக்கிறேன், திட்டமிட்டிருந்ததை விட சற்றுத் தாமதமாகிவிட்டது. அஜியைத் தவிர அனைவரையும் ஏற்கனவே சந்தித்துப் பழகியிருக்கிறேன். எனினும் ஏதோ ஒரு பெரும் மன எழுச்சி, படபடப்பு. அதை சீர்படுத்திக்கொள்ள முயன்றேன், இயலவில்லை.
b
ஒவ்வொரு முறையும் உங்களைக் காணும் முதல் தருணத்தின் உள எழுச்சியில் அரசவை கண்ட உத்தரன் போல பெரும்பாலும் உறைந்தே போகிறேன். அதன் பிறகு உறைந்த சிறகுகளை மெதுவாக சிலிர்த்து உலர்த்தி தன்னுணர்வுக்கு வர மிகுந்த நேரமாகிவிடுகிறது. விலைமதிப்பில்லாத நிமிடங்களில் வார்த்தைக்கு தவித்து நிற்பது இன்னும் எவ்வளவு காலமோ! எனில் நினைவு கூட்டிப் பார்க்கையில், என் தாத்தா மேஜையில் வைத்திருந்த மை ஒற்றும் காகிதம் நினைவுக்கு வருகிறது. அந்த ஏழு நாட்களின் அனைத்தும் ஒவ்வொரு நிமிடத் துளிகளும் உள்ளே சென்றிருக்கிறது. இனி பகிர்ந்து கொள்ள வேண்டியவற்றை எழுத்தில் வடிக்க முனைகிறேன். அதனினும் அணுக்கமானவற்றை உள்ளே பொதிந்து வைத்துக் கொள்வதே சிறப்பு.

 

கம்போடியப் பயணத்தை சிறு குறிப்புகளாகவேனும் எழுதி வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். முதலில் பார்த்த அங்கோர் வாட் ஆலயம் குறித்த நினைவுக்குறிப்புகள் உங்கள் பார்வைக்கு.

 

c

 

சியாம் ரீப் சென்றடைந்த மறுநாள் (22/07/18)காலைப் பொழுதில் ஏழு நாட்களுக்கான ஆலய அனுமதிச்சீட்டு வாங்கிக் கொண்டு அங்கோர் வாட் சென்றோம். முகப்பிலேயே படம் விரித்த மாநாகம் வரவேற்கிறது. கம்போடிய நிலத்தை நாகர்களின் நிலம் என்றும் கூறலாம். ஊர் முழுக்க நாகங்களின் மாபெரும் சிற்பங்கள்.

க்மெர் கலையின் உச்சம் என்று கூறப்படும் அங்கோர் வாட் நாற்புறமும் நீர் சூழ ஏறத்தாழ 400 ஏக்கர் அளவு பரந்து கிடக்கும் கோவில் வளாகம். பழமையான மைய நுழைவுப் பாதை செப்பனிடப்பட்டுக் கொண்டிருப்பதால் அருகில் மிதவைப் பாலம் ஒன்று அமைத்திருக்கிறாரகள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மனால்(ஆட்சி : 1113 – 1150) விஷ்ணுவுக்காக இவ்வாலயம் கட்டப்பட்டது. அரசனின் மறைவுக்குப் பின்னர் 27 வருடங்களுக்குப் பிறகு சாம் இனத்தவர்களால் போரில் இப்பேராலயம் அழிவை சந்தித்திருக்கிறது. அதன்பிறகு ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் சிறிது தொலைவில் ‘அங்கோர் தாம்’ புதிய தலைநகரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.  இரண்டாம் சூரியவர்மனால் தொடங்கப்பட்ட இக்கோவில் கட்டுமானம் அவனது காலத்துக்குப் பிறகு முடிக்கப்பட்டிருக்கலாம். 30கி.மீ தொலைவில் குலென் மலைகளில் இருந்து மணற்பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு நீர் வழியாகவும் யானைகளால் இழுக்கப்பட்டும் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.
d
நீர்சூழ் மதிலைக் கடந்து உள்நுழையும் வாயிலில் நின்றகோலத்தில் எண்கரத்துடன் விஷ்ணுவின் பேருரு. புன்முறுவலும் நீள்காதும் புத்தரை நினைவூட்டும் முகம். க்மெர் அரசர்கள் பௌத்தத்தையும் இந்து மதத்தையும் பின்பற்றியிருக்கிறார்கள். தந்தையும் மகனும் பௌத்தத்தையோ இந்து மதத்தையோ ஆதரித்துப் பேராலயங்கள் எழுப்புவதும், தங்களது ஆட்சிக் காலத்தின் உச்சத்தைக் காட்டும் விதமாக புதிது புதிதாகப் பெரும் கோவில் வளாகங்களை உருவாக்குவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. மேலும் அரசர்களின் முக அமைப்பில் கடவுளர் சிலைகளை அமைக்கும் வழக்கமும் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. எனவே புத்தரும் விஷ்ணுவும் ஒரே முக அமைப்பில் இருப்பது சாத்தியம்தானே. கம்போடிய கோவில்கள் அனைத்திலும் பொதுமையான ஒரு விஷயம் அவர்கள் சமச்சீர்மைக்கு வழங்கும் முக்கியத்துவம். ஒவ்வொரு ஆலயமும் இரு திசைகளிலோ நாற் திசைகளிலோ ஒத்த தன்மையுடைய சமச் சீரான அமைப்பில் எழுப்பியிருக்கிறார்கள்.
e
அங்கோர் வாட் ஆலய வளாக அமைப்பு

