ஏழாம் உலகம் -கடிதம்

23beger

 

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

 

ஒருமுறை நான் சென்னைக்குச் சென்றிருந்தேன் முதன்முதலாக. சரவணா ஸ்டோர்ஸ்க்கு அழைத்துச் சென்றார்கள். நான் திரும்பும்பொழுது பை கொடுத்த அக்காவிடம் நீங்க உட்காருவீங்களா உட்கார விடுவாங்களா என்று கேட்டேன். நான் படத்தில் பார்த்தேன் அது உண்மைதானா என்று கேட்டேன். இல்லை என்று சொன்னார்கள். அங்காடித்தெரு பார்த்திருந்தேன். நான் கடவுள் நான்கு நாள்களுக்குமுன்  பார்த்தேன். ஒரு காட்சியைப் பார்த்தேன் அப்படியே தொடர்ந்துவிட்டேன். அதன்பிறகு ஏழாம் உலகம். நேற்று இரவு வாசித்துமுடித்துவிட்டேன். உடனே எழுதலாம் என்று எடுத்தபொழுது மிகவும் சோர்வாக இருந்தது. படம் என்வாசிப்பை நிறைய குலைத்துவிட்டது. இனி படம் பார்க்கமாட்டேன். இடங்களும் மாங்காண்டிசாமியும் அப்படியே ஞாபகம் வந்தார்கள். எரிச்சலாக இருந்தது.

 

படங்களுக்கென சில விஷயங்கள் இருக்கும். அதைமட்டுமே பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏழாம் உலகம்

 

ராமப்பனிடமிருந்து குருவியைப் பிரிக்கிறார்கள் முத்தம்மையினை அவளுடைய உதிரப்போக்குடன் தூக்கி செல்கிறார்கள் குழந்தையை வெயிலில் காயவிடுகிறார்கள் எருக்குவை மலமள்ளும் வண்டியில் சாக்கால்பொத்தி தள்ளிவருகிறார்கள். மனிதர்கள் என்றே இவர்கள் பார்க்கப்படுவதில்லை. இவர்களுக்கு ஆன்மாவோ உணர்வுகளோ மதிக்கப்படுவதில்லை. நீங்கள் ஒரு உரையில் உர்சுலா குயின் என்பவருடைய ஒரு கதையை சொன்னீர்கள். குய்யானின் குதூகலங்கள் பயங்கள் அழுகைகள். என்னையும் கொஞ்சம் காணமுடிந்தது. குருவி குழந்தைகளைப் பார்த்தாலே வெறியாகி விடுவாள் என்று வரும் அது ஒரு ஏக்கம்தான் என்று தோன்றியது. திருவண்ணாமலைக்கும் பழனிக்கும் தோழியுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் போகவில்லை. இனி சென்றால் அங்கு உட்காராமல் வரமாட்டேன் என்று நினைக்கிறேன்.

 

சு வேணுகோபால் அவர்களின் முன்னுரை நன்றாக இருந்தது. நான் அவருடைய புத்தகங்கள் நிறைய வைத்திருக்கிறேன். ஒன்றும் வாசிக்கவில்லை. தமிழினி வசந்தகுமார் எனக்கு இருபத்தைந்து புத்தகங்கள் இலவசமாக வழங்கினார் அதில் அவருடையவும் உண்டு. குய்யான் மாங்காண்டி சாமியின் பாடலைக்கேட்டு புன்னகைக்கிறான் தாயின் அன்புபோல. அங்குதான் இந்த உலகம் இன்னும் இப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது. உயிர்களிடமிருந்து நாம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு முறை நான் என் ஊர் பேருந்து நிலையத்தில் ஒரு நாயைக் கண்டேன் அதேபோல ஒரு நாயை திருவட்டாறு பேருந்து நிலையத்திலும் பார்த்தேன். என் வீட்டு அழிசி நான் தூக்கிவந்த புதிதில் மேலெல்லாம் பூச்சியாக இருந்தது. என்னவென்று தெரியவில்லை. அது ஒரு நிலையிலேயே இருக்க முடியவில்லை. அதுடைய நிலை. வாசிக்கும்பொழுது நினைவு வந்தது. எளிமையான இந்த மனிதர்களிடம் உறவுகளும் அவ்வளவு சகஜமாக நிகழ்கின்றன. ஆழமாகவும். ராமப்பன் குருவி குய்யான் முத்தம்மை மாங்காண்டி சாமி அயமது இவர்களுடைய பிணைப்பு பண்டாரத்திற்கும் அவர் பிள்ளைகளுடன் இருக்கும் பிணைப்பு இரண்டையும் பார்க்கிறேன். முத்தம்மையை பன்னின்னு நினைத்தேன் என்று சொல்லுமிடங்கள் அவளுடைய கதறல்கள் தொடர்ந்த எதிர்வினைகள் எல்லாம் அவளை அந்த மனிதர்கள் மிகையாக உருவகிப்பதுபோல தோன்றியது.  ஆனால் அது உண்மை. உண்மையை மோசமான கீழான நிலையை சொல்லும் தீவிரமான உண்மைகள் மிகையாகத்தான் சொல்லப்பட வேண்டும் என்று தோன்றியது.

 

Empathy என்று பாடம் சொன்னார்கள். Difference between the sympathy and empathy என்று. இந்தபுத்தகத்தை ஒரு தோழியிடம் ஒரு மாணவனிடம் கொடுக்கலாம். ஆனால் அது இருந்தால்தான் இந்த மனிதர்களை வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஊழல் பேராசைகள் பொறாமை ஈர்ப்புகள் அதிகம் புழங்கும் இந்த என் அருகாமைகளில் இவர்களுக்கு இந்த வாழ்வு தெரியுமா. ஒரு முறை பேருந்து நிலையத்தில் ஒரு குழந்தை என்னிடம் வந்து அக்கா வடை வாங்கித்தாங்க என்று கேட்டாள். சாப்பிட்டாள். பின்பு இன்னொருவரிடமும் சென்று கேட்டாள். குழந்தைகள் பசியில்லாமல் இருக்கவேண்டும் அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. சம்பந்தமில்லாமல் ஒரு விஷயம் வந்துவிட்டது.

 

லக்ஷ்மி

 

ஏழாம் உலகம் விமர்சனங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82
அடுத்த கட்டுரைகாவேரி – வெள்ளமும் வறட்சியும்