கிளி சொன்ன கதையின் சொற்கள்

ramayanam

கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு

உங்களின் படைப்புகளில் வரும் தேடல் நிறைந்தவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நெருக்கமானவை. இந்தக் கதையை வாசிக்கும்பொழுது திசைகளின் நடுவே கதை ஞாபகம் வந்தது. உங்களின் பழைய கதைகளை மறுமுறை படித்துவிட்டு எழுதவேண்டும். சிறுவயதிலிருந்து எதைப்பற்றி யோசிக்கிறோம் எவ்வாறு மனம் நாம் காண்பவற்றைப் பின்னுகிறது என்பது அழகான விஷயம். எனக்கு என் கல்வி வாழ்க்கையில் ஒன்றும் ஞாபகமில்லை.

ஆனால் ஒரு முறை என்னுடைய ஆசிரியை மூளை பற்றி சொன்னார். மாம்பழம் என்றதும் நம் மனம் அதன் வாசனை அதன் நிறம் சுவை எல்லாத்தையும் கற்பனை செய்கிறது என. அது எனக்கு அந்த வயதில் பெரிய பொக்கிஷம். அதைவைத்தே பலநாள்கள் யோசித்திருக்கிறேன். நீங்கள் கதையில் அளித்திருக்கும் விவரணைகள் அப்படியே அந்த வாழ்க்கைக்குள் எடுத்துச்செல்கின்றன. நானும் ஒரு பையனாக இருந்தால் இவ்வளவு நேரம் தெருத்தெருவாக கோயில் கோயிலாக குளிரான பிரதேசங்களில் சுற்றிக்கொண்டிருப்பேன்.

நிஜமாக. அனந்தனின் நினைப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லாக்குழந்தைகளும் யோசிக்கத்தான் செய்கின்றன. சைதன்யாவுடைய சிந்தனைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் உங்கள் மனநிலையை தேடுவதை அப்படியே எழுதுகிறீர்கள். பின்தொடரும் நிழலின் குரல் வாசிக்க ஆரம்பித்தேன். ஆச்சரியமாக இருந்தது. இதைவிட முக்கியமானது வளரும் பிள்ளைகளுக்கு வேறு இல்லை. அப்பாவின் மேலுதட்டின்மேல் உள்ள மீசையில்லாத இறுக்கத்தை மட்டும் பார்க்கும் அனந்தன். எனக்கு அந்த அப்பாவின் உருவம் பிடித்தது.

ஆனால் வக்கீலின் பேச்சிற்கு அவருடைய மறுமொழிகள் எதிர்வினைகள் அதன்பிறகு கொஞ்சநேரம் அவரைப் பிடிக்கவே இல்லை. அதுவரை கதை மிக அணுக்கமாக சுற்றிப்பார்க்க செல்வதுபோல இருந்தது. கதை சுற்றிப்பார்த்தல். நன்றாக இருக்கிறதில்லையா. இதன் பிறகு கேள்விகள் வந்துவிட்டன. அது எனக்கு பிடிக்கவில்லை. முழுப்பிரக்ஞையுடன் திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை ரொம்ப போராக கேவலமாக இருக்கிறது. சூழல் பருவம் தொடர்ந்து வீட்டின் சுவையும் நெருக்கமானது.

இப்பொழுது திருவரம்புக்கு வந்து அந்தகுடும்பத்தை பார்த்ததுபோல இருந்தது. அந்த சூழல் எனக்கு மிகவும் அணுக்கமாக இருந்தது. மீன் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது. சில இடங்களில் பெரியவர்களின் குறுக்கீடு இடைஞ்சலாக இருந்தது. கதையில் நிறைய வழக்குகளின் பொருள் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் எல்லாமே சொற்றொடர்களில் கதையோட்டத்தில் புரிந்தது. ஆசான் என்றால் என்ன அர்த்தம். அப்பா ஒருநாள் சொன்னார். ஆசான் என்று ஜோசியர்களைச் சொல்வார்கள் என்று. அப்பா சொல்கிறார். அவர்களிடம் தெய்வம் நின்று பேசும் என்று. அவர்கள் ஈரமுண்டுடன்தான் இருப்பார்கள் என்று. அவன்கூப்டா தெய்வம் வரும் என்றார்.

விஷ்ணுபுரத்தின் தோற்றுவாய் ஞாபகம் வந்தது. அப்பா எப்போதும் சொல்வார். கேரளாவில்தான் கோயில்களில் தெய்வம் பேசும் என்று. எனக்குக்கூட என் அப்பா வைகானச ஆகமம் செய்வதாகக் கூறுவார். தாந்தீரிகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. பெருமாள் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கலாம். நானும் திருவட்டாறு வந்தேன். இங்கு உள்ள கோயில்களைப்போல இல்லை. எனக்கு பிடித்திருந்தது.