முதலில் நாற்புறமும் ஐந்தரை கி.மீ நீளமும் 190 மீ அகலமும் கொண்ட நீர் சூழ் அகழி – இது வெளிப்புற நான்காம் சூழ்கை என்று சொல்லலாம். அதைக் கடந்து செல்ல மணற்பாறையாலான மையப் பாதை. உள்ளே சென்றதும் மூன்றாம் சூழ்கையென உள்ள வளாகத்தில் நின்ற கோலத்தில் விஷ்ணு. அதைக் கடந்து உள்ளே சென்றால் கடந்த காலங்களின் உச்சத்தைப் பறைசாற்றும் ஐந்து கோபுரங்கள் தொலைவில் தெரிகின்றன. கோவிலின் பரப்பளவு நம்மை வந்தடையும் தருணம் அந்நீள்பாதை. இருபுறமும் புல்வெளியும் மரங்களும் இரு முகமண்டபங்களும் கொண்ட நீள் வழி; நீண்டு கிடக்கும் நாக எல்லை கொண்ட பாதை,  அங்கோர் வாட் கோபுரங்களை தலைகீழாக சலனித்துக் காட்டும் குளங்கள் வரை செல்கிறது. இரண்டாம் சூழ்கையென அமைந்த இத்தாழ்வாரத்தில் நான்கு புறமும் திசைக்கு இரண்டு நீள் செவ்வக சிற்பச் செதுக்குகள் கொண்ட கலையகம். இவை ஒரே நீள்வரிசையில் அமைந்த சிற்பச்செதுக்குகளில் மிக நீளமானதாக இருக்கலாம்.
f
இவற்றை ஒற்றை வரியில் கடந்து செல்ல இயலாது, எனில் கோவிலின் அமைப்பை விவரிக்க கடந்து உள்நுழையலாம். மைய வளாகத்திற்கு வந்து விட்டோம். உயரமான மேடையில் ஓங்கி நிற்கும் கோபுரங்கள். நான்கு துணை கோபுரங்கள் சூழ நிற்கும் மைய விமானம். அங்கோர் வாட் மேரு மலையை குறிப்பதாக சொல்கிறார்கள். நடு விமானம் மிக உயரமானது. ஏறி உள் நுழைவதற்கு வட கிழக்குத் திசையில் உள்ள கோபுரம் மட்டுமே திறந்துவிடப்பட்டிருக்கிறது. அங்கிருப்பது மிகவும் செங்குத்தான படிகள். பழைய படிகள் குரங்குகள் போலத் தொற்றி ஏறும் விதமாக இருக்கிறது. அரசர்களும் குடிகளும் எவ்விதம் ஏறி இறங்கினார்கள் எனத்தெரியவில்லை. தினமும் ஏறியிருப்பார்கள் எனில் உடற்கட்டு செம்மையாகவே இருந்திருக்கும்!!

சுபஸ்ரீ
சுபஸ்ரீ

இப்போது தனியாக மரப்படிகள் அமைத்திருக்கிறார்கள். அதுவே ஏறும் ஒவ்வொரு படியை மட்டும் மனதிலிறுத்தி ஏறினாலே சாத்தியம் எனும் வகையில் உயர்ந்து நிற்கிறது. உள்ளே அனைத்து கோபுரங்களையும் இணைக்கும் வழிகளினூடாக நடந்து சென்று கருவறைகளைக் காண முடிகிறது. விஷ்ணுவுக்கான ஆலயம் சிறிது காலத்துக்குப் பிறகு பௌத்த ஆலயமாகி இருக்கிறது. இன்று ஓரிரு ஒழிந்த கருவறைகளும், சிலவற்றில் புத்த பெருமானும், பல சிதைந்த சிற்பங்களும் காண முடிகிறது. இந்த நான்கு கோபுரங்களுக்கு இடையேயான முற்றங்களும் முன்னர் நீர் நிறைந்திருக்கின்றன. டோன்லே சாப்(Tonle Sap) மடியில் வளர்ந்த நாகரீகம் என்பதாலோ என்னவோ நீர் க்மெர்களின் வழிபாட்டில் முக்கிய இடம் வகுத்துள்ளது. ஏறத்தாழ அனைத்து வழிபாட்டு இடங்களும் நீர் சூழ அமைந்திருக்கின்றன. எல்லாத் திசையிலும் திறந்த சாளரங்கள் வழியாகக் கம்போடியக் கானகம் அள்ளி வீசும் காற்று வந்து நிறைகிறது.
20180722_092939
இரண்டாம் நிலையின் சிற்ப செதுக்குகள்:

  1. மேற்குதிசை –தென்  பாகம்: 

நாம் நுழைவது மேற்கு வாயில் வழியாக. மேற்திசையில் தென்புற செதுக்குப்பலகம்(Panel) குருஷேத்திர யுத்தம். இடப்புறம் கௌரவ சேனை; அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மர். வலப்புறம் கிருஷ்ணன் முன்னிலையில் நிற்கும் பாண்டவர் படை. விதவிதமான ஆயுதங்கள், கேடயங்கள், போரின் உச்ச விசையில் நிகழும் படைக்கல மோதல்கள், ஒருபுறம் நுழைந்து மறுபுறம் வெளிவந்த கணைகள், ஈட்டிகள். செந்நாவேங்கையின் தருவாயில் இன்றைய வியாசரோடு சென்று அதைப் பார்பபது மிகப் பெரிய மன எழுச்சியை அளித்தது. நாங்கள் அமர்த்திக் கொண்ட வழிகாட்டி பெரும் பிரயத்தனத்துடன் நாபிக்கமலத்திலிருந்து மூச்சை விட்டு ராமாயண மகாபாரதக் கதைமாந்தர் பெயர்களை உச்சரித்துக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ‘நீங்கள் அனைவரும் இந்தியர்கள்தானே, மகாபாரதம் எனும் கதையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?’ என அவர் கேட்க ஜெ புன்னகையுடன் நின்றது நகைமுரண் தருணம்.

அங்கோர்வாட் வரைபடம்
அங்கோர்வாட் வரைபடம்

தென்மேற்கு மூலையில் கைலாய மலையைப் பெயர்க்க முயற்சிக்கும் ராவணன், காமனை எரிக்கும் சிவன், வாலி வதம் செய்யும் ராமன், ஆயர் பூசை ஏற்கும் கண்ணன்.