இன்னொன்று கூட இருக்கிறது. அங்கு வருகையில் அது ஒரு இடத்திற்கு வந்ததுபோலவே இல்லை. சிலவற்றை அனந்தனைப்போல சொல்லமுடியவில்லை. உள்ளே நினைப்புகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அது ஒரு நதிபோல. இதுபோன்ற ஒரு நினைவுகளுக்கு ஆழ்மனம் அதிகம் விழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு முறை நான் இரவில் படித்திருக்கும்பொழுது சில நாள்களுக்கு முன், அப்பா வெளிச்சம் போட்டார். ஒரு திடுக்கிடல் அவ்வளவு ஆழமாக மனம் அதிர்ந்தது.

இந்த நிலைதான். இந்தக் கதையில் இதுபோல ஒரு இடம் வருகிறது. காற்றின் ஓலம் சுவர்கள் மாடங்களை அறையும். காலையில் எழுந்தவுடன் அந்தக் கிளி ஒரு திகைப்புடன் விலகுவது. ராமாயணம் வாசிப்பதுபற்றி கேட்கவேண்டும். கிளிசொல்லும் ராமாயணம் இன்னும் கொஞ்சம் கேட்க ஆசையாக இருக்கிறது. அடுத்ததாக ஏழாம் உலகம்.

அந்த வார்த்தைகள். வார்த்தைகள் பழகாதது வருத்தமாக இருந்தது.

கடவம்

வள்ளிக்கூடை

மாந்தயன்

பிறுத்தி

கையாலை

ஒதிரம் கடகம்

ஆ என்றம்மே எனிக்கி வய்யாயே

அரைத்தவி

ஆதாரப்பெட்டி

சீனச்சட்டி

அருவட்டி

பிரிமணை

ஆளோகரி

சத்தியை

ஓதம்

குந்தம்

வாசி

அங்களம்

கும்மாயம்

கிளிவாதில்

சுட்டித்துண்டு

கீழ்க்கழகம்

எட்டும்பொட்டும் திரியாத்த பய

தொண்டும் சகிரியும்

கைமி

சீந்து

புதைப்பு

கருவி

மிசிறு

ஆத்தியம்

லக்ஷ்மி

அன்புள்ள லக்ஷ்மி

***

சொற்பொருட்கள் இவை

கடவம் – பனையோலையால் செய்யப்படும் கூடைபோன்ற பெட்டி

வள்ளிக்கூடை – காட்டுக்கொடிகளால் கட்டப்பட்ட கூடை

மாந்தயன் – மடையன். மாந்தாம் என்ற நோய் வந்தவன் மந்தமானவன்

பிறுத்தி – அன்னாசி

கையாலை- மண்வேலி. மேலே முள் நடப்பட்டிருக்கும்

ஒதிரம் கடகம் – களரி விளையாட்டின் சொற்கள். முன்வந்து அறைவது. கால்வைத்து சுழல்வது

ஆ என்றம்மே எனிக்கி வய்யாயே- அம்மா என்னால் இனி முடியாது

அரைத்தவி- தவி என்றால் கொட்டாங்கச்சி அகப்பை. கொட்டாங்கச்சியை பாதியாக வெட்டிச் செய்யப்படும் சப்பையான அகப்பை அரைட்தவி

ஆதாரப்பெட்டி- ஆவணங்கள் வைக்கப்படும் பெட்டி

சீனச்சட்டி- வாணலி

அருவட்டி  பனையோலையின் விளிம்புநாரால் செய்யப்படும் சிறிய பெட்டி. நீரை வடிக்க பயன்படும்.

பிரிமணை –பானையை வைக்க வைக்கோலாலோ நாராலோ செய்யப்படும்வளையம்

ஆளோகரி – கேரளத்தில் குடும்பத்தின் பெண்களுக்கு மிகுதியாக பங்கு போட்டு அளிக்கப்படும் பங்குபிரித்தல்

சத்தியை -விருந்துணவு

ஓதம் – வீக்கம்

குந்தம் -ஈட்டி

வாசி – மூச்சு

அங்களம் – மங்கலம்

கும்மாயம் -சுண்ணாம்புக்காரை

கிளிவாதில் – பலகையில் கிளிகளை செதுக்கி உருவாக்கப்படும் பலகணி

சுட்டித்துண்டு – கீழ்ப்பகுதியில் கரை பின்னி நெய்யப்படும் துண்டு

கீழ்க்கழகம் –கோயிலில் உள்ள தூய்மைப்பணி

எட்டும்பொட்டும் திரியாத்த பய – வாழ்க்கை அறியாத பையன்

தொண்டும் சகிரியும் –தேங்காய் மட்டையும் தேங்காய் நாரும்

சீந்து – கீற்று, கீறு

புதைப்பு – போர்வை

மிசிறு –மரச்சாறு உண்டு வாழும்பெரிய  சிவப்பு எறும்பு

ஆத்தியம்-  தொடக்கத்தில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80
அடுத்த கட்டுரைகிறித்தவ இசைப்பாடல்கள் -கடிதம்