  1. தென் திசை – மேற்கு பாகம்:

சூரியவர்மனின் படை சாம்களை எதிர்த்து நடத்தும் போர்க்காட்சி. மலை உச்சியிலிருந்து படையைக் களம் நோக்கி செலுத்தும் சூரியவர்மனை இடதுகோடியில் காண்கிறோம். குடைகளின் எண்ணிக்கை தளபதிகளின் அதிகார நிலையைக்காட்டுகிறது. நடுவில் மீண்டும் படையின் முண்ணனியில் சூரியவர்மன். இது ஒரு நகரும் காட்சியெனப் படுகிறது.

w

 

  1. தென் திசை – கிழக்கு பாகம்:

இங்கு சொர்க்கமும் நரகமும் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. மேல் வரிசையில் நேராக சொர்க்காரோஹணம். நடுவில் எமதர்மன் சித்ரகுப்தனின் உதவியோடு தீர்ப்பு வழங்கி மேலே சொர்க்கத்துக்கோ கீழே நரகத்துக்கோ அனுப்பி வைக்கிறார். இந்து மதத்தின் முப்பத்தேழு சொர்க்கங்களில் ஒன்றிற்கோ முப்பத்திரண்டு நரகங்களில் ஒன்றிற்கோ மாண்டவர்கள் செல்வதாகக் குறிப்பு அருகே இருக்கிறது. சொர்க்கத்தை விட நரகத்தின் சித்தரிப்பு மிக விரிவாக நுணுக்கமாக இருக்கிறது. அப்படித்தானே இருக்கமுடியும். மண்ணில் சுவாரசியமான விஷயங்களை செய்தவர்கள் அங்குதானே செல்லக்கூடும். சொர்க்கம் அன்னப்பறவைகளில் பறந்து செல்வதாக இருக்கிறது. நரகமோ தீயில் வாட்டியும், கூர்மையானவற்றால் குத்தப்பட்டும், கொடு விலங்குகளால் கிழித்தெறியப்பட்டும் பலவகையான சிற்பங்கள். இதுபோன்ற கொடூரமான காட்சிகளுக்கு கலையில் இவ்வளவு பெரிய இடமிருப்பதை இங்குதான் பார்க்கமுடிகிறது.

ddd

 

  1. கிழக்கு திசை – தென் பாகம்:

பாற்கடல் கடையும் காட்சி. இடப்புறம் அசுரர்களும் வலப்புறம் தேவர்களும் வாசுகியைப் பிடித்திழுக்க, நடுவே விஷ்ணு. மேலே கந்தர்வர்களும் அப்சரஸ்களும். கீழே கடலில் நீர்வாழ் உயிரினங்கள், அசுரர் புறம் இருக்கும் முதலைகள் மிகு சீற்றத்துடனும், தேவர் புறமும் சாந்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

5. கிழக்கு திசை – வட பாகம்:

கிருஷ்ணர் அசுரர்களுடன் புரியும் போர்.

  1. வட திசை – கிழக்கு பாகம்:

முந்தையதின் தொடர்ச்சி போல இதுவும் கிருஷ்ணனின் போர்க்காட்சிதான். பாணாசுரனை எதிர்க்கும் கிருஷ்ணர். வெண்முரசில் இருட்தவம் முடிந்து சுழன்றெழும் நற்காட்சியடன் பாணாசுரன் கரமறுத்துக் களம் நுழையும் இளைய யாதவர் கண்ணில் எழுகிறார். சகஸ்ரபாகுவாக பாணாசுரன்.

  1. வட திசை – மேற்கு பாகம்:

    g

 

தேவாசுர யுத்தம்

வடமேற்கு மூலையில் விஷ்ணு பிற கடவுளர் விண்ணப்பத்தை ஏற்று மண்ணிறங்கி வருதல், சீதையின் சுயம்வரத்தில் ராமன் அம்பு தொடுத்தல் ( ஆம் சிவதணுசு முறியவில்லை) முதலிய சிற்பங்கள்.

  1. மேற்கு திசை – வட பாகம்:

 

சிம்மங்கள் பூட்டிய தேரில் வரும் இலங்கையரசனோடு, அனுமன் சுமந்த ராமன் தலைமையில் வானர சைன்யம் நடத்தும் போர்க்காட்சி. வானரங்கள் திசைக்கொன்றாக ஏதேதோ நிலையில் எதிரிப் படையின் கழுத்தைக் கடித்தும், காலைக் கவ்வியும், தலைகீழாக இழுத்தும் நடந்து கொள்ளும் விதம், வானரப் படையிடம் சிக்கிக் கொண்ட இராவண சைன்யத்திற்காக இரக்கம் கொள்ள வைக்கிறது.

இவற்றைத் தவிர பல இடங்களில் அப்சரஸ்களின் சிலைகள் இருக்கின்றன. ஆடையணிகளின் வேறுபாடு மட்டுமல்ல, சாமுத்ரிகா இலக்கணம் அந்த ஊருக்கு வேறாக இருக்கலாம், இந்தியச் சிற்பங்களின் தாமரை விழிகள் இல்லை, சற்றே தடித்த மேல்உதடுகளும் சிறிய முலைகளும் வயிற்றில் கை வைத்து நிற்கும் விதமும் வேறு விதமாக இருக்கிறது.

முதல் நாள் சில மணிநேரங்கள் வழிகாட்டியின் துணையோடு முக்கியமான பகுதிகளை அடையாளம் பார்த்துக் கொண்டு வந்துவிட்டோம். இறுதிநாள் கபால் ஸ்பீனுக்குப் (ஆயிரம் லிங்கங்களின் ஆறு) பிறகு மதியம் மீண்டும் அங்கோர் வாட். நிதானமாக மூன்று மணி நேரம் மேற்கூரிய சிற்பப்பலகங்களை அன்றுதான் காண முடிந்தது.

bb

பின்புற வாயிலின் வழியாக (கிழக்கு நுழைவாயில்) உள்நுழைந்தோம். பசுமை முற்றாகப் போர்த்திய ஒரு புறமண்டபத்தில் வானரம் ஒன்று அமர்ந்திருக்க வேறு நடமாட்டங்கள் இல்லை. அந்த அமைதியில் அங்கோர் வாட் வேறு ரகசியங்களோடு புலப்பட்டது. அதன் உருவாக்க காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான சிற்பிகள், தச்சர்கள், மண்ணும் கல்லும் சுமந்த அடிமைகள், இப்பெரும் கனவை சுமந்த மன்னன், அவனது மேன்மையான காலத்தில் அங்கு நிகழ்ந்திருக்கக்கூடிய விழாக்கள், அதன் பின்னர் அக்கோவில் கண்ட அனேக ஆக்கிரமிப்புகள், உருமாற்றங்கள், கைவிடப்பட்டு கானகம் விழுங்கிய காலகட்டம், மீண்டும் கண்டடையப்பட்ட பொழுதின் மீவியப்பு தருணங்கள், புனரமைப்புப் பணிகளின் நாட்கள், இன்றைய தற்காட்சிப்(seflie) படங்களில் வெறும் பின்புலமென சுருங்கிப் போகும் இம்மாபெரும் நாகரீகம் – இவையனைத்தையும் ஒரு மாபெரும் காலநகர்வு படமெனப் (time lapse) பார்க்கக் கூடிய சாத்தியம் அந்த வானரத்தின் குலநிரையின் கண்களில் இருக்கலாம். ‘எத்தனை பார்த்திருக்கிறேன்!’ என்பதான பாவனை.

vv

மாலை ஐந்தரை மணிக்கு எல்லாக் கோவில்களும் அடைக்கப் பட்டு விடுகின்றன, அதன் பிறகு உள்நுழைய அனுமதி இல்லை. கோவிலை விட்டு  வெளியேறும் தருணம், கடல் வானத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது போல அலையலையென கருமேகங்கள் உருண்டு புரண்டு வானைக் கருமை பூசி, பசுமை பாய்ந்த கரிய மணற்பாறைக் கோவில்களை மேலும் மயக்குறு அழகுக்குள்ளாக்கின.

மீண்டு, வெளியேறி நீர் எல்லையின் கரையில் காற்றோடு கலந்து சூழ்ந்திருக்கும் க்மெர் குடியின் ஆன்மாக்களோடு சில நேரம் அமர்ந்திருந்தோம். கலை எனும் தூரிகையால் கனவுகள் தொட்டெழுதி காலம் எனும் பரப்பில் மானுடம் வரைந்த ஒரு சிறு சித்திரம் – அங்கோர் வாட்.

 

 

மிக்க அன்புடன்

சுபா

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68
அடுத்த கட்டுரைகருத்துரிமையும் கேரளமும